logo
Logo
User
home / Life
இறுதி நேரத்தில் மலர்ந்த காதல்..நெகிழ்வில் முடிந்த நேசம்..திருமணத்தில் இணைந்த முதிய நட்பு !

இறுதி நேரத்தில் மலர்ந்த காதல்..நெகிழ்வில் முடிந்த நேசம்..திருமணத்தில் இணைந்த முதிய நட்பு !

நேசம்.. இந்த வார்த்தை எல்லோருடைய இதயத்தையும் ஒரு நொடி அதிரவைக்கும் ஆளுமை கொண்ட வார்த்தைதான். இதயம் கொண்டவர்களுக்கு அது அப்படிதான் இருக்க முடியும். நேசம் என்பதற்கும் காதல் என்பதற்கும் சில வித்யாசங்கள் உண்டு. காதலில் காமம் என்பது பெரும் எதிர்பார்ப்பு. நமக்கு சொல்லப்படமாலே பல காதல்கள் காமத்தின் அடிப்படையில்தான் தொடங்குகின்றன.

ஆனால் நேசம் என்பதற்கு எந்த எதிர்பார்ப்புகளும் இருப்பதே இல்லை. பதிலுக்கு இதை செய்தால்தான் என்கிற கட்டாயங்கள் நேசத்திற்குள் வருவதில்லை. நீ எவ்வளவு அன்பாய் இருந்தாலும் நான் உன்னை மோசம் செய்வேன் என்கிற வார்த்தைகளுக்கோ வலிகளுக்கோ இங்கே இடமே இல்லை. நேசம் எப்போதும் ஒருவரை மனம் நோக செய்வதே இல்லை. காதலில் இதெல்லாம் இருக்கத்தான் செய்கிறது.

நேசத்திற்கு வயதென்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்பதை மீண்டும் நிரூபித்திருக்கின்றனர் ஒரு முதியோர் இல்லத்தில் சந்தித்துக் கொண்ட நண்பர்கள். கேரளாவை சேர்ந்த லட்சுமி அம்மாள் தன்னுடைய 65வது வயதில் 20 ஆண்டு கால நண்பரான 66 வயது கோச்சானியனை திருமணம் (wedding) செய்து கொண்டிருக்கிறார்.

Youtube

திருச்சூரை (trissur)சேர்ந்த லட்சுமி அம்மாள் 21 வருடங்களுக்கு முன்னர் கணவரை இழந்தவர். தன்னுடைய மரணப்படுக்கையில் லட்சுமி அம்மாளின் கணவர் தன்னுடைய உதவியாளர் ஆன கோச்சானியனை அழைத்து தன்னுடைய மறைவிற்கு பிறகு மனைவியை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு பின்னர் இறந்திருக்கிறார்.

லட்சுமி அம்மாளின் கணவர் கேட்டரிங் தொழில் செய்யும்ப்போது அவருடைய உதவியாளராக இருந்தவர் கோச்சானியன். முதலாளி சொன்னபடி அவருடைய மனைவி லட்சுமி அம்மாளை அவ்வப்போது சென்று தேவையானதை கவனித்து வந்தார் கோச்சானியன்.

இடையில் கோச்சானியன் திருமணம் முடித்து வேறு ஊரில் வாழ்ந்து வந்தார். லட்சுமி அம்மாள் உறவினர்களுடன் இருந்து வந்தார். பல வருடங்கள் கழித்து கோச்சானியனின் மனைவி இறந்து விட அவரது குடும்பத்தார் கோச்சானியனை கைவிட்டு விட்டனர்.

Youtube

இதனால் திருச்சூரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் கோச்சானியன் சேர்ந்தார். அதே சமயம் லட்சுமி அம்மாள் அதே முதியோர் இல்லத்தில் இரண்டு ஆண்டுகளாக இருந்து வருகிறார் என்பது இறைவன் போட்ட முடிச்சு.

திருச்சூர் ராமவர்மபுரம் (Trissur Ramavarmapuram) அரசாங்கத்தால் நடத்தப்படும் முதியோர் இல்லத்தில் (Goverment old age Home) லட்சுமி அம்மாளும் கோச்சாணியானும் இரண்டு மாதங்களாக நட்பை தொடர்ந்த நிலையில் அங்கிருந்த கண்காணிப்பாளர் அவர்கள் அன்பை ஊக்குவித்து நீங்கள் இருவரும் ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று கேட்க அதற்கு சம்மதித்த ஜோடி இப்போது புதுமணத்தம்பதிகள் ஆகி இருக்கின்றனர்.

தங்களுடைய முதுமைக் காலத்தில் ஒருவர் துணை மற்றவருக்கு தேவை படுவதால் இப்படி ஒரு முடிவெடுத்திருப்பதாகவும் வயதானாலும் அங்கீகாரம் இல்லாமல் பேசி வந்தால் தவறாக போகலாம் என்பதால் மீதமுள்ள காலத்தை கணவன் மனைவியாக வாழ்ந்து கொள்ளலாம் என முடிவெடுத்திருப்பதாக லட்சுமி அம்மாள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

Youtube

இதுவரை இப்படி ஒரு திருமணம் நடைபெறாததால் இந்த திருமணத்தை சீரும் சிறப்புமாக கேரளா அரசு நடத்தி இருக்கிறது. முதியோர் இல்லங்களில் திருமணம் நடப்பது இதுவே முதல் தடவை என்று சொல்லப்படுகிறது. அதனால் கேரளா அமைச்சர் சுனில் குமார் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை சிறப்பித்திருக்கிறார்.

பலர் நிதியுதவி அளிக்க கண்காணிப்பாளர் ஜெயக்குமார் முன்னிலையில் இவர்கள் திருமணம் சிறப்பாக நடந்தது. 20 ஆண்டு கால அன்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த திருமணம் நடைபெறுவதாக புதுமண ஜோடிகள் கூறுகின்றனர்.

நேசத்திற்கு வயதென்பதோ அழகென்பதோ ஒரு பொருட்டல்ல என்பதை இந்த கேரள தம்பதியினர் மீண்டும் நிரூபித்திருக்கின்றன. முதியோர் இல்லங்களிலும் நேசம் துளிர்க்க இனி தடையேதும் இல்லை என்பதையே இந்த திருமணம் உணர்த்துகிறது. ஆதரவற்ற இருவர் இனி ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ இறைவன் கருணை துணை புரியட்டும்.

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

01 Jan 2020

Read More

read more articles like this
good points logo

good points text