NGK - நந்த கோபாலன் குமரன் - எனது பார்வை

NGK - நந்த கோபாலன் குமரன் - எனது பார்வை

இயற்கை விவசாயம் செய்து ஊருக்கு உதவி செய்து நாட்டை நேசிக்கும் நந்த கோபால குமரன் எனும் சாமான்யனை அரசியல் என்ன செய்கிறது என்பதுதான் கதை.


முழுக்கதையின் சாராம்சத்தை இப்படி ஒரு வரியில் சொல்லி விட முடிந்தாலும் உள்ளே பயணிக்கும் திரைக்கதை நமக்கு அரசியல் என்பதன் உண்மைத்தன்மையை ஒவ்வொரு காட்சியிலும் உடைத்து காட்டுகிறது. பல படங்களில் அரசியல் காண்பிக்கப்பட்டிருந்தாலும் இதில் பார்க்கும்போது இன்னமும் அதிர்ச்சிகள் ஏற்படுவதை மறுக்க முடியவில்லை.


கதை நாயகனான நந்த கோபாலன் குமரன் இனி சுருக்கமாக குமரன்.. மர்மங்களுடனே அவர் இருக்க வேண்டும் அவரது கதாபத்திரம் மற்றும் அவரது குணம் ரகசியமாக இருக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் வைத்திருக்கும் காட்சிகள் ஒரு சில நேரங்களில் கொஞ்சம் அயர்ச்சி தந்தாலும் குமரன் என்ன செய்ய போகிறான் அல்லது குமாரனை இந்த அரசியல் என்ன செய்ய போகிறது என்கிற ஆர்வம் குறையாமல் பார்த்து கொள்கிறது திரைக்கதை.ஆரம்பத்தில் மழையின் பின்னணியில் அமைக்கப்பட்ட காட்சிகள் குமரன் அரசியலில் சேர்ந்த கடைசி காட்சியுடன் நின்று போகிறது. இது குறியீடு. அதன் பின் அந்த மழையை நம்மால் எங்குமே காணமுடியாது. மழை போல ஈரமாக இருந்த குமரனின் குணம் மெல்ல மெல்ல மாறி கொண்டிருப்பதை இந்த வித்யாசம் மூலம் உணர முடியும்.


நல்ல படிப்பு திறமை இருந்தும் கூட தன்னால் பார்க்க முடியாத கலெக்டரை ஒரு கவுன்சிலர் சரிக்கட்டுவதையும் தங்கள் வாழ்வாதாரத்தை அழிக்க ஆரம்பித்த சமூக விரோத கும்பலை ஒரே நிமிடத்தில் மாற்றி விடும் எம்எல்ஏ வும் குமரனின் மனதை ஆழமாக பாதிக்கின்றன.


எம்எல்ஏ செய்ததற்கு பதில் உதவியாக அவரது கட்சியில் தன்னை நம்பி பின்னால் வந்த 500 இளைஞர்களோடு அவரது கட்சியில் இணைய வேண்டிய சூழ்நிலை வருகிறது. சந்தர்ப்ப வசத்தால் அரசியலில் நுழைய நேரிட்டாலும் அதன் பின்னர் தீர யோசிக்கிற குமரன் தங்களால் பல காலமாக செய்ய முடியாத ஒன்றை அரசியல் கடைநிலை தொண்டன் சுண்டு விரல் அசைவில் முடிப்பதன் பலம் உணர்கிறான். அதற்காகவே அரசியலில் இறங்க முடிவெடுக்கிறான்.இங்கே அனைவரும் யோசிப்பதும் அனைவர் மனதில் வந்து போவதும் புதுப்பேட்டை கொக்கி குமார் அரசியலுக்கு வரும் காட்சிதான். நிச்சயமாக அது வேறு இது வேறு. கொக்கி குமார் பின்னணி வறுமை. குமரன் பின்னணி அறிவு மற்றும் திறமை. புதுப்பேட்டை திரைக்கதை வேறொரு தளம். இது இன்னொரு தளம்.


தீவிரவாதம் , குண்டு வெடிப்பு மற்றும் அதன் பின்விளைவுகள் பற்றி ஆழமாக யோசித்தவர் இயக்குனர் மணிரத்னம். அவரது பார்வையில் பல்வேறு கோணத்தில் குண்டு வெடிப்பினை தீவிரவாதத்தை மையமாக கொண்டு சில திரைப்படங்கள் எடுத்தார். குறிப்பாக ரோஜா, பாம்பே, மற்றும் உயிரே.


அதைப் போலவே அரசியல் பற்றிய தனது இரண்டாவது உறுதியான கோணத்தை NGKவில் தந்திருக்கிறார் இயக்குனர். படித்த இளம் வயது ஆட்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பது எல்லோருடைய கனவு என்றாலும் அப்படி ஒருவன் வர விரும்பினால் அவன் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இயக்குனர் செல்வா கோடி மட்டுமே காட்டியிருக்கிறார். மீதமெல்லாம் அரசியலுக்கே வெளிச்சம்.ஒரு மனிதன் குணம் எப்படிபட்டகாக இருந்தாலும் சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அதனை மாற்றியமைக்கும் வல்லமை கொண்டவை. இயக்குனர் செல்வராகவனின் எல்லா திரைப்படங்களையும் கவனித்தவர்களுக்கு ஒரு ஒற்றுமை இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும். Transformation.. ஒருவன் அல்லது ஒருவள் தான் இதுவரை இருந்து வந்த குணத்தில் இருந்து மாறும் நிலைதான் அது. இது கொஞ்சம் ஆழமாக சொல்ல வேண்டும். நாம் எல்லோரும் கடந்து வந்த அல்லது கடந்து கொண்டிருக்கிற கட்டம்தான் இந்த transformation.


கோபக்காரன் குணவானாக மாறுவதும் மென்மையான பெண்கள் வன்மையாக மாறுவதும் இதெல்லாம் சிறு உதாரணம் தான். இதனை அறிந்து கொள்ள தன்னை தான் அறிந்து கொண்டிருக்க வேண்டும். அது தெரிந்தால் எல்லாம் தெரியும்.


அப்படியான ஒரு transformation குமரனுக்கு நடக்கிறது. ஒரேயடியாக இல்லாமல் ஒவ்வொரு கட்டமாக அவனுக்கு அது நடக்கிறது. அதற்கான ஒவ்வொரு லாஜிக்கல் காரணங்களையும் திரைக்கதை தன்வசம் வைத்திருக்கிறது. திரைப்பட விமர்சர்கள் சிலர் சொல்வது போல இல்லாமல் நிச்சயம் திரைக்கதை அதற்கான தளத்திற்கேற்ற வலிமையுடன்தான் பயணிக்கிறது.அரசியலில் நுழைந்த ஒருவனது குடும்பம் என்ன சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதை முக்கியமாக மனைவி என்பவள் எதையெல்லாம் சகித்து கொள்ள வேண்டும் என்பதை இந்த படம் மூலம் உணர முடியும். சாய்பல்லவி கொஞ்சம் மிகை உணர்ச்சிகள் உள்ள ஒரு கதாபாத்திரம் அவருடையது. அதனை அறியாமல் அவர் செயற்கையாக நடிக்கிறார் என்கிற புலம்பல்கள் இருக்கின்றன. அவரது கதாபாத்திரத்தை இயக்குனர் அப்படி வடிவமைத்திருக்கிறார்.


அவர் மிகையுணர்ச்சியுடன் இருந்தால்தான் வானதி எனும் ராகுல் ப்ரீத் சிங் உடன் சூர்யா என்ன செய்கிறார் என்பதை நாம் யோசிக்க முடியும். அல்லது அதற்கான நியாயம் கற்பிக்க முடியும். ராகுல் கார்ப்பரேட் பெண்ணாக செல்வாவின் தைரியமான பெண் கதாபாத்திர படைப்பின் படி நடிக்கிறார் என்றாலும் அவருக்குள்ளும் சில குழப்பங்கள் இருக்கிறது.


பொது வாழ்க்கை அல்லது சமூக வாழ்க்கையில் வெற்றி பெரும் பெண்களால் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் வெற்றி பெற முடிவதில்லை. பெரும்பாலும் சமாதானங்களில் அவர்கள் உலகம் கழிகிறது. அப்படித்தான் வானதியும். நாட்டை ஆளும் சிஎம் பிஎம் என எல்லோரையும் உயர்த்தி விடும் திறமைசாலியான ராகுல் வாழ்க்கை என்று வரும்போது "சில உறவுகள் அப்படித்தான். இருக்கும் வரைக்கும் சந்தோஷம் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். இதைப்பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதை விட குமரன் என்ன நினைக்கிறார் என்பதுதான் முக்கியம்" என்று சமாதானம் செய்து கொள்கிறார்.சூர்யா.. கதையின் நாயகன் இவர்தான். கதை இவரை சுற்றித்தான் நகர்கிறது எனும்போது இவர்தான் திரைக்கதைக்கு பலம் சேர்க்க முடியும். அது அவருடைய பொறுப்பு. அதனை பூரணமாக செய்திருக்கிறார். யாரும் எதிர்பார்க்காத நேரங்களில் விதம் விதமாக உணர்வுகளை மாற்றி நம்மை குழப்ப வேண்டியது அவர் வேலை. அதையும் செய்திருக்கிறார். திடீரென சூர்யா மைக்கில் பேசும்போதெல்லாம் அப்பா சிவகுமாரின் குரல் அவருக்கு வந்து போகிறது. அது மரபணு மாயம்.


குமரனின் அப்பா அம்மாவாக உமா பத்மநாபன் மற்றும் நிழல்கள் ரவி. அப்பா கதாபாத்திரம் ஒரு ரகசியமாக இருக்க வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட நேரம் வரைக்கும் அவர் பேசாமலே இருப்பார். அவர் யார் என தெரியவரும்போது நீங்களா இப்படி சும்மாவே இருந்திங்க எனும் ஆச்சர்யம் நிகழ்கிறது. அது இயக்குனர் ஐடியா.


கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருக்கும் சூர்யா எப்படி மளமளவென வளர்கிறார் எதிர்க்கட்சி சிஎம் உடன் பேசுகிறார் என்பது கொஞ்சம் அவசரமாக நடந்து விட்டது. அங்கே மட்டும் நிதானம் இருந்தால் இந்த புரியவில்லை என்கிற புலம்பல்கள் இருந்திருக்காது. படம் வெளியாக தாமதம் அதற்கான காரணங்கள் செல்வாவின் உடல்நிலை சூர்யாவின் உடல்நிலை போன்ற பல காரணங்களால் எடிட்டிங்கில் அவசரம் தெரிகிறது.ஒரு முடிவுடன் அரசியலுக்குள் நுழையும் குமரன் திட்டப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்க திடீரென நடக்கும் அவனது நண்பனின் மரணம் (கிளிஷே) அவனை நிலைகுலைய செய்கிறது. உளவியல் ரீதியான முதல் ஆழமான அதிர்ச்சிக்கு அவன் ஆளாகிறான். அதன் பின்னர் இடைவேளை முடிந்து நமது வழக்கமான செல்வாவின் transformation திருவிளையாடல் காட்சிகள் அரங்கேறியபடியே இருக்கின்றன.


இறுதியாக குமரன் அரசியலில் என்னவாக ஆகிறான் ஜெயிக்கிறானா தோற்கிறானா என்பதுதான் முடிவு. ஆனால் இந்த முடிவில் இயக்குனர் நமக்கு ஒரு சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார். கடைசியாக சொல்கிறேன்.


மார்க்கெட் சண்டை லேசாக புதுப்பேட்டை சண்டையை நினைவூட்டினாலும் அற்புதமாக இருக்கிறது. இறுதியில் நடப்பதுதான் கொஞ்சம் வழக்கமான ஒன்றாக இருக்கிறது. அதைப்போலவே டாய்லெட் சண்டையும். பெண்களை சரிநிகர் சமானமாக பாவிக்கும் முதல் இயக்குனரின் முதல் அடியாக ஸ்டண்ட் காட்சிகளில் இரண்டு பெண்களை இணைத்திருக்கிறார் செல்வா. குமரனும் பெண் என பார்க்காமல் வெளுத்து வாங்குகிறான். டாய்லெட் சண்டை காட்சி terrific ரகம்!noise இல்லாத கேமரா கொஞ்சம் இதமாக இருக்கிறது. அடிக்கடி வைக்கப்படும் க்ளோசப் காட்சிகள் குமரனின் அப்போதைய மனநிலையை நமக்கு தெளிவாக்குகிறது. இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட நிலவு காட்சிகள் ஆயிரத்தில் ஒருவனை திரும்பி பார்க்க வைக்கிறது.


இசை யுவனா என நம்மை கேட்க வைக்கிறது. தளம் என்னவோ அதற்கேற்ப இசைத்திருக்கிறார் யுவன். செல்வாவின் டெம்பிளேட் ரக பாடல் ஒன்று அங்கே இருக்கிறது. அது ஏன் என்று பலரும் கேள்வி கேட்கின்றனர். இடைவெளியற்ற அரசியல் காட்சிகளில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய இயக்குனர் விரும்பி இருக்கலாம். அவ்வளவுதான்.


அது இந்தப் பாடலில் ஒரு காட்சியில் வரும் ஆற்றங்கரை மரத்தின் செயற்கை இலைகள் போலவே இருப்பது கொஞ்சம் எதிர்பார்க்காத ஒன்றுதான்.

Subscribe to POPxoTV

திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் விமர்சிப்பவர்கள் மற்றும் பார்த்தவர்கள் புரியவில்லை என்பதால் இந்த இறுதி சஸ்பென்ஸை எனக்கு சொல்ல வேண்டும்போல இருக்கிறது. எல்லா திரைப்படங்களை போலவும் இந்த திரைப்படம் தெளிவான முடிவை நமக்கு தரவில்லை என்கிறதுதான் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களின் ஏக்கம்.


உண்மையில் செல்வாவின் அத்தனை படங்களையும் கவனித்தால் கடைசி முடிவை நம் கையில்தான் அவர் தந்திருப்பார். either this or that என நாம் நமது எண்ணங்களுக்கேற்ப அதனை மாற்றிக்கொள்ள முடியும். அதே சமயம் இப்படித்தான் படம் முடிகிறது என்கிற கணிப்புடனும் படம் முடிவடைந்திருக்கும். ஆகவே எந்தவித பார்வையாளர்களாக இருந்தாலும் அவர்கள் கோணத்தில் கதையை முடித்து கொள்ள முடியும்.


மற்ற படங்களில் தெளிவாக இல்லாமல் இந்த படத்தில் அதனை தெளிவாகவே சொல்லியிருக்கிறார். இது ஒரு ஓபன் எண்டெட் மூவி. படித்த இளைஞன் அரசியலுக்கு நுழைந்தால் அரசியல் என்னாகும் அல்லது அவன் என்னாவான் என்பதை அவரவர் பார்வைக்கு விட்டிருக்கிறார்.குமரன் தனது நண்பன் இறந்த அதிர்ச்சியில் மருத்துவமனையில் இருக்கும்போது அவரை கொல்ல சதி நடக்க அதை முறியடிக்க அவர் தனக்கு போடப்பட்டிருக்கும் ஊசியின் வீர்யத்தை முறியடிக்கிறார். அங்கிருந்து அவரது உளவியல் அப்படியே மாறுகிறது.


அதில் இருந்து குமரனின் நடவடிக்கைகளை கண்காணித்தால் அரசியல் குமரனை என்ன செய்தது குமரன் அரசியலை என்ன செய்கிறார் என்பதை நாம் இயக்குனரோடு ஒன்றி புரிந்து கொள்ள முடியும்.


மொத்தத்தில் நந்த கோபாலன் குமரன் ஒருவிதமான puzzle. ஒவ்வொரு முடிச்சாக நாம் தேடி தேடி அவிழ்க்க வேண்டும் என்றுதான் இயக்குனர் விரும்பியிருக்கிறார். ஒவ்வொரு எழுத்தாக நாம் கோர்க்க கோர்க்க அது நாம் எதிர்பார்க்காத வார்த்தையில் சென்று முடியும் வார்த்தை புதிர் போலத்தான் இந்த திரைப்படமே.


கேம் விளையாட பிடிக்கும் என்பவர்கள் இந்த சுவாரஸ்யமான கேமை விளையாண்டுதான் பாருங்களேன்!


ngk %281%29


புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்


வாழ்தலிற்கான ரகசிய வரைபடம் - சூப்பர் டீலக்ஸ்!


பேரன்பு - ஒரு பார்வை


டு லெட் திரைப்படம் - தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சி.


சூப்பர் டீலக்ஸ் - பெண்கள் மீதான பார்வையை அகலமாக்குகிறது


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.