சித்தர்கள் வாழும் திருவண்ணாமலை - அதிசயமும் அற்புதமும்

சித்தர்கள் வாழும் திருவண்ணாமலை - அதிசயமும் அற்புதமும்

தமிழகம் பல ஆயிரம் ஆண்டுகளாக புனிதமான கோயில்களை உள்ளடக்கியது. எண்ணில் அடங்காத கோயில்கள் கொண்டதாலோ என்னவோ தமிழ்நாட்டின் அரசாங்க சின்னமாக கோயில் குறியீடு இருக்கிறது.


ஸ்ரீரங்கம், தஞ்சை பெரிய கோயில், மதுரை மீனாட்சி கோயில், சிதம்பரம் , திருவண்ணாமலை, காஞ்சிபுரம் போன்ற சரித்திர சிறப்பு மிக்க கோயில்கள் கொண்ட இடம் தான் தமிழ்நாடு. பெரும்பாலான பழமையான ஆலயங்களில் அதிகமான எண்ணிக்கையில் காணப்படுவது சிவ ஆலயங்கள்தான். இதில் இப்போது திருவண்ணாமலை கோயிலின்( Thiruvannamalai temple ) அதிசயங்கள் மற்றும் அற்புதங்கள் பற்றி காணலாம்.ஆலயம் மற்றும் அதன் சரித்திர சிறப்புகள் 


மனித பிறப்பின் நோக்கம் என்பது இப்போது இருப்பதை விட அதிக உயரத்தில் இருக்க வேண்டும், பணம், செல்வச்செழிப்பு, வாகனங்கள் வாங்கி அடுக்குதல் போன்றவை அல்ல. மனிதனாக நம்மை இங்கே இறைவன் அனுப்பியிருப்பதே அனுபவங்களை கற்று கொண்டு வீடு திரும்புவதற்க்காகத்தான். கடவுளின் வீடு என்பது முக்தி என்று கூறப்படுகிறது.


இத்தனை கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என ஏன் படைக்கப்பட்டிருக்கிறது என்றால் நாம் இப்பிறப்பின் இறுதியிலாவது முக்தியை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதுதான்.


முக்திக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருக்கையில் திருவண்ணாமலை ஆலயம் என்பது நாம் நினைத்தாலே நமக்கு முக்தியை அளிக்க கூடிய பேரருள் வாய்ந்த கோயிலாகும்.நாம் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் இருக்கும் இடத்தில் இருந்து நினைத்தாலே முக்தி தர கூடிய சக்தி வாய்ந்த திருவண்ணாமலைக்கு நாம் நேரே சென்றால் எத்தகைய பேரருள்களை பெற்று வரலாம் என்பதை விரல்களில் எண்ணி கூறி விட முடியாது.தூய்மை என்பது தனது மன அசுத்தங்களை மறைப்பதல்ல


பிரபஞ்சத்தின் இயக்கமான சிவன் எனும் மூல சக்தி பற்றிய பல்வேறு மர்மங்களும் ரகசியங்களும் இன்னும் வெளிவராமல் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் பஞ்சபூதங்களால் நிரம்பிய பிரபஞ்சத்தை போலவே பஞ்சபூதங்களால் ஆகிய சிவ தலங்கள் பற்றிய மர்மமும் இன்னும் தொடர்கிறது.


ஜிபிஎஸ் வசதிகள் அற்ற ஒரு காலத்தில் ஒரே தீர்க்க ரேகையில் அமையும்படி சிவன் கோயில்கள் அமையப்பட்டிருப்பது பெரும் ஆச்சர்யத்தை வரவழைக்கிறது. இறைவனின் நேரடி தொடர்பு இல்லாமல் இவ்வகையான கோயில்கள் எழுவது சாத்தியமில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் மனத்தூய்மையோடு இறைவனோடு ஒன்றாக வாழ்ந்தவர்கள். இது கலிகாலம் என்பதால் தூய்மை என்பது அசுத்தங்களை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைப்பது என்றாகி விட்டது. இறைவன் கண்களில் இருந்து எதனை நாம் மறைக்க முடியும்.. அதனால்தான் இப்போதைய காலங்களில் அவர் நம்மோடு வாழ விரும்பவில்லை.ஒரே தீர்க்க ரேகையில் பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று , ஆகாயம் ஆகியவைகளின் ஆதிக்கம் கொண்ட கோயில்கள் அமைந்திருப்பது அதுவும் தமிழ்நாட்டில் அமைந்திருப்பது பெரிய அதிசயம்தான் அல்லவா. அதில் ஐந்து பூதங்களில் மத்தியில் இருக்கும் நெருப்பான அக்னி எனும் இயற்கை வடிவில் இறைவன் எழுந்தருளியிருக்கும் இடம்தான் திருவண்ணாமலை.


நண்பர்களை நேசிக்கும் மெல்லிதயன் நம் சிவன்


ஒருமுறை பிரம்மா விஷ்ணு இருவருக்கு இடையே யார் உயர்ந்தவர் என்று வாதம் ஏற்பட்டது. சிவன் அடி முதல் நுனி வரை நெருப்பு பிழம்பாக ஜோதி ரூபமாக நின்றார். தனது அடியையோ முடியையோ முதலில் காண்பவரே உயர்ந்தவர் என்று தெரிவித்தார். விஷ்ணு முடி காண கருட வாகனத்தில் கிளம்பினார். ப்ரம்மா அடி காண அன்ன வாகனத்தில் கிளம்பினார். பல யுகங்கள் ஆனாலும் இருவராலும் அடியையோ முடியையோ காண முடியாமல் தங்கள் தோல்வியை ஒப்பு கொண்டனர். தான்தான் ஆதி அந்தமானவர் என்பதை நேரடியாக சொன்னால் நண்பர்களுக்கு வலிக்குமே என்று சூசகமாக உணர்த்திய மென்மையான இதயம் கொண்டவர் நம் சிவபெருமான்.


இந்த கோயிலில் இறைவன் அருணாச்சலேஸ்வரராகவும் இறைவி அபிதகுஜாலாம்பாளாகவும் அருள்கின்றனர். அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் என்கிற பெயரிலும் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். நினைத்தாலே முக்தி தரும் இறைவனையும் இறைவியையும் நேரில் காணும்போது நெஞ்சம் சிலிர்ப்பதை யாராலும் தவிர்க்கவே முடியாது. இங்கே இறைவன் இருப்பதை ஞானத்தால் உணர்ந்த சித்தர்கள் இந்த மலையை சுற்றிலும் இன்னமும் வாழ்கிறார்கள் என்பது தகவல். சேஷாத்ரி ஸ்வாமிகள், ரமணர், யோகி ராம்சுரத்குமார், போன்ற பல யோகிகளின் ஆசிரமங்கள் அங்கு உள்ளது இதற்கான நிரூபணம்.திருவண்ணாமலை கிரிவலம் எதற்காக என்பதன் காரணமும் காரியமும்


ஒருமுறை பார்வதி விளையாட்டாக சிவன் கண்களை மூட பிரபஞ்சமே இருண்டது. இதனால் இறைவனை அவர் பிரியவும் நேரிட்டது. இந்த ஒரு தவறுக்கு பிராயச்சித்தமாக உலகை காக்கும் அன்னை இமயமலை, காசி, காஞ்சி, திருவண்ணாமலையில் தவம் செய்ய நேரிட்டது. (நாமெல்லாம் எத்தனையோ ஆயிரம் தவறுகளை தெரியாமல் இழைக்கிறோம் ஒரு சிலரோ தெரிந்தே இழைக்கிறார்கள் எல்லோருக்கும் ஒரே ப்ராயச்சித்தம்தான் சிவ வழிபாடு))


தவத்தின் இறுதியில் சிவன் காட்சி தர.. இறைவனை பிரிந்த துயரத்தில் இருந்த பார்வதி தேவி அறிவுக்கூர்மைக்கு எடுத்துக்காட்டாக அற்புதமான வரம் ஒன்றை கேட்டார். சிவனில் பாதியாக அர்த்தநாரீஸ்வரராக மாறும் அந்த வரம்தான் எத்தனை அறிவுபூர்வமானது.. இனி ஒருபோதும் சிவனை பிரியவே முடியாதே! பார்வதியின் பிரிவால் மனம் வாடியிருந்த சிவனும் குறும்புன்னகையோடு ஒரு நிபந்தனை விதித்தார். தன்னை ஒருமுறை வலம் வந்தால் அந்த வரம் தருவதாக வாக்களித்தார்.இறைவனின் திருவிளையாடலை அறியாதவரா பார்வதி.. சிவன் ஜோதியாக தோன்றி பின்னர் மலையாக குளிர்ந்த அண்ணாமலையை சிவனாக பாவித்து மலையை பக்தியோடும் காதலோடும் வலம் வந்தார். கிரிவல பகுதியில் நேர் அண்ணாமலை எனும் இடத்தில் ரிஷப வாகனத்தில் தேவிக்கு காட்சி அளித்தார்.. அவரை வணங்கி மேலும் மலையை வலம் வர ஈசான்ய இடத்தில் ஜோதியாக மீண்டும் காட்சி அளித்தார். கிரிவலத்தை முடித்த பார்வதி தேவிக்கு தனது இடபாகத்தை தந்து மாதொரு பாகன் ஆனார் மகேஸ்வரன்.


மனிதர்களும் கிரிவலம் செய்தால் மகேசன் வரங்களை அள்ளி தர வேண்டும் என்கிற பார்வதியின் வேண்டுதலை இறைவன் ஏற்று இன்று மலைவலம் வரும் மக்களுக்கு தனது பேரருளை பொழிகிறார் இறைவன். பொதுவாக மலை வலம் செல்லும்போது தனியாக செல்வதும் இறை நாமத்தை சொல்வதும் நல்லது. சாலையின் வலது புறத்தில் சித்தர்கள் அரூபமாக மலையை வலம் வருவதாக நம்பிக்கை இருப்பதால் மனிதர்கள் சாலையின் இடது ஓரத்தில் வெறும் பாதங்களில் மலையையும் நிலவையும் அடிக்கடி பார்த்தபடி நமசிவய எனும் பஞ்சபூத மந்திரத்தை உச்சரித்தபடி வலம் வருதல் சிறப்பான பலன்களை தரும்.


திருவண்ணாமலை செல்லும் வழி : சென்னையில் இருந்து நான்கு மணி நேரத்தில் கோயிலை அடைந்து விடலாம். கோயம்பேட்டில் இருந்து இதற்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கிரிவலம் செய்யும் நாட்களும் அதற்கான பலன்களும்


பொதுவாக பௌர்ணமியில்தான் கிரிவலம் வருவது வழக்கம் என்றாலும் இறைவனை வலம் வர எதற்கு பௌர்ணமி அமாவாசை என எல்லா நாளும் கிரிவலம் செல்லும் வழக்கம் இப்போது அதிகரித்துள்ளது.


ஞாயிறு அன்று வலம் வந்தால் சிவலோக பதவி அடையலாம்.
திங்கள் அன்று வலம் வந்தால் இந்திர பதவி அடையலாம்.
செவ்வாய் அன்று வலம் வந்தால் கடன் தீரும் வறுமை நீங்கும்
புதன் அன்று வழிபட கலைகள் வசப்படும்
வியாழன் அன்று வலம் வந்தால் ஞானம் அகப்படும்
வெள்ளியன்று வலம் வந்தால் வைகுண்டபதவி கிடைக்கும்
சனியன்று வலம் வந்தால் பிறவி பிணிகள் அகலும்


அஷ்டமி தினத்தில் வலம் வந்தால் செய்வினை தீவினைகள் அகலும்


தேவி பார்வதி ஆரம்பித்து வைத்த கிரிவலத்தை, தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும் இன்றும் தொடர்ந்து செய்து வருகின்றனர். நமது சாதாரண கண்களுக்கு அவர்கள் புலப்படுவதில்லை. மனிதர்களாகிய நாமும் பௌர்ணமி நாளில் மலையாகிய சிவனை வழிபட நமது பிறவி ஏற்பட்டதற்கான காரணங்கள் நீங்குகின்றன. இறைவனை அடையும் பாதையும் பயணமும் நமக்கு வரைபடமாக மேலிருந்து தரப்படுகின்றன. அதனை கொண்டு நமது வீடாகிய முக்தியை வெகு சீக்கிரம் அடைய எல்லாம் வல்ல என் சிவனை பிரார்த்திக்கிறேன்.படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்


மஹாஷிவ ராத்திரி மகிமைகள்


தமிழ்நாட்டில் எந்தெந்த மாதங்களில் எங்கெங்கு சுற்றுலா செல்லலாம் - ஒரு விரிவான கட்டுரை


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.