பேரன்பு - ஒரு பார்வை

பேரன்பு - ஒரு பார்வை

படம் பார்க்க ஒற்றை ஆளாக டிக்கெட் எடுத்து யாரைப்பற்றிய கவலைகளும் இல்லாமல் தனிமையின் அதீதத்தை அனுபவித்தபடி இடைவேளைக்கான உணவையும் முன்பே வாங்கி கொண்டு முகம் தெரியாத நபர் அருகே அமரும் வரை ஒரே கேள்விதான் என்னுள் இருந்தது.


இப்போது என்ன செய்ய வேண்டும்.


முந்தைய படங்களை பார்க்கையில் வைத்திருந்த நோட்டையும் பேனாவையும் பார்த்தபடியே இருந்தேன்.


இது ராமின் படம். இதனை நாம் முந்தைய படங்களை போல அணுக முடியாது என்பது தெரிந்தது. படம் ஆரம்பிக்கும்வரை என்ன எழுதப் போகிறோம், எதையெல்லாம் கவனிப்பது என்றெல்லாம் பதட்டம் இருந்தது.


திரை அரங்கு இருண்டு திரையில் வெளிச்சம் பரவியது .. ராமின் பேரன்பு... ஒளிர்ந்தது.


டைட்டில் கார்ட் நகர்ந்து கொண்டிருக்கிறது. திரையரங்கு முழுக்க ஒருவிதமான பேரமைதி நிலவுகிறது. சொல்லி வைத்தாற்போல ராமின் பெயருக்கு கைதட்டல்கள் அதன் பின் டைட்டில் கார்ட் நகர்கையில் யாரும் சொல்லாமலே பேரமைதி யுவன் ஷங்கர் ராஜா பெயருக்கு விசில் கைதட்டல்கள் மீண்டும் அமைதியாக டைட்டில்கார்டு நகர்கிறது இறுதியாக ராம் பெயருக்கு கைதட்டல்.


யாரும் சொல்லாமல் எதுவும் முன்னறிவிப்பில்லாமல் ஒரு நேர்த்தியான உறவு பார்வையாளருக்கும் இயக்குனருக்கும் இடையே உலவுவதைக் கண்கூடாக அனுபவித்துக் கொண்டிருந்தேன்.கதை ஆரம்பிக்கும் கொடைக்கானல் நதியில் மூடுபனிக்கு இடையே படகில் மம்மூட்டியும் (அமுதன்) அவரது மகள் சாதனாவும் (பாப்பா) பயணித்த போதே என்னையும் அந்தப் படகில் ஏற்றிக் கொண்டேன். இப்படியாகத்தான் பேரன்பின் பயணம் என்னுள்ளும் தொடங்கியது.


பிறந்ததில் இருந்து மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையை அவரது தாயார் 14வயது வரை கவனித்துவிட்டு பின்னர் மம்மூட்டி துபாயில் இருந்து வந்த உடன் குழந்தையை இனி நீ பார்த்துக் கொள் , இவ்வளவு நாள் நான் இவளை பொறுப்பாகப் பார்த்துக் கொண்டேன். இனி என்னை நேசிப்பவரோடு நான் போகிறேன் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு மம்மூட்டி வீட்டுக்கு வந்துவிட்டாரா என்பதை உறுதி செய்து கொண்டு பிரிகிறார்.


பேரன்பு படத்தின் மூலம் வாழ்க்கையை நாம் எப்படி எல்லாம் அணுகலாம் என்பதை இயக்குனர் ராம் நமக்கே தெரியாமல் சொல்லிக் கொடுத்திருக்கிறார். சமூகத்தை பொறுத்தவரை அருவெறுப்பான குற்றங்களை நாம் இப்படியும் அணுகலாம் அல்லது எல்லா குற்றங்களும் அருவெறுப்பானவை அல்ல சிலது அர்த்தம் நிறைந்தவை என்பதை நமக்கு புரிய வைக்கிறார்.மனைவி நீங்கியபின் சிறப்பு சிறுமியான பாப்பாவை (சாதனாவை) அவர்கள் உறவினர்கள் கூட வைத்துக் கொள்ள மறுக்கையில் துபாயில் இருந்து வந்த தந்தையை சாதனாவும் ஏற்றுக் கொள்ள மறுகையில் அவளை அழைத்துக் கொண்டு மனிதர்கள் இல்லாத இடத்தில் குருவிகள் சாகாத இடத்தில் வாழ அமுதனும் பாப்பாவும் பயணிக்கும் இடம்தான் மேலே சொன்ன கொடைக்கானல் நதி.


நதியின் அக்கரையில் மரத்தால் ஆன ஒரு சுற்று சூழல் பாதிக்கப்படாத வீட்டை விலைக்கு வாங்குகிறார். அந்த வீட்டைக் கொடுக்கும் வெளிநாட்டு பெண் வேறு யாருக்கும் விற்று விட வேண்டாம் என்று நிபந்தனையில் வீட்டை விற்று விட்டுப் போகிறார்.


பாப்பா போன்ற சிறப்பு சிறுமிகளிடம் யாவரும் காட்டும் அன்பை கக்கடைசி பூனைக்குட்டிக்கு எப்படி தான் அம்மாவின் உணவாகப் போகிறோம் என்பது புரியாதோ அப்படிப்பட்ட அன்பு என்று ராம் விவரிக்கையில்.... சட்டென நெஞ்சு பதறும் நொடிகளை நம்மால் தடுக்க முடியாது. 


நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருக்கும் மகளின் இயலாமை பற்றிய ஏக்கங்களை அவளாகவே மாறும் தருணத்தில் புரிந்து கொண்டபின் அவரது ஏக்கம் தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்களை விட சிறிதாகிப் போனது என்று ராம் எழுதியிருக்க.. அதனை மம்மூட்டியின் குரலில் கேட்கையில் மனம் நெகிழ்ந்து ஒடுங்க இடம் தேடி அலைகிறது.


இப்படிப் படம் நெடுக கவிதைகளால் இழைத்திருக்கிறார் இயக்குனர்.


peranbu %282%29


பாப்பா போன்ற குழந்தைகளின் தகப்பன்கள் தாய்கள் அனைவருமே கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது உண்மையாகத்தான் இருக்க முடியும்.


பாப்பாவை பார்த்துக் கொள்ள வரும் அஞ்சலிக்குப் (விஜி)பின் ஒரு புதிர் இருக்கிறது. அந்தப் புதிருக்கான விடையை நாம் தெரிந்து கொள்ளும்போது அமுதன் அந்த அழகிய வீட்டை விட்டு நகர்ந்து போகிறார்.அது எதனால் அதன் பின் பாப்பாவை வைத்துக் கொண்டு அமுதன் என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் கதை


அமுதன் வாழ்வில் விஜி தேவதையாகையில் வரும் பாடல் வான் தூறல் .. வதந்திகளை மறந்து விட்டு வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கொண்டோமானால் இது கவிஞர் வைரமுத்துவின் மிக சிறந்த படைப்புகளில் ஒன்றாக இருக்கலாம்.

Subscribe to POPxoTV

இயற்கை இரக்கமற்றது எனும் அத்தியாயத்தில் வரும் செத்து போச்சு மனசு பாடல் நம் நெஞ்சை உலுக்கி வாழ்நாள் முழுக்க உயிருக்கடியில் நாம் ரகசியமாகத் தேக்கி வைத்திருந்த கண்ணீர் தருணங்களை எல்லாம் கொட்டி தீர்ப்பதற்கானது

Subscribe to POPxoTV

இந்தப் படத்தில் நம் கண்களுக்குத் தெரியாத கதாபாத்திரங்கள் இரண்டு. ஒன்று யுவன் ஷங்கர் ராஜாவின் இசை மற்றொன்று தேனீ ஈஸ்வரின் ஒளிப்பதிவு.


யுவன் ஷங்கரின் மறுபிறவி இசையாக எனக்கு இந்தப் படம் தென்படுகிறது. மறுபிறப்பில் முற்றிலுமாக தனது பழைய இசைத்துணுக்குகளின் வாசனைகளை மறந்த ஒரு இசைஞன் புத்தம்புதியதாக தனது ஆத்மாவில் இருந்து ஒரு இசையை வாசிக்கும் பரிசுத்தத்தை இப்படத்தின் பாடல்கள் மூலம் உணர முடிகிறது. பின்னணி இசையில் யுவன் தரும் இசைக்குறிப்புகளும் மௌனத்தில் விடும் வெற்றிடங்களும் நம்மை கதையோடு பின்னிப்பிணைந்து கிடக்க வைக்கிறது.தேனீ ஈஸ்வரின் ஒளிப்பதிவு எப்போதும் நமக்கானது. சாமானியர்களை இயற்கை ஒளியில் அற்புத கோணங்களில் அழகானவர்களாக காட்டும் வித்தை ஒரு சிலருக்கே வரும். சூழலுக்கு நட்பான மின்சாரமற்ற அந்த மர வீட்டில் மின்விளக்குகள் இல்லாமல் மெழுகுவர்த்தியின் ஒளியில் அவர் கேமரா கவிதைகளை படைக்கிறது. நாம் நிஜமாகவே கொடைக்கானலுக்கு சென்றாலும் இப்படி ஒரு கோணங்களில் அதனை நம்மால் பார்க்கவே முடியாது.


மூன்றாவது அத்யாயத்தில் இரவில் பனிபடர்ந்த நதி காலையில் சூரியன் வந்தவுடன் துளிதுளியாக விலகும் ஒரு டைம்லேப்ஸ் காட்சி நம்மை பிரம்மிக்க வைக்கிறது. அதைப்போலவே அத்யாயம் ஆறில் நீருக்குள்ளிருந்து காட்டப்படும் சூரியன் மற்றும் பிம்பங்கள் நம்மை ஏதோ செய்கிறது. இது ஒரு உதாரணம் மட்டுமே. இதைப்போன்ற பல்வேறு காட்சிகள் வழியே நம்மையும் உள்ளே இழுத்து படம் முழுக்க கூட்டிச் செல்கிறார் மாயக்கார தேனிக்காரர்.


எடிட்டர் சூர்யா பிரதாமன் இயக்குனரோடு மிக சரியாக இணைந்து கச்சிதமாக கதையை கொண்டு போகிறார். முந்தைய ராம் படங்களில் இந்த கச்சிதம் விட்டுப் போயிருக்கலாம். இந்தப் படம் அற்புதமாக வந்திருக்கிறது என்பதே அதன் சாட்சி.


உலகத்தரம் நிறைந்த இந்தப் படத்தை பி.எல். தேனப்பன் தயாரித்திருக்கிறார். சில சமயம் இப்படிப்பட்ட படங்களைத் தயாரிப்பது ஆத்ம திருப்தி என்று ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். இப்படி ஒரு சிறப்பான படத்தை லாபநோக்கமின்றி தயாரித்த இவருக்கு பாராட்டுக்கள்.


peranbu %283%29


மம்மூட்டி. இந்தப் படத்தின் நாயகன். கேமரா மாயங்கள் எதுவும் இல்லாமல் இன்னமும் இளமையாக இருக்கும் மம்மூட்டியை கொடைக்கானல் சூரிய ஒளியில் பார்க்கும்போது வாவ் என மயங்குகிறது மனது. கிட்டத்தட்ட 28 வருடங்களுக்குப் பின்னும் அழகன் படத்தில் பார்த்த அதே மம்மூட்டிதான் இன்னமும் தெரிகிறார். அவர் நடிக்கவில்லை. இயல்பாக தகப்பனாகவே வாழ்ந்திருக்கிறார்.


மகளை நேசிக்க வைக்க அவர் செய்யும் சிறுபிள்ளை விளையாட்டுக்கள், அவளது அன்பிற்காக ஏங்கும் தகப்பனாக என்ன செஞ்சா உனக்கு பிடிக்கும்னு தெரிலயே என்று வருந்தும் நொடிகள், மகள் வயதுக்கு வந்ததை உணரும்போது காட்டும் வேதனை, விஜிக்கும் தனக்குமான தருணங்களில் பாப்பாவுக்கு தெரியாமல் காட்டும் வெட்கம், மகளுக்கும் மற்றவர்களை போல உணர்ச்சிகள் உண்டு என்பதை கண்ணால் பார்க்க நேர்ந்தபின் வெளிப்படுத்தும் கண்ணீர் என ஒவ்வொரு இடங்களிலும் அசர வைக்கிறார்.சாதனா இன்னமும் இந்தக் குழந்தை அப்படியே இருக்கிறதே என்றுதான் ஆச்சர்யப்பட வைக்கிறார். இடைவேளையில் அருகே இருந்த கிராமத்து பெண் மற்றொரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தார், நிஜமாவே இந்தக் குழந்தைக்கு இப்படியா இல்ல படத்துல நடிக்குதா என்று. இதனைக் கேட்ட போது சாதனா உனக்கான விருது இடைவேளையிலேயே கிடைத்து விட்டது என்றுதான் தோன்றியது.


சாதனாவுக்கு வசனங்கள் என்று ஏதுமில்லை ஆனால் அவர் உடல்மொழியால் அத்தனையையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அவர் சொல்லும் சின்ன ம் முதல் அவர் வீறிட்டு அலறும் சத்தம் வரைக்கும் பார்க்கும் பார்வையாளருக்கு வசனம் இல்லாமலே அவர் மொழி புரிகிறது. இது மிகப்பெரிய சாதனைதான் சாதனா. பல்வேறு விருதுகளை நீ வாங்கப் போகிறாய். குறிப்பாக இந்த முறை அந்த ' டிவிக்காரர்கள் உனக்கு விருது இல்லை என்று சொல்லி விட முடியாது .. !


திருநங்கையாக அஞ்சலி அமீர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒரு திருநங்கையின் வாழ்நாள் தேடலை இந்தப் படத்தில் எழுத்தளவிலாவது பூர்த்தி செய்த பெருமை இயக்குனர் ராமை நிச்சயம் சென்று சேரும்.12 அத்யாயங்களாக தனது கதையைப் பிரித்து சொல்லும் இயக்குனர் ராம் முதல் அத்யாயம் இயற்கை வெறுப்பானது என்பதில் ஆரம்பித்து 12வது அத்தியாயத்தில் இயற்கை பேரன்பானது என்று முடிக்கிறார்.


பார்த்து மகிழ்ந்து கொண்டாடிப் பின் மறந்து விட பேரன்பு என்பது ஒரு திரைப்படம் இல்லை. முதல் பாதி கவிதை இரண்டாம் பாதி புதினம் என பேரன்பை பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார் இயக்குனர் ராம்.


ஒரு சில படங்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது. ஒரு சில படங்கள் திரைப்படங்களுக்கே அப்பாற்பட்டது (more than a movie ) இதில் ராமின் படம் இரண்டாவது வகையை சேர்ந்தது.


ஒரு பார்வையாளனின் ரசனையை உயர்த்த வைத்து திரைப்படம் பார்ப்பது என்பதை ஒரு கலையாக அவனறியாமலே அவனுக்குக் கற்றுக் கொடுக்கும் படம்தான் பேரன்பு. 


திரை விமர்சனம் விஸ்வாசம்


பேட்ட - விஸ்வாசம் ஒப்பீடு


 


படங்களின் ஆதாரங்கள் - பிக்ஸாபெ,ஜிபி,பேக்செல்ஸ்


வீடியோ ஆதாரம் யூட்யூப்


--


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.