logo
ADVERTISEMENT
home / அழகு
இசையின் வயது 75

இசையின் வயது 75

தமிழகத்தின் தனி பெருமைகளில் மிக முக்கியமானது இளையராஜா அவர்களின் இசை என்று சொன்னால் அது தவறேயில்லை. உலகெங்கிலும் வாழும் எத்தனையோ கோடி தமிழ் மக்களை எப்போதும் தலை தடவிக் கொடுத்து தாலாட்டுவது இவரின் இசைதான் என்றால் அது மிகையில்லை.

இவரது அமைதியும் ஆன்மிக தேடலும் இசைக்கு அப்பாற்பட்டு இவரை அடையாளம் காட்டுபவை. தமிழர்களின் இதயத்துடிப்பில் கலந்த இசைஞானிக்கு கடந்த சனி மற்றும் ஞாயிறில் திரை தயாரிப்பாளர் சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவிற்காகத் தமிழ் படப்பிடிப்புகள் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 2 மற்றும் மூன்றாம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இவருக்கான பாராட்டு விழாவை மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்த ஏற்பாடு செய்தனர். இதில் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் கமல்ஹாசன் ரஜினிகாந்த் போன்ற பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர்.

ADVERTISEMENT

இளையராஜாவின் இசையை நமது ஹெட்போன்களில் கேட்டாலே நமக்கெல்லாம் தாங்காது. இதில் அவரது இசை நிகழ்ச்சி (concert ) என்பது நமது மூளையில் டோபமைன் சுரப்பிகளுக்கான நாளாக இருக்கும். இவரின் இசையைக் கேட்டுக் கேட்டு காதுகள் ஒரு போதும் வலிப்பதேயில்லை, கேட்காத நாட்களில் இதயத்தின் வலியை அளக்க வார்த்தையேயிலை என்பதுதான் இவரின் இசையை புரிந்தவர்களின் அனுபவம்.

அப்படிப்பட்ட கான்செர்ட்டில் நாளொன்றுக்கு 17000 ரசிகர்கள் இந்தியாவின் பல மூலைகளில் இருந்தும் வந்து கிறங்கியுள்ளனர் என்பது செய்தி. இதைப்போல இளையராஜா 75 பற்றிய பல சுவாரஸ்ய செய்திகளின் கோர்வை அங்கு செல்ல முடியாத பலருக்காக.

இசையின் இரு வேறு துருவங்கள், மாறுபட்ட கருத்துக்கள் கொண்ட இருவர் ஒரே மேடையில் தோன்றுவது இன்றைய சமூகத்திற்கு எத்தனை ஆரோக்கியமானது என்பதை அறிந்தே இயக்குனர் திரு. பார்த்திபன் இவர்களை இந்த மேடையில் ஒன்று சேர்த்த உதவியிருக்கிறார். இசை புயல் ஏ ஆர் ரஹ்மானும் இசைஞானியும் வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பை இங்கே நிகழ்த்தி இருக்கிறார்கள்.

ADVERTISEMENT

தனது தந்தையோடு இருந்ததை விட ரஹ்மான் இளையராஜாவோடு இருந்த நாட்கள்தான் அதிகம் என்கிறார் இசைஞானி. 500 படங்களுக்கும் மேல் இருவரும் வேலை செய்திருக்கிறார்களாம். இளையராஜாவைப் பற்றிக் குறிப்பிடுகையில் எப்போதும் இவர் என் தலைமை ஆசிரியர் என்று கூறியிருக்கிறார் ரஹ்மான்.

அதில் இளையராஜாவின் ரசிகர்களை எப்போதும் தலை சாய்ந்து தோள் தேட வைக்கும் பாடலான “மன்றம் வந்த தென்றலுக்கு ” பாடலுக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை வாசிக்க இளையராஜா பாடிய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அந்த நிமிடத்தில் அங்கு கூடியிருந்த அத்தனை இசை ரசிகர்களுக்கும் என்ன மாதிரி உணர்வு தோன்றியிருக்கும் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.

பாடலின் இறுதியில் இசைகுறிப்பில் சிறிது தவறு செய்து விட இளையராஜா ரஹ்மானை செல்லமாக உனக்குத் தெரிந்த பாடல்தான் ஏன் தவறாக வாசிக்கிறாய் என்று கேட்டதும் அதற்கு ரஹ்மான் புன்னகைத்தபடியே பியானோவை விட்டு எழுந்ததும் இன்னொரு வரலாறு படைக்கும்.

ADVERTISEMENT

 

இந்த விழாவில் இன்னுமொரு வரலாறு தமிழ் சினிமாவின் இரு பெரும் நட்சத்திரங்களான கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் ஒரே இருக்கையில் அருகருகே அமர்ந்து இசையை ரசித்தது.

ரஜினி தனது முறை வரும்போது இளையராஜாவை சுயம்பு லிங்கம் என்று குறிப்பிட்டார். அன்னக்கிளியில் ஆரம்பித்த அந்த சுயம்பு லிங்கத்தின் அதிர்வு இன்று வரை அபிரிதமாக இருப்பதாகக் கூறினார்.

ADVERTISEMENT

மேலும் தனது படங்களுக்கு இசையமைத்த பாடல்களை விடவும் கமல்ஹாசன் படங்களைத்தான் நிறைய நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கிறார் என்று கூறினார். இதனைக் கேட்ட இளையராஜா இதையேதான் கமலும் சொல்கிறார் என்று சிரித்தார்.

கேட்பவரின் மனத்தைக் கொஞ்சம் சாகடித்து கொஞ்சம் வாழவும் வைக்கும் ஹே ராமின் பாடலான நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி பாடலை கமல்ஹாசன் பாடியபடி மேடைக்கு வந்தார். இவரோடு இவரது மகள் சுருதி இணைந்து கொண்டார். இளையராஜாவுடனான காதல் தனக்கு 45 வருடங்களாகத் தொடர்கிறது என்று குறிப்பிட்ட கமல்ஹாசன் தான் அரசியலுக்கு வருவதற்கு இரண்டு பேர்தான் அறிவுறுத்தினார்கள். ஒருவர் அவரது அண்ணன் இரண்டாவது இளையராஜா என்று கூறி நெகிழ்ந்தார். மேலும் மேடையில் அவர் காலில் விழுந்து அவருக்கொரு நெற்றி முத்தத்தை பரிசளித்தார் கமல்ஹாசன்.

ADVERTISEMENT

இயக்குனர் ஷங்கருடனான மேடைப் பேச்சில் தொகுப்பாளர் ரோகிணி நீங்கள் எப்போது இளையராஜாவோடு படம் பண்ணுவீர்கள் என்று தர்மசங்கடமான கேள்வியைக் கேட்டு விட சங்கர் பதில் சொல்ல முடியாமல் தவிக்கையில் சட்டென கேள்வி கேட்ட ரோகிணியை இப்படியெல்லாம் கேட்பது தவறு. அவருக்கு விருப்பமான இசை கலைஞரோடு அவர் பயணிக்கிறார் என்று சங்கருக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். இவரிடம் இருந்து கற்றுக் கொள்ள இன்னும் எவ்வளவோ இருக்கிறது. அதற்கான ஆயுள் நமக்கு இருக்குமா என்பதுதான் தெரியவில்லை.

பாடகி உஷா உதுப் ரம்பம்பம் பாடலை பாடி அதற்கு நடிகைகள் சுகாசினி , குஷ்பூ உள்ளிட்டோர் மேடையில் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியிற் கொண்டாடினர். கண்ணே கலைமானே பாடலுக்கு செல்போன் வெளிச்சத்தை ரசிகர்கள் பயன்படுத்த சொல்லி அழகான விஷுவலோடு அப்பாடலை பாடி அங்கிருந்தவரின் நெஞ்சை நிறைந்திருக்கிறார் உஷா உதுப்.

தனது பேத்தி யுவனின் குழந்தையை மேடைக்கு வரவழைத்து அவரை ஆர்மோனியம் வாசிக்க வைத்திருக்கிறார் பிரிய தாத்தா இளையராஜா. மேலும் மாங்குயிலே பாடலின் சில வரிகளை பாடவும் வைத்திருக்கிறார். நமக்கு தான் இளையராஜா ஞானி அவரது பேரன் பேத்திக்கு அவர் எப்போதும் பேரன்பினால் ஆன தாத்தா தான் இல்லையா.

ADVERTISEMENT

இந்த நிகழ்வின் இறுதியில் பேசிய இளையராஜா இந்த விழா இவ்வளவு பிரம்மாண்டமாக நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. இதனை நடத்திக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கத்திற்கும் விஷாலுக்கும் எனது நன்றி. இந்த விழா நடக்க விடக்கூடாது என்று வேலை செய்தவர்களும் இருக்கிறார்கள்.

தனி மனிதனுக்காக நீதி மன்றம் இது வரை சான்றிதழ் தந்ததே இல்லை. சரித்திரத்தில் முதல் முறையாக எனக்கு அப்படி ஒரு நற்சான்றிதழை இந்த எதிர் அணியினை சேர்ந்தவர்கள் வாங்கி தந்திருக்கிறார்கள்.

சிலர் பாடலை இசையமைத்து பெருமையும் புகழும் அடைவார்கள். ஒரு சிலரோ அதனைக் குறை சொல்லியே அடைவார்கள். இந்த எதிரணியினர் இரண்டாம் வகையை சேர்ந்தவர்கள். இவர்கள் மேலும் கேஸ் போட்டு வீட்டுக்கும் கோர்ட்டுக்கும் நடையோ நடை என்று நடக்க வாழ்த்துகிறேன் என்று தன் மீதான எதிர்ப்பிற்கும் புன்னகையோடு பதில் கொடுத்தார் இளையராஜா.

ADVERTISEMENT

இப்படியாக இசை திருவிழா இரண்டு நாட்கள் நடைபெற்றுள்ளது. மேலும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்திருக்கலாம். அதனை நாம் நம் கண்களால் பார்க்க அவர் இசையினை நெஞ்சத்தால் கேட்க தயாரிப்பாளர் சங்கம் வெகு விரைவில் டிவி நிகழ்ச்சியில் இந்தத் திருவிழாவை இணைத்து உலகெங்கும் உள்ள தமிழர் இசை ரசிகர்கள் மனதை சந்தோஷிக்க செய்ய வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

 

 

படங்களின் ஆதாரங்கள் – பிக்ஸாபெ,ஜிபி,பேக்செல்ஸ்  மற்றும் ட்விட்டர்

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

04 Feb 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT