காதலர்கள் பார்த்தாக வேண்டிய சிறந்த தமிழ் காதல் படங்கள்
பிரிக்க முடியாதது எதுவோ என்று இன்று கேட்டிருந்தால் ஒருவேளை சிவபெருமான் தமிழ் சினிமாவும் காதலும் என்று கூறியிருப்பாரோ என்னவோ. அந்த அளவிற்கு காதலும் தமிழ் சினிமாவும் ஒன்றாகக் கலந்திருக்கிறது,
இதில் சிறந்த காதல் படங்கள் என்பதை வரிசைப் படுத்த வேண்டும் என்றால் நிச்சயம் சிரமமான விஷயம்தான். அதற்கு பதிலாக பார்த்தாக வேண்டிய காதல் படங்கள் (love movies) என்கிற வரிசையில் எனது ரசனையை இங்கே தருகிறேன்.
கொஞ்சம் சம்பந்தம் இல்லாமல் வருடங்கள் ஜம்ப் ஆகலாம். பார்த்தே வேண்டிய படங்கள் என்றால் இப்படித்தான் இருக்கும் இல்லையா.
இதயம்
இயக்குனர் கதிரின் இயக்கத்தில் முரளி மற்றும் ஹீராவின் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் காதல்படங்களில் மறக்க முடியாத இடத்தை பெற்ற படம். அடுத்தடுத்து வந்த காதல் படங்கள் மற்றும் ஏன் 10 வருடங்கள் கழித்து வந்த படமாக இருந்தாலும் அதிலும் இதயம் முரளி கதாபாத்திரத்தை நினைவு கூறும் காட்சியை வைத்திருப்பார்கள்.
தனது காதலை வெளியே சொல்ல முடியாத ஒரு காதல் இதயம் இறுதியில் என்னாகும் என்பதை அற்புதமாக காட்டியிருப்பார்கள். மென்மையான வசனங்கள், ஹைக்கூ கவிதைகள், அழகான ஒளிப்பதிவு இளையராஜாவின் இசை என இதயம் படம் முழுக்க காதலால் மட்டுமே நிரம்பி வழிந்திருக்கும் ஒரு படம்.
மௌனராகம்
இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மோகன் ரேவதி மற்றும் கார்த்திக் நடிப்பில் வெளியான திரைப்படம் மௌனராகம். இப்போதெல்லாம் சகஜமாகிவிட்ட பழைய காதல் நினைவுகள் எல்லாம் அப்போது பொக்கிஷமாக இருந்தது. காதலித்தவனை தவிர வேறொரு ஆணை நெருங்க விடாத பரிசுத்தமான காதல் கதைகள் பல இருந்தன.
இறந்த தனது பழைய காதலனை மறக்க முடியாமல் குடும்பத்தாரின் விருப்பத்திற்காக திருமணம் செய்யும் பெண்ணும் அவளது உணர்வுகளை புரிந்து அவளுக்கு தேவைப்பட்ட விவாகரத்து கொடுக்கும் ஆணும் ஒரு விபத்துக்கு பின்னர் கணவனை நேசிக்க தொடங்கும் மனைவியுமாக ரேவதி அற்புதமாக நடித்திருப்பார். இவருக்கு இணையாக வெகு அமைதியான மென்மையான கணவனாக மோகன் நம்மை ஏங்க வைத்திருப்பார். துறுதுறுப்பான காதலனாக கார்த்திக் நம்மை பறக்க வைப்பார். இயக்குனரின் திரைக்கதையில் காட்சிக்கு காட்சி காதல் பரவி பார்க்கும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.
காதலுக்கு மரியாதை
இயக்குனரின் பாசில் தந்த வெற்றி படம்தான் காதலுக்கு மரியாதை. இந்த படம் வெளிவருவதற்கு முன்பான வருடங்களில் விடலைகள் காதல், காதலித்தால் ஓடி போவது, பெண்ணின் அப்பாவை வில்லனாக்குவது , காதலுக்காக அப்பா முன்னர் நிர்வாணமாக நிற்பது, காதலித்து விட்டால் பெற்றவர்கள் எல்லாரும் தேவையற்றவர்களாக மாற்றுவது என்று படங்கள் வந்து கொண்டிருந்த காலம்.
அப்போது இயக்குனர் பாசில்ஒரு காதல் எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று எடுக்கப் பட்ட படம்தான் காதலுக்கு மரியாதை. விஜய்யின் மென்மையான நடிப்பும் ஷாலினியின் உயிர்ப்பான கண்களும் காதலின் வேறொரு பரிணாமத்தை பற்றி கூறிய விதம் அற்புதமாக இருக்கும். காதலிப்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் காதலுக்கு மரியாதை.
மின்னலே
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் முதல் படம். ஒரு மழைக்கால இரவில் மின்னல் வெளிச்சத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து காதல்வயப்படும் ஆணும் அதன் பின் அவளுக்காக அவன் செய்யும் செயல்களும்தான் கதை. மாதவன், ரீமா சென், மற்றும் அப்பாஸ் நடித்திருக்கும் இப்படத்தில் காதலர்களுக்கு வேண்டிய ரொமான்ஸ் இருக்கும். காதலியை அசத்த மாதவன் செய்யும் முயற்சிகள் இறுதியில் மாதவனை புறக்கணிக்கும் ரீமா அதன் பின்னர் நடக்கும் திருப்பம் என ஒரு கலவையாக இந்த படம் இருக்கும்.
ஐந்து நாட்கள் மட்டுமே பழகிய ஒரு ஆணை நம்பி திருமணம் செய்து கொள்ள முடியுமா என்பதை இந்த படம் வேறொரு பாணியில் சொல்கிறது.
7ஜி ரெயின்போ காலனி
இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் காதலின் அடுத்த பரிணாமம் பற்றி பேசுகிறது. வழக்கமான குடும்ப பொறுப்பற்ற இந்திய இளைஞன் திடீரென காதல்வயப்படும்போது அது அவனை என்ன செய்கிறது என்பதுதான் கதை. இதில் நாயகன் நாயகிக்கு இடையில் காதலும் ஒரு கதாபாத்திரமாகவே தோன்றியிருக்கும். பொறுப்பற்ற ஒருவனை திருத்தி வேலைக்கு செல்ல வைக்கும் நாயகி ஆனாலும் குடும்பத்தின் மேலிருந்த நேசம் காரணமாக கொஞ்சம் தயங்கும் நாயகியாக சோனியா அகர்வால் படம் முழுக்க நடிப்பில் பின்னியிருப்பார்.
அந்த தயக்கம் அதனை உடைக்க பாடுபடும் இளைஞனாக ரவிகிருஷ்ணா அற்புதமாக நடித்திருப்பார். இறுதியில் நடக்கும் அந்த விபத்து அது அந்தக் காதலிக்கு மட்டுமானதல்ல அவர்கள் காதலுக்கும் ஏற்பட்ட விபத்துதான். ஆனாலும் அவள் நினைவாகவே அவளது இருப்பை வாழ்ந்தபடி இருக்கும் ஒரு காதலன் என நமக்கு காதலின் அற்புதத்தை காட்டும் ஒரு படம்தான் 7 ஜி ரெயின்போ காலனி.
உன்னாலே உன்னாலே
மறைந்த இயக்குனர் மற்றும் ஒளி ஓவியர் ஜீவாவின் இயக்கத்தில் வெளியான படம்தான் உன்னாலே உன்னாலே. சொட்ட சொட்ட காதல் மழையில் நனைவது மட்டுமே காதலர்கள் வேலையா என்ன என்பதை பற்றி பேசும்படம். காரணமே இல்லாமல் முடிந்து போகும் சில காதல்கள் மற்றும் அதன் காரணங்களை விரிவாக விவாதிக்கும் படம்.
ஒரு ஆணுக்கு பெண் மேல் ஏன் ஈர்ப்பு உண்டாகிறது என்பதில் இருந்து பெண் ஏன் விலகுகிறாள் என்பது வரை ஆண் பெண்ணின் உளவியல் காரணங்களை அற்புதமாக படம் பிடித்திருக்கிறது உன்னாலே உன்னாலே. வினய் சதா மற்றும் தனிஷாவின் நடிப்பில் வெளியான இந்த படம் வித்யாசமான காதல்கதை என அனைவராலும் இன்று வரை விரும்பப்படுகிறது.
விண்ணைத் தாண்டி வருவாயா
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் அடுத்த சிறந்த காதல் படம். ஒரு தலை காதல் நபர்களுக்கான திருவிழாவாகவே பார்க்கப்பட்ட படம். தன்னை விட ஒரு வயது அதிகம் உள்ள மேல் வீட்டு பெண் மேல் காதல் வயப்படும் சினிமா இயக்குனர், மதம் மற்றும் மற்ற காரணங்களால் அதனை மறுக்கும் நாயகி பற்றி நான் லீனியர் முறையில் சொல்லப்பட்ட இன்னொரு படம்.
ஒரு கட்டத்தில் நாயகன் மீதான காதலை வெளிப்படுத்தும் த்ரிஷா தமிழகத்தின் தேவதையானார். ஜெஸ்ஸியானார். ஜெஸ்ஸி மீதான ஒருதலை காதலால் தவிக்கும் கதாபாத்திரத்தில் தெளிவாக நடித்திருப்பார் சிம்பு. அவரது இயல்பான உணர்வுகள் படத்திற்கு பலம். மென்மையான ஒளிப்பதிவும் இசையும் சேர்ந்த விண்ணைத் தாண்டி வருவாயா எப்போதும் காதலர்களின் பேவரைட் ஐஸ்க்ரீம் !
ராஜா ராணி
இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் வெளியான முதல் படம் ராஜா ராணி. ஏற்கனவே ஏற்பட்ட காதலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட இருவர் குடும்பத்தாரின் விருப்பத்துக்காக திருமணம் செய்வதும் அதன்பின்னர் ஒன்றாக வாழும் சூழலில் ஒருவருக்கொருவர் நேசிக்கத் தொடங்குவதும் என இந்த திரைப்படம் கொஞ்சம் மௌனராகத்தை நினைவு படுத்தினாலும் இதில் காதலை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அற்புதமாக இருக்கும்.
ஆர்யா நஸ்ரியா காதலுக்கான காட்சிகள் அத்தனை அழகாக இருக்கும். ஜெய் நயன்தாராவுடனான காதல் இயல்போடு கலந்த பக்குவதால் நிறைந்திருக்கும். இறுதியாய் ஏற்படும் ஆர்யா நயன்தாரா உறவு தெளிவாக முடியும். இந்த திரைப்படம் எப்போதும் காதலர்களுக்கு முக்கியமான படம்தான்.
ஓகே கண்மணி
இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் லிவிங் டுகெதர் வாழ்க்கையையும் 60 வயதுக்கு மேலான பக்குவமான திருமண காதலையும் கலந்து சொல்கிறது. ஒரு பக்கம் துறுதுறுப்பு நிறைந்த துல்கர் சல்மானின் காதல் காட்சிகள் நம் விழிகளை நிறைக்கிறது மறுபக்கம் அல்சைமர் மனைவியை அப்போதிருந்தது போலவே எப்போதும் நேசிக்கும் பிரகாஷ்ராஜின் காதல் நம் கண்களை நனைக்கிறது.
இரண்டு வேறுபட்ட காதல்களில் எது சரியாக இருக்கும் என்பதை நமக்கு கூறும் திரைப்படமே ஓகே கண்மணி. பிசி ஸ்ரீராமின் கேமரா மற்றும் ஏ ஆர் ரஹ்மானின் இசை அதன் பங்கிற்கு பல காதல் மாயங்களை செய்திருக்கும். அவசியம் பார்க்க வேண்டிய காதல் படம்.
96
இயக்குனர் பிரேம்குமாரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 96. கடந்த வருடம் வெளியான இந்த திரைப்படத்தின் தாக்கம் இன்னமும் மறையவில்லை. கடந்து போன காதல் எனும் ஒற்றை வரியைக் கையில் எடுத்துக் கொண்ட படம் அந்தக் காதலை எப்படி கையாள்கிறது என்பதுதான் கதை. பள்ளி பருவம் முதல் காதலிக்கும் ஜானு ராம் சூழ்நிலை காரணமாக பிரிகிறார்கள். ஜானு யதார்த்தத்தை கையில் எடுத்து திருமணம் செய்து கொள்ள ராமோ காதலுக்கு முக்கியம் காதலி இல்லை காதல் மட்டுமே போதுமானது என்று காதல் நினைவுகளோடு வாழ்கிறார். மீண்டும் சந்திக்கும் ஜானும் ராமும் காதலை விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறார்களா இல்லை நகர்கிறார்களா என்பதை விவரமாக நம் கைகளில் முடிவெடுக்க விட்டிருக்கிறது திரைக்கதை.
இதனாலேயே இந்த திரைப்படம் இன்னும் பேசப்படுகிறது. இரண்டே பேர் கொண்ட ஒரு நீளமான இரவும் அவர்களுக்கிடையேயென உரையாடல்களும் தவற விட்ட வாழ்க்கைக்கான வலிகளும் அதனை தொடர்ந்த உணர்ச்சிகளுமாக கதை முழுக்க காதலோடு பயணிக்கிறது. இதற்கு கோவிந்த் வசந்தாவின் இசையும் மஹேந்திரன் ஜெயராஜ்-ஷண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவும் மேலும் அழுத்தம் சேர்க்கிறது. நிச்சயமாக காதல் என்பதை அனுபவித்த அனுபவிக்காத அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம் 96.
படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்
தமிழ் சினிமாவில் சிறந்த பெண் இயக்குனர்கள்
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.