ஜெனிலியாவின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ளும்போது ஆச்சர்யமாக இருக்கிறது! துரு துருவென குழந்தைதனமாக சந்தோஷ் சுப்பிரமணி படத்தில் ஹாசினி கதாபாத்திரத்தில் தென்னிந்தியர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ஜெனிலியா. இன்று இரண்டு குழந்தைகளுக்கு தாயாக, மிகவும் பக்குவப்பட்டு பேசுவதை கேட்கக் கேட்க மிகவும் ஆசையாக இருக்கிறது. தற்காலத்தில் நிறைய பெண்கள் வேலைக்குச் சென்று நன்றாக சம்பாதித்து தனியாக சந்தோசமாக இருப்பதையே விரும்புகின்றனர். முடிந்தவரை திருமணத்தை தள்ளிப்போடவும் முற்படுகிறார்கள். அப்படியே திருமணம் நடந்தாலும், இப்போது எதற்கு குழந்தை என்று நினைத்து அதையும் தள்ளிப் போட நினைக்கிறார்கள். அப்படி திருமண வாழ்க்கை பற்றியும் (lifestyle), குழந்தை வளர்ப்பை பற்றியும் பெரிய புரிதல் இல்லாமல் இருக்கிறீர்களா? அல்லது அதை நினைத்து வேதனையோடு இருக்கிறீர்களா? நிச்சயம் இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக அமையும். வாழ்க்கையில் ஐந்து முக்கிய பகுதிகளை பற்றி ஜெனிலியாவின் பார்வையில் இருந்து உங்களுக்காக – இதோ!
1. வாழ்க்கை துணை – உறவு
வாழ்க்கை துணை நமக்கு ஒரு கண்ணாடி போலத் தான். நீங்கள் எப்படி அவர்களுடன் அன்யோன்யமாக பழகுகிறீர்களோ, அந்த அளவிற்கு இறங்கி வருவார்கள்.
மேலும், ஜெனிலியா கூறும்போது, ‘என் கணவர் எனக்கு முதலில் ஒரு நண்பர். நாங்கள் இருவரும் சண்டையிட்டதில்லை. அந்த இடத்திற்கு அவர் என்னை கொண்டு செல்ல மாட்டார். இருவரும் எதுவாக இருந்தாலும் பேசி எங்கள் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளுவோம்’, என்கிறார்.
நிச்சயம் பொறுமையாக அமர்ந்து பேசினால் அது ஒரு பிரச்சனையாகவே கணவன் மனைவிக்குள் உருவாகாது. பேசுவதை பெரும்பாலான ஜோடிகள் தவிர்ப்பதால்தான் ஒன்னும் இல்லாத ஒரு விஷயம் பிரச்சனையாக பெரிதாகிறது. ஆண்களுக்கு எதுவாக இருந்தாலும் உடனடி தீர்வு காண நினைப்பார்கள். பெண்களுக்கு பேசினால் போதும், மனதில் உள்ள பாரம் குறைந்து விடுவதாய் நினைப்பார்கள். இதை இருவரும் புரிந்து கொண்டு பேசத் துவங்கினால் வாழ்க்கை ஜெனிலியா கூறுவதை போல இன்பமாக இருக்கும்.
2. இல்லத்தரசிகளின் முக்கியத்துவம்
ஜெனிலியா தற்போது ஒரு முழு நேர ஹோம் மேக்கர். வீட்டிலுள்ள பெண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறும்போது, “ஒரு மணி நேரம் வீட்டில் பெண்கள் இல்லை என்றால் வீடு வீடாக இராது. அனைவரும் அவர்களை ‘டேக் இட் ஃபார் க்ராண்ட்டட்’(take it for granted) ஆக நினைக்க ஆரம்பிக்கிறார்கள்” என்று கூறுகிறார்.
உண்மையில், அவர்கள் சாப்பிட்டார்களா, உடல் நலமாக இருக்கிறதா என்று கேட்பதுகூட இல்லை. இல்லத்தரசிகளும் (housewife) வீட்டைப் பற்றி மட்டுமே நினைக்கிறார்கள். அவர்களுக்கான நேரத்தை ஒதுக்குவதில்லை. அப்படி இராமல் அனைவர்க்கும் முக்கியத்துவம் கொடுப்பது அவசியம். தற்காலங்களில் இது சற்று மாறிக்கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். பிரபலங்கள் இப்படி முன்வந்து பேசும்போது பெண்களே பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வாக அமைகிறார்கள்!
3. குடும்ப வாழ்க்கையா / வேலையா ?
குழந்தைகளுக்கு எல்லா வேலைகளை செய்வதற்கும் வேலை ஆட்களை அமர்த்திக் கொள்ளலாம். ஆனால், அம்மா என்ற இடத்தை அவர் ஒருவரால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும். வேறு யாரும் அதற்கு ஈடாகாது. இந்தக் கருத்தை ஜெனிலியா நன்றாக தெளிவாக புரிந்து கொண்டதால் தானோ என்னவோ அவரின் பேச்சில் ஒரு தெளிவை பார்க்கலாம்.
அவர் தன்னுடைய சினிமா தொழிலில் உச்சகட்டத்தில் இருக்கும்போது திருமணம் செய்து கொண்டார். அவர் (genelia) தனிப்பட்ட வாழ்க்கையில் அது சரியான தருணம் என்று கருதினார். அதைப் பற்றி அவர் கூறும்போது, ‘திருமணமான பிறகு நடிக்கக்கூடாது என்று எந்த திட்டமிடலும் வைத்துக்கொள்ளவில்லை. என் குழந்தைகளுக்கு நான் முழு நேரம் தேவைப்பட்டபோது அவர்களை வளர்க்க அவர்களுடனே இருந்தேன். இப்போது பள்ளிக்கு செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். நான் எதிர்பார்க்கும் கதாபாத்திரம் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன். இன்னும் நான் சாதிப்பேன். தக்க சமயம் வரும். ஆனால் என் முதல் கவனம் என் குடும்பம்தான்’ – என்று அழகாய் கூறுகிறார்.
ஆகையால், பெண்களே! நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் இருக்க விரும்பினாலும், உங்களைச் சுற்றியுள்ளவர்கள் நீங்கள் சம்பாதிக்கிறீர்களா அல்லது வேலை செய்யவில்லையா என்று கேட்டால் அதற்க்கு நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதை மட்டுமே நீங்கள் செய்ய வேண்டும். மற்றவை எல்லாமே இதற்க்கு அடுத்துதான்!
4. தாயாக நீங்கள் செய்வது சரியா?
நிறைய தாய்மார்களுக்கு தாங்கள் ஒரு நல்ல தாயாக இருக்கிறோமா என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும். ஜெனிலியா அதற்கு ஆணித்தரமாக, ‘ஒரு தாய் வேலைக்குச் செல்கிறாரோ இல்லையோ, எல்லோரும் தாயாக 100 சதவிகிதம் அவர்களை தருகிறார்கள். அதில் ஒரு துளியும் சந்தேகம் வேண்டாம். யாரும் யாரையும் ஒப்பிட்டுப் பார்க்கத்தேவை இல்லை. உங்கள் இடத்தை வேறு எந்த தாயாளும் நிரப்ப முடியாது. அவர்கள் இடத்தை நீங்களும் பூர்த்தி செய்ய முடியாது.’ – என்று கூறுகிறார்.
நாம் அனைவரும் எப்போதும் தொடர்ந்து கற்றல் செயல்பாட்டில் இருக்கிறோம் என்று நினைவில் இருக்கட்டும். ஆகவே, மற்றவர்கள் உங்கள் செயல்களை சுட்டி காட்டும்போது ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் காயம் அடையாமல் அதில் இருக்கும் உங்களுக்கான பாடத்தை கற்றுக்கொண்டு செல்லுங்கள்.
5. குழந்தைகளை எப்படி வளர்ப்பது?
குழந்தைகள் பெற்றோர்களைப் பார்த்துத்தான் வளர்க்கிறார்கள். நமக்கு நல்ல பழக்கங்கள் இருந்தால் அதை அப்படியே பின்பற்றுவார்கள். குழந்தைகள் தவறு செய்தால் கண்டிப்பாக கண்டிக்க வேண்டும். சிறு குழந்தைகள் தெரியாமல் செய்யும் தவறை பெரிதுபடுத்தாமல், அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். வளர்ந்த குழந்தைகளுக்கு தெரிந்தே செய்யும் குழந்தைகளை நிச்சயம் கண்டிக்க வேண்டும்.
ஜெனிலியா தன் குழந்தைகளுக்கு, மற்றவர்கள் யாராக இருந்தாலும், மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுப்பதாக கூறுகிறார் . அவருடைய கணவரும் அதை வலியுறுத்துகிறார். நிச்சயம் பெற்றோர்கள் வலியுறுத்தும் நல்ல விஷயம் குழந்தைகள் மனதில் ஆழமாக பதிந்துவிடும்.
பொதுவாக, குழந்தை வளர்ப்பு, பெண்களுக்கான விழிப்புணர்வு போன்ற எந்த விஷயமாக இருந்தாலும், ஜெனிலியா ஆஜர் ஆகிறார். அப்படி தான் வீட்டை விட்டு வரும்போது, தன் குழந்தைகளிடம் பொய் சொல்லாமல் தான் வெளியே சென்று திரும்புவேன் என்று கூறி நம்பிக்கையாக அவர்களை புரிய வைப்பதால் அவர்களும் அதற்கு இசைந்து கொடுக்கிறார்களாம்.நம் ‘பக்கத்து வீட்டுப் பெண்’ உணர்வைத் தரும் ஜெனிலியாவின் கருத்துக்கள் நமக்கு நிச்சயம் உற்சாகம் அளிக்கிறது அல்லவா ?!
மேலும் படிக்க – பயபக்தியும் அதிக அக்கறையும் உள்ளவரே என் கணவர்.. கல்யாண கனவுகளில் காஜல் அகர்வால்!
பட ஆதாரம் – Instagram
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!