கேப்டன் மார்வெல் - திரைப்பார்வை

கேப்டன் மார்வெல் - திரைப்பார்வை

மார்வெல் ரசிகர்களுக்கான மற்றொமொரு "நொறுக்கு தீனி"தான் கேப்டன் மார்வெல் ( Captain marvel)


பெண்மையின் சக்தி தன்னை உணர்ந்து விடுமாயின் இந்த பிரபஞ்சத்தின் எல்லையையும் தாண்டும் வலிமையுடையது என்பதை கொஞ்சம் விளையாட்டு கலந்து அழுத்தம் திருத்தமாக சொல்லாமல் ஏனோதானோவென்று சொல்லியிருக்கிறார்கள்.


இந்தப் படம்  லேசானதாக இருக்க காரணம் அடுத்த மாதம் வெளிவரும் அவெஞ்சர்ஸ் தி எண்ட் கேம் பிரம்மாண்டமாக இருக்கும் என்பதற்காக கூட இருக்கலாம்.


முன்னதாக மார்வெல் காமிக்ஸ்சை தெரியாத நண்பர்களுக்காக ஒரு சிறிய அறிமுகம். அவெஞ்சர்ஸ் எனப்படும் சூப்பர் ஹீரோக்கள் இந்த பூமியை மற்ற ஏலியன்களிடம் இருந்து காக்க போராடும் கதைதான் மார்வெல் காமிக்ஸ். இதில் பல்வேறு பாகங்கள் வெளிவந்து ரசிகர்கள் கொண்டாடினர்.


இறுதியாக வெளிவந்த அவெஞ்சர்ஸ் – இன்ஃபினிட்டி வார் படத்தில் கேப்டன் மார்வெல் பற்றிய க்ளூ கொடுத்திருப்பார்கள். அவெஞ்சர்ஸ் தி எண்ட் கேம் படத்தில் தானோஸ்சை அழிக்கும் ஒரு சக்தி என்று கூறியிருப்பார்கள்.


அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த கேப்டன் மார்வெல் அறிமுகமாகிறாள்.கதை 1995 ல் நடைபெறுகிறது. ஹாலா எனும் கிரகத்தில் க்ரீ எனும் இனத்தவர்களோடு ஸ்டார் போர்ஸ் (அதுதான்ப்பா நம்ம ஊர் போலீஸ்!) சில் பணிபுரிகிறார் வெர்ஸ் (பிரீ லார்சன்) ஜெட் பைலட் ஆன வெர்ஸ்சிற்கு பயிற்சி கொடுக்கும் யோன் ராக் (ஜூட் லா)


ஒரு விபத்தில் பழைய நினைவுகள் அழிந்த நிலையில் தனக்கு ஏற்படும் கனவுகள் மூலம் தனது பழைய நினைவிற்கான தொடர்புகள் குறித்து குழம்பும் வெர்ஸ்சை யோன் ராக் உணர்ச்சிவசப்படாமல் பயிற்சியில் ஈடுபடும்படி தெம்பூட்டுகிறார்.


இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் சண்டை காட்சிகளில் பிரீ லார்சனின் கடும் உழைப்பு தெரிகிறது.சூப்பர் ஹீரோக்கள் நடுவே சூப்பர் ஹீரோயின் ஆவது அத்தனை சுலபமான காரியமில்லை என்கிறது இந்தப்படம்.


க்ரீ இனத்தவருக்கு தொல்லை கொடுக்கும் ஸ்க்ரல்ஸ் இனத்தவர்களை எதிர்த்து போராடும் சமயம் வெர்ஸ் அவர்களிடம் மாட்டிக் கொள்கிறார். அவரது நினைவுகளை ஸ்க்ரல்ஸ் இனத்தவர் திருட முயலுகையில் சூப்பர் சண்டை போட்டு தப்பிக்கும் வெர்ஸ் நேரே வந்து பூமியில் விழுகிறார். இங்கு பூமியை எல் 53 கிரகம் என்றுதான் குறிப்பிடுகின்றனர்.அங்கு ஷீல்ட் ஏஜென்ட் ஆக வரும் நிக் பியூரி (சாமுவேல் ஜாக்சன்) உடன் இணைந்து தனது நினைவுகளை மீட்டெடுக்கும் வெர்ஸ் தனக்கு இழைக்கப்பட்ட துரோகத்திற்கு பதிலடி கொடுக்கிறாரா ஸ்க்ரல்ஸ் ஏன் அவரது நினைவுகளை திருட முயற்சித்தனர் அவரது கனவில் வரும் டாக்டர் லாரன்ஸ்க்கும் அவருக்கும் என்ன தொடர்பு என்பதை விறுவிறுப்பான நான் லீனியர் முறையில் கூற முயன்றிருக்கின்றனர்.


டாக்டர் லாரன்ஸின் லேப் இல் இருக்கும் ஒரு சக்தி வடிவத்தை ( ஒளி வேகத்தில் செல்லும் சக்தி வடிவம் ) எடுக்க முயலும் எதிரிகளுக்கு இடையேயான போரில் வெர்ஸ் வென்றாரா என்பதும் கதையின் சஸ்பென்ஸ்!


அத்தனை பேரும் பெற விரும்பும் அந்த சக்தி வடிவம் யாருக்கு கிடைத்தது, அது என்ன என்பதை இறுதியில் நாம் உணரும்போது பெரிய அற்புதம் நிகழ்வது போலத்தான் தோன்றுகிறது!


விறுவிறுப்பான திரைக்கதையில் பிரீ லாரன்ஸ் சின் துறுதுறுப்பான நடிப்பு நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. மென்மையான உதடுகள் கொண்ட அந்த பெண்மைக்குள் இத்தனை அற்புதமான சக்திகளா என்று நாம் ஆச்சர்யப்படுகிறோம்.


அந்த சூப்பர் வுமன் காஸ்ட்யூம் மற்றும் ஹேர்ஸ்டைல் உடன் அவர் வரும் ஒவ்வொரு பிரேமிலும் பார்வையாளர் மனதை அள்ளுகிறார்!


ஆனாலும் ஒண்டர் வுமனிடம் இருந்த தெளிவு வெர்ஸ் கதாபாத்திரத்துக்கு வாய்க்கவில்லை. ஆகவே நனவுக்கும் கனவுக்கும் நடுவே தடுமாறும் கதாபாத்திரம் என்று கூறி விட்டதால் இதனை நாம் பொருட்படுத்தாமல்தான் படம் பார்க்க வேண்டும்.சாமுவேல் ஆண்டர்சன் வந்த பிறகுதான் படம் கொஞ்சமே கொஞ்சம் கனெக்ட் ஆகிறது. சூப்பர் வுமனை கைது செய்யும் நம்ம ஊர் போலீஸ் கதிதான் ஆண்டர்சனுக்கும். பின்னர் அவருடன் அவர் படம் முழுவதும் வருவதால் நமக்கு நகைச்சுவைக்கு பஞ்சமில்லை எனலாம். கூஸ் எனும் பூனை இதில் முக்கியவேலைகளை செய்வதால் அதற்கு தனி கதாபாத்திரம் கொடுத்து போஸ்டரிலும் இணைத்துள்ளனர் மார்வெல் குடும்பத்தார்.


அன்னா போடன், ரியான் ப்ளெக் இயக்கத்தில் கேப்டன் மார்வெல் கொஞ்சம் சுவாரசியம் கம்மியாக வெளி வந்திருக்கிறது. ஆனாலும் இறுதியில் அவெஞ்சர்ஸ் தி எண்ட் கேம் உடன் கேப்டன் மார்வெல் என்ன செய்ய போகிறார் என்பதை கோடி காட்டியிருப்பது அதன் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் கொடுக்கும்.பூமியில் இருந்து கிளம்பி பிரபஞ்சம் முழுதும் ஒற்றை பெண்ணாக கேப்டன் மார்வெல் பறக்கும் போது பின் செல்லும் வானவில் நிற வெளிச்சம் பெண்களின் மனதில் புது நம்பிக்கையை வாழ்வில் புதிய வண்ணங்களை உருவாக்கலாம்.


ஒவ்வொரு கிரகத்திலும் ஒவ்வொரு தடைகள் இருந்தாலும் எங்கிருந்தாலும் பெண் எனும் மாபெரும் சக்தி தன்னை உணருகையில் பிரபஞ்சங்கள் தாண்டியும் அதன் பெருமை தொடரும் என்றுதான் இறுதியாய் எழுதி முடிக்க தோன்றுகிறது.


அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியான கேப்டன் மார்வெல் இன்னும் கொஞ்சம் தன்னை தெளிவோடு அணுகியிருந்தால் படம் அற்புதமாக முடிந்திருக்கும். இருப்பினும் அடுத்த மாதம் வெளிவர இருக்கும் அவெஞ்சர்ஸ் தி எண்ட் கேம் படத்தில் இவரது பங்கு மிக முக்கியமானது என்பதால் அந்த எதிர்பார்ப்பை அடுத்த மாதத்திற்கு தள்ளி போடுகிறோம்.!படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்


 ---


 


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.