Health

‘பித்த வெடிப்பு’ தொடங்கி பிரசவம் வரை.. பெண்களுக்கு ‘அருமருந்து’ இந்த விளக்கெண்ணெய்!

Manjula Sadaiyan  |  Mar 25, 2019
‘பித்த வெடிப்பு’ தொடங்கி பிரசவம் வரை.. பெண்களுக்கு ‘அருமருந்து’ இந்த விளக்கெண்ணெய்!

கிராமப்புறங்களில் முகத்தை ஒரு மாதிரியாக வைத்திருந்தால் ஏன் வெளக்கெண்ண குடிச்ச மாதிரி மூஞ்ச வச்சிருக்க? என்று கிண்டலாகக் கேட்பார்கள். கிண்டல் செய்தாலும் விளக்கெண்ணெயில் ஏராளமான நன்மைகள் உள்ளன என்பதை கிரமங்களில் நன்கு அறிந்து வைத்துள்ளனர். ஆனால் நகர வாழ்வின் நாகரிக ஓட்டங்களில் நாம் அதனை வசதியாக மறந்து விட்டோம்.

மறந்து விட்டோம் என்பதை விட அதுகுறித்து அதிகமாக இங்கு யாரும் அறிந்து வைத்திருப்பதில்லை என்பது தான் உண்மை.இதுவரையில் உங்களுக்கும் விளக்கெண்ணெய்(Castor Oil) குறித்து அதிகம் தெரியாது என்றால் அதன் முழுமையான பயன்கள்? எதற்கெல்லாம் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

விளக்கெண்ணெய்

தமிழ்நாட்டில் பரவலாக பயிரிடப்படும் காட்டாமணக்கு செடிகளின் விதைகளில் இருந்து விளக்கெண்ணெய்(Castor Oil) தயாரிக்கப்படுகிறது. புகையின்றி எரியக்கூடியது என்பதால் முன்பு தமிழகத்தில் இரவு நேரங்களில் விளக்கெரிக்க, இந்த எண்ணெயை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி உள்ளனர். அதனால் தான் ஆமணக்கு எண்ணெய் என்ற பெயர் மறைந்து நாளடைவில் இந்த எண்ணெய்க்கு விளக்கெண்ணெய்(Castor Oil) என்று பெயர் வருவதற்கு காரணமாக இருந்துள்ளது.

ஆமணக்கு வகைகள்

பெரும்பாலும் விதைகளுக்காக பயிரிடப்படும் ஆமணக்கில் 16 வகைகள் இருந்தாலும் சிற்றாமணக்கு, பேராமணக்கு, செவ்வாமணக்கு, காட்டாமணக்கு ஆகிய 4 ஆமணக்கு வகைகள்தான் எளிதாக எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. இவைதான், மருத்துவப் பண்புகள் நிறைந்ததாகவும் உள்ளன. இவற்றில் ஆமணக்கு, சிற்றாமணக்கு, செவ்வாமணக்கு ஆகிய மூன்றும் ஒரே வகைத் தாவரங்கள். காட்டாமணக்கு செடி வேறு வகையைச் சேர்ந்தது. மேலே சொன்ன நான்கு வகை செடிகளில் சிற்றாமணக்கு செடியின் விதைகளே சிறந்த மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது.

விவசாயம்

ஆமணக்கு ஒரு எண்ணெய் வித்து பயிராகும். இதன் விதையை கிரமாப்புறங்களில் முத்து கொட்டை என்று அழைப்பர். குறைவான நீரில் நன்கு செழித்து வளர்ந்து விவசாயிகளுக்கு லாபம் அளிக்கக்கூடிய பயிர் என்பதால் ‘முத்து எங்கள் சொத்து’ என்று விவசாயிகள் இதனை மகிழ்ச்சியுடன் குறிப்பிடுவர். ஆமணக்கைப் பொறுத்தவரையில் விவசாயம் செய்த நான்கு மாதங்களில் பலன் தரக்கூடியது.

எண்ணெய் விலை

விளக்கெண்ணெய்(Castor Oil) பொறுத்தவரை இன்றைய மார்க்கெட் நிலவரப்படி 100 கிலோ எண்ணெய் ரூபாய் 6100-க்கு விற்பனை ஆகிறது. ஆமணக்கு விதை ஒரு கிலோ ரூபாய் 30 என்றளவில் விற்பனையாகிறது.

எண்ணெய் தயாரிக்கும் முறை

ஆமணக்கு செடியின் விதைகளில் இருந்து விளக்கெண்ணெய்(Castor Oil) தயாரிக்கப்படுகிறது. இந்த விதைகளில் இருந்து இரண்டு முறைகளில் எண்ணெய் தயாரிக்கலாம். ஆமணக்கு விதைகளை எந்திர செக்குகளில் இட்டு, ஆட்டி எண்ணெய் பிழிவது ஒரு வகை. ஆமணக்கு விதைகளை இடித்துத் தண்ணீரில் கொதிக்க வைத்து, எண்ணெய் பெறுவது இன்னொரு முறை. இந்த இரண்டாவது முறை, ‘ஊறின எண்ணெய்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த முறையில்தான் நமது முன்னோர்கள் விளக்கெண்ணெய் தயாரித்துப் பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

பிற பயன்கள்

ஆமணக்கு விதைகளில் இருந்து எண்ணெய் பிழிந்து எடுத்தபின், மீதப்படும் புண்ணாக்கினை விவசாயிகள் நன்செய் பயிர்களுக்கு உரமாகப் பயன்படுத்துவர். சுமார் 10 அடி உயரம் வரை வளரக்கூடியது என்பதால் இதன் குச்சிகள் குடிசை கட்டுவதற்கு பயன்படும். இதுதவிர வீடுகளில் அடுப்பு எரிக்கவும் இதன் குச்சிகளை பயன்படுத்துவர்.

கண்கள்

விளக்கெண்ணெயில் ஏராளமான மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளன. நீங்கள் தொடர்ச்சியாக கணினி பயன்படுத்துபவர் என்றால் உங்கள் கண்களில் அவ்வப்போது சிறிது விளக்கெண்ணெய் விட்டு வாருங்கள். இப்படி செய்வதால் உங்கள் கண்களுக்கு நல்ல குளிர்ச்சி கிடைக்கும். உங்கள் புருவங்களில் அவ்வப்போது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் அடர்த்தியாகவும், கருமையாகவும் புருவங்கள் காட்சியளிக்கும்.

சருமம்

உங்களது சருமத்தில் எப்போதும் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ள விளக்கெண்ணெய்யை பயன்படுத்தலாம். சருமம் வறட்சி அதிகம் உள்ள பகுதிகளில் விளக்கெண்ணெய்யை மென்மையாக தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் எப்போதும் உங்கள் சருமத்தை நீங்கள் ஈரப்பதத்துடன் தக்க வைத்துக்கொள்ள முடியும்.

பிரசவம்

பிரசவத்தின்போது வயிற்றில் ஏற்படும் தழும்புகளை போக்கவும் விளக்கெண்ணெய்யை பயன்படுத்தலாம். இந்த எண்ணெயில் கொழுப்பு அமிலம் அதிகம் கலந்திருக்கிறது. இதனால் தசைப்பகுதியை நெகிழ்வடைய செய்வதற்கு உதவும். பிரசவமான சில நாட்கள் கழித்து வயிற்றில் தழும்பு உள்ள இடங்களில் விளக்கெண்ணெய் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தாய்ப்பால்

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்திடும் என்பதால் தாய்ப்பால் அவசியம் குறித்து அரசும் அவ்வப்போது விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் ஒருசிலருக்கு முதல் குழந்தைக்கோ அல்லது அடுத்த குழந்தைக்கோ போதுமான அளவு தாய்ப்பால் இருக்காது. தாய்மார்களில் சிலருக்கு போதிய அளவு தாய்ப்பால் சுரக்காமலிருக்கும். அவர்கள் மார்பகங்களில் விளக்கெண்ணெயைத் தேய்த்துவிட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

பித்தவெடிப்பு

பெண்களுக்கு கால்களில் ஏற்படும் ஏற்படும் பித்தவெடிப்பைப் போக்க விளக்கெண்ணெயைச் சூடாக்கி, அதனுடன் மஞ்சள்தூள் சேர்த்து தடவலாம். இதுபோல ஏராளமான நன்மைகள் விளக்கெண்ணெயில் இருக்கின்றன. அதனால் விளக்கெண்ணெயைப் பயன்படுத்தி உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வாழ்த்துக்கள்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,தமிழ்,தெலுங்கு,மராத்தி மற்றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப், ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிகச்சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Also read 6 amazing benefits of castor oil.

Read More From Health