'என்ன வேணா பண்ணிக்கோடா'.. வைரலாகும் ஒரு பெண்ணின் கடிதம்!

'என்ன வேணா பண்ணிக்கோடா'.. வைரலாகும் ஒரு பெண்ணின் கடிதம்!

காலம்காலமாக பெண்ணின் (Women) உடலை போகப்பொருளாக, கவுரவப்பிரச்சினையாக நினைக்கும் வழக்கம் இந்த சமுதாயத்தின் சாபக்கேடு தான் இன்று பல்வேறு பொள்ளாச்சி(Pollachi) பிரச்சினைகளுக்கும் காரணம். இதற்கு அடுத்த இடத்தை பெண்கள்(Women) வசிக்கும் அனைத்து குடும்பத்தினருக்கும் தாராளமாக வழங்கலாம்.அந்தளவுக்கு ஆண்-பெண்(Women) பாகுபாட்டினை வீட்டிலேயே தொடங்கி வைத்து விடுகின்றனர்.20 வயதானாலும் ஆண் பிள்ளைக்கு ஊட்டிவிடும் அம்மாக்கள் இருக்கும் இதே ஊரில்தான் 2 வயது பெண்(Women) குழந்தையிடம் அவளது தம்பியைக் காட்டி இனிமேல் நீதான் இவனப் பாத்துக்கணும் என பொறுப்பை ஏற்றுக்கொள்ள சொல்கிறது. படித்து எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் வீட்டு வேலைகள், சமையலை பெண்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்ற மனப்பான்மை புரையோடிப் போயிருக்கும் இந்த சமுதாயத்தில் இருந்து பொள்ளாச்சி(Pollachi) சம்பவங்கள் தவிர வேறு எதனை நாம் எதிர்பார்க்க முடியும்.


ஒரு பெண் படித்து வேலைக்கு சென்றால் திறமையால் முன்னேறினால் கூட அவளது ஒழுக்கம் குறித்து சந்தேகம் எழுப்பாமல் எத்தனை பேர் அதனை
இயல்பாக ஏற்றுக்கொள்கின்றனர்? என்று யோசித்துப்பாருங்கள். பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்கள் தற்கொலை செய்து கொள்வதை
நாள்தோறும் பார்க்கிறோமே? ஒரு பெண்ணுக்கு தான் இழைத்த தவறினை நினைத்து வருந்தி உயிர்விடும் ஏதாவது ஒரு ஆணின்(Men) தற்கொலையை
இத்தனை ஆண்டுகளில் யாரேனும் பார்த்து இருக்கிறீர்களா?


பெண் புத்தி பின் புத்தி, 'பெண் சிரித்தால் போச்சு', முள் மீது சேலை விழுந்தாலும், சேலை மீது முள் விழுந்தாலும் நஷ்டம் சேலைக்குத் தான் என பெண்களுக்காக இவ்வளவு பழமொழிகள் இருக்கிறதே. இதேபோல ஆண்களின் ஒழுக்கத்தை கேள்வி கேட்கும் ஏதாவது ஒரு பழமொழி இங்கு
இருக்கிறதா?


பாசம்-அடக்குமுறைஇந்த பொள்ளாச்சி (Pollachi) சம்பவத்துக்குப் பின் பெண்கள்(Women) தான் காரணம் என ஒரு குரூப் கிளம்ப, பதிலுக்கு உங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் சொல்லுங்கள் நாங்கள் இருக்கிறோம் என ஒரு குரூப் கிளம்பி இருக்கிறது. இரண்டுமே ஆபத்து தான் முன்னது மனசைக் காயப்படுத்த பின்னது தைரியத்தைக் குலைத்து விடும். யாருடைய துணையும் இல்லாமல் பெண்களை வாழ விடுங்கள் தங்கள் சொந்தக்காலில் அவர்கள் நிற்கட்டும். தட்டுத்தடுமாறி எழுந்தாலும் சொந்தக்காலில் நடப்பது என்றும் சுகம்தான்.


காலம்காலமாகஆண்களை(Men) மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு என்றே பெண்கள் படைக்கப்பட்டது போன்ற தோற்றத்தை ஆண்கள்(Men) திட்டமிட்டு உருவாக்கினீர்கள். அதனை மறந்து விடாமல் இருக்க அவ்வப்போது உங்கள் மனைவி, குழந்தையை துன்புறுத்தி அடக்கி சித்ரவதை செய்து கெட்ட வார்த்தைகள் பேசி என ஏராளமான வழிகளில் தக்க வைத்துக்கொண்டீர்கள். என்பதை ஆண்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அதனையும் மீறி அவள் சிறகு விரிக்க நினைத்தால், குடும்ப கவுரவம் என்னும் தளைகள் கொண்டு அவளைக் கட்டிப்போடுகிறீர்கள்.


மனைவியின் ஏடிஎம்


கல்யாணமான ஆண்களில்(Men) எத்தனை பேர் உங்கள் மனைவியின் ஏடிஎம் கார்டை அவரிடமே கொடுத்து வைத்து இருக்கிறீர்கள். என
யோசித்துப்பாருங்கள். உங்கள் வீட்டில் ஆண் குழந்தைகளுக்கு ஈடான சுதந்திரமும், மரியாதையும் பெண்(Women) குழந்தைகளுக்கும் இருக்கிறதா என பாருங்கள்.ஏனெனில் தனிமனித ஒழுக்கம் என்பது வீட்டில் இருந்துதான் தொடங்க வேண்டும்.


சமூக வலைதளங்களில்சமூக வலைதளங்களில் இந்த பொள்ளாச்சி (Pollachi) சம்பவத்தினை வைத்து டப்ஷ்மாஷ், உருக்கமான பதிவுகள் என பலரும் தங்களை கண்ணியான்களாக காட்டிக்கொள்ள முயல்கின்றனர். அதே வேளையில் நியாயமான பதிவொன்றும் கண்ணில் பட்டது. தனது அம்மா பேசியதாக மகள் ஒருவர் தெரிவித்திருக்கிறார். என்ன வேணா பண்ணிக்கோடா என அவரது அம்மா நம்பிக்கை கொடுத்த அந்த தருணம் அந்த பெண்ணிற்கு எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஏனெனில் இதுபோன்ற தருணங்களை வார்த்தையால் விளக்க முடியாது.


இதே வார்த்தைகளை


இந்த கட்டுரையை எழுதிக்கொண்டு இருக்கும் வேளையில் கிட்டத்தட்ட இதேபோன்ற வார்த்தைகளை நானும் கேட்டேன். வேறு மாநிலத்தில் வசிக்கும் எனது சகோதரி இது தொடர்பாக போன் செய்து பேசியபோது, '' உனக்கு இதுமாதிரி ஏதாவது பிரச்சினை வந்தா பயப்படாதடா. என்ன வேணா
பண்ணிக்கோடான்னு சொல்லு. இந்த மாதிரி மிரட்டலுக்கெல்லாம் பயப்படக்கூடாது,'' என்றார். நெட்வொர்க் பிரச்சினை அதிகம் உள்ள அந்த ஊரில் கண்டிப்பாக மேலே சொன்ன விஷயத்தை அவர் படித்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் எனது சகோதரி கிட்டத்தட்ட அதேபோன்ற வார்த்தைகளை பேசியது எனக்கு எல்லையற்ற ஆறுதலை அளித்தது. ஒருவேளை என் அம்மா உயிருடன் இருந்திருந்தால் கண்டிப்பாக இதேபோலத்தான் பேசியிருப்பார் என நினைத்துக்கொண்டேன்.எப்படி வளர்க்க


தொடர்ந்து எனது சகோதரி அடுத்து சொன்னது தான் எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியை அளித்தது.தனது இரண்டு ஆண்(Men) குழந்தைகளையும் கண்ணியத்துடன் வளர்க்க வேண்டும், பெண்களை சமமாக மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்,'' என்றார். நிச்சயமாக நீ செய்வாய் என அவரிடம் தெரிவித்தேன். மாற்றம் வீடுகளில் இருந்து தொடங்கட்டும்.