Lifestyle

சுவாசம்தான் வாழ்க்கை ! சுற்றுப்புற மாசை கட்டுப்படுத்துவது எப்படி?

Nithya Lakshmi  |  Dec 2, 2019
சுவாசம்தான் வாழ்க்கை !  சுற்றுப்புற மாசை கட்டுப்படுத்துவது எப்படி?

பல வழிகளில் சுற்றுப்புறத்திற்கு ஏற்படும் தீங்கை நம்மால் குறைக்க முடியும். நாம் அனைவரும் நமக்கு உள்ள இயற்கை வளங்களை, வாகனத்தை, மற்ற சேவைகளை மிக கவனமாகப் பயன்படுத்தினால், காற்று, நிலம், தண்ணீர் ஆகிய சுற்றுச்சூழலுக்கு நாம் செய்யும் தீங்கை முற்றிலும் அகற்றலாம். தினமும் நாம் மேற்கொள்ளும் செயல்களில் மாற்றத்தை ஏற்படுத்தினால், சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும், நம் எதிர்காலம் பாதுகாப்பாகவும் இருக்க உதவும்.

மாசுக் கட்டுப்பாட்டு (pollution control) தீர்வில் அனைவரும் பங்களிக்க வேண்டும். எளிய வழிகளில் எப்படி சுற்றுப்புறத்தை பாதுகாப்பது என்று தெரிந்து கொள்வோம்.

காற்று மாசுபடுதல் தடுக்கும் வழிமுறைகள்

1. மின்சார பயன்பாட்டை கட்டுக்குள் வையுங்கள்

Pexels

பல வீடுகளில் பார்க்கிறார்களோ இல்லையோ தொலைக்காட்சி ஓடிக்கொண்டே இருக்கும். மேலும், எல்லா அறைகளிலும் மின் விசிறி ஓடிக்கொண்டே இருக்கும். தேவை இல்லாத போதும், அறையை விட்டு வெளியில் வரும்போதும், மின் விளக்கு, மின் விசிறிகளை நிறுத்தி விட்டு வந்தால், உங்கள் மின்சார செலவும் மிச்சம், மின் உற்பத்திக்கு செலவிடும் கரியும் சேமிப்புதானே. புதிய அல்லது பழைய உபகரணங்களை வாங்கும்போது அதை சோதித்து மின்சாரத்தை கட்டுக்குள் வைக்கும் வீட்டு சாதனங்களை வாங்குங்கள்.

மேலும் , இயற்கையோடு ஒன்றி வாழுங்கள்.நம்ம ஊர் வெயிலிற்கு ட்ரையர் தேவை இல்லை. மழைக்காலங்களை விடுத்து, மற்ற நேரங்களில் துவைத்த துணியை ட்ரையர் இல்லாமலேயே காய வைக்கலாம். மிகவும் வேட்கை உள்ள சில மாதங்களைத் தவிர மற்ற மாதங்களில் சன்னல்களை நீக்கி, இயற்கை காற்றோடு தூங்கலாம்.

2. வாகன பயன்பாட்டு முறைகள்

வாகனப்புகை தான் காற்று மாசிற்கு அதிக காரணமாக சொல்லப்படுகிறது. தேவை இல்லாமல் வாகனத்தை பயன்படுத்தாதீர்கள். அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்று பொருள்களை வாங்கலாம். சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளைவிக்காத திறமையான வாகனங்களை அடுத்தமுறை வாங்குங்கள். முடிந்த அளவு பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்தலாம். 

வாகனத்தை ஓட்டும்போது வேகத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வதால், அதிக புகை எழும்பாது. காற்று மாசு ஆவதை குறைக்கலாம்.மேலும், உங்கள் வாகனத்தை தகுந்த பராமரிப்பு செய்து, சக்கரங்களுக்கு போதிய காற்று செலுத்தி பயன்படுத்துங்கள். நிச்சயம் அதிக மைலேஜில் வாகனம் ஓடும். அல்லது கார் பூல் செய்து கொள்ளலாம். நீங்கள் அலுவலகத்திற்கு செல்லும்போதும், வேறு இடங்களுக்கு செல்லும் போதும், உங்கள் வாகனத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். அதற்கு உங்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.

3. சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளைவிக்காத ரசாயனம் இல்லாத பொருட்களை பயன்படுத்துங்கள்

வீட்டில் சுத்தம் செய்யும் பொருட்களை பயன்படுத்தும்போது, அதிக ரசாயனம் இல்லாத பொருட்களை பயன்படுத்துங்கள். அது உங்கள் சருமத்திற்கும் நன்மை; நிலத்திற்கும் நன்மை உண்டாகும். பாஸ்பரஸ் போன்ற ரசாயனங்கள் ஆற்றில் கலக்கும்போது, நீர்பாசிகளை அதிகமாக வளரச் செய்து நீர் ஓட்டத்தை தடை செய்யும். 

4. புகை பிடிக்காதீர்கள்

Pexels

அது உங்கள் நலனையும் கெடுத்து, உங்களை சுற்றியுள்ள காற்றையும் மாசு செய்து, அதை சுவாசிக்கும் அனைவர்க்கும் தீங்கை ஏற்படுத்தும். 

5. உங்கள் குப்பைகளை திறந்த வெளியில் தீயிட்டு எரிக்காதீர்கள்

காற்றை மாசுவாக்கும் குப்பைகளை திறந்த வெளியில் தீயிட்டு எரிக்காதீர்கள்.வீட்டிலேயே, மறுசுழற்சி செய்யும் குப்பைகள் தனியாகவும், மக்கும் குப்பைகளை தனியாகவும், மக்காத குப்பைகளைத் தனியாகவும் சேகரித்து, முறையாக அவற்றை அப்புறப்படுத்துங்கள்.மேலும், நச்சு உள்ள குப்பைகளை கவனமாக அப்புறப்படுத்துங்கள். நிச்சயம் அது காற்றையும், பூமியையும் நச்சாக்கி விடும்.

6. காய்ந்த இலைகளையும், காய்கறி கழிவுகளையும் வீட்டிலேயே உரமாக்குங்கள்

அவரவர் வீட்டில் சேரும் காய்ந்த இலைகளையும், காய்கறி கழிவுகளையும் அவரவர் வீட்டிலேயே உரமாக்கி தோட்டத்தை நல்ல வளமான மண்ணாக மாற்றலாம்.

7. நெகிழி பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்

Pexels

இப்போது எல்லா பயன்பாட்டிற்கும் நெகிழி அல்லதா, மக்கக்கூடிய பொருட்கள் விற்பனைக்கு வந்துவிட்டது. அதனால், மக்காத நெகிழி பொருட்களை முற்றிலும் தவிர்த்து, மாற்று பொருட்களை பயன்படுத்துங்கள். 

மேலும் படிக்க – ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்குவோம்:பிளாஸ்டிக்கு பதிலாக இனி இவைகளை பயன்படுத்தலாமே!

8. பொது இடங்களில் குப்பை போடக்கூடாது

இந்த உணர்வு எல்லோருக்கும் வந்துவிட்டால், விரைவில் சுற்றுப்புறம் தூய்மை ஆகிவிடும். சுகாதாரமான எதிர்காலம் அனைவர்க்கும் கிடைக்கும். பேருந்து நிலையங்களில், ரயில் நிலையங்களில், தேநீர் கடைகளில், பூங்கா, கடற்கரை, பொதுவான சாலை இப்படி மக்கள் கூடும் இடம் எதுவாக இருந்தாலும் அந்த இடத்தை குப்பை தொட்டியாக மாற்றி விடுகிறார்கள். படித்தவர்களும், அறிந்தவர்களுமே இந்த தவறை செய்யும்போதுதான் வேதனையாக இருக்கிறது. மாற்றம் நம்மிடம் முதலில் வர வேண்டும். நான் மட்டுமா போடுகிறேன் என்று இல்லாமல், எப்போதுமே வெளியிடங்களில் குப்பை போடுவதில்லை என்ற உறுதிமொழி எடுத்தோமேயானால் நிச்சயம் நம்ம ஊர் சூப்பராகி விடும்.

9. செல்லப்பிராணிகளை அன்போடு வளர்க்கவும்

ஆசையாக நாய் வளர்க்க விரும்புவார்கள், பூனை வளர்க்க விரும்புபவர்கள், மாடு வளர்ப்பவர்கள் அவற்றை எப்போதும் கட்டிப்போட்டு துன்புறுத்தாமல், தகுந்த நேரத்தில் ஆகாரம் கொடுத்து வளர்க்கவும். மேலும், அதன் கழிவுகளை வெளியில், பொது இடங்களில் அசுத்தம் செய்யாமல், தகுந்தவாறு சுத்தம் செய்யும் பொறுப்பை வளர்பவர்கள் ஏற்க வேண்டும். 

10. வீட்டிற்குள்ளும், வீட்டை சுற்றியும் செடி வளர்க்கவும்

Pexels

முடிந்தளவு இருக்கும் இடத்தில், வீட்டிற்குள்ளும், வீட்டை சுற்றியும், பால்கனி, மாடி ஆகிய இடங்களில் செடி வளர்க்கவும். அது உங்களை சுற்றியுள்ள காற்றை சுத்தம் செய்ய உதவும். இப்படி மாசு இல்லாத இடத்தை உருவாக்க கீழ்காணும் உறுதி கொள்வோம்.

சுவாசத்திற்கு தேவை சுத்தமான காற்று. உணவு இல்லாமல் சிறிது நாட்கள் இருந்து விடலாம். ஆனால், காற்று இல்லாமல் ஒரு மணி நேரம் கூட உயிர் வாழ முடியாது. அதனால் இன்றுமுதல் நாம் ஒவ்வொரு நாளும் நல்ல நாளாக எல்லோருக்கும் இருக்கச் செய்வோம். பூமியில் நல்ல காற்று இருக்கச் செய்வோம். சுற்றுப்புற மாசை கட்டுப்படுத்துவோம்.

மேலும் படிக்க – எளிமையாக குறைந்த பராமரிப்பில் வீட்டிற்குள் வளர்க்க கூடிய செடிகள்!

பட ஆதாரம்  – Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

 

Read More From Lifestyle