இந்தக் கேள்வி எல்லாப் பெற்றோருக்கும், குறிப்பாக தாய்மார்களுக்கு அடிக்கடி தோன்றும் ஒரு ஐயம், பயம் என்றும் சொல்லலாம். ஒரே வீட்டில் வெவ்வேறு குணங்களுடன் குழந்தைகள் வளர்வதை பார்க்கிறோம். ஒரு குழந்தை மிகவும் பொறுப்பாக எந்த வேலையையும் சிரத்தையுடன் செய்து, கல்வியில் மேலோங்கியும், மற்றொரு குழந்தை மிகவும் சுட்டியாக விளையாட்டில் முதன்மையாக படிப்பில் அவ்வளவு ஆர்வம் இல்லாமலும் இருப்பதை பார்க்கிறோம். இவர்களை ஒரே வீட்டில் எப்படி நல்லது சொல்லி வளர்ப்பது(care) என்ற குழப்பம் உங்களில் பலருக்கு இருக்கலாம். இதோ உங்களுக்காக சில குறிப்புகளை, வழிகாட்டல்களை பார்க்கலாம்.
1. கலந்தாலோசியுங்கள்
குழந்தைகளோடு எப்போதும் கலந்துரையாடுங்கள். அவர்களுடன் நெருக்கமாக பழகுங்கள். எப்போதும் நீங்கள் அவர்களுக்கு ஒரு ரோல்-மாடலாக இருங்கள். எல்லாத் தருணங்களிலும் உங்கள் உள்ளம் உணர்வதை பகிர்ந்துகொள்ளுங்கள். எதற்கும் கடவுளைச் சொல்லி பயமுறுத்தாதீர்கள். கடவுளிடம் பக்தி மட்டும் இருப்பதாக பார்த்துக்கொளுங்கள்.
தினமும், பள்ளியில் இருந்து வந்த பிறகும், தூங்குவதற்கு முன்னும், காலை எழுந்தவுடனும், குழந்தைகள் தங்கள் எண்ணங்களை பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள நினைப்பார்கள். ஒரு 10 நிமிடம் செவி சாய்த்து அவர்கள் பேசுவதைக் கேட்டால் போதும், அவர்கள் மனநிலை புரிந்துவிடும்.
2. எதையும் மறைக்காதீர்கள்
Shutterstock
நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மூடி மறைக்காதீர்கள். உங்கள் உணர்வுகளை அவர்கள் முன்னிலையில் வெளிப்படுத்துங்கள். நீங்கள் அவற்றை எப்படி கையாளுகிறீர்கள் என்று உங்களிடம் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள்.
3. பகிர்ந்துகொள்ள பழக்கப்படுத்துங்கள்
குழந்தைகள் அவர்கள் பொருட்கள்மீது பொசெசிவ்வாக இருப்பதற்கு காரணம், அம்மாதான் என்று சொல்லலாம். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது, உன்னுடைய பை பத்திரம், பாட்டில் பத்திரம், பென்சில் பத்திரம் என்று அழுத்தி அழுத்தி சொல்வதால், குழந்தை மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது. அதனால், யாரவது அவருடைய பொருளைத் தொட்டாலே அந்தப் பொருளை பத்திரப்படுத்த நினைப்பார்கள். எனவே, எவருடனும் பகிர்ந்துகொள்ளும் வழக்கத்தை, வீட்டில் இருந்து ஆரம்பித்தால், குழந்தைகள் அழகாக பின்பற்றுவார்கள்.
4. கேட்டதெல்லாம் கிடைக்காது என்பதை வலியுறுத்துதல் வேண்டும்
Shutterstock
குழந்தைகளோடு வெளியில் செல்லும்போது, குழந்தைகள் பார்த்ததையெல்லாம் வாங்க நினைப்பார்கள். அப்படி வாங்கித்தர மறுத்தால், ஆடம்பிடித்து, ஊரைக்கூட்டி உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி, அவர்கள் கேட்பதை வாங்கித்தந்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலைக்கு கொண்டு விட்டுவிடுவார்கள். இது ஒரு பழக்கமாகவே மாற்றிக்கொள்வார்கள்.
வீட்டில் இருந்து புறப்படும் முன்னரே, குழந்தைக்கு என்ன தேவை இருக்கிறது என்று பேசிக்கொள்ளுங்கள். அங்கு வந்து எல்லாவற்றையும் கேட்டு அடம்பிடிக்க கூடாது என்றும் பொறுமையாக தெரிவித்து விடுங்கள். அதற்கும் மீறி வெளியில் தங்கள் வேலையை ஆரம்பித்தால், என்ன செய்தாலும் வாங்கித்தராதீர்கள். அடுத்த முறை நிச்சயம் அமைதியாகி விடுவார்கள்.
5. உங்கள் முடிவுகளை அவர்கள் கையில் கொடுக்காதீர்கள்
குழந்தையை வேறு ஒரு அரவணைப்பில் பாதுகாப்பாக விட்டுவிட்டு நீங்கள் மட்டும் வெளியே செல்ல வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தால், அதை குழந்தையிடம் தெரியப்படுத்துங்கள். போகவா, வேண்டாமா என்ற முடிவை அவர்கள் கைகளில் தராதீர்கள். நீங்கள் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதையும், குறித்த நேரத்தில் திரும்புவேன் என்றும் உறுதியளித்து, சொன்னதுபோல நடந்து கொள்ளுங்கள். எப்போதும் நீங்கள் வெளியில் செல்லும்போது அழகாக டாடா சொல்லிவிடும்.
6. மற்றவர்களை மதிக்க கற்றுக்கொடுங்கள்
Shutterstock
எந்த உறவாக இருந்தாலும், எந்த நபராக இருந்தாலும் அவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும், அலட்சியம் செய்யக்கூடாது என்று வலியுறுத்துங்கள். அனைத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மேலே குறிப்பிட்டாலும், உங்களுக்கு மற்றவர்கள் மீது உள்ள அபிப்பிராயத்தை தெரிவிக்க வேண்டாம். அவர்களாகவே தெரிந்து கொள்வார்கள். உங்கள் அபிப்ராயம் மற்றவர்களிடம் குழந்தைகளை இயல்பாக பழக விடாது.
7. எல்லாத் தவறுக்கும் நீங்கள் காரணமாகாதீர்கள்
குழந்தைகள் செய்யும் எல்லாத் தவறுக்கும் பெற்றோர்தான் காரணம் என்று பொதுவாக பலியைப் போட்டுவிடுகிறார்கள். 24 மணிநேரமும் குழந்தையுடன் நீங்கள் பயணிப்பதில்லை. தவறு செய்யாமல் கற்றுக்கொள்ளவும் முடியாது. பெற்றோரின் வழிகாட்டுதல்கள் நிச்சயம் குழந்தைகளுக்குத் தேவை. அதையும்மீறி நடக்கும் செயல்களுக்கு அவர்களை கண்டித்து நல்வழிப்படுத்த வேண்டும்.
8. நன்றி சொல்ல கற்றுக்கொடுங்கள்
Shutterstock
நமக்கு கிடைத்திருக்கும் நல்ல விஷயங்களைப் பற்றி பேசி அதற்காக நன்றி தெரிவியுங்கள். அவர்களுக்கு யாரேனும் உதவி செய்தால், நன்றி சொல்லச் சொல்லுங்கள். ‘தயவு செய்து’, ‘நன்றி’ ஆகிய இரண்டு வார்த்தைகளும் பயன்படுத்த கற்றுக்கொடுங்கள்.
குழந்தைகள் பெற்றோர்களைப் பார்த்துத்தான் வளர்கிறார்கள் அவர்கள் கூறுவதை அல்ல!
ஆகையால், குழந்தைகளிடம் என்ன மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அது முதலில் பெற்றோர்களிடம்(சரியான வழிகாட்டி) வர வேண்டும். அதிகம் தொலைக்காட்சி பார்க்கக்கூடாது, மொபைல் போனில் கேம் விளையாடக்கூடாது என்று சொல்லிவிட்டு, பெற்றோர்கள் எந்நேரமும் தொலைக்காட்சிமுன் அமர்ந்துகொண்டு, டிவி பார்க்காதே என்றால் எந்தக்குழந்தையும் பின்பற்றாது. நாம் அதுவாக மாறினால், குழந்தைகள் (child) தாங்களாகவே அப்படி மாறி விடுவார்கள்.
சில குழந்தைகள் கேட்பதுபோல தோன்றும் ஆனால், அது நினைத்ததைத்தான் செய்யும், சில குழந்தைகள் கேட்காததுபோல பாவனை செய்வார்கள். ஆனால், பெற்றோர்(parent) சொன்னபடி நடந்து கொள்வார்கள். எதுவாக இருந்தாலும், குழந்தைகளை வழிநடுத்துவது பெற்றோரின் கடமை. கடமையை சரியாக செய்து விடுங்கள். பலன் தானாக கிடைக்கும்.
மேலும் படிக்க – குழந்தைகள் தின வாழ்த்துக்கள் மற்றும் பொன்மொழிகள்! (Children’s Day Greeting In Tamil)
பட ஆதாரம் – shutterstock
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!