பிரண்டையை வைத்து துவையல் மற்றும் சட்னி செய்வது பற்றித்தான் பொதுவாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், பிரண்டையை பயன்படுத்தி பொடி, காரக்குழம்பு, ரசம் போன்றவை எப்படி செய்து அசத்தலாம் என்று பார்க்கலாம்(pirandai recipe).
பிரண்டையை எப்படி சுத்தம் செய்வது?
முதலில், பிரண்டையை சுத்தம் செய்வது மிகவும் முக்கியம். ஆனால், அது ஒன்றும் கடினமான காரியம் இல்லை. கொஞ்சம் பிஞ்சான பிரண்டைகளாகப் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். பிரண்டைத் தண்டுகளின் ஓரங்களில் உள்ள நாரை மட்டும் சுத்தம் செய்தால் போதும். பிறகு நார் நீக்கிய பிரண்டையை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பிரண்டை இலைகள் கிடைத்தால் அவற்றையும் சேர்த்து சமைக்கலாம்.
குறிப்பு: புதிதாக பிரண்டை செய்பவர்கள் கைகளுக்கு தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டு சுத்தம் செய்யுங்கள் அல்லது கிலவ்ஸ் அணிந்து சுத்தம் செய்தால் கை விரல்கள் அரிக்காமல் இருக்கும்.
பிரண்டையில் என்ன சமைக்கலாம்?
1. பிரண்டைப் பொடி
எல்லாக் காலங்களிலும் பிரண்டை கிடைப்பதில்லை. வறண்ட பொடியாக செய்து வைத்துக் கொண்டால், நீண்ட நாட்கள் வைத்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
பிரண்டை – 1 கப்
உளுந்து – 4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 6
கறிவேப்பிலை – 1 கைப்பிடி
கருப்பு எள்ளு – 4 தேக்கரண்டி
பூண்டு – 4 பற்கள்
புளி – நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:
- சுத்தம் செய்த பிரண்டையை சிறிது எண்ணெய் சேர்த்து தனியாக நன்றாக நிறம் மாறும் வரை குறைந்த தீயில் ஒரு 10 நிமிடம் வதக்குங்கள். அதைத் தனியாக ஒரு தட்டில் போட்டு ஆறவிடுங்கள்.
- பிறகு, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
- அதோடு பூண்டு பற்களை தோள் நீக்கி சேர்த்து வதக்குங்கள்.
- பிறகு சுத்தம் செய்த கறிவேப்பிலைகளை போட்டு நன்றாக வறுத்துக்கொள்ளுங்கள்.
- பின் உளுத்தம் பருப்பு சேர்த்து வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளவும்.
- இவற்றை மற்றொரு தட்டில் போட்டு வையுங்கள்.
- அதே வாணலியில் கருப்பு எள் சேர்த்து பொரியும்வரை வறுத்தபின், அடுப்பை அனைத்து விடுங்கள்.
- அந்த சூட்டிலேயே புளி, உப்பு, பெருங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
- பிறகு அனைத்தும் சிறிது நேரம் ஆறியதும், பிரண்டையை தனியாக அரைத்து, பின் மீதமுள்ள வறுத்த பொருட்கள் அனைத்தையும் தனியாக அரைத்து ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள்.
சுவையான பிரண்டைப் பொடி ரெடி! இட்லி, தோசை, சூடான சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து இந்தப் பொடியையும் சேர்த்து சாப்பிடலாம். பிரமாதமாக இருக்கும்.
2. பிரண்டை காரக்குழம்பு
சுவையான பிரண்டை காரக்குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பிரண்டை – 1 கப்
சின்ன வெங்காயம் – 25
பூண்டு – 10
தக்காளி – 1
கறிவேப்பிலை – சிறிது
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
உளுந்து – ¼ தேக்கரண்டி
கடுகு – ¼ தேக்கரண்டி
சீரகம் – ¼ தேக்கரண்டி
வெந்தயம் – சிறிது
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவைக்கேற்ப
பெருங்காயம் – ¼ தேக்கரண்டி
வரமிளகாய் – 2
சாம்பார் பொடி – 3 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம், உளுந்து போட்டு தாளித்துக் கொள்ளுங்கள்.
- கடுகு வெடித்ததும், நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
- வெங்காயம், பூண்டு வதங்கியபின் சுத்தம் செய்து நறுக்கிய பிரண்டைத் துண்டுகளை சேர்த்து நன்றாக நிறம் மாறும் வரை 10 முதல் 15 நிமிடங்கள் வதக்குங்கள்.
- இதோடு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்குங்கள்.
- 5 நிமிடங்கள் வதங்கியதும், சாம்பார்பொடி, மஞ்சள்தூள், உப்பு ஆகியவை சேர்த்து கிளறி விடுங்கள்.
- பொடிகளின் பச்சை வாசனை போகும்வரை வதங்கியபின், புளித்தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் எண்ணெய் பிரிந்துவரும்வரை கொதிக்க விடுங்கள்.
- இப்போதே நாக்கில் ஜலம் ஊறுகிறதா? மண்பானை பாத்திரம் இருந்தால், அதில் சமைத்துப் பாருங்கள் சுவை பலமடங்கு அதிகரிக்கும்.
மேலும் படிக்க – மனக்கும் பாரம்பரிய மீன் குழம்பு செய்வது எப்படி?
3. பிரண்டை ரசம்
புளி இல்லாத பிரண்டை ரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பிரண்டை – ½ கப்
பெருங்காயம் – ¼ தேக்கரண்டி
சீரகம் – ½ தேக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 ½ தேக்கரண்டி
மிளகு – 1 ½ தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – சிறிது
பாசிப்பருப்பு – ¼ கப்
மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி
கொத்தமல்லி இலை – சிறிது
உப்பு – தேவையானஅளவு
செய்முறை:
- பாசிப்பருப்பை, மஞ்சள்தூள், பெருங்காயம் சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
- இதோடு 2 கப் தண்ணீர் சேர்த்து, உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
- ஒரு வாணலியில் நெய் சேர்த்து கடுகு போடுங்கள். கடுகு வெடித்ததும், சுத்தம் செய்த பிரண்டைத் துண்டுகளை போட்டு நன்றாக வதக்குங்கள்.
- பிரண்டை நன்றாக வதங்கியதும், பருப்புத் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க விடுங்கள்.
- பிரண்டை நன்றாக வெந்து கொதித்ததும், அடுப்பை அனைத்து எலுமிச்சை சாறை சேர்த்துக்கொள்ளுங்கள்.
- கொத்தமல்லி இலைகளைத் தூவி பரிமாறுங்கள்.
- சாதத்துடன் பரிமாறலாம். அப்படியே சூப் போலவும் பருகலாம்.
புதுவிதமாக பிரண்டையைப் பயன்படுத்தி மூன்று உணவுகள் பற்றித் தெரிந்து கொண்டோம். அப்படியே பிரண்டையின் நன்மைகள் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?
பிரண்டையின் ஆரோக்கிய நன்மைகள்
- எலும்பு முறிவிற்கு முதலில் தருவது பிரண்டைதான். விரைவாக முறிந்த எலும்புகள் ஒன்றாக்க பிரண்டை மிகவும் உதவுகிறது.
- மூட்டுகளில் வீக்கம், மூட்டு வலி மற்றும் சுளுக்கு ஆகியவற்றை குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது பிரண்டை.
- பிரண்டையை அதிக அளவு கால்சியம் சத்து உள்ளது. எலும்புகளையும், பற்களையும் வலுவாக்கும் ஆற்றல் கொண்டது பிரண்டை, அனைத்து வயதினருக்கும் ஏற்றது. குறிப்பாக மெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டை ஈடுகட்ட பிரண்டை மிகவும் உதவியாக இருக்கும்.
- வயிற்றுப்புண்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது.
- பைல்ஸ் மற்றும் ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு, ரத்தம் வருவது போன்ற அனைத்துப் பிரச்சனைகளும் அருமருந்து பிரண்டை.
- வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்கிவிடும் பிரண்டை. ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிறு இழுத்துப் பிடிப்பது, வயிற்றுவலி போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும்.
- பிரண்டைப் பொடியை பாலோடு சேர்த்து பருகி வந்தால், உடல் வலிமை பெரும். உடல் பருமன் உள்ளவர்கள் உடல் எடை குறைய உதவும்.
- பிரண்டை, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புண்களை குணப்படுத்தும்.
- நீரழிவு நோய், இருதய நோய் வரமால் தடுக்கும்.
- பசியின்மையை நீக்கி, வயிற்றுப் பொருமலைக் குறைத்து பசியைத் தூண்டும்.
பிரண்டை அப்பளம், பிரண்டை ஊறுகாய், பிரண்டை வத்தல் போன்ற பல வகையாகவும் பிரண்டை தயாரித்து, குழந்தைகளுக்கும் கொடுத்து நல்ல ஆரோக்கியத்தைப் பெருக்கலாம். இத்தனை நன்மைகள்/பலன்கள் (benefits) கொண்ட பிரண்டையை தவறாமல் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
மேலும் படிக்க – குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்கும் அற்புத பானம்!
பட ஆதாரம் – Shutterstock
#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
Read More From Food & Nightlife
உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வரகரிசி காய்கறி தோசை… வீட்டிலேயே செய்து கொடுங்கள்!
Swathi Subramanian
உணவுகளில் ருசிக்காக சேர்க்கப்படும் வெங்காயத்தாள் கீரையில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்!
Swathi Subramanian
உடலுக்கு தேவையான சத்துக்கள் மற்றும் சருமத்துக்குப் பொலிவையும் தரும் கிர்ணி பழம்!
Swathi Subramanian
உடலில் ஃபோலிக் அமிலம் சீராக இருக்க சாப்பிட வேண்டிய முக்கிய உணவு பொருட்கள்!
Swathi Subramanian