Celebrations

வயதென்பது வெறும் எண்களால் ஆனது.. நம்பிக்கை தரும் செல்வக்கனி பாட்டி !

Deepa Lakshmi  |  Mar 12, 2019
வயதென்பது வெறும் எண்களால் ஆனது.. நம்பிக்கை தரும் செல்வக்கனி பாட்டி !

உணவென்பது உயிர்களுக்கு மிக முக்கியமானது. மீச்சிறு உடல் கொண்டு இந்த பூமியை வந்தடையும் நாம் இந்த பூமியில்விளையும் உணவுகளை உண்டபடியே உடலை வளர்க்கிறோம்.

உணவு என்பது தமிழர் கலாச்சாரத்தில் ஆரோக்கியத்தோடு ஒன்றிய ஒரு விஷயம். காலையில் புரதம் அதிகம் கொண்ட இட்லி வடை சாம்பார் (idli vada sambar) நமது ஆரோக்யத்தை அற்புதமாக மாற்றுகிறது. இப்படி ஒவ்வொரு உணவிலும் புரதங்களின் அளவை வைத்தே நமது மெனுக்கள் தயார் ஆகி இருக்கிறது.

இட்லி என்றால் 90’ஸ் கிட்ஸ் வரை மங்கலான ஞாபகமிருப்பது அவர்களின் சிறு வயதில் ஏதோ ஒரு பாட்டி கடையில் வாங்கி சாப்பிட்ட இட்லிதான். எனது நினைவிலும் அப்படி ஒரு பாட்டி கடை உண்டு.. வீட்டில் இருந்து வெகு தூரம் சைக்கிளில் சென்று வாங்கி வந்து சாப்பிடுவோம். அந்தப் பாட்டியின் சாம்பாரின் ருசி இன்னமும் மூளையின் நியூரான்களில் தங்கி இருக்கிறது.

சென்னை போன்ற பிரம்மாண்ட நகரங்களில் அப்படி ஒரு பாட்டி கடை தேடி அலைவது கொஞ்சம் சிரமம்தான். ஆனாலும் அவசியமானது. பல்வேறு ரோட்டோரக் கடைகள் இருந்தாலும் பாட்டி கைப்பக்குவம் தேடி அலையும் ஞாபக வாசனை என்னை வடபழனி பாட்டி கடை முன் கொண்டு சென்று நிறுத்தியது.

அப்போது இரவு 11 மணி இருக்கலாம். அந்த நேரத்திலும் ஆண்கள் பெண்கள் என அனைவரும் அங்கு கூட்டமாக நின்று ஆளுக்கொரு தட்டில் இட்லிகளோடு உணவருந்திக் கொண்டிருந்தனர். பார்க்கும்போதே நாவில் சுவை ஏறுகிறது.

நல்ல உணவகத்திற்கு பெயர்ப்பலகை கூட அவசியம் இல்லை என்பது பாட்டியின் கடையைப் பார்த்தால் புரிந்து விடும். உட்கார்ந்து சாப்பிட டேபிள் இல்லை நாற்காலிகள் இல்லை ஆனாலும் நடந்து வரும் வாடிக்கையாளர் முதல் காரில் வந்து சாப்பிடுபவர்கள் வரை பாட்டியின் இட்லிக்கு பல்வேறு வித ரசிகர்கள்.

ஒரே ஆளாக அத்தனை பேரின் தேவைகளையும் பாட்டி கவனித்துக் கொண்டிருந்தார். நானும் சென்று உதவ விரும்பினேன் ஆனால் அது பாட்டியின் தன்னபிக்கையை குறைக்கக் கூடும் என்பதால் அமைதியாக நின்று கொண்டிருந்தேன்.

சாப்பிடுபவர்களுக்கு தட்டுகளில் இட்லி வைத்து சட்னி சாம்பார் ஊற்றும் பாட்டி அடுத்த நொடியே பார்சலுக்கு பூரி மசால் கட்டிக் கொடுக்கும் அழகே தனிதான். அதனை நேரில் சென்றுதான் நீங்கள் பார்க்க வேண்டும்.

80 வயதில் 30 வருடங்களாக இட்லிக் கடை நடத்தி வரும் பாட்டி இன்னமும் 4 ரூபாய்க்கு தான் இட்லி விற்கிறார். அதுவும் போன மாதம் வரைக்கும் 3 ரூபாயாக இருந்தது. இப்போதுதான் உயர்த்தியிருக்கிறார். அத்தனை பரபரப்பிலும் எந்த வித பதட்டமும் இல்லாமல் புன்னகையோடு பார்சல் கட்டி கொடுக்கும் பாட்டி அவ்வப்போது எனது கேள்விகளுக்கும் அதே புன்னகையோடு பதில் அளித்துக் கொண்டிருந்தார்.

பெயரே இல்லாமல் 30 வருடங்களாக இட்லி கடை நடத்தும் பாட்டியின் பெயர் செல்வக்கனி. ஊர் திருநெல்வேலி அருகே உள்ள திசையன்விளை.

ஒரு பெரும் சோகத்திற்குப் பின்பான துணிச்சலான முடிவுதான் பாட்டியின் இந்த இட்லிக் கடை. 30 வருடங்களுக்கு முன்பு ஸ்வீட் ஸ்டால் நடத்தி வந்த மருமகன் இறந்து விட தனது பெண்ணையும் பேரன் பேத்திகளையும் காப்பாற்ற முடிவு செய்திருக்கிறார் இந்த தன்னம்பிக்கை பெண்மணி.

“என் மருமவன் ஆக்சிடெண்ட்ல இறந்ததும் என்ன பண்ணறதுன்னே புரியல. அவரு நடத்துன அதே ஸ்வீட் கடைய நடத்தியும் வருமானம் வரல. என் பொண்ணு திகைச்சு போயிருந்தா. அப்பத்தான் எனக்கு நல்லா தெரிஞ்ச உணவான இட்லியை விற்கலாம்னு யோசிச்சேன். எங்க காலத்துல தீபாவளி மாதிரியான விஷேசங்களுக்குத்தான் இட்லி செய்வோம். அப்ப எனக்கு பெரியவங்க சொல்லி கொடுத்த முறையை இப்பவும் பின்பற்றி இட்லி மாவை தயாரிக்கிறேன், அதான் ஸ்பெஷல்.

அதில்லாம எப்பவும் அன்போட பரிமாற எனக்கு பிடிக்கும். என்னோட விருந்தோம்பல் குணத்தால் கடைக்கு வாடிக்கையாளர் அதிகம் வந்தாங்க. நிறைய பேர் துணை இயக்குனர்கள், அன்றாட பணியாளர்கள் அதனால எப்பவோ வச்ச விலை இப்ப வரை மாறல. என்னை தேடி வரவங்க சில சமயம் அந்த 3 ருபாய் கூட கொடுக்க முடியாம வருவாங்க. அப்பாவும் அவங்களுக்கு நான் உணவை கொடுத்து அவங்க வயிற்றை நிறைத்து அனுப்புவேன்” என்கிறார் பேரன்பு கொண்ட செல்வக்கனி பாட்டி.

கூட துணைக்கு யாருமில்லாமல் ஒத்தையாக உழைக்கிறார். சமைப்பதற்கு மட்டும் ஊரில் இருந்து இருவரை வேலைக்கு வைத்திருக்கிறார். இருந்தாலும் 100க்கும் மேற்பட்ட பார்சல்களை தானே கட்டி புன்னகையோடு வாடிக்கையாளர்களுக்கு தருகிறார். அதுதான் அவருக்கு திருப்தியாக இருக்கிறது.

என் வயதுக்கு எனக்கே அரை மணி நேரத்துக்கும் மேல் நின்றால் பாதங்கள் வலிக்கிறது. ஆனால் பாட்டி உட்காருவதே இல்லை. அது பற்றி கேட்ட போது வேலை செஞ்சுக்கிட்டே இருந்தாதான் நோய் நொடி அண்டாது. எனக்கு ஒரே ஒரு ஆசைதான்மா இப்படி ஓடியாடி வேலை செய்யும்போதே என் காலம் முடிஞ்சுடணும் அதுதான் என் ஆசை என்கிறார்.

மரணம் பற்றிய தெளிவோடு அதனையும் தான் சுறுசுறுப்பாகவே வரவேற்க விரும்புவதாக கூறும் செல்வக்கனி பாட்டியின் தைரியமும் தன்னம்பிக்கையும் எனக்கு பல்வேறு பாடங்களைக் கற்றுக் கொடுத்தது.

#POPxoWomenWantMore

பாட்டியின் கடை வடபழனி துரைசாமி சாலையில் (வேங்கீஸ்வரர் கோயிலுக்கு அருகே) இருக்கிறது.

பாட்டி கடை இரவு 1 மணி வரைக்கும் இருக்கிறது. இட்லி தவிர பூரி மசாலா, தோசை, பொங்கல் போன்றவையும் கிடைக்கின்றன.

எத்தனையோ விலையுயர்ந்த ஹோட்டல்களில் சிடுசிடுப்பான ஊழியர்களோடு மல்லுக்கட்டி க்யூவில் நின்று டோக்கன் வாங்கி பார்சல் கட்டுபவர்களின் வெறுப்பான முகபாவனைகளோடு நாம் வாங்கி வந்து சாப்பிடும் இட்லியின் சுவையை விட ஒருமுறை பாட்டி கடையின் அன்பால் ஆன புன்னகையோடு தரக் கூடிய இட்லியை மற்ற உணவுகளை சுவைத்து பாருங்கள்.நிச்சயம் அற்புதமாகத்தான் இருக்கும்.

படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

 

Read More From Celebrations