பிக் பாஸ் ஜூலிக்கும் வைஷ்ணவிக்கும் டஃப் ஃபைட் கொடுத்த மீரா மிதுன்.. ஒருவழியாக வெளியேறினார்

பிக் பாஸ் ஜூலிக்கும் வைஷ்ணவிக்கும் டஃப் ஃபைட் கொடுத்த மீரா மிதுன்.. ஒருவழியாக வெளியேறினார்

பிக் பாஸ் எப்போதுமே தனது வீட்டில் உள்ளவர்களின் அமைதி மற்றும் நிம்மதியைக் குலைக்கும் போட்டியாளர்களை ஊடுருவ விட்டு அதில் தாக்குப் பிடிப்பவர்களை வின்னர் ஆக்கி வருவதை வழக்கமாகக் கொண்டவர்.

அதன் படி மீரா மிதுன் எனும் போட்டியாளரை உள்ளே அனுப்பும்போதே அவர் பிரச்னைக்குரியவர் என்பதை அறிந்திருந்த அவரது என்ட்ரியை போட்டியாளர்கள் எதிர்பாராத நேரத்தில் கொடுக்க வைத்தார். திடீரென பாடல் ஒலிக்க நாம் மட்டும் தான் போல என சந்தோஷத்தில் 15 போட்டியாளர்களும் ஆடிக் கொண்டிருக்கும் போது அதிரடியாக நுழைந்தவர்தான் மீரா மிதுன்.

அந்த பாடல் ஒலிக்காமல் உற்சாக மனோபாவம் இல்லாமல் போட்டியாளர்கள் இருக்கும்போது அவர் உள்ளே நுழைந்திருந்தால் நிறைய போட்டியாளர்கள் முகத்தில் அதிருப்தி அப்பட்டமாகவே தெரிந்திருக்க வாய்ப்பிருப்பதால் அதனைத் தவிர்க்கவே அப்படி ஒரு ஏற்பாடு செய்யப்பட்டதாக தோன்றுகிறது.

 

Youtube

உள்ளே நுழையும்போதே ரேகிங் மூலம் மீராவின் சகிப்பு தன்மையை சோதனை செய்த பிக் பாஸ் அதில் மீரா பொறுமையாக இருந்து காட்ட அனைவர் அனுதாப அலையையும் முதல் வாரமே பெற்றார். ஆனால் போகப் போக அவரது நடவடிக்கைகள் மற்ற அனைவருக்கும் தலைவலியாகவே மாறியது.

தினமும் ஒரு பிரச்னையை உண்டு பண்ணி யாரையாவது காயப்படுத்தி விட்டு அதன் பின்னர் "கூல்" "சில்" செய்வதை தனது வழக்கமாகவே மீரா மாற்றியிருந்தார். கூட இருந்த சாண்டி மற்றும் சரவணன் இருவரும் இதனைப் பற்றி மீராவிடம் சுட்டிக் காட்டாத நிலையில் தான் செய்வதே சரி என்கிற எண்ணம் அவரிடம் மேலோங்கி இருந்தது.

பொய்கள் கூறுவதையும் கூடுதல் குணமாக மீரா மிதுன் பெற்றிருப்பதால் தர்ஷன் தன்னை விரும்புவதாக சொல்வதாகக் கூட அவரால் பொய் சொல்ல முடிந்திருந்தது. ஒன்றாக இருப்பவர்களை பிரிக்கும் எண்ணம் மீராவிற்கு இருந்ததால் அடிக்கடி முகேன் மற்றும் தர்ஷனிடம் சென்று உன் உடன் இருப்பவர்களிடம் ஜாக்கிரதையாக இரு என்று வேதம் ஓதினார். ஒரு கட்டத்தில் இதே வேதம் கவினுக்கும் சொல்லப்பட்டது.

 

Youtube

உடன் பழகும் சாக்ஷியை நம்பாதே என்று மீரா கூறியபோதே எனக்கு தெரியும் யாரை நம்பனும் நம்பக் கூடாது என்று அதனை நீ சொல்லித் தர வேண்டாம் என்று நோஸ் கட் செய்தார் கவின். மீராவின் கவன ஈர்ப்பு தொழில்நுட்பம் என்பது எதனை நோக்கி வேண்டுமானாலும் இருந்தது.

தன்னை அப்பழுக்கில்லாதவராகக் காட்டிக் கொள்ள மீரா எது வேண்டுமானாலும் செய்யத் தயாராகவே இருந்தார். அதற்கான உச்சகட்ட உதாரணம்தான் கடந்த வாரம் இயக்குனர் சேரன் மீது பாலியல் பழி சுமத்தியது. ஆரம்பத்தில் சேரனின் தொடல் தவறாக இருந்தது என்று ஸ்பஷ்டமாக சேரன் மீது பாலியல் குற்றசாட்டை வைத்த மீரா சக போட்டியாளர்கள் சேரனுக்கு ஆதரவாக பேசவே தனக்கு சேரன் செய்த செயல் உடல் ரீதியாக வலித்தது என்று தடம் மாறினார்.

எவ்வளவோ மனிதர்களையும் மோசமான அனுபவங்களையும் பார்த்த இயக்குனர் சேரனுக்கு மீராவின் இந்த செயலை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இரண்டு பெண் குழந்தைகளுக்கு தகப்பன் நான் என் மகள்களுக்கு எப்படி சம்பந்தம் பேசுவேன் என ஒரு ஆண் அத்தனை கேமராக்கள் முன்பு கதறியது சக போட்டியாளர்களை மட்டும் அல்லாமல் பார்வையாளர்களையும் பதற வைத்தது.

.

Twitter

சனிக்கிழமை இதற்கான தீர்வு கிடைக்குமா அல்லது வழக்கம் போல வசதியாக ம(றை)றக்கப்பட்டு விடுமா என்கிற கவலை சேரனைப் போலவே பார்வையாளர்களுக்கும் இருந்தது. ஆனால் கமல்ஹாசன் இதனை அழகாக வெளியே கொண்டு வந்தார். மீராவிற்கு பாடம் புகட்டினார்.

ஆனால் அத்தனை வெளிப்படையாக தனது பொய்கள் போலித்தனங்கள் தெரிய வந்த பின்னரும் உண்மை கடவுளுக்கு தெரியும் என்று தனது கண்ணீர் எனும் ஆயுதத்தை பயன்படுத்தி சாண்டியை மூளை சலவை செய்தார் மீரா. இவ்வளவு நிரூபித்த பின்னரும் இன்னும் பொய் சொல்லும் மீரா மீது தனது கோபத்தை மறைமுகமாக வெளிப்படுத்திய கமல்ஹாசன் உடனே வெளியே வரலாம் (eviction) என்று எந்தப் பூடகமும் இல்லாமல் அழைத்து விட்டார்.

மீரா மிதுன் வெளியேற்றப்பட்டாலும் ரகசிய அறைக்குள் அவர் தங்க வைக்கப்படலாம் என்கிற பதட்டம் இருந்ததால் மீரா வெளியே நடையைக் கட்டும்வரை பார்வையாளர்களின் பதட்டம் தொடர்ந்தது. கிளம்பும்போதும் சேரன் மீது சொல்லாத ஒரு விஷயத்தை சொன்னதாக பழி சுமத்திய மீரா கமல் கேட்கும்போதும் அவர் அப்படித்தான் சொன்னார் என்று கூசாமல் நேருக்கு நேராக பொய் சொன்னார். அதன் பின்னரே கிளம்பினார்

கடந்த சீசன்களில் வெகுவாக விமர்சிக்கப்பட்ட ஜூலி மற்றும் வைஷ்ணவி இருவரை மிஞ்சும் அளவிற்கு தனது குணத்தை காட்டிய மீரா மிதுன் ஒருவழியாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். ஜூலி கூட வெளியே வந்த உடன் தனது தவறை உணர்ந்து பரணியிடம் நாடு ரோட்டில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். ஆனால் மீராவோ இறுதி வரைக்கும் பொய்களோடுதான் இருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டை கொஞ்சம் அகலமாக்கிப் பார்க்கையில் வாழ்க்கையிலும் ஒரு சிலர் இப்படித்தான். பொய்கள் என்பதை தங்கள் சுபாவமாக மாற்றி இருப்பார்கள். அதனால் மற்றவர் மனம் நோக செய்வதை மற்றவர் வாழ்க்கை வாழ்வாதாரம் பாதிப்பதை பற்றிய எந்த ஒரு கவலையும் அவர்களுக்கு கிடையாது.

கண்களை நேருக்கு நேராக பார்த்தபடி பொய்களை சொல்லும் குணம் உள்ளவர்கள், தங்களது குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் தீர்க்கமாக நெஞ்சு நிமிர்த்தி நான் அப்படி செய்யவே இல்லை என்று மனசாட்சியின் கூக்குரலை மதிக்காதவர்கள் நம் வாழ்விலும் வந்துதான் போவார்கள். அவர்களை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை ஒன்றுதான். "அவர்கள் ஆபத்தானவர்கள்" அவர்கள் அருகே வருகையில் நாம் செய்ய வேண்டியதும் ஒன்றே ஒன்றுதான் "விலகி இருப்பது".

 

 

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.