சென்னை வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் அமோக வரவேற்பு: மோடியுடன் இன்று சந்திப்பு!

சென்னை வந்த சீன அதிபர்  ஜி ஜின்பிங் அமோக வரவேற்பு:  மோடியுடன் இன்று சந்திப்பு!

பிரதமர் மோடியை சந்திக்க 2 நாள் பயணமாக தனி விமானத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை வந்தடைந்தார். உலகில் அதிக மக்கள் தொகையை கொண்ட நாடாக சீனாவும், அதற்கு அடுத்த இடத்தில் இந்தியாவும் உள்ளன. 

அண்டை நாடுகளாக விளங்கும் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் எல்லை தகராறு பிரச்சினைகள் உள்ள போதிலும் பரஸ்பர நல்லுறவும், வர்த்தக ரீதியிலான தொடர்புகளும் இருந்து வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த இரண்டு நாட்டு தலைவர்களும் விரும்புகின்றனர். 

twitter

இது தொடர்பாக இவர்கள் ஏற்கனவே சிலமுறை சந்தித்து பேசி இருக்கிறார்கள். இந்நிலையில் மீண்டும் சந்தித்து பேச இருக்கிறார்கள். இந்த சந்திப்பு சென்னையை அடுத்துள்ள சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதனையடுத்து சென்னை மாநகரம் மற்றும் மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. 

இதற்காக பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் (xi jinping) 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று சென்னை வந்து இருக்கிறார்கள். மாமல்லபுரத்தில் இன்று மற்றும் நாளை சீனா அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். 

இதற்காக இன்று முற்பகல் 11.15 மணியளவில் பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தனி விமானம் மூலம் சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னை வந்தடைந்தார். 

twitter

சென்னை விமான நிலையத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு மேள வாத்தியங்கள் முழங்க தமிழகத்தின் பாரம்பரிய கலைகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் வரவேற்றனர். 

இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலுக்கு குண்டு துளைக்காத பிரத்யேக காரில் சீன அதிபர் ஜி ஜின்பிங் புறப்பட்டார். மாமல்லபுரம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி இடையே நடைபெற உள்ள இந்த சந்திப்பு அதிகாரபூர்வமற்ற சந்திப்பாகும். 

நட்பு அடிப்படையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாகவும், இந்தச் சந்திப்பில் எந்தவிதமான ஒப்பந்தங்களோ அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தங்களோ கையெழுத்தாகாது என்றும் கூறப்பட்டுள்ளது. இரு நாட்டு உறவை வலுப்படுத்தவும், இருநாட்டு மக்களுக்கும் நடுவேயான தொடர்பை வலுப்படுத்தவும் தான் இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா - சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும் என குறிப்பிட்டுள்ளார். 

twitter

சீன அதிபர் காரின் சிறப்பம்சங்கள்

சீன அதிபர் சென்னை வருகையையொட்டி ஏர் இந்தியா கார்கோ விமானத்தில் புல்லட் புரூப் வசதி கொண்ட நான்கு கார்கள் சீனாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 

சீனாவில் பழமையான, மிகப்பெரிய உள்நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான எப்ஏடபிள்யு நிறுவனம் (Hongqi) ஹாங்கி எல்-5 ரக காரை சீன அதிபருக்காக உருவாக்கி உள்ளது. ஒவ்வொரு காரின் குறைந்தபட்ச விலையும் ஏறக்குறைய 6 கோடி ரூபாயாகும். 

அதிபர்களின் பாதுகாப்பு கருதி, குண்டு துளைக்காத கண்ணாடிகள் தொடங்கி, மிக கனமான கட்டமைப்பு என பல்வேறு அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு கருதி, இந்த காரின் சிறப்புகளில் பெரும்பாலானவை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. கார் என்ஜின், திறன் போன்ற சில விஷயங்கள் மட்டுமே வெளி உலகிற்கு தெரியும்.

twitter

மேலும் 10 வினாடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை அடையும் திறன் படைத்த 12 வால்வுகளைக் கொண்ட இன்ஜின் இதில் உள்ளது. இந்த காரில் தான் தற்போது சீன அதிபர் (xi jinping) பயணம் செய்கிறார். அவர் சாலை பயணம் செல்ல விரும்பியதால் தான் இந்த கார்கள் சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. 

பயண விவரங்கள்

கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலுக்கு சென்ற சீன அதிபர் இன்று மாலை 4 மணிக்கு புறப்பட்டு சாலை மார்க்கமாக காரில் சர்தார் பட்டேல் ரோடு, மத்திய கைலாஷ், பழைய மாமல்லபுரம் சாலை, சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை சாலை வழியாக 49 கி.மீ. பயணித்து மாமல்லபுரம் செல்கிறார். 

அங்கு அவரை பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். மாமல்லபுரம் போய்ச் சேர்ந்ததும் அங்கு இரு தலைவர்களும் மாலை 5 மணிக்கு அர்ஜூனன் தபசு பகுதியை பார்வையிடுகிறார்கள். மாலை 5.20 மணிக்கு ஐந்து ரதம் பகுதிக்கு சென்று சுற்றி பார்க்கின்றனர். 

மாலை 5.45 மணிக்கு கடற்கரை கோவிலுக்கு செல்கிறார்கள். பின்னர் கலை நிகழ்ச்சிகளை பார்க்கிறார்கள். அதன்பின் முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார்கள். இவர்களுக்காக அங்கு குண்டு துளைக்காத அரங்கம் கட்டப்பட்டுள்ளது.

twitter

பின்னர் இரவு 9 மணிக்கு சீன அதிபர் ஜின்பிங் (xi jinping) மாமல்லபுரத்தில் இருந்து கிண்டி வந்து ஓட்டலில் இரவு தங்குகிறார். பிரதமர் மோடி, கோவளம் ஓட்டலில் தங்குகிறார். இதேபோல நாளை முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். 

இந்திய பிரதமர் - சீன அதிபரின் சந்திப்பையொட்டி இரு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் சென்னை வந்துள்ளனர். இரு நாடுகளிலும் முதலீடு செய்வது, ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்கள் பேச்சு நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!