திரை உலகினராலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் இயக்குனரான தியாகராஜன் குமாரராஜா எட்டு வருடங்களுக்கு பின்னர் இயக்கியிருக்கும் இரண்டாவது படம்தான் சூப்பர் டீலக்ஸ் ( Super deluxe ) . இந்தப் படத்தை பற்றிய விமர்சனத்தை ஏற்கனவே எழுதிவிட்டாலும் கூட நீளம் கருதி இந்தப் படத்தை பற்றி சொல்லாமல் விட்ட விஷயங்கள் இன்னும் நிறையவே இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
அதனை நிரப்பும் முயற்சியாக அதில் ஒரு பாகமான பெண்களை இந்த திரைப்படம் கையாண்ட விதம் அதில் இருந்து ஆரம்பிக்கிறேன். கதை பற்றிய ஒரு சிறிய முன்னோட்டம் உங்கள் தெளிவிற்காக.
வாழ்தலிற்கான ரகசிய வரைபடம் – சூப்பர் டீலக்ஸ்!
பிரபஞ்சம் முழுதும் பேரருளை போலவே காமமும் நிரம்பி வழிகிறது. காமம் என்பதில் இருந்துதான் படைத்தலே நிகழ்கிறது ஆயினும் அந்த காமம் ஒவ்வொருவர் வாழ்க்கையில் ஒவ்வொருவர் பார்வையில் என்னவாக தெரிகிறது எனும் கருவை அடிப்படையாக கொண்டு இதனை அப்படியே எடுத்தால் ஆபாசம் ஆகிவிடும் சொல்ல வந்த தகவல் கறையாகி போய்விடும் என்பதை அறிந்த இயக்குனர் இதனை பற்றி பேச டார்க் ஹ்யுமர் ரக கதை சொல்லலை தேர்ந்தெடுக்கிறார்.
எந்த ஒரு மோசமான தகவலையும் நகைச்சுவையாக கூறும்போது அதன் மீதான எதிர் தாக்குதல் குறைந்து சொல்ல வந்ததை கவனிக்கும் மனோபாவம் வரும். இந்த உளவியலின் படி தனது செய்தியை பார்வையாளருக்கு கடத்த முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர். ஹேட்டர்ஸ் பற்றிய கவலைகளை விட்டு விடலாம். அது அவர்கள் அணிந்திருக்கும் மனோபாவ கண்ணாடி வழியாக அந்த கதையில் இவர்கள் பார்த்த விஷயங்கள். அதனை தாண்டி பல விஷயங்களை கதை நமக்கு கடத்துகிறது.
நான்கு வெல்வேறு நிலை கதைகளில் உள்ள மனிதர்கள் காமத்தின் அடித்தளத்தில் அவர்கள் சந்தித்த சம்பவங்கள் அதில் தேங்கி இருக்கும் மனித மனத்தின் வக்கிரங்கள் பற்றிய உளவியல் சிக்கல்களை ஒவ்வொரு முடிச்சாக நமக்கு அவிழ்த்து உரித்து காட்டுகிறது சூப்பர் டீலக்ஸ்.
இதில் கொடுக்கப்பட்ட பெண்கள் கதாபாத்திரம் பற்றி எடுத்து கொண்டால்.. குற்ற உணர்ச்சியுள்ள காதலனுக்கு கருணை காட்ட கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவியாக சமந்தா , தாலி கட்டி காமம் செய்து குழந்தை பெற்ற கணவனை வாழ்நாள் முழுதும் தோழியாக பார்க்க தயாராகும் மனைவியாக காயத்ரி, குடும்பத்தை காப்பாற்ற பாலியல் படங்களில் நடிக்கும் ரம்யாகிருஷ்ணன்.. மேலும் ஆணும் அல்லாமல் பெண்ணும் ஆக முடியாமல் திண்டாடும் திருநங்கையாக விஜய் சேதுபதி இன்னொரு பெண் கதாபாத்திரத்தின் கனத்தை தனது தோள்களில் தாங்குகிறார்.
உளவியல் ரீதியாக ஆண் மற்றும் பெண்ணின் பலம் இந்த படத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளது இது நேரடியாக புரியாது. பலமுறை பார்த்தால் மட்டுமே உணரப்படும் விதத்தில் கதை அமைந்துள்ளது. சமூகத்தில் நடக்கும் அவலங்களை பக்கத்துக்கு வீட்டில் இருந்து வேடிக்கை பார்ப்பதை போல ஊடகங்கள் வழியே நாம் பார்த்து மௌனமாக கடந்து செல்கிறோம் என்பதை முதல் காட்சியில் வைத்திருக்கிறார் இயக்குனர்.
பத்திரிகை மற்றும் ஊடகங்கள் மூலம் கள்ள தொடர்பு என்பது சர்வசாதாரணமாக நடப்பதை அறிந்த சாதாரண குடும்பத்து பெண்ணான சமந்தா தனது பழைய காதலனுக்கு போன் செய்து கணவன் இல்லாத சமயத்தில் வீட்டிற்கு வரவைக்கிறார். காதலியை இழந்த அதீத மன வருத்தத்தில் இருக்கும் அந்த காதலனை சமாதானம் செய்ய தன்னை கொடுக்கிறார் சமந்தா. எதிர்பாராமல் அந்த கலவியில் காதலன் இறந்து போகிறான். அதன் பின்னர் அந்த சடலத்தை கணவனும் மனைவியுமாக அப்புறப்படுத்தும் போது அவர்களுக்குள் புதிய பந்தம் முளைக்கிறது இதுதான் நான்கு கதைகளில் முதல் கதை.
இதில் பெண்களின் துரோகம் அசால்டாக செய்யப்படுவது போல இருந்தாலும் சமந்தாவும் அவரது கணவருடன் சந்தோஷமாக வாழவில்லை என்பதை அடுத்தடுத்த காட்சிகளில் கூறி இருப்பதன் மூலம் பெண்ணின் உணர்வுகள் மரியாதைக்குரியவை என்று மாற்றுகிறார் இயக்குனர்.
சடலத்தை மறைக்க முயற்சிக்கும் சமந்தாவும் பகத் பாசிலும் அந்த பயணத்தின் முடிவில் ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பிப்பதாக சொல்லியிருப்பது மிகவும் நுண்மையான ரசனை. ஆணாதிக்க உலகத்தின் பரிதாபங்கள் நமக்கு வெளிப்படையாக தெரியும் வகையில் பகத்தின் கதாபத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது. எதற்கெடுத்தாலும் சமூகத்தை குறை சொல்லும் பகத் இறுதியில் இன்னொருவருக்கு தனது மனைவியை விட்டு கொடுக்கும் கையாலாகாத கணவனாக மாறி தேம்புகையில் ஆண்களின் இன்னொரு பக்கம் நமக்கு புரிய தொடங்குகிறது.
இரண்டாவதாக இதே கதையில் சமந்தா கதாபாத்திரத்துக்கு முரணான பெண்ணையும் காட்டி இருக்கிறார் இயக்குனர். திருமணமான சில நாட்களில் வயிற்றில் கருவை கொடுத்துவிட்டு தன்னை விட்டு பிரிந்து போன கணவனின் வருகைக்காக உணர்வுகளை அடக்கியபடி கூட்டு குடும்பத்தில் காத்திருக்கிறார் காயத்ரி. இவருக்கும் அந்த கணவருக்கும் பிறந்த குழந்தைக்கு கதைப்படி 7 வயதாகிறது. குழந்தையும் தனது தகப்பனின் வருகைக்காக காத்திருக்கிறது.
குடும்பமே எதிர்பார்த்த அந்த அப்பா கடைசியில் புடவை கட்டி லிப்ஸ்டிக் போட்டு , விக் வைத்து திருநங்கையாக மாறியிருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைகிறது குடும்பம் மட்டுமல்ல படம் பார்க்கும் பார்வையாளரும் தான். இந்த மாதிரி ஒரு கதைக்களத்தை இதுவரை அவர்களும் சந்தித்ததில்லை. இந்த மோசமான நிமிடங்களை டார்க் ஹ்யுமர் மூலமே அழகாக கையாள முடியும் என்பதை புரிந்திருக்கிறார். கண் முன்னே கணவன் புடவை கட்டியதை கலங்கி போய் பார்க்கும் நிமிடம் காயத்ரி நம் மனத்தில் நிலைத்து நிற்கிறார்.
மூன்றாவதாக ரம்யா கிருஷ்ணன் தன்னை காப்பாற்ற வழி தெரியாத கணவன் மிஷ்கின் குடும்பத்தை காப்பாற்ற மறந்து தத்துவ சிக்கலில் சிக்குகிறார். சாதாரண பெண்ணான ரம்யாகிருஷ்ணனை பொறுத்தவரை அது கணவனின் பொறுப்பு துறப்பு செயல். தனது மகனுக்காக குடும்பத்தை நடத்த பாலியல் திரைப்படத்தில் நடிகையாக நடிக்கிறார். இதனால் மனமுடைந்த மிஷ்கின் தற்கொலைக்கு முயல்கையில் லட்சம் பேரை காவு கொண்ட சுனாமி அலை அவரை மட்டும் காப்பாற்றுகிறது. அதன்பின்னர் தனசேகர் எனும் பெயரை அற்புதம் என்று மாற்றி கொண்டு தன்னை கடவுளின் தூதனாக மாற்றிக்கொள்கிறார் மிஷ்கின். ஆனாலும் கடவுள் பற்றிய சந்தேகங்கள் அவரை துரத்துகின்றன.
ரம்யா கிருஷ்ணன் தனது பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். இவருக்கு முன் இந்த கதாபாத்திரத்தில் நதியா நடிப்பதாக இருந்தது. ஆனால் நல்லவேளை அது மாறியது. நதியா நடித்திருந்தால் இந்த கதாபாத்திரத்தின் அழுத்தம் கெட்டு போயிருக்கலாம். விடலை பருவத்தில் காமத்தை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் உள்ள அத்தனை பேரும் பார்ப்பது ஆபாச வீடியோக்களைத்தான். அதைப்போலவே ஆசைப்படும் ரம்யாகிருஷ்ணனின் மகன் ஒரு வீடியோவில் தனது அம்மாவை பார்த்து விட உறைந்து போகிறான்.
எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம அந்த மாதிரி படங்களை உங்களால பார்க்க முடியுதுன்னா அதுல நடிக்கறது பத்தின எந்த குற்ற உணர்ச்சியும் எனக்கும் இல்லை என்று அழுத்தம் திருத்தமாக மகனிடம் பேசுகையில் அதே பழைய தில் ரம்யா கிருஷ்ணனை நம்மால் மீட்டெடுக்க முடிகிறது.
இது தவிர சின்ன சின்ன கதாபாத்திரங்களில் வருபவர்களும் தனித்து தெரிகின்றனர். காயத்ரியின் கூட்டு குடும்ப பாட்டி தனது கணவனை பற்றி தாலி அறுக்கறான் இந்தாளு என்பது 80 வருட கட்டாய திருமண வாழ்வின் ஒரு வடிகால் புலம்பல் என்று எடுத்து கொள்ளலாம். அதைப் போல தான் திருநங்கை என்பதை இந்த ஊருக்கு சொல்லி அதனை ஏற்று கொள்ள வைக்க வேண்டும் என்று விரும்பும் விஜய்சேதுபதி மகனின் பள்ளிக்கூடத்தில் சக மாணவர்கள் மற்றும் அங்குள்ள ஆண்களால் அவமானப்படுத்தப்பட்டு வெளியேறுகையில் அங்கே அதனை வேடிக்கை பார்க்கும் பூக்கார பெண்மணி கூறும் அறிவுரை மிக முக்கியமானது. வாழ்தல் பற்றிய அணுகுமுறை பற்றி சர்வசாதாரணமாக ஒரு பூக்கார பெண்மணியின் வார்த்தைகள் மூலம் புரிய வைக்கிறது திரைக்கதை.
ஒவ்வொரு சிக்கல்களையும் மெல்ல அவிழ்த்து வந்த திரைக்கதை முடிவாக போய் நிற்கும் இடம் அபாரமானது. அதுவும் ஒரு பெண். ஏலியன். ஏலியன்கள் என்றால் இங்கிலிஷ் படத்தில் மட்டும்தான் வர வேண்டுமா என்கிற ஏக்கத்தை அற்புதமாக திருத்தமாக பூர்த்தி செய்திருக்கிறார் இயக்குனர். இது தமிழ் சினிமாவிற்கான கிராபிக்ஸ் தளத்திற்கு முதல்படி. சில கணங்கள் வந்தாலும் தெளிவாக செதுக்கப்பட்ட அந்த ஏலியன் பெண் இனி அதிகம் நம் தமிழ் சினிமாவில் வலம் வர வேண்டும் என்பது என் விருப்பம்.
காமத்தால் ஆரம்பிக்கப்படும் இந்த வாழ்க்கை அதிலேயே உழன்று அதிலியே முடிவதற்கானதில்லை அதனை தாண்டி எவ்வளவோ அற்புதங்கள் இந்த பிரபஞ்சம் முழுதும் கிடக்கின்றன. பிரபஞ்சமும் நாமும் ஒன்றுதான் என்பதை விஸ்தாரமாக கூறும் அந்த ஏலியன் பெண் கதாபாத்திரம் மேலும் கதையின் கிரீடத்தில் இன்னொரு வைரக்கல் ஆகிறது.
நமது உயிர் நகர்ந்து விட்டால் நமது உலகம் முடிந்து விடும் அற்புதம் முதல் நமது உலகம் என்பது நம்மை மையப்படுத்திதான் தொடங்கி முடிகிறது என்பது வரை ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து அனுபவித்து அதனை மற்றவருக்கு பகிர்ந்து கொடுக்க தவிக்கும் தாகம் இயக்குனரின் இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் எங்கும் படர்ந்து கிடக்கிறது.
வாழ்வின் ரகசியங்கள் எல்லையில்லாத இயற்கையின் மடிப்புகளுக்குள் ஒளிந்து கிடக்கிறது. புரிந்து அதனை பருகுவர் அடுத்த கட்டம் நகர்கிறார்கள். சூப்பர் டீலக்ஸ் கதையும் பிரபஞ்சம் போன்றதுதான். சூப்பர் டீலக்ஸ் கதையில் கொட்டி கிடைக்கும் ரகசியங்கள் வாழ்தலுக்கான வரைபடம் என்பதை உணர்ந்தவர்கள் இவரின் அடுத்த படைப்பு வரும்வரை மீண்டும் காத்திருப்பார்கள்.
படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.