உங்கள் உறவில் இருக்கும் மோதலைத் தீர்க்க 8 எளிய உத்திகள்!

உங்கள் உறவில் இருக்கும் மோதலைத் தீர்க்க 8 எளிய உத்திகள்!

எந்த உறவுகளுக்கு இடையிலும் சண்டை, சச்சரவுகள் வருவது இயற்கையான, சகஜமான ஒன்று. அதை நினைத்து கவலை கொல்லாமல், அது உங்கள் உறவை விலகச் செய்யாமல் எப்படி உறவைப் பலப்படுத்த மாற்றிக் கொள்வது என்று பார்க்கலாம்.

ஒரே குடும்பத்தில் ஒரே பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளுக்குள்ளேயே பல மாற்றுக்கருத்துகள் இருப்பதைக் காண்கிறோம். வெவ்வேறு குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து திருமணத்திற்குப் பின் ஒன்றாக பயணிக்கும்போது பல கருத்து மாறுபாடுகள் வரத்தானே செய்யும்! அப்படி என்னென்ன மோதல்கள் ஏற்படுகிறது, அவற்றிற்கான காரணங்கள் என்ன என்பது ஒருவருக்கொருவர் வித்தியாசப்படும். பொதுவாக உறவில் ஒரு பிரச்சனையை ஒரு மாற்றுக்கருத்தை (relationship conflict)ஆரோக்கியமான முறையில், ஆக்கபூர்வமான யோசனைகளினால் எப்படி சுமூகமாகக் கையாளுவது என்று பார்க்கலாம்.

1. மற்றவர் பேசும்போது கவனிக்க/கேட்க வேண்டும்

விஷயத்தை முழுவதும் உள்வாங்கிக் கொள்ளாமலேயே பாதி கேட்டும் கேட்காமல், இப்படித்தான் இருக்கும் என்று எண்ணித்தான் பெரும்பாலான மோதல்கள் ஆரம்பமாகின்றது.நீங்கள் அந்த விஷயத்தைப் பின்பற்றுகிறீர்களோ இல்லையோ, ஆனால், காது கொடுத்துக் கேட்டாலே பாதிப் பிரச்சனை தோன்றாது. அதுவும் இக்காலத்தில் எப்போதும் போன் கையில் வைத்துக்கொண்டு கண்கள் அதைப் பார்த்துக்கொண்டுதான் வாதங்கள் நடக்கிறது. அது விஷயத்தை விளக்குவோருக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தும். சிலர் அதை வேண்டுமென்றே செய்வார்கள். இதை நிச்சயம் தவிர்த்தால், பூதாகரமாக வெடிக்கப்போகும் பல மோதல்களை முன்கூட்டியே ஒன்றுமில்லாமல் செய்து விடலாம்.

2. மற்றவரைக் குறை கூறாமல், நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று கூற வேண்டும்

Pexels

ஒருவர் செய்வது உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் அடுத்தவரைக் குறைகூறிக் கொண்டிராமல், அந்த செயலால் உங்களுக்கு என்ன உணர்வு ஏற்படுகிறது என்று கூறுங்கள். இதனால் ஒரு மோதலை தவிர்த்து உங்கள் உணர்வைப் புரிந்து கொண்டு மறுபடியும் அந்த செயலைச் செய்யாமல் இருப்பார்கள்.

“நீ செய்வாய் என்று கூறிவிட்டு இப்போது மறந்துவிட்டதால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன்” என்று கூறுவதற்கும்,
“நீ எல்லாவற்றையும் மறந்துவிடு, நீ மிகவும் சோம்பேறியாகிவிட்டாய், எனக்கு எந்த உதவியும் செய்வதில்லை” என்று கூறுவதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது.

மேலும் படிக்க - ஓ! பெண்களிடம் உள்ள இந்த விஷயம் ஆண்களுக்கு பிடிக்காதா?! (இப்போதே தெரிந்து கொள்ளுங்கள்!

3. உங்களவர் என்ன உணர்கிறார் என்று கேட்க வேண்டும்

பெரும்பாலும் நம்முடைய கண்ணோட்டம்தான் சரியானது அது மற்றவர்க்கு கட்டாயம் புரியவேண்டும் / புரிந்திருக்கும் என்று எண்ணுபவர்களே அதிகம். அதை விடுத்து, உங்களவருக்கு உங்கள் கண்ணோட்டம் புரிந்ததா என்று கேட்டுப்பாருங்கள். நிச்சயம் அவருக்கும் அந்த உணர்வு இருக்காது. அதனால்தான் மோதல் ஆரம்பம் ஆகிறது.

உதாரணத்திற்கு, நீங்கள் சிறுவயது முதல் பார்த்துப் பழகிய ஒரு தோழி உங்களுக்கு மிகவும் நெருக்கமானவராக உணர்வீர்கள். அதனால், அவருடன் நேரம் செலவிடுவதும், அவர் அழைக்கும் விருந்திற்கு செல்வதை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாகக் நீங்கள் கருதுவீர்கள். ஆனால், உங்கள் கணவருக்கு அதே உணர்வு இருக்க வேண்டும் என்று எண்ணுவதும், அவரை வலியுறுத்துவதும் நிச்சயம் ஒரு கருத்து வேறுபாட்டிற்கு தயாராகிறீர்கள் என்று அர்த்தம்.
இங்குதான் நீங்கள் மற்றவர்களின் கண்ணோட்டத்தையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

4. யார் கூறுவது சரி என்ற வாக்குவாதம் வேண்டாம்

Pexels

கருத்து வேறுபாட்டில் யார் கூறுவது சரி என்ற வாதத்திலேயே நேரம் செலவிடாமல், உங்கள் கருத்து வேறுபாட்டிற்கு என்ன காரணம் என்று கண்டறிந்து அதற்கு தீர்வுகானப் பாருங்கள்.

ஒரு பிரச்சனை தெரிந்தோ தெரியாமலோ ஏற்பட்டுவிட்டது. அதையே, “நீ ஏன் இப்படி செய்தாய், நான் கூறியதுபோல செய்திருந்தால் இப்படி நேர்ந்திருக்குமா?” என்று பேசிக்கொண்டிராமல், அடுத்து இருவரும் சேர்ந்து என்ன செய்தால் அந்த பிரச்சனையில் இருந்து சுலபமாக விடுபடலாம் என்று கலந்தாலோசித்தால் உங்களைப் பாத்து மற்றவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

5. ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தை மட்டும் பேசுங்கள்

நீங்கள் இருவரும் அமர்ந்து ஒரு விஷயத்தை சரி செய்ய நினைக்கிறீர்களென்றால், அந்த விஷயத்தை மட்டும் பேசுங்கள். இதுவரை உங்கள் மனதில் உள்ள அனைத்து கருத்து வேறுபாடுகளையும் ஒரே நேரத்தில் கொட்டி ஒரு சமையலறை கழுவும் சிங்க் போல உங்கள் வாக்குவாதத்தை மாற்றி விடாதீர்கள்.

உதாரணத்திற்கு, நீங்கள் இருவரும் பணி ஓய்வு பெரும் காலத்திற்கான சேமிப்பு பற்றி ஆலோசித்து முடிவெடுக்க முற்படும்போது, தினமும் செய்யவேண்டிய உடற்பயிற்சி வகுப்பு, துணிகளை மடித்துவைப்பது, குடும்பத்தில் ஏற்படும் ஒரு சிக்கலான பிரச்சனையை எப்படி சரி செய்வது, குழந்தைக்கு யார் கற்றுக்கொடுப்பது, போன்ற மற்றவற்றையும் இழுத்துப் பேசாதீர்கள். பிறகு ஒரு தீர்வும் ஏற்படாது. ஒரு விஷயத்தை மட்டும் ஒரு விவாதத்தில் முடிவெடுங்கள்.

6. கருத்து வேறுபாட்டை ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்

Pexels

எல்லா நேரமும் இருவரும் ஒரு விஷயத்தில் ஒத்துப்போக வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. அதை இருவரும் மற்றவரிடம் புகுத்த நினைக்காதீர்கள். உங்களைப்போன்ற உங்கள் கணவரும் நினைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதைத் தவிருங்கள்.

சில விஷயங்கள் இருவருக்கும் வேறு வேறு கருத்துக்கள் இருந்தால் எந்தத் தவறும் இல்லை. உண்மையில் அப்படி மாற்றுக்கருத்து இருந்து அதை வெளிப்படுத்தும்போது அதை ஆதரியுங்கள். இது என் கருத்து, அதில் எந்த மாற்றமும் இல்லை. அதுபோல உன் கண்ணோட்டமும் புதிதாக இருக்கிறதே! என்று வரவேற்று கருத்து வேறுபாட்டை ஏற்றுக் கொள்ளுங்கள்.

7. பொறுமையைக் கற்றுக்கொள்ளுங்கள்

வாக்குவாதம் நீண்டுகொண்டே இருக்குமானால், நிச்சயம் தீர்வு கிடைக்காது. ஒரு காரசாரமான விவாதத்தைப் நிறுத்திவிட்டு, சிறிது நேரம் இடைவெளி விடுங்கள். விவாதத்தின் சூடு சற்று தணிந்தபின், இருவரும் சற்று அதைப்பற்றி வேறு கோணத்தில் தங்களுக்காகவே சிந்தித்து பிறகு பேசி முடிவெடுங்கள்.

“தேவையற்ற பேச்சே உறவுகளைத் தொலைப்பதற்கு காரணம்! 
பேச்சை அடக்கினால் உறவு நிலைக்கும்”

முடிந்து போன விஷயம் என்றால், அதைப் பேசி எந்தப் பயனும் இல்லை. கடந்த காலத்தை கடந்ததாகவே விட்டுவிடுங்கள். மறுபடியும் அதைக்  கிளறி உங்கள் ஆற்றலை ஏன் வீணாக்குகிறீர்கள்?! உங்கள் இருவருக்கும் நல்லிணக்கம் வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

8. சிரித்து மயக்குங்கள்

Pexels

சிரித்து கிண்டல் செய்து ஒரு விஷயத்தை எளிதில் கடந்து விடலாம். ஒரு சீரியஸான உணர்வுகூட சிரித்தால் மனதை லேசாக்கிவிடும். புன்னகைக்கு இல்லாத ஆற்றலா?!

கிண்டல் செய்யலாம் ஆனால், கேலி செய்யக்கூடாது. அடுத்தவர் மனதை உறுத்தும் வார்த்தைகளை எப்போதும் பேசாதீர்கள். சந்தோசமாக சிரித்த முகத்துடன் எதையும் எதிர்கொண்டு விளக்குங்கள். இருவர் மனதிலும் டென்ஷன் இல்லாமல் நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.

குடும்பம் என்பது இருவரும் சேர்ந்து செயல்படுத்துவது. அதில் இருவரும் ஒரு அணிதான். கணவர் ஒரு அணி, மனைவி ஒரு அணி என்று நினைக்காமல், இருவரும் இணைந்து செய்யப்பட்டால்தான் வாழ்க்கை மென்மையாக, கருமுரடான பாதையையும் எளிதாகக் கடக்க முடியும். ஒரு விவாதம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஒன்றுமில்லாத விஷயம் பூதாகாரமாகவும் வாய்ப்பிருக்கிறது, பெரிய விஷயமும் சப்பென்று முடியவும் வார்த்தை பிரயோகம் மிகவும் அவசியம். கோபத்தை கட்டுப்படுத்துவதும், முன்னோக்கு பேச்சும் கருத்து வேறுபாட்டை முறியடிக்கும். வேறுபாடில்லாமல் எந்த விஷயமும் இல்லை. அதை கையாளும் முறையில் தான் சந்தோசம் இருக்கிறது. சிந்தித்து செயல்படுங்கள்.

மேலும் படிக்க - உங்கள் உறவில் நல்ல இணக்கத்தை ஏற்படுத்த சில சுவாரசியமான கேள்விகள்!

2020 ஆம் ஆண்டை, 100% உங்களை பிரதிபலிக்கும் புதிய ஸ்டேட்மென்ட் ஸ்வெட்ஷர்ட்கள் மற்றும் பிளானர்களுடன் உற்சாகமாக கொண்டாடுங்கள். கூடுதலாக 20% தள்ளுபடியும் உள்ளது! எனவே POPxo.com/shop க்குச் சென்று இப்போதே வாங்கி மகிழுங்கள்!