தியாகராஜன் குமாரராஜா – எட்டு வருடங்களாக இந்த இயக்குனரின் படத்திற்காக காத்திருந்தது நிச்சயம் மிக சரியான விஷயம்தான் என்பதை அற்புதமான தனது கதையாடல் மூலம் நிரூபித்திருக்கிறார்.
ஆரண்ய காண்டம் என்பது தியாகராஜன் குமாரராஜாவின் முதல் படமா என்று யோசிக்க வைத்தது. அத்தனை அனுபவங்கள் அதில் கொட்டிக் கிடந்தது. சினிமா கற்றுக் கொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடபுத்தகமாக இந்த திரைப்படம் இருந்தது என்றால் மிகையே இல்லை.
அதன்பின்னர் எட்டு வருடங்கள் கழித்து சூப்பர் டீலக்ஸ் படத்தை அணுஅணுவாக செதுக்கி அற்புதமாக நம் கண்களில் தவழ விட்டிருக்கிறார் இந்த கலைஞர்.
ஆரண்ய காண்டத்தின் அதே இருள் இதிலும் தொடர்கிறது. இருள் என்றால் குற்றம் மட்டுமே அல்ல என்பதை இன்னும் விளக்கமாக கூறியிருக்கிறார் இயக்குனர்.
பல்வேறு அடுக்குகளை ஒரு திரைப்படத்தில் நேர்த்தியாக அடுக்க முடியாமல் பல பெரிய இயக்குனர்கள் தடுமாறும் இந்த இடத்தில் மிக அற்புதமாக அதனைத் திறம்பட செய்திருக்கிறார் குமாரராஜா. அதற்கு நிச்சயம் அவருக்கான பாராட்டுக்களை அவரிடம் சேர்ப்பித்து விட வேண்டியது நம் கடமை.
சூப்பர் டீலக்ஸ் (Super Deluxe)
நான்கு விதமான கதைகள் கேயாஸ் மூலம் எப்படி அழகாக முடிகிறது என்பதுதான் கதை என்று ஒற்றை வரியில் கூறி விட மனது ஒப்புக் கொள்ளவில்லை.
காட்சிக்கு காட்சி உள்ளுக்குள்ளே பல மடிப்புகள் கொண்டு இருக்கும் திரைக்கதையை அப்படி எளிதாக இவ்வளவுதான் என்று கூறிவிடவே முடியாதபடி செய்திருப்பது இயக்குனரின் திறமை.
விஜய் சேதுபதி, காயத்ரி, சமந்தா , பகத் பாசில், மிஷ்கின் மற்றும் ரம்யாகிருஷ்ணன் இவர்களின் உணர்வுகளை அடிப்படையாக கொண்டு நகரும் கதையில் வாழ்தலிற்கான ரகசிய வரைபடங்கள் ஒளிந்து கிடக்கின்றன.
அதை தேடி கண்டடையும் மனிதர்கள்தான் இந்தப் படத்திற்கான முழு வெற்றிக்கான சாட்சியாக இருப்பார்கள்.
ஒருமுறையோடு பார்த்து விட முடியாது
ஏற்கனவே சொன்னது போல படத்திற்குள் பல்வேறு மடிப்புகளில் வாழ்க்கைக்கு அவசியமான குறிப்புகள், ஆழ்மனதை ஊடுருவும் வசனங்கள், சரியானது என்ன , கடவுளின் இருத்தல் பற்றிய விடைகள் ஆகியவை கொட்டி கிடக்கின்றன.
இதனை ஒரே முறை பார்த்து விட்டு இப்படித்தான் இந்தக் கதை பயணிக்கிறது இப்படித்தான் முடிகிறது என்று நம்மால் முதல் முறையில் சொல்லி விட முடியாது. அதுதான் சூப்பர் டீலக்ஸின் தனித்துவம்.
ஒவ்வொரு அடுக்கின் உள்ளுக்குள்ளேயும் இயக்குனர் வைத்திருக்கும் தகவலை நாம் உணர்ந்து கொள்ள சில முறைகள் இந்தப் படத்தை நாம் திரும்ப திரும்ப பார்க்க வேண்டி வரலாம்.
இது திரைக்கதை பற்றி மட்டுமே.
ஒளிப்பதிவு
ஆரண்ய காண்டம் போலவே இதிலும் நேரடி வெளிச்சங்கள் அற்ற தொழில்நுட்பம் மற்றும் அடர்நிறங்கள் கதையின் போக்கில் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
ஒவ்வொரு பிரேமிலும் நம் கவனத்தை திசை திரும்ப விடாத ஒரு அழகியல் படம் முழுக்க வியாபித்திருக்கிறது. நீரவ் ஷா மற்றும் பி.எஸ் வினோத்தின் ஒளிப்பதிவு இயக்குனரோடு இணைந்து செல்கிறது. கதையின் ஆச்சர்யங்களை நமக்குள் அற்புதமாக கடத்துகிறது.
இசை
சூப்பர் டீலக்ஸ்ஸின் திரைக்கதையில் யுவன் ஷங்கரின் ஸ்பரிசங்கள் அற்புத மாயம் செய்திருக்கிறது. படம் முழுக்க ஒரு விதமான சப்தங்கள் இருந்து கொண்டே இருக்கிறது.. அது தொலைக்காட்சி வசனமோ .. சினிமா பாடலோ … இது மட்டும் அல்லாமல் நம் இதயத்தின் குரல் கூட அங்கே கேட்கிறது. இது இசையமைப்பின் சிறப்பா திரைக்கதையின் தொடர்பா என்பது முடிவற்ற கேள்விதான்.
இறுதி நேர சஸ்பென்ஸ் அல்லது என்ன நடக்க போகிறது என்கிற த்ரில் நேரங்களில் தரப்படும் இசைகுறிப்பு தனது அதிர்வுகளை திரை முழுதும் மட்டுமல்லாமல் அதனை உள்வாங்குபவர் மனதிலும் கடத்துகிறது.
எடிட்டிங்
படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை நம்மை கதையை விட்டு நகர விடாமல் கட்டி போடுகிறது சத்யராஜ் நடராஜனின் எடிட்டிங். மூன்று மணி நேரம் என்பதே நம்மால் உணர முடியவில்லை. இது எடிட்டருக்கான வெற்றி மட்டும் அல்ல இயக்குனரும் இதில் சரிபாதி இருக்கிறார் என்பதை உணர முடிகிறது.
வசனம்
தனது அற்புதமான திரைக்கதையில் வாழ்வியலுக்கான வசனங்களை திணிக்காமல் நமக்குள் ஊடுருவ வைத்திருக்கிறது இந்த திரைப்படத்தின் வசனங்கள். நகைச்சுவை என்பதை எங்கிருந்து வேண்டுமானாலும் எடுக்கலாம். உதாரணமாக அப்பா அம்மா வேலைக்கு போன பின்னர் வீட்டில் மோசமான படம் பார்க்க விரும்பும் விடலைகள் அந்த கேசட் வாங்க கூறும் காரணங்கள் விஷயத்தின் அவஸ்தைகளை கடந்து நம்மை சிரிக்க வைக்கின்றனர்.
அதை போலவே விஜய் சேதுபதியின் பாட்டி “ஒரு நாள் தாலிய கட்டிட்டு தினம் தினம் என் கழுத்தை அறுக்கறியே என்று புலம்பும் பாட்டி இன்றைய விவாகரத்து பெண்களின் ஒரு பாகம்.
எனக்கு எது கஷ்டம்னே தெரியல… இவ்ளோ நாள் நீ இல்லாம இருந்தது கஷ்டமா இல்ல இனிமே நீ உன்கூட வாழ போறது கஷ்டமா என்று கலங்கி போய் நிற்கும் காயத்ரியை நம்மால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.
விஜய் சேதுபதி அந்த குழந்தையிடம் இந்த உலகம் நம்மை எப்படி பார்க்குதோ அப்படி நாம இருந்துட்டு போய்டணும்.. வித்யாசமா இருக்க நினைச்சோம்னா உலகம் நம்மை சந்தேகப்படும் .. அப்புறம் அதுவே பயமா மாறும் .. என்பதும் .. செருப்பை மாத்தி போடறாப்ல கடவுள் என் உடம்ப மாத்தி போட்டுட்டார் என்பதும் கடவுள் ரொம்ப சின்ன பய தாம்பா என்று அந்த குழந்தை அசால்டாக நடப்பதும் நம்மை அட போட வைக்கிறது.
ஜாதி பற்றிய வேறொரு பரிணாமத்தையும் நமக்கு உணர்த்துகிறது இந்த படம். அதுவும் பகத் பாசில் வரும்போதெல்லாம் பேசப்படும் வசனங்கள் யோசிக்க வைக்கிறது.
மிஷ்கினுக்கும் விஜய் சேதுபதிக்கு நடுவிலான வசனங்கள் அதன் பின்னணி இசை அந்த இருட்டும் வெளிச்சமுமான ஒளிப்பதிவு இருளுக்கும் ஒளிக்கும் நடுவே தடுமாறும் மனங்களின் நிஜங்களை பேசுகிறது.
இதை தவிர இன்னொரு ஆச்சர்யத்தையும் நமக்கு சொல்லும் கதை , பிரபஞ்சம் மற்றும் நமக்குமான உறவு அதில் காமத்தின் பங்கு, வாழ்தலை மேம்படுத்த எது சரியானவை என்பதை காட்சிகளாய் காட்டியிருக்கும் பாங்கு என நம் உள்ளுணர்வுகளை அக்கு அக்காக பிரித்து அலசி பார்க்க வைக்கிறது.
நடிப்பு
பொதுவாக ஒரு படத்தில் ஒரு சிலர் மட்டுமே அந்த கதாபாத்திரமாக வாழ்வதை உணர முடியும். இந்தப் படத்தில் எல்லோருக்குமே அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதில் திருநங்கையாக வரும் விஜய் சேதுபதி படம் முழுக்க இதனை நிரூபிக்கிறார் என்றாலும் , அப்பாவுக்காக ஏங்கும் அந்த மழலைக் குழந்தை, கணவனை தோழியாக பார்க்க தயங்கும் காயத்ரி, பக்ஸ்ன் அழைப்பை ஏற்க மறுத்து கதறி அழும் சமந்தா , ஹீலராக இருந்து கடவுளை பற்றி குழம்பும் மிஷ்கின், சமூக குறைகளோடு மனைவியின் பெருந்தவறை புலம்பும் பகத் பாசில், உடலுறவு தொழிலாளியாக இருக்கும் ரம்யா கிருஷ்ணன், ஹார்மோன் கோளாறுகளை புரிந்து கொள்ள முடியாமல் திணறும் விடலைகள், கருப்பு கண்ணாடியில் பயணிக்கும் அந்தபிணம் என எல்லோரும் அவரவர் பாத்திரத்தில் கச்சிதமாகின்றனர். ஒரு சிறந்த திரைக்கதை அதற்கான விஷயங்களை தானே செதுக்கி கொள்ளும் அற்புதத்தை இதில் காண முடிகின்றது.
பெயருக்கேற்ற தகுதி – தமிழ் சினிமாவின் அடுத்த தளம் – சூப்பர் டீலக்ஸ்
தியாகராஜன் குமாரராஜா வருடம் ஒருமுறை படம் கொடுத்திருந்தால் இதுவரை நாம் அவர் படத்தை மொத்தமாக எட்டு தடவை பார்த்திருப்போம். அந்த இடைவெளியை பூர்த்தி செய்ய சூப்பர் டீலக்ஸ் எனும் இந்த ஒரே படத்தை நாம் பலமுறை பார்த்தாகி வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கி இருக்கிறார் இயக்குனர்.
மனிதர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம் சூப்பர் டீலக்ஸ்.
டு லெட் திரைப்படம் – தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சி
படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்
—
இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.