logo
ADVERTISEMENT
home / பொழுதுபோக்கு
பேட்ட மற்றும் விஸ்வாசம் – ப்ளஸ் அண்ட் மைனஸ்

பேட்ட மற்றும் விஸ்வாசம் – ப்ளஸ் அண்ட் மைனஸ்

பொங்கலுக்கு மோதிய இரு படங்கள் பேட்ட மற்றும் விஸ்வாசம் . ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களின் அமோக எதிர்பார்ப்புக்களை இரண்டு படங்களும் நிறைவேற்றியது என்றுதான் கூற வேண்டும். என்றாலும் இரண்டு படங்களின் ப்ளஸ் மற்றும் மைனஸ் என்னென்ன என்பதை இப்போது ஒப்பீடு (comparison) செய்து பார்க்கலாம்.

இயக்கம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் வெளியான படம் பேட்ட. இயக்குனரும் ரஜினி விசிறி என்பதால் படத்தில் காட்சிக்கு காட்சி ரஜினியை தூக்கி வைத்துக் கொண்டாடி விட்டார். ஆனால் அது அளவுக்கு மிஞ்சியது மட்டும்தான் குறையே தவிர அதனால் வேறு எந்த பாதிப்பும் இல்லை. ரஜினி ரசிகர் அல்லாதவருக்கு கொஞ்சம் எரிச்சலைத் தரலாம். ரஜினி ரசிகர்களுக்கோ அது சர்க்கரை பொங்கல். தனக்கு கொடுக்கப்பட்ட குறைவான நேரத்தில் நிறைவான படம் ஒன்றைத் தந்து விட கார்த்திக் சிரமப்பட்டிருக்கிறார். படத்தில் வெளிப்படும் குறைகளில் இது வெளிப்படையாக தெரிகிறது.

ADVERTISEMENT

சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான படம் விஸ்வாசம்.சிவாவும் அஜித்தும் இணையும் நான்காவது படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியது. இவர்களின் முந்தைய படமான விவேகம் நன்றாகக் போகாததால் இந்தப் படம் எப்படி இருக்குமோ என்கிற நிலையில் முந்தைய தோல்வியைப் படிகட்டாக்கி தமிழ் ரசிகர்களின் நெஞ்சை எப்படி எல்லாம் தொடலாம் என்று யோசித்து திரைக்கதையை பின்னியிருக்கிறார் சிவா. வரிசையான தோல்விப்படங்கள் தந்த பாடத்தை இதில் செம்மையாகப் பயன்படுத்தி இருக்கிறார் சிவா. ஆகவே குறைகளை விட நிறைகள் அதிகம் வெளியே தெரியுமாறு பார்த்துக் கொண்டிருக்கிறார். இதற்கான கால அளவும் அதிகமாக இருப்பது இயக்குனருக்கு ப்ளஸ்.

 

ஒளிப்பதிவு

ADVERTISEMENT

பேட்ட படத்தில் ஒளிப்பதிவு நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று, கார்த்திக் சுப்புராஜ் தனது முந்தைய படங்களில் ஒளிப்பதிவில் தனி முத்திரை பதித்தபடி காட்சிகள் மூலம் கதையை நகர்த்தி இருப்பார்.இந்தப் படத்திலும் ஒளிப்பதிற்குண்டான தனித்துவம் தெரியத்தான் செய்கிறது. டார்ஜீலிங்கின் குளுமையை நமக்குள்ளும் கடத்துகிறார் திரு. குளிர்ப்ரதேசத்தில் நடக்கும் சூடான சம்பவங்கள் தான் கதை என்பதால் இரண்டிற்கும் உண்டான வித்தியாசங்களை காட்டியிருக்கிறார். இரவு நேரக் காட்சிகளுக்கென இவர்கள் ஸ்பெஷல் லைட்களை பயன்படுத்தி இருக்கின்றனர். பலூன் லைட்ஸ் போன்றவை மற்ற ஷூட்டிங்கில் இவ்வளவு அதிகமாக பயன்படுத்தி இருக்க மாட்டார்கள்.

பெரும்பாலும் ஹீரோ வரும் காட்சிகளில் ஆரஞ்சு, மஞ்சள் மற்றும் அடர்நீலக் கலவையில் இருக்கிறது. டான் எனும் சொல்லுக்கு உதயம் என்பதும் ஒரு பொருள். அதனைக் கூட அர்த்தப்படும்வகையில் இந்தக் கலவை இருக்கலாம் என்று தோன்றுகிறது. அல்லது ரஜினியை சிறப்பாக காட்ட இந்த நிறங்கள் பயன்படலாம். நவாஸுதீன் சித்திக் மற்றும் விஜய் சேதுபதி வரும் காட்சிகளில் சிவப்பு நிறம் இருக்கும். அது வழக்கமான டேஞ்சர் என்பதற்கான அடையாளக்குறியீடு என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம். மழைக்காட்சிகள் இயக்குனரின் தனிப்ரியம் என்பதால் அழகாக அதனை முக்கியமான கோணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். பின்னணிகேற்ப உடைகளின் நிறத்தை ,லைட்டிங் கோணங்களை ரசித்து ரசித்து வைத்திருக்கிறார் திரு. ஒளிப்பதிவிற்காக மட்டுமே இப்படத்தை இரண்டு முறை பார்க்கலாம்.

விஸ்வாசம் படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி. ஆரம்ப கட்ட தேனி மாவட்டக் காட்சிகளில் நம் நெஞ்சை அள்ளுகிறார். டாப் ஆங்கிளில் கொடுவிலார்பட்டி மொத்தத்தையும் அப்படியே சுற்றிக் காட்டி நம் கண்களுக்கு விருந்தாக்குகிறது இவரது கேமரா. தேனியின் பசுமையை பரிசுத்தமான மண்வாசனையை நம்மை நுகர வைத்து விடுகிறார் வெற்றி, அங்கிருந்து மும்பைக்கு கதை நகரும்போது அதற்கான நிறங்கள் வெவ்வேறாக இருக்கின்றன.

ADVERTISEMENT

மழைக் காட்சிகள் ஒவ்வொன்றும் உயிர்ப்போடு இருந்தது குறிப்பிடத்தக்கது, மும்பைக்கான அடர் நிறம் மற்றும் நயன்தாரா வருகையில பெரும்பாலும் வெண்மையான பின்னணிகள் அவரது கதாபாத்திரத்தின் தூய்மையை நமக்கு சொல்லிப் போகின்றன. உடைகளுக்கு பெரும்பாலும் இவர் ரிஸ்க் எடுக்கவில்லை என்றாலும் உறுத்தாத ஒளிப்பதிவாக இது இருந்தது. பேட்ட படத்தோடு ஒப்பிடுகையில் விசுவாசம் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்.

பேட்ட திரைவிமர்சனம்

 

ADVERTISEMENT

இசை

பேட்ட படத்திற்கு இசை அனிருத். இதற்கு முந்தைய ரஜினி மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இருவருக்குமே பொதுவாக வேலை செய்தவர் சந்தோஷ் நாராயணன். அவர் இல்லை எனும் குறை பளிச்சென்று தெரிகிறது. ஆனாலும் ரஜினி படத்திற்கு என்ன தேவையோ அதைக் கொடுத்திருக்கிறார் அனிருத். மெலடி பாடல்கள் இரண்டும் வேறுவிதமான அனிருத் இருக்கிறார் என்பதை ஞாபகப்படுத்தியது. மற்றபடி எல்லாம் மரண மாஸ் ரசிகர்களுக்கானவை. பின்னணியிலும் பெரும்பாலும் அடிதடி சண்டைக் காட்சிகளில் கிடைத்த வாத்தியங்களை போட்டு அடித்து துவைத்து இருக்கிறார்.

விஸ்வாசம் படத்திற்கு இசை D.இமான். இவரது இசைக்கு அறிமுகம் அவசியமில்லை. மெலடியோ தர லோக்கல் பாடலோ தனது தனித்துவத்தை நிரப்புவதில் வல்லவர். முதல் பாதியில் இரண்டு காட்சிக்கு ஒரு பாடல் என்கிற ரீதியில் பாடல்கள் வருவதால் எதுவும் மனதில் நிற்குமுன் அடுத்த பாட்டு வந்து விடுகிறது. ஆனாலும் வானே பாடலும் கண்ணான கண்ணேவும் எவர்லவ்விங் வகை. இது தவிர பின்னணியில் இவரது உழைப்பால் படம் தனித்து நிற்கிறது. அனைவரையும் உற்சாகப்படுத்தும் அதிரடிப் பின்னணியோ அல்லது அனைவரையும் அசைத்துப் பார்க்கும் சோகமோ இமானின் கைகள் அற்புதம் செய்திருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும், விஸ்வாசம் படத்திற்கு இசை மிகப் பெரிய பலம்.

ADVERTISEMENT

விஸ்வாசம் திரை விமர்சனம்

 

காஸ்ட்யூம்

ADVERTISEMENT

பேட்ட படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் நிகாரிகா. பாலிவுட்டில் பல்வேறு படங்களில் பணியாற்றி இருந்தாலும் டர்ட்டி பிக்ச்சர் படம் இவரை பிரபலமாக்கியது. படத்தில் ரஜினிக்கு மட்டும் அல்லாமல் சிம்ரன், திரிஷா, பாபிய சிம்ஹா நவாஸுதீன் சித்திக் விஜய் சேதுபதி அனைவருக்கும் இவர் ஒருவரே வடிவமைத்திருக்கிறார். பாபா படத்திற்குப் பின் ரஜினி காஸ்ட்யூமில் தனித்து தெரிகிறார். பெரும்பாலும் தென்னிந்தியாவின் வெயில் கால உடைகளையும் வடஇந்தியாவில் குளிர்கால உடைகளையும் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதன் நிறங்களை தேர்ந்தேடுப்பதில் அதனை ரஜினிக்குப் பொருத்தமாக்கி இருப்பதில் தனி கவனம் செலுத்தி இருக்கிறார்கள். ஒளிப்பதிவோடு ஒன்றிணைகிறது காஸ்ட்யூம்.

விஸ்வாசம் படத்தின் காஸ்ட்யூம் டிசைனர்கள் தட்சா A பிள்ளை , அனு வர்தன். இருவரின் உழைப்பும் ஒரு பிரேமில் கூட வீண்போகவில்லை. குறிப்பாக நயன்தாராவின் வெவ்வேறு பரிணாமங்களை வெவ்வேறு விதமான உடையமைப்பில் வெளிப்படுத்தி இருப்பார்கள். அவரது ட்ரான்ஸ்பார்மேஷன் மற்றும் பக்குவம் அவரது உடைகளில் வெளிப்படும் விதத்தில் டிசைன் செய்திருக்கின்றனர், நிச்சயம் ட்ரெண்ட் ஆகும். அஜித்தின் உடைகளும் பிளாஷ் பேக் மற்றும் நிகழ் காலத்திற்கு ஏற்றாற்போல நிறம் மாறுகிறது. ஒளிப்பதிவு பிரைட்டாக இருப்பதால் காஸ்ட்யூம் நிறங்களுக்கு கூடுதல் கவனம் அர்த்தங்கள் தேவைப்படுவதில்லை.

ADVERTISEMENT

 

வசனம்

பேட்ட படத்தில் வசனங்கள் அங்கங்கே ஆழமாக இருந்தாலும் சிறிய சிறிய வசனங்கள் மனதை விட்டு மறையவில்லை. எல்லாம் கடந்துக்கிட்டிருக்கேன் , கடக்கறதுதானே வாழ்க்கை போன்ற வசனங்கள் இயக்குனரின் தனித்தன்மை பெற்றவை.ஆனாலும் சென்டிமென்ட் தூவல்கள் இல்லாததால் எல்லாவற்றையும் நேரிடையாகக் கூறி விடுவதால் மக்களால் படத்தோடு உடனே கனெக்ட் ஆக முடியவில்லை.

ADVERTISEMENT

விஸ்வாசம் படத்தில் மணிகண்டன், பாக்யராஜ் , சபரி, சந்திரன் ஆகிய பலர் இயக்குனரோடு வசனத்திற்காக மட்டுமே வேலை செய்திருக்கின்றனர். சிரிப்பு என்பது வேறு சந்தோஷம் என்பது வேறு என்பது மாதிரியான பல்வேறு வசனங்களால் படம் பார்ப்பவர்கள் படத்தோடு தங்களைத் தொடர்புபடுத்திக் கொண்டு உன்னிப்பாகின்றனர். இதைப்போலவே மனைவி பேச்சைக் கேள், தாய் சொல்லைத் தட்டாதே, ஏழை பணக்காரன் ரக வசனங்கள் எத்தனை கோடி முறை கேட்டு சலித்தாலும் மக்களை அது புளகாங்கிதப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது. சிலபல இடங்களில் தெலுங்கு படத்தின் சாயல் சீரியல் சாயல்கள் இருந்தாலும் இப்படத்தில் வசனம் இன்னொரு தூண்.

 

எடிட்டிங்

ADVERTISEMENT

பேட்ட படத்தின் எடிட்டர் விவேக் ஹர்ஷன். இடைவேளைக்குப் பின்பான தொய்வுகளுக்கு இவரும் ஒரு காரணம். எல்லோருமே ரஜினியை வழிபாடு செய்தபடி இருப்பதால் யதார்த்தத்திற்கு மனம் ஏங்குகிறது. இயக்குனரும் இவரும் இங்கே சரியாக செய்திருந்தால் படத்தின் 20 நிமிடங்கள் குறைந்து இன்னும் கொஞ்சம் க்ரிஸ்பியாக அது மாறியிருக்கலாம்.

விஸ்வாசம் படத்தின் எடிட்டர் ரூபன். இயக்குனர் சிவாவும் ஒரு எடிட்டர் என்பதால் இவர்கள் இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாகவே வேலை செய்திருக்கிறது. ஒரு தோல்விக்குப் பின்பான வெற்றியை நோக்கிய பயணம் என்பதால் மிகக் கவனமாக வேலை செய்திருப்பது புரிகிறது. இருப்பினும் சில இடங்களில் குறிப்பாக சண்டைக் காட்சிகளின் நீளம் குறைக்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்னு தோன்றுகிறது.

ADVERTISEMENT

 

மொத்தத்தில் பேட்ட மற்றும் விஸ்வாசம் இரண்டுமே ரசிகர்கள் அளவில் பிரம்மாண்ட வெற்றி பெற்றிருக்கிறது. வெளியான ஐந்து நாளில் உலக அளவில் ரஜினியை உச்சத்தில் வைத்திருக்கும் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷன் தமிழக கிராமப்புறங்களில் விஸ்வாசத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. இரண்டு படங்களும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

 —

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

 

14 Jan 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT