டு லெட் திரைப்படம் - தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சி

டு லெட் திரைப்படம் - தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சி

சில காலமாகவே தமிழ் சினிமாவில் இந்த "நாயக ஆராதனைகள்" கட்டவுட் கலாச்சாரங்கள் எல்லாம் எப்போது இதில் இருந்து நாம் மீள்வோம் என்கிற யோசனையை பலருக்கும் கொடுத்திருக்கும்.


நாயகன் என்பவனின் கதாபாத்திரத்தை உருவாக்கி அதனை மக்கள் ஏற்றுக் கொள்ளும்படி செய்பவர் ஒரு இயக்குனர்தான். இன்றைக்கு முன்னணி நட்சத்திரங்கள் எல்லாம் ஜொலிப்பது இந்த இயக்குனர் எனும் ஆகாயத்தில் இருந்துதான் என்பதை இன்னமும் இந்த சமுதாயம் புரிந்து கொள்ளவில்லை.


நமக்கு பிடித்த நடிகரைக் கொண்டாடலாம். தவறில்லை. ஆனால் வெகு அருகே நம் கண்முன் நிற்கும் உறவுகளை நட்புகளை அவமதித்து தான் தனக்கு பிடித்த நடிகரைக் கொண்டாட வேண்டும் என்று நினைப்பது வன்முறை அல்லவா.


அப்பா அம்மாவை நேசிக்க நேரமில்லாமல் அஜித் பற்றி பேசுவதும் வீட்டைக் கவனிக்காமல் விஜய்க்கு கட்டவுட் வைப்பதும் ஏற்றுக் கொண்டு பாராட்டத் தக்கதாக எனக்குத் தெரியவில்லை.


இப்படியான தமிழ் சினிமா கலாச்சாரத்தில் இப்போது வெளி வந்துள்ள ஒரு திரைப்படம் டு லெட் (Tolet) . இங்கே வெளியிடுவதற்கு முன்பாகவே வெளிநாடுகளில் பல அவார்டுகளை வென்று விட்டுத்தான் வந்திருக்கிறது என்பது மிகப் பெரிய ஆறுதல். (32 awards)ஒரு அழகான சிறிய நடுத்தர குடும்பம். அப்பா , அம்மா, குழந்தை என மூவருக்குமான உலகம் வெகு அழகாக இருக்கிறது. ஆனாலும் அடிப்படை தேவைகளான உணவு, உடை இருப்பிடத்தில் இருப்பதற்கு ஒரு இடம் தேடி அலைவதுதான் கதை.


வழக்கமாக நடுத்தர வர்க்கம் சந்திக்கும் இதே சிக்கல்கள்தான் சினிமாத்தனம் இல்லாமல் எடுத்திருக்கிறார் இயக்குனர் செழியன்.


ஏற்கனவே குடியிருக்கும் வாடகை வீட்டில் காரணமின்றி காலி செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப் படுகிறார்கள் இளங்கோவும் அமுதாவும். இவர்களுக்கு சித்தார்த் எனும் மகன் இருக்கிறார். ஒரு மாதத்துக்குள் காலி செய்ய வேண்டிய கட்டாயம் வருகிறது.


ஹவுஸ் ஓனர் எனும் பெயரில் அவர்கள் வீட்டில் குடியிருப்பவர்களை ஏளனமாக பார்ப்பதும், நடத்துவதும் அதிகாரம் செய்வதும் இல்லையில்லை சர்வாதிகாரம் செய்வதும் நாம் தினமும் அனுபவித்த சிக்கல்கள் என்பதால் சுலபமாகப் படத்துடன் நம்மால் ஒன்றி விட முடிகிறது.வீட்டுக்காரம்மாவிற்கும் அமுதாவிற்குமான உரையாடல்கள் பெரும்பாலும் நம் கற்பனைக்கு விடப்பட்டிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம். அதன் எதிர்வினைகள் மட்டுமே நமக்கு காட்டப்படுகிறது.


சித்தார்த் எனும் அந்தக் குட்டி பையன் நம் விழிகளில் நிறைந்து நிற்கிறான். அவனது மழலை மாறாமல் அவனை நடிக்க வைக்காமல் இயக்குனர் அவனது இயல்பைத்தான் பெரும்பாலும் படம் பிடித்திருப்பதாக எனக்குத் தோன்றியது.


அந்த மூவரும் இந்தக் கதையில் ஒன்றி நடித்திருக்கின்றனர் என்றாலும் சித்தார்த் அவனது இயல்பான பரிசுத்தமான மழலையால் நம்மைக் கவர்கிறான்.


இயக்குனரே ஒளிப்பதிவும் செய்திருப்பதால் காட்சி மூலம்தான் பெரும்பாலும் கதை நகர்த்துகிறார். இவர் ஒரு அற்புதமான எழுத்தாளரும் கூட. ஆகவே பல காட்சிகள் கவிதையாக மாறுகிறது.வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் பெரும்பாலும் குற்றவாளிகளாவே சித்தரிக்கப் படுகிறார்கள் என்பதை இவர் வசனமாக எங்கேயும் வைக்கவில்லை. இவர்கள் இருக்கும் வீட்டைப் பார்வையிட அடுத்த ஆட்கள் வருகிறார்கள்.. அப்போது இவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள், ஆட்கள் வந்ததும் சாப்பாட்டை தள்ளி வைத்து இருவரும் அந்த சிறிய வீட்டில் ஓரமாக குற்றவாளி போலவே தலைகுனிந்து நிற்பார்கள். மற்றொரு முறை அமுதா குளித்து வெளியே வரும் சமயம் ஆட்கள் வந்துவிட பதறிப் போய் குளியறைக்குள் நடுக்கத்தோடு நிற்கிறாள். இன்னொருமுறை இயக்குனராகும் முயற்சியில் இருக்கும் இளங்கோ உலக சினிமா ஒன்றைப் பார்த்தபடி இருக்க ஆட்கள் வருகிறார்கள் சினிமா பாஸ் செய்யப்படுகிறது. வீட்டை ஆட்கள் பார்வையிடும் போது அலமாரியைத் திறந்து ஒரு ஆண் பார்க்க அமுதாவின் நாப்கின்கள் கீழே விழுகின்றன. தலை குனிந்து அவஸ்தையுடன் நிற்கிறாள் அமுதா.


இதெல்லாம் வசனமின்றி காட்சிகள் நகர்த்தும் ஒரு சில உதாரண காட்சிகள்தான்.எல்லாவற்றையும் வார்த்தைகளால் நிரப்பிக் கொண்டே இருக்க முடியாது என்பதில் நான் உடன்படுகிறவள். எனக்கு ஒரு வீடு கிடைக்காமல் நான் தனி ஒரு பெண்ணாக போராடியதை ஒரு புத்தகமாகவே எழுத முடியும். அவ்வவளவு கேள்விகள் அவ்வளவு அவமானங்கள்.. இப்படி ஒருகாலத்தில் வீடு தேடிய அனைவரும் ஏதோ ஒரு அனுபவத்தை அடைந்திருப்பார்கள் இது அவர்களுக்கான படமும்தான்.


புறாக்களை ஏக்கமாக எவ்வளவோ நாள் பார்த்திருக்கிறேன்.. இவைகளை போல வாடகையற்ற வீட்டில் வாழ நமக்கு ஏன் அனுமதி இல்லை என்கிற ஏக்கம் என்னுள் இருந்தது. இப்பெரு நகரத்தில் எத்தனையோ நூற்றுக்கணக்கான வீடுகள் பூட்டிக் கிடக்கின்றன .. அதிலெல்லாம் வீடற்ற மனிதர்கள் வசிக்க ஏன் அனுமதி இல்லை என்று இப்போதும் புரியவில்லை.


ஒரு நல்ல வீட்டை முழுமையாகத் தரைமட்டம் ஆக்குகிறார்கள். அதனை இளங்கோ அத்தனை ஆவேசத்தோடு பார்க்கிறான். காணி நிலத்திற்காக ஏங்கிய பாரதியின் ஆவேசத்தை இளங்கோவின் கண்களின் நிறுத்தி இருக்கிறார் இயக்குனர்.


சினிமாக்காரர்களுக்கு வீடு தர மாட்டோம் என்பதை நானும் பல இடங்களில் அனுபவித்திருக்கிறேன். என்றாலும் எனக்கு அப்போது தோன்றாத ஒரு விஷயத்தை இப்போது இயக்குனர் தெளிவுபடுத்துகிறார்.


"சினிமாக்காரங்க கையில நாட்டையே கொடுக்கிறோம் ஆனால் இன்னமும் வீட்டைக் கொடுக்கத்தான் யாருமில்லை" என்கிற வசனம் சுளீர் என்று சினிமாக்காரர்களை அவமதிக்கும் ஆட்களை சவுக்கால் அடிக்கிறது.வாடகை வீடு தேடி போகும் சமயம் இவர்களின் ஜாதியை கேட்கிறார்கள், மதத்தை உறுதி செய்கிறார்கள்... இன்னமும் சமூகம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை நமக்கு சுட்டிக் காட்டுகிறார் இயக்குனர்.


இதற்கிடையில் இயக்குனராக விரும்பும் இளங்கோ தயாரிப்பாளரிடம் கதை சொல்வதும் அதற்கு தயாரிப்பாளர் நம்பிக்கை தருவதும் பணத்திற்காக மனைவியை மற்றவர்களிடம் கெஞ்ச விடாத காதலோடு தானே டப்பிங் செய்து சம்பாதித்து மனைவிக்குத் தருவதும் போன்ற காட்சிகள் நடக்கிறது.


இறுதியாக ஒரு வீடு அமைகிறது. அந்த வீட்டை அவர்களுக்கு கொடுப்பதற்கு முடிவு செய்யும் முன் நடப்பதெல்லாம் இன்னமும் சக மனிதர்களை நாம் எப்படி எல்லாம் நம்பாமல் இருக்கிறோம் என்பதற்கான ஆதாரங்கள். தனி மனித உரிமைகளை சர்வ சாதாரணமாக வீட்டுக்கு சொந்தக்காரர் எனும் பெயரில் அவர்கள் மீறுவதும் அது குறித்த குற்ற உணர்ச்சி சிறிதும் இன்றி அது அவர்களின் உரிமை என்று நடப்பதும் பார்க்கும்போதே நமக்கு ரௌத்திரம் வருகிறது.


வீட்டுக்காரம்மா குறித்துக் கொடுத்த தேதியில் வீட்டைக் காலி செய்வதாக உறுதி செய்து விடுகிறார்கள். அந்த தேதியும் வருகிறது. ஒவ்வொரு பொருளாக பேக் செய்கிறார்கள்.


முன்பொருமுறை கசக்கிப் போட்ட தனது ஓவியத்தை அயர்ன் செய்து கொடுக்கும்படி இறைஞ்சும் அந்தக் குழந்தைதான் சுவற்றில் தான் வரைந்த ஓவியங்களைத் தானே அழிக்கும் மனப்பக்குவத்துக்கும் வருகிறது. புது வீட்டில் இனிமேல் சுவற்றில் கிறுக்க மாட்டேன் என்று அங்கு செல்வதற்காக தன்னை தயார் செய்கின்றான். அன்றைய இரவு முழுவதும் அமுதாவும் இளங்கோவும் தூங்கவே இல்லை. மறு நாள் விடிகிறது. மிச்சம் இருந்த திரைசீலையையும் கழட்டி வைக்கிறான் இளங்கோ.


அன்றைக்கு மாலை வீடு காலி செய்வதாக உறுதி செய்திருக்கிறார்கள். பேக் செய்யப்பட்ட பொருள்களோடு வீட்டைப் பூட்டும் அமுதாவோடு படம் நிறைவடைகிறது.இந்த அற்புதமான திரைக்கதையில் பல விஷயங்களை நமது கற்பனைக்கு விட்டிருக்கிறார்கள். புது வீடு அட்வான்ஸிற்காக 25000 தயார் செய்து கொண்டு வரும் நெரிசல் நிறைந்த சாலையில் அந்தப் பணத்தை இளங்கோ தொலைப்பாரோ என்று நமக்கு பயம் வரலாம். கதையின் போக்கு வீடு இவர்களுக்கு கிடைக்குமா கிடைக்காதா என்கிற மன அழுத்தத்தை நமக்குள்ளும் கடத்துகிறது. சேட்டு அம்மாவிடம் கேட்டு சொல்கிறேன் என்றதும் நமக்கும் பதட்டமாகிறது. சொன்னதை விட 500 அதிகம் வாடகை ஏத்தும்போதும் அதே பதட்டம் நமக்கு வருகிறது.


இசை என்பது ஒரு படத்திற்கு பலம் சேர்ப்பது.உணர்வுகளை ரசிகனிடம் கொண்டு சேர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்தப் படத்தில் இசையே இல்லை என்பதை நாம் உணரவே முடியாது. ஒலி கலைஞர் தபஸ் நாயக் அசல் சப்தங்களை காட்சிகளுக்கு ஏற்றபடி கோர்த்துக் கொடுத்திருக்கிறார்.


பெரும்பாலும் படத்தை ஆக்கிரமிக்கும் கதாபாத்திரங்களான சந்தோஷ் ஸ்ரீராம் (இளங்கோ) ஷீலா ராஜ்குமார் (அமுதா) வருண் (சித்தார்த்) படத்தின் கனத்தை தங்குகிறார்கள்.


99 நிமிட திரைப்படத்தில் வீடு தேடுவதே அதிகம் வருகிறது என்று பலர் யோசிக்கலாம். ஆனால் படத்தின் ஆன்மாவே அங்குதான் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம். தனது வேலையை கச்சிதமாகியிருக்கிறார் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்.இயக்குனர் , எழுத்தாளர், ஒளிப்பதிவாளர் செழியன் அவர்கள் இந்த டு லெட் திரைப்படத்தின் மூலம் மனிதர்களின் உளவியலை சரிவரக் கையாண்டிருக்கிறார்.இன்றைய நவீன காதல் காலத்தில் விவாகரத்து யுகத்தில் ஒரு கணவன் மனைவி மற்றும் குழந்தை எப்படி இருக்க வேண்டும் என்பதை நமக்கு நோகாமல் சொல்லிக் கொடுத்திருக்கிறார். இது நுட்பமாக உணர்பவர்களுக்கு மட்டுமே புரியக் கூடியது.


ஒவ்வொரு ஆணின் கனவும் மென்மையான கேள்வி கேட்காத மனைவி, ஒவ்வொரு பெண்ணின் கனவும் தன்னை பாதுகாக்கிற ஆண், ஒவ்வொரு குழந்தையின் தேவையும் தன்னை நேசிக்கிற பாராட்டுகிற நேரம் செலவழிக்கிற பெற்றோர் .. இது அத்தனையும் இந்தக் கதையில் இருப்பதன் மூலம் ஒரு தலைமுறைக்கான அக்கறை இயக்குனரிடம் தெரிகிறது.


ஒளிப்பதிவு பெரும்பாலும் இயற்கை வெளிச்சத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் சாலிகிராமம் , காளியம்மன் கோயில் வீதிகளில் படமாக்கப்பட்டிருக்கிறது. எளிய முறையில் இயல்பான வெளிச்சத்தில் அற்புதமான கோணங்களில் கேமரா பேசுகிறது. உண்மைதான் பல இடங்களில் கேமரா தான் பேசுகிறது.


இந்த அற்புதமான திரைப்படத்தை தயாரித்த ழ சினிமாஸ் திருமதி பிரேமா செழியன் அவர்களுக்கு நன்றி.


கமர்சியல் , விசில், பாடல், சண்டை என்பதையெல்லாம் கொஞ்சம் மறந்து இந்த படத்தையும் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சி வேகமாக வளரும்.


இதிலும் கைதட்டி சிரிக்கும் அளவிற்கு நகைச்சுவை இருக்கிறது என்பதை சொல்ல மறந்து விட்டேன்.


அவசியம் இந்தப் படத்தை பாருங்கள். நீங்கள் என்ன உணர்ந்தீர்கள் என்பதை இங்கே பதிவிடுங்கள்.


படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்.


--


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.