Lifestyle

நம்மை இரிடேட் செய்யும் “எனர்ஜி வாம்பயர்”களை எப்படி சமாளிப்பது ?

Deepa Lakshmi  |  Feb 22, 2019
நம்மை இரிடேட் செய்யும் “எனர்ஜி வாம்பயர்”களை எப்படி சமாளிப்பது ?

நாம் பாட்டுக்கு மிக உற்சாகமாக ஒரு நாளை எதிர்கொண்டிருப்போம். நாம் விரும்பிய ப்ராஜெக்ட் நமக்கு கிடைத்திருக்கலாம் அல்லது திடீர் பழைய பாக்கி பணவரவுகள் வந்திருக்கலாம் கணவன் நம்மோடு அன்பாக இருந்திருக்கலாம் இப்படி எவ்வளவோ காரணங்கள் நாம் உற்சாகமாக இருக்க.

ஆனால் திடீர் என ஒரு நபர் தோழி என்கிற பெயரில் நம் நாளில் நுழைவார். நமது சந்தோஷங்களை அவரது எரிச்சலூட்டும் பேச்சால் காலின் கீழே நசுக்கித் தள்ளிவிட்டு போய் விடுவார். இந்த மாதிரி ஆட்களை தியான வகுப்புகளில் எனர்ஜி வாம்பயர் (vampires) என்கின்றனர்.

அதாவது வாம்பயர் என்பது ரத்தம் குடிக்கும் காட்டேரிகள் என்பது எல்லாருக்கும் தெரியும். எனர்ஜி வாம்பயர் என்றால் நமது பாசிட்டிவ் எனர்ஜியை உறிஞ்சிக் கொள்ளும் நபர்கள் என்று பொருள்.

நாம் என்னவோ இருக்கிற இடம் தெரியாமல் இருக்கும் ஆட்களாக கூட இருக்கலாம் ஆனால் ஒரே ஒரு தொலை பேசி வரும். அந்தப் பக்கம் அந்த எனர்ஜி வாம்பயர் தோழி இருந்தார் என்றால் ஹல்லோ என்று நீங்கள் ஆரம்பிக்கும் முன்பாகவே உங்களை எரிச்சல்படுத்தி தன் வேலையை ஆரம்பிப்பார். ஏன் போன் எடுக்க இவ்வளவு நேரம் என அதிகாரமாக அவர்கள் கேட்பது நம் எரிச்சலை தூண்டலாம்.

போன் என்பது நமது சௌகர்யத்திற்காக வாங்கி உள்ள ஒரு சாதனமே தவிர.. மற்றவர்கள் நம்மை ஆள்வதற்காக வாங்கிய சாதனம் அல்ல என்பது இன்னமும் பலருக்குப் புரிவதேயில்லை. யார் அழைத்தாலும் எப்போது அழைத்தாலும் எஸ் பாஸ் என அலாவுதீன் அடிமை போல அட்டன்ஷனில் நிற்பார்கள்.

அலுவலக போன் என்றாலுமே அதற்கென ஒரு நேர வரைமுறை இருக்கிறது. நீங்கள் இப்போது பேச முடியுமா ? என்று நமது சூழ்நிலைகள் பற்றி இங்கிதமாகக் கேட்டு விட்டுத்தான் பேசவே ஆரம்பிப்பார்கள். ஒரு சிலருக்கோ அது பற்றிய எந்த கவலையும் இல்லை.

தான்தான் இந்தப் பிரபஞ்சத்திலேயே மிக முக்கியமான உயிரினம் என்பது போலத்தான் அவர்கள் நடவடிக்கை இருக்கும். ஆகவே எப்போது வேண்டுமானாலும் அவர்கள் அழைப்பார்கள் நீங்கள் எடுக்க வேண்டும் அவர்கள் நம்மை எரிச்சல்படுத்துவத்தைக் கேட்கவேண்டும் அதன்பின் ஒரு கட்டத்துக்கு மேல் உங்களுக்கும் கோபம் தலைக்கேறிய உடன் தான் நினைத்த காரியத்தை நிறைவேற்றிய திருப்தியில் போனைக் கட் செய்வார்கள்.

நாம் இயல்பு நிலைக்கு வர சில மணி நேரங்கள் ஆகலாம்.

அடுத்த மனிதரை தனது அறியாமையால் எரிச்சல் படுத்துபவர்கள் ஒரு சிலர்தான். மீதம் உள்ள அனைவருமே ஒரு வித உளவியல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள். மற்றவரை காயப்படுத்தி அதில் ருசி காண்பவர்கள்.

அமைதியாக போக வேண்டிய நம் நாளை அரைமணி நேரத்தில் அலங்கோலமாக்கி விடுவதில் இவர்கள் வல்லவர்கள்.

பெரும்பாலும் இவர்களைக் கண்டுபிடிப்பது சுலபம் என்றாலும் உறுதி செய்வதுதான் கடினமான ஒன்றாக இருக்கும். காரணம் நம்மைக் கோபப்படுத்தும் படி செய்துவிட்டு பின்னர் அப்பாவியாக மாறுவார்கள். சாரி நான் வேணும்னே அப்படி சொல்லல என்பார்கள்.

இது மாதிரி அந்நியன்’கள் பலர் இருக்கிறார்கள். நேரத்துக்குத் தகுந்தாற்போல தன்னை மாற்றிக் கொள்வதில் வல்லவர்கள். மற்றவர்முன் புத்திசாலியாக காட்டிக் கொள்ள அவர்களோடு சும்மா கூட வரும் நம்மை முட்டாளாக்கி விடுவார்கள்.

மற்றவர்களுக்கு இது புரியாது. ஒரு ரயில் பயணத்தில் ஒன்றாக பயணிக்கிறோம் என்றால் சம்பந்தமே இல்லாமல் எதிரில் உட்காந்திருக்கும் வழிப்போக்கரிடம் “இவ எப்பயுமே இப்படித்தான் எவ்ளோ சொன்னாலும் புத்தி வராது ” என்பார்கள்.

யாரென்றே தெரியாத ஒரு சகபயணியிடம் நட்பில் இருக்கும் நம்மைக் குறை சொல்லி நம் முகம் கோணுவத்தைக் கண்டு ரசிப்பார்கள்.

இது மாதிரி ஆட்கள் நமக்கு முன்புதான் பேசுகிறார்கள் என்று அலட்சியமாக இருந்து விட முடியாது. நமக்கு பின்பும் பேசுவதில் இவர்கள் வல்லவர்கள்.நம் மற்ற தோழிகளிடம் சென்று “அவகூட வெளில போனேன் எனக்கு அவமானமா போச்சு ஒரு ஹோட்டல் ல எப்படி சாப்பிடறதுனு கூட அவளுக்குத் தெரியல என்பார்கள். உண்மையில் நாம் அவர்களோடு வெளியே சென்றிருக்கவே மாட்டோம்.

இல்லாததை இருப்பதாக சொல்லி கயிறு திரிப்பதில் இவர்கள் எப்போதும் வல்லவர்கள்.ஆனால் ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால் இதே வேவ்லெந்தில் உள்ளவர்களைத் தவிர வேறு யாரும் இவர் பேசுவதை நம்ப மாட்டார்கள்.

காரணம் அரை மணி நேரத்தில் நமது பிபியை ஏற்றும்படி இவர்கள் செயல்கள் இருப்பதால் அவர்களுக்கும் இதே நிலை ஏற்படும். ஆகவே அவர்களுக்கு எப்போது இவள் கிளம்புவாள் என்றுதான் இருக்கும்.

ஆகவே இது போன்ற நபர்களை மட்டுமல்ல இந்த நபர்களை நம்பும் ஆட்களையும் நீங்கள் புறங்கையால் ஒதுக்கி வைத்து விடலாம்.

பெரும்பாலும் இந்த எனர்ஜி வாம்பயர்களை கண்டுபிடிப்பது மற்ற ஆட்களுக்கு சிரமம். ஏனெனில் அவர்கள் வாம்பயர் அல்லவா. நம் கண்களுக்கு (sense ) மட்டுமே தெரிவார்கள். ஆனால் பேராசை காரணமாக அனைவரையும் எரிச்சல்படுத்த அவர்கள் முயற்சிக்கும்போது மாட்டிக் கொள்வார்கள்.

இப்படிப்பட்டவர்கள் எப்போதும் தற்பெருமை உடையவர்களாகவே இருப்பார்கள். நான் அப்படி, நான் இப்படி என்று அவர்களை பற்றி அவர்களே கூறிக் கொள்வார்கள். இப்படி ஒரு நட்பு ஆரம்பிக்கிறது என்றாலே நீங்கள் அலர்ட் ஆகிவிட வேண்டும்.

இன்னொரு அடையாளம் இவர்கள் பொய் கூறுவார்கள் ஆனால் தான் உண்மை விளம்பி என்று அடித்து சொல்வார்கள். மற்றவரைக் காயப்படுத்துவார்கள் ஆனால் தான் ஒரு கருணைவாதி என்று கூறிக் கொள்வார்கள். இப்படித் தாங்கள் செய்யும் செயலுக்கு எதிர்பதமாகவே இவர்கள் தம்பட்டம் அடிப்பார்கள். முகநூலில் பதிவிடுவார்கள்.வாட்சப்பில் ஸ்டேட்டஸ் வைப்பார்கள்.

இப்படிப்பட்ட நபர்கள் உங்கள் வாழ்வில் யதேச்சையாகவோ அல்லது வேண்டுமென்றோ வந்தால் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் … விலகி இருப்பது.

இரண்டாவது ஒரு கண்ணாடி போல நாம் இருக்கப் பழகிக் கொள்வது அவசியம். அவர்களை அப்படியே பிரதிபலியுங்கள் .அவர்களை போலவே மோசமாக அல்ல.. ஒரு ஐந்து சதவிகிதம் இருங்கள் போதும். அவர்களால் தாக்குப் பிடிக்க முடியாது.

பொதுவாக வாம்பயர்களுக்கு சூரிய வெளிச்சம் பிடிக்காது. அது தன் மீது பட்டால் அது மறைந்து விடும். அதைப் போலவே இந்த எனர்ஜி வாம்பயர்களுக்கும் தான் மற்றவர்களை நடத்துவது பொலத் தானும் நடத்தப்பட்டால் பிடிக்காது. அங்கிருந்து கிளம்பி விடும்.

இன்றைய நவீன யுகத்தில் முகம் தெரியாத பலருடன்தான் நாம் பயணிக்க வேண்டி இருக்கிறது. சமூக ஊடகம் மற்றும் பயணங்களில் மட்டுமல்ல அன்றாடம் நாம் சந்திக்கும் தொழில் சார்ந்த நபர் கூட இவ்விதம் இருக்கலாம். இவர்களோடு போராட முடியாமல் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படும் நபர்களும் உண்டு. மன அழுத்தம் ஏற்பட்டு தனிமைப்பட்டவர்களும் உண்டு.

இதுதான் அவர்களுக்கு வேண்டியது. இதனை அவர்களுக்குத் தராமல் சாமர்த்தியமாக இப்படிப்பட்ட மனிதர்களிடம் இருந்து உங்களை நீங்கள் காத்துக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட மனிதர்களோடு பழக நேர்ந்தால் நிர்த்தாட்சண்யமாக யோசிக்காமல் இந்த நட்பை கத்தரித்து விடுங்கள்.

 

படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Lifestyle