குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்...பிரதமர் மோடி வேண்டுகோள்!

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்...பிரதமர் மோடி வேண்டுகோள்!

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கடந்த 9ம் தேதி குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் பலவிதமான போராட்டங்கள் (protest) நடைபெற்ற வண்ணம் உள்ளன.

குறிப்பாக டெல்லியில் நேற்று முன்தினம் ஜமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை கலைக்க மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதோடு, கண்ணீர்புகை குண்டு வீசினார்கள்.

இதனால் வன்முறை வெடித்தது. அரசு பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது. இது தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் 50 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். எனினும் பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றம் நீடித்தது.

பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசியது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி நேற்றும் போராட்டம் நடந்தது. டெல்லி மட்டுமின்றி சென்னை, ஐதராபாத், லக்னோ, மும்பை கொல்கத்தா என்று பல நகரங்களில் மாணவர்களின் போராட்டம் பரவியது. 

twitter

டெல்லியில் பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள் தேர்வுகளை புறக்கணித்து போராட்டங்களில் கலந்து கொண்டனர். ஜமியா பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் போலீசாரின் நடவடிக்கை குறித்து சிபிஐ விசாரணை நடத்தக்கோரி பேரணி நடத்தினார்கள்.

இதையடுத்து ஜமியா பல்கலைக்கழகத்துக்கு வரும் 5ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களும் ஜமியா மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் (protest) ஈடுபட்டனர்.

மாணவர்கள் போராட்டம் பெரியளவில் நடைபெற்று வருவதால் பதற்றம் நீடிக்கிறது. இதற்கிடையே டெல்லி போலீசாரின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி திடீரென போராட்டத்தில் இறங்கினார்.

டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் திடீரென வந்த அவர் அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை சற்றும் எதிர்பார்க்காத காவல் துறையினர் வேறு வழியின்றி பாதுகாப்பு அளித்தனர். மேலும் சட்ட திருத்தத்தை எதிர்த்து மேற்குவங்கத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பிரமாண்ட பேரணி நடத்தினார்.

வடமாநிலங்களில் மட்டுமின்றி சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. மெட்ராஸ் பல்கலைக்கழக மாணவர்கள் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின் நகல்களை எரித்து தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்தனர். அதே போன்று சென்னை, மதுரை, கோவை ரயில் நிலையங்களிலும் போராட்டங்கள்  நடைபெற்றது.

twitter

இதனால் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் துரதிர்ஷ்டமானவை என்றும், இது கவலை அளிப்பதாகவும் ட்வீட் செய்துள்ளார்.

இந்த சட்டம் இந்தியாவின் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஏற்றுக்கொள்ளுதல், நல்லிணக்கம், இரக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றின் கலாச்சாரத்தையே காட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். எப்போதுமே கருத்து வேறுபாடுகளும், விவாதங்களும் ஜனநாயகத்தின் அங்கங்கள் ஆகும்.

எந்த ஒரு போராட்டமும் சாதாரண மக்களின் இயல்பான வாழ்க்கையை பாதிக்க கூடாது. பொது சொத்துக்களை சேதப்படுத்துவது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பது நம்முடைய கலாச்சாரம் இல்லை எனவும் பிரதமர் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் இந்த குடியுரிமை மசோதா யாருக்கும் எந்த ஒரு பாதிப்பையும் அளிக்காது. ஆகையால் அனைவரும் அச்சப்படாமல் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அமைதியையும், சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் அனைவரும் பேண வேண்டும் என்றும் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா சொல்வது என்ன?

2019 மக்களவைத் தேர்தலின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்த மசோதா கொண்டுவரப்படும் என அறிவித்தது. அதனை தற்போது செயல்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த மசோதாவை செயல்படுத்தியதால் நாடு முழுக்க மாணவர்கள், மனிதஉரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஏன் இதனை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இது சிறுபான்மை மக்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட திருத்தம் என்பதே அவர்களது கருத்து.

1955 ம் ஆண்டு வகுக்கப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்தின்படி 11 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் வசிக்கும் பிற தேசத்தவர்களை இந்தியக் குடிமக்களாக ஏற்றுக்கொள்ள முடியும். தற்போது இந்த சட்டத்தில் மத்திய பா.ஜ.க அரசு திருத்தம் கொண்டு வந்திருக்கிறது.

twitter

அதாவது இந்த திருத்தப்பட்ட மசோதாவின் படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தவர், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்பதேயாகும்.

இந்த பட்டியலில் ஏன் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லீம்கள் சேர்க்கப்படவில்லை என்பதே எதிர்க்கட்சியினரின் முக்கிய கேள்வியாக உள்ளது. மேலும் இலங்கை போரில் துன்பங்களை அனுபவித்து இங்கு தஞ்சம் அடைந்திருக்கும் தமிழர்களை ஏன் சேர்க்கவில்லை? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய பெருநிலத்தின் தொப்புள் கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்கள் அந்த நாட்டில் சிறுபான்மையினர் தானே ? அப்படியானால் முஸ்லீம்களையும், தமிழர்களையும் மத்திய அரசு இந்தியர்களாக நினைக்கவில்லையா? என்றும் பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க இந்தியாவில் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வரும் முஸ்லீம்களை இந்த சட்டத்தின் மூலம் நாடுகடத்த முடியும் என்கிற அச்சமும் எழுந்துள்ளதாக சிலர் கூறுகின்றனர்.

ஆம். இந்த சட்டதிருத்தத்தின் படி நாம் அனைவரும் தனித்தனியாக இந்தியாவின் பூர்வகுடிகள் தான் என நிரூபிக்க வேண்டும் அதற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. இதனால் தான் குடியுரிமை சட்ட திருத்தம் மாணவர்களையும், சமூக ஆர்வலர்களையும் (protest) கொதிப்படைய செய்துள்ளது.

ஏற்கெனவே அஸ்ஸாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு பிரச்னை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!