டைட்டில் கார்டிலேயே தான் ஒரு தலைவர் விசிறி என்பதை தன்னடக்கமாக குறிப்பிட்டு விட்டு ரஜினிக்கு வழி விட்டு ஒதுங்கிக் கொள்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
வழக்கமான தாதா கதையில் வித்யாசமான ட்விஸ்ட்களை வைத்திருப்பதன் மூலம் திரைக்கதையை சுவாரஸ்யமாக்கி இருக்கிறார் இயக்குனர்.
காளி எனும் பெயரில் அதிரடி ஹாஸ்டல் வார்டனாக அறிமுகமாகும் ரஜினியின் ஓப்பனிங் காட்சிகள் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தளிக்கின்றன.
அன்வர் (சனந்த் )அனு (மேஹா ஆகாஷ் ) வை சிறு வயதில் இருந்து நேசிக்க அவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவில் இருந்து டார்ஜிலிங்கிற்குப் படிக்க வருகிறார்கள். எதனாலோ அம்மா சிம்ரன் இந்தக் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஹாஸ்டல் வார்டன் காளி இதற்கு உதவ வேண்டும் என அன்வர் கேட்கிறான்.
உதவிதானே பண்ணிடுவோம் என்று ரஜினி சிரிக்கும் சிரிப்பிலேயே நமக்கு பிளாஷ்பேக் இருப்பது புரிகிறது. இருந்தாலும் இப்படி ஒரு மாஸ் ஹீரோ எதற்காக வார்டனாக இருக்கிறார் என்கிற ரகசியத்தை பின்பாதியில் நமக்குப் புரிய வைக்கிறார் இயக்குனர்.
அனு அன்வர் காதலை இணைத்து வைக்க பிரானிக் ஹீலரான மங்களம் (சிம்ரன்) வீட்டிற்கு காளி செல்வதும் அங்கு சிம்ரனைப் பார்த்து மயங்குவதும் மகளின் காதலை சேர்த்து வைக்க காளி மங்களத்திற்கு அறிவுரை சொல்லி அவரது படபடப்பை போக்க கம்பளி சித்தர் சொன்ன டான்ஸ் மந்திரத்தை உபதேசிப்பதும் அருணாச்சலம் கால ரஜினியின் காமெடி சீன்கள்! சில காலங்களாக இந்தப் பழைய ரஜினியைக் காணாமல் ஏங்கிய அவரது ரசிகர்கள் அனைவருக்கும் இவை புது தெம்பு தரும்.
அம்மாவின் மனதை மாற்றியதற்கு அனு தேங்க் யூ அங்கிள் என்று சொல்ல அப்படிலாம் சொல்லாத என்று காளி பதட்டமடைவதும் இல்ல வேற எப்படி வேணா கூப்பிடு ஆனால் அங்கிள் னு மட்டும் கூப்பிடாத என்பதும் ரஜினியின் தனிப்பட்ட ஸ்டைல் காதலாக இருக்கிறது.
எனக்குனு ஒரு குடும்பம் இருந்தது இப்ப இல்லை. எல்லாத்தையும் கடந்துக்கிட்டிருக்கேன். கடந்து போறதுதான வாழ்க்கை எனக் காளி சொல்வதும் ஆமாம் கடந்து போறதுதான் வாழ்க்கை என மங்களம் ஆமோதிப்பதும் அவர்களின் கடந்த கால கசப்புகளை நமக்கு சொல்லாமல் சொல்கிறது. படத்தின் முதல் பாதி அழகாக நகர்கிறது.
பின்பாதி பேட்ட வேலனுக்காக நம்மைத் தயார் செய்து இடைவேளை விடுகிறார்கள். நாமும் ஆவலாகிறோம். அந்த இளமையான ரஜினியை நம்மால் இப்போதும் பார்க்க முடிகிறது. முள்ளும் மலரும் படத்தின் மீதான தனது காதலை இயக்குனர் கார்த்திக் முதல் பாதியில் நாயகன் பெயர் காளி என்பதில் இருந்து ஆரம்பித்து நண்பன் மாலிக்கின் எதிரியாக இயக்குனர் மகேந்திரன் அவர்களைக் கொண்டு வந்து நிறுத்துவது வரை தொடர்கிறது.
இடைவேளைக்குப் பின் இயக்குனர் மகேந்திரன் முழுமையாக ஆட்கொள்வார் என எதிர்பார்க்கையில் சில நிமிடங்களில் அவரும் காணாமல் போகிறார்.த்ரிஷாவையும் ரஜினியையும் ஒன்றாகப் பார்த்த போது அப்பாடா த்ரிஷாவின் மூன்றாவது ஆசையும் நிறைவேறி விட்டது என்றுதான் தோன்றுகிறது. இயல்பான மேக்கப் பழைய கால புடவையென்றாலும் த்ரிஷா கொள்ளை அழகுதான். சில சீன்கள் வந்தாலும் கண்களை நிறைக்கிறார்.
பிளாஷ்பேக் முடிந்து நிகழ்காலத்திற்கு வரும் கதை நகர்வதில் கொஞ்சம் தொய்வு ஏற்படுகிறது. பாபி சிம்ஹா, சசிகுமார், விஜய்சேதுபதி, நவாஸுதீன் சித்திக் என பல முக்கிய நடிகர்கள் இருந்தாலும் படத்தில் 95 சதவிகிதம் ரஜினி மட்டுமே தெரியும்படி திரைக்கதை அமைத்திருப்பதுதான் கார்த்திக் சுப்புராஜின் சிறப்பு.
பின்பாதி தொய்வுகளைக் குறைத்து , பேட்ட வேலன் இன்னும் தரமான சம்பவங்கள் செய்திருக்கலாமோ என்று பார்க்கும் நமக்கு தோன்றத்தான் செய்கிறது. ஆனாலும் கடைசியில் வரும் அந்த ட்விஸ்ட் ரஜினி ரசிகனை சமாதானம் செய்து விடுவதால் மீண்டும் ஆரம்பக் காட்சிகளைப் போல இறுதிக் காட்சியிலும் ரசிகர்களை உற்சாகக் கூச்சலிட வைத்து விடுகிறது.
எடிட்டர் விவேக் ஹர்ஷனும் ரஜினி ரசிகராக இருந்திருப்பார் போலும்.. அதனால் சில இடங்களில் மெய் மறந்து அப்படியே கட் செய்யாமல் விட்டு விட்டார். அவரும் இயக்குனரும் நினைத்திருந்தால் படத்தை இன்னும் கிரிஸ்பியாக்கி ரசிகர்களுக்கு சுவாரசியம் கொண்டு வந்திருக்கலாம்.
ஆரம்ப காட்சியில் காட்டப்படும் சர்ச் சண்டைக் காட்சியும் இடையே காட்டப்படும் ஹாஸ்டல் சண்டைக் காட்சியும் ஒரே இடத்தில் நடப்பது போலத் தெரிகிறது. கதைப்படி அது வெவ்வேறு இடம் என்பதால் சிறு குழப்பம் ஏற்படுகிறது
திருநாவுக்கரசின் ஒளிப்பதிவும் கலர் டோனும் நம்மை படம் முழுக்க முழுமையாகப் பயணிக்க வைக்கிறது. இசை அனிருத் என்பதால் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. பின்னணி இசையில் கையில் கிடைத்த எல்லா வாத்தியங்களையும் வைத்து அடித்து துவைத்து எடுத்திருக்கிறார்.
பாடல்களில் மெலடியாக இளமை திரும்புதே மற்றும் நீ சிந்தும் கண்ணீரும் இங்கே நிரந்தரமில்லையே போன்ற பாடல்கள் நம்மை கவனிக்க வைக்கின்றன. மிச்சப் பாடல்கள் எல்லாம் மரண மாஸ் ரஜினி ரசிகர்கள் ரகம்!
கார்த்திக் சுப்புராஜ் ஏற்கனவே சொல்லபட்ட நேர்காணலில் கூட இது முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்களுக்கான படமாக இருக்கும் என வாக்களித்திருந்தார். அதன்படியே செய்தும் இருக்கிறார்.
இது முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்களுக்கான படம் (movie). அவர்களின் எதிர்பார்ப்பை தானும் ஒரு ரசிகனாக இருந்து இயக்குனர் பார்த்து பார்த்துப் பூர்த்தி செய்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
பேட்ட – ரஜினி ரசிகர்களுக்கான முழு பேக்கேஜ் மூவி.
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.