Astrology

சிவபெருமானின் ஆருத்ரா தரிசனம் இவ்வளவு மகிமையானதா.. தரிசிப்போம்..சிறப்பாய் வாழ்வோம்..!

Deepa Lakshmi  |  Jan 9, 2020
சிவபெருமானின் ஆருத்ரா தரிசனம் இவ்வளவு மகிமையானதா.. தரிசிப்போம்..சிறப்பாய் வாழ்வோம்..!

எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவரும் அண்டங்களையும் உயிர்களையும் உருவாக்கி அதனை தன்னுடைய அசைவின் மூலம் நகர்த்திக் கொண்டிருப்பவருமான சதாஷிவனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் ஒன்றானது மார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் நடத்தப்படும் ஆருத்ரா தரிசன விழா. இந்த நாள் வருடம் ஒரு முறை வரும் மஹா சிவராத்திரிக்கு (Maha shivarathiri) இணையாக போற்றப்படுகிறது.

இந்த நாளில் அப்படி என்ன விசேஷம் ஏன் சிவனடியார்கள் இந்த நாளை வெகு விமரிசையான நாளாக கொண்டாடுகிறார்கள் என்பது பற்றி பலருக்கு கேள்விகள் இருக்கலாம். சிவனை மகிமைப்படுத்த நாம் இருக்க நம்மை மகிழ்விக்க அந்த சதாஷிவன் செய்த ஆருத்ரா தரிசனம் (Arudra dharisanam)  பற்றி அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

இறைவன் சிவபெருமான் தன்னுடைய நடன அசைவின் மூலமே உலகை இயக்குகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அந்த நடனத்தில் உயர்ந்ததாக சொல்லப்படுவது ஆனந்த நடனம். அந்த நடனம் தில்லையில் (சிதம்பரம்) கோயிலில் வியாக்ரபாரத ரிஷி மற்றும் பதஞ்சலி முனிவருக்காக காட்சி அளித்த நடனம்.

மற்றெல்லா நாட்களை விடவும் மஹாசிவராத்திரி ஏன் மகத்துவம் வாய்ந்தது என்று அறிந்து கொள்வோம் வாருங்கள் !

Youtube

வியாக்ரபாரத முனிவருக்கும் பதஞ்சலி முனிவருக்கும் சதாஷிவனின் ஆனந்த நடனம் காண ஆசையாக இருந்தது. குறிப்பிட்ட நாளில் தில்லை கோயிலுக்கு வந்தால் அந்த நடனம் காணலாம் என இறைவன் அருளினார். இடையில் உலகில் உள்ள வீதம் ஓதும் அந்தணர்கள் , யாகம் செய்யும் வேத விற்பன்னர்கள், இறை பூஜை செய்யும் முனிவர்கள் அனைவருக்கும் அகந்தை ஒன்று ஏற்பட்டது.

நடப்பது எல்லாம் கர்மா எனும் செயல் வினையினால்தான் என்றால் இறைவன் என்கிற ஒருவன் எதற்கு என்கிற அகங்காரம் அவர்களுக்கு எழுந்தது. எங்கள் செயல்களை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று கர்வமுடன் இறைவனை பூஜிக்காமல் வாழ்ந்தனர். இவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்த இறைவன் சிவபெருமான் பிச்சாடனர் கோலத்தில் திகம்பர ரூபமாக அங்கே எழுந்தருளினார். இதனால் அத்தனை ரிஷிபத்தினிகளுக்கும் அனைத்து பெண்களுக்கும் இறைவன் மீது மோகம் தோன்றவே அனைவரும் அவர்தம் கணவர்களை விட்டு இறைவனை பின் தொடர்ந்தனர்.

இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் மத யானை,மான், மழு, தீ மற்றும் முயலகன் எனும் அரக்கன் ஆகியவற்றை ஏவி இறைவனை கொல்ல முயற்சிக்க இறைவன் அவை அத்தனையையும் தன்னுடைய வசப்படுத்தி ஆளுமைக்கு கொண்டு வந்தான். முனிவர்கள் தங்கள் அகந்தை நீங்கி இறைவனை சரண் அடைந்தனர்.

இதனால் இறைவன் மனம் மகிழ்ந்து ஆனந்த நடனம் ஆடினார். அதனை வியாக்ரபாரத முனிவர் மற்றும் பதஞ்சலி முனிவர் ஆகியோர் கண்டு களித்தனர். இது நடந்த நாள் மார்கழி மாதம் திருவாதிரை நாள்.

சித்தர்கள் வாழும் திருவண்ணாமலை – அதிசயமும் அற்புதமும்

Youtube

சேந்தனார் எனும் சிவபக்தர் பட்டினத்தாரின் சீடர். ஆகவே பட்டினத்தார் துறவறம் சென்றதும் அவருடைய சொத்துக்களை தானம் வழங்கினார். இதனால் அரசனின் தண்டனைக்கு ஆளாகி சிறையில் இருந்தார். இதனை உணர்ந்த பட்டினத்தார் சிவபெருமானிடம் வேண்ட சிறைக்கதவுகள் தானாக திறந்து சேந்தனாரை இறைவன் விடுதலை செய்வித்தார். அன்றில் இருந்தே சேந்தனாரின் சிவபக்தி மேலும் அதிகமானது.அதை போலவே சேந்தனார் தன்னுடைய சிவபக்தியால் யாரேனும் ஒரு சிவனடியார்க்கு உணவு படைத்தது அதன்பின்னரே தானும் உண்ணும் வழக்கத்தை வைத்திருந்தார்.

ஒருமுறை சேந்தனாரை சோதிக்க எண்ணிய சிவபெருமான் ஒரு நாள் விறகு வெட்டியான சேந்தனாரின் விறகுகளை மழையால் ஈரமாக்கினார். விறகு வெட்டி அதன் மூலம் வரும் பணத்தால் இறைவன் அடியார்க்கு உணவிட்டு அதன்பின்னே உணவருந்தும் வழக்கம் உள்ள சேந்தனார் அன்றைக்கு அரிசி வாங்க காசில்லாமல் திணறினார். அதன் பின்னர் வீட்டில் கேழ்வரகு களி செய்து சிவனடியாருக்கு காத்திருந்தார். நள்ளிரவாகியும் யாரும் வரவில்லை. பின்னர் வழக்கம் போல சிவ பெருமான் அடியார் வேடத்தில் சென்று களி உண்டார். மேலும் இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று சொல்லி களியை பொட்டலமாக கட்டி கையில் வாங்கி கொண்டு புறப்பட்டார். ( களியின் அதீத சுவையால் மனைவி பார்வதிக்கும் பிள்ளைகளுக்கும் தருவதற்காக பார்சல் வாங்கி இருப்பாரோ!)

இந்நிலையில் சேந்தனார் வசித்து வந்த தில்லையின் மன்னர் கண்டராதித்த சோழருக்கு தினமும் பூஜையில் சலங்கை ஒலி மூலம் தரிசனம் தருவார் சிவபெருமான். அன்று அந்த ஒலி கேட்காததால் கவலையுற்ற மன்னரின் கனவில் வந்த சிவன் சேந்தனாரின் பக்தி பற்றி சொல்லி நாளை தேர்திருவிழாவில் சேந்தனாரை நீ காண்பாய் என கூறி மறைந்தார்.

Youtube

அடுத்தநாள் கோவிலை திறக்கையில் நடராஜர் சந்நிதி எங்கும் களி சிதறி கிடந்தது. மன்னருக்கு தகவல் போனது. சேந்தனாரை காண மன்னர் காத்திருந்தார். தேர்திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்களின் மத்தியில் சேந்தனாரை எப்படி கண்டுபிடிப்பார் என நாம் யோசிக்கும் அதே நேரத்தில் தேர் நகர மறுத்தது. உடனே அசரீரியாக வாய்ஸ் ஓவரில் வந்த சதாஷிவன் சேந்தனாரை பாடுமாறு கூறினார். சேந்தனாரோ ஒன்றுமறியாத நான் எப்படி பாடுவேன் கலங்க அதற்கும் அருளிய சிவபெருமான் “மன்னுகதில்லை வளர்க் நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல” எனும் பாடலை பாட ஆரம்பித்தார் சேந்தனார். உடனே அவ்வளவு பெரிய தேர் தானாகவே நகர்ந்து கோயிலை சுற்றி வந்து நிலையில் நின்றது.

இப்படியான அற்புதம் நடந்த நாள் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம். ஆகவே பிறப்பே இல்லாத ஈசனுக்கு உகந்த நட்சத்திரமாக திருவாதிரை இருந்து வருகிறது. இன்றைய நாளில் ஆத்ம சுத்தியுடன் இறைவனை பூஜிப்பவர்கள் தரிசிப்பவர்கள் மீண்டும் பிறவா பேறு நிலையை பெற்று மோட்சம் அடைவார்கள். செய்த பாவங்கள் எல்லாம் அழிந்து சிவனின் பாதங்களில் நம் ஆத்மா அடைக்கலம் ஆகும்.

இன்று (09.01.2020) அந்த சிறப்பு வாய்ந்த தேர்த்திருவிழா நடக்கிறது. நாளை (10.01.2020) அதிகாலை மூன்று மணி முதல் ஆறுமணி வரை சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்த ஆருத்ரா அபிஷேகம் நடைபெறுகிறது. சிவ பெருமான் ஆனந்தத் தாண்டவமாடிய சிதம்பரம் கனகசபையிலும், ஊர்த்துவத் தாண்டவமாடிய திருஆலங்காடு ரத்தின சபையிலும், பாண்டிய மன்னனுக்காக இடக்கால் மாறி ஆடிய மதுரை திருஆலவாய் வெள்ளிசபையிலும், திருநெல்வேலியிலுள்ள தாமிர சபையிலும், குற்றாலத்திலுள்ள சித்திர சபையிலும் இந்த நன்னாளில் ஆருத்ரா அபிஷேகமும், ஆருத்ரா தரிசனமும் விமரிசையாக நடைபெறுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

முன் ஜென்ம பாவங்கள் நீங்கி உங்கள் நிகழ்காலம்/எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டுமா?

gifskey

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Astrology