குகைகளில் வாழ்ந்து வந்த மனிதன் இனப்பெருக்கத்திற்காக பெண்ணுடன் கூட ஆரம்பித்தான். அதன்பின்னர் தனது தொழிலை தனக்கு பின்னர் கவனித்து கொள்வது பற்றி கவலை கொண்ட அவன் ஒரு பெண்ணுடன் கூடி அவளை தன்னை விட்டு வேறொருவரிடம் செல்லாமல் பார்த்து கொண்டு அவள் மூலம் பெற்ற தனது குழந்தைகளை தனது வாரிசாக மாற்றியமைத்தார்.
அதன் பின்னர் குகை மனிதனின் யுகங்கள் முடிந்தன ஆற்றங்கரையோர நாகரிகங்கள் வளர்ந்தன. ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கலாச்சாரம் வந்தது. இதனை உறுதிப்படுத்திக் கொள்ள திருமணம் என்கிற சடங்கு நிகழ்ந்தது. நாகரிகம் வளர வளர உறவுகளில் மாற்றங்கள் வருவதும் இயற்கையான ஒன்றுதான். இதனை ஏற்று கொள்வதும் இல்லாமல் போவதும் மற்றவர்களின் கருத்துரிமை.
திருமணம் மற்றும் லிவின் உறவு என்ன வித்யாசம் (Marriage vs Living together)
திருமணத்திற்கும் லிவ் இன் உறவிற்கு என்ன வித்யாசங்கள் என்றால், முன்னதில் மிகுந்த பொறுப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்பு ஆகிய குணங்கள் இருந்தன. இரண்டுமே கிட்டத்தட்ட ஒன்றுதான். ஒன்று தன்னை சுற்றி உள்ள சமூகத்தின் ஆதரவுடன் ஒரு அங்கீகாரம் கொண்ட வாழ்வை மற்றவர்களை போலவே வாழ்வது.
இரண்டாவது தாலி போன்ற அங்கீகாரங்கள் எங்களுக்கு அவசியமில்லை எங்கள் காதல்தான் எங்களுக்கு தாலி என்கிற அழுத்தமான நோக்கம் கொண்ட வகையை சேர்ந்தது. இதில் திருமணம் என்பதில் நிறைய சௌகர்யங்கள் இருக்கின்றன. உறவினர்கள் தோள் கொடுப்பார்கள் போன்றவை உள்ளன.
இரண்டாவதில் நிறைய ரிஸ்க் இருக்கிறது. ஏற்று கொள்ள மறுக்கும் பெரியவர்கள் தங்கள் உறவுகளை அறுத்துக் கொள்ள நேரிடலாம். அவசர காலங்களில் யாருடைய உதவியும் இல்லாமல் போகலாம். ஆனாலும் இதற்கு தன்னை தயார் படுத்தி கொண்டவர்கள் மற்றும் புரிந்து கொண்ட நண்பர்கள் கொண்டவர்கள் இதனை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
லிவிங் டு கெதர் வாழ்க்கைக்கு முன்னர் தெரிந்து கொள்ள வேண்டியவை
திருமணம் செய்வது என்பது மிக பெரிய பொறுப்பு என கருதுபவர்கள் இந்த லிவ் இன் உறவில் அடி எடுத்து வைக்கின்றனர். இதில் உள்ளே நுழையும் முன் சில விஷயங்கள் பற்றிய தெளிவுடன் நீங்கள் ஒரு உறவை ஆரம்பிப்பது இருவருக்குமே நன்மை தரும்.
உங்கள் வாழ்வே மாறுகிறது
இதுவரை நீங்கள் தனியாக இருந்திருப்பீர்கள். உங்களுக்கான சுதந்திரங்கள் என்று சில விஷயங்கள் இருந்திருக்கும். உங்கள் ரசனைகள் என்று சில இருக்கலாம். நீங்கள் லிவ் இன் உறவில் ஈடுபட ஆரம்பித்தால் இவற்றில் எல்லாம் மாற்றங்கள் வரலாம். உங்களுக்கு பிடிக்காத நிறத்தில் உங்களவர் திரைசீலைகளை வாங்கி வரலாம். உங்கள் பாத்ரூமில் அவரது உள்ளாடைகள் கிடக்கலாம். உங்களின் படுக்கை அறையில் ஈர டவலை உங்களவர் காய வைக்கலாம். இது போன்ற சில விஷயங்களால் இதுவரை வாழ்ந்த ஒரு வாழ்வில் இருந்து நீங்கள் உருமாற ஆரம்பிப்பீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கேள்விக்குறியாகும் பிரைவசி
உங்களுக்கென சில பிரைவசி நேரங்கள் இதற்கு முன் உங்களுக்கு இருந்திருக்கும். மொட்டை மாடி நிலா மழை என உங்கள் தனிமை மிக அழகியலோடு கவிதையாக நகர்ந்திருக்கும். இனிமேல் அப்படி அல்ல. எங்கு சென்றாலும் அவர் இருப்பார். உங்களுக்கான தனிமை என்பது நீங்கள் பாத்ரூமில் இருக்கும் நேரமாக மட்டுமே இருக்கலாம்.
சண்டையிட கற்று கொள்ள வேண்டும்
இதற்கு முன்பெல்லாம் அவரோடு சில மணி நேரம் மட்டுமே செலவு செய்திருப்பீர்கள். ஆகவே விவாதங்கள் வருகையில் அதனை தவிர்ப்பதில் முக்கியத்துவம் காட்டியிருப்பீர்கள். இனிமேல் இருவரும் ஒரே வீட்டில் வாழ போகிறீர்கள் என்பதால் சண்டை போடுவதை உங்களால் தவிர்க்க முடியாது. பார்மலாக வாழ்வதை விடவும் நார்மலாக வாழ்வது அழகான வாழ்க்கை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
பிரமச்சாரி வாழ்வும் லிவின் உறவும் ஒன்றல்ல
நிறைய பேர் என்ன நினைக்கிறோம் என்றால் ஆண் பெண் பேதம் இன்றி இருவரும் ஒன்றாக வாழும் ஒரு பேச்சிலர் வாழ்க்கைதான் லிவ் இன் என்று. நிச்சயமாக இல்லை. பேச்சிலர் வாழ்க்கையில் எதை பற்றியும் கவலையின்றி ஒரு வார குப்பைகளோடு ஒன்றாக வாழ்ந்திருப்பார்கள் ஆண்கள். அதன்பின் ஒரு நாள் சுத்தம் செய்து மீண்டும் குப்பைகளை தொடர்வார்கள். ஆனால் இப்படியே லிவ் இன் உறவு வாழ்க்கையும் இருக்குமா என்றால் நிச்சயமாக இல்லை. நீங்கள் இதில் படு கவனமாக உங்கள் உடமைகளை நேர்த்தியாக வைப்பது ஒரு நல்ல உறவை மதிப்பதற்கான அடையாளம் ஆகும்.
இதுவும் திருமணம்தான்
லிவின் உறவை பற்றி நிறைய பேர் யோசிப்பது திருமணம் செய்து கொண்டால் இவரோடு நம்மால் வாழ முடியுமா இல்லையா என்பதை சோதிப்பதற்காக என்று நினைக்கலாம். ஒருவேளை ஒத்து வரவில்லை என்றால் சட்டத்தின் முடிவிற்காக காத்திருக்காமல் பிரிந்து விடலாம் என்று ஒரு சிலர் நினைக்கலாம். அப்படி அல்ல. உங்களுக்குள் வெறுப்புகள் முளைத்தாலும் இது நீங்கள் இருவரும் திருமணத்திற்கு பின்னர் ஒன்றாக வாழும் ஒரு வாழ்க்கை என்கிற பொறுப்பு உங்களுக்கு அவசியம் வேண்டும். நமது சுயநலத்திற்காக அடுத்தவர் இதயத்தை உடைக்காமல் இருக்க கற்று கொள்ள வேண்டியதும் அவசியம்.
கொஞ்சம் அன்பு.. கொஞ்சம் கண்டிப்பு.. இது மட்டும் போதுமா குழந்தை வளர்க்க.. ?
சிக்கல்களை சரி செய்ய சில அடிப்படை விதிகள்
நீங்கள் இப்போது இருப்பதில் இருந்து உங்கள் உறவை ஒரு முக்கியமான கட்டத்திற்கு நீங்கள் நகர்த்துகிறீர்கள் என்றால் அதை நீங்கள் அலசி ஆராய்ந்து அதில் பிரச்னைகள் வராமல் இருக்க சில அடிப்படை விதிகளை பின்பற்றுவது அவசியமானது.
செலவுகளை சரிசமமாக பகிர்தல்
பொதுவாக இதுவும் திருமணம் போன்ற உறவுதான் என்பதால் பெரும்பான்மை செலவுகளை யாரோ ஒருவரே ஏற்று கொள்ளும் நிலைமை வரலாம். அதனை தவிர்க்க ஆரம்பத்திலேயே அதாவது லிவிங் டு கெதர் ஆகும் முன்பே செலவுகள் பகிர்வதில் உள்ள சதவிகிதங்களை ஒன்றாக பேசி முடிவெடுங்கள். அதன் பின்னர் லிவ் இந்த உறவுக்குள் நகருங்கள்.
விருந்தினர்கள் வந்தால் ஏற்க வேண்டும்
இரண்டு பேருக்கும் தனிப்பட்ட முறையில் பல நண்பர்கள் இருப்பார்கள். அவர்கள் நீங்கள் ஒன்றாக வாழும் வீட்டிற்கு அடிக்கடி விருந்துக்கு வரலாம். அல்லது சில சமயம் வரலாம். இதனை நீங்கள் மற்றவருக்காக புரிந்து கொண்டு விட்டு கொடுக்க வேண்டும். உங்கள் நேரங்கள் உங்கள் விருந்தினரோடு பகிரப்படலாம். இதனை நீங்கள் வருத்தமோ கோபமோ இல்லாமல் ஏற்க வேண்டும்.
வீட்டு வேலைகளை பகிர்தல்
ஒன்றாக வாழ்வது என்று முடிவெடுத்த பின்னர் தனது துணையை உண்மையாகவே நேசிப்பவர்கள் அவர்களது சுமைகளை சந்தோஷமாக பகிர்வார்கள். சமைப்பது ஒருவர் என்றால் சுத்தம் செய்வது இன்னொருவர் துவைப்பது ஒருவர் என்றால் உலர வைப்பது மடித்து வைப்பது இன்னொருவர் என்று எல்லா வேலைகளையும் இருவரும் பகிர்ந்து செய்ய வேண்டும். கண்டிப்பாக இதனை நீங்கள் முன்பே பேச விடுவது பிரச்னைகளை வர விடாமல் தவிர்க்கும்.
ஸ்க்ரீன் நேரத்தை சுருக்குவது
என்னதான் அன்றில் பறவைகள் நாங்கள் என்று கூறி கொண்டாலும் இன்னமும் தனி தனியாக மொபைலில் நேரம் செலவிடுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இருவருக்கும் இடையே பேசிக் கொள்ள ஏதும் இல்லாத போதுதான் டிவி பார்க்கும் வழக்கம் முன்பு இருந்தது. இப்போதெல்லாம் ஏதாவது பேச வேண்டும் என்றாலே டிவி போட்டு அதனை இருவரும் ஒன்றாக ரசிப்பதுதான் நேரம் செலவழிப்பது என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். கண்டிப்பாக இல்லை. இருவரும் நிறைய பேசுங்கள். ஸ்கீரீனிங் நேரத்தை குறைவாக்குங்கள்.
உங்கள் தனிப்பட்ட அந்தரங்க நேரங்களை கணக்கிடுங்கள்
நீங்கள் இருவரும் எப்போதும் ஒருவர் மீது ஒருவர் இழைந்து கொண்டே இருக்க முடியாது என்னும் யதார்த்தத்தை நீங்கள் முதலில் புரிந்து கொள்ளுங்கள். இருவருக்கும் தனிமையான நேரம் என்று ஒன்று தேவை. அப்போதுதான் நினைவில் இனிக்கும் நிஜங்களை பற்றி யோசிக்க முடியும். உங்கள் நண்பர்களோடு நீங்கள் வெளியே செல்தல் அல்லது அவர் நண்பர்களோடு அவர் செல்தல் போன்றவற்றை நிச்சயம் நிறைவேற்றுங்கள். ஒருவர் மீது ஒருவர் காதலும் பிரியமும் மேலும் கூடும்.
லிவின் உறவின் மூலம் நீங்கள் கற்று கொள்ளும் பாடங்கள்
உங்கள் நிஜங்கள் பிரகாசிக்கட்டும்
இதுவரை விட்டு விட்டு போய் விடுவாரோ என்கிற பயத்தில் நீங்கள் பல விஷயங்களை சொல்லாமல் இருப்பீர்கள் உங்கள் நிஜத்தின் நிறங்களை காட்டாமல் பதுக்கி வைத்திருப்பீர்கள். ஆனால் இந்த லிவின் உறவு உங்கள் இருவரின் நிஜ நிறங்களை வெளிக்காட்டும். அதுவும் அழகான நிறம்தான் என்பதை ஒருவருக்கொருவர் புரிந்து நடந்து கொள்ளும் அட்டகாசமான காலம் லிவின் காலம்.
உங்கள் ரகசிய குறும்புகளை பகிருங்கள்
இதுவரைக்கும் மிக மென்மையான நேர்த்தியான ஒருவராகவே நீங்கள் உங்களை அவருக்கு காட்டி கொண்டிருக்கலாம். ஆனால் இந்த உறவின் மூலம் உங்கள் நாட்டி பக்கங்களை அவர் பார்க்கட்டும். உங்கள் அந்தரங்க குறும்புகளை அவரோடு பகிருங்கள்.
முன்பை விட சுமையற்று இருங்கள்
இதுவரைக்கும் தனி ஒரு ஆளாக எல்லா பொறுப்புகளை வேலைகளை நீங்கள் சுமந்து கொண்டிருப்பீர்கள். இனிமேல் உங்கள் சுமைகளை பகிர ஒருவர் இருக்கிறார் என்று சந்தோஷமாக இருங்கள். கொஞ்சம் ரிலாக்ஸாக அவர் தோளில் சாய்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் சகிப்பு தன்மை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
திருமணத்திற்கு முன்பே ஒன்றாக வாழ்வதன் மூலம் நீங்கள் எவ்வளவு தூரம் அவரை சகித்து கொள்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர முடியும். உங்களது பொறுமை சகிப்பு தன்மை எல்லாவற்றையும் நீங்கள் தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக இந்த லிவின் வாழ்க்கை இருக்கும்.
எல்லாமே அற்புதமாக நடந்தால்
உங்கள் லிவின் வாழ்க்கையில் எல்லாமே சரியாக இருந்து அற்புதமான பலன்கள் கிடைத்தால் நீங்கள் இந்த உறவை திருமணம் எனும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல தயார் ஆகி விட்டீர்கள் என்று அர்த்தம். வாழ்த்துக்கள்.
லிவ் இன் உறவு பற்றிய பொதுவான சந்தேகங்கள்
இது சட்டபூர்வமானதா ?
இந்த லிவிங் டு கெதர் பற்றிய சரியான சட்டங்கள் இன்னமும் நிகழ்த்தப்படவில்லை என்றாலும் ஆபத்தில்லாத சட்டங்கள் சில உள்ளன. இருவரும் ஒன்றாக வாழ முடிவெடுத்து விட்டால் ஒரு ஒப்பந்தம் சட்டரீதியாக போட்டுக் கொள்ளலாம். கிட்டத்தட்ட பதிவு திருமணம் போன்றது என்றாலும் முன்னதில் உள்ள வலிமை பின்னத்திற்கு இல்லை. இது தவிர இந்த உறவின் மூலம் நீங்கள் பெற்று கொள்ளும் பிள்ளைகள் சாதாரண குடியுரிமை பெற்றவர்கள் போலவேதான் நடத்தப்படுபடுவார்கள். உங்கள் இருவரின் வாங்கி கணக்குகளும் தனி தனியாக இருப்பின் அவரது இழப்பிற்கு பின்னர் அவர் உயில் எழுதி இருந்தால் உங்களுக்குனு அவை வந்து சேரும். இவை சட்டத்திற்கு எதிரான குற்றம் அல்ல என்பது சுப்ரீம் கோர்ட்டால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
லிவிங் டுகெதரில் இருவரும் சமமாக நடத்தப்படுவோமா?
இதனை முடிவு செய்ய வேண்டியது உங்கள் உறவினர்கள் இல்லை நீங்கள் மட்டும்தான். அதனால் இதனை நீங்கள் முன்பே பேசி அதன்படி நடப்பது நல்லது.
இருவரில் யாரேனும் விலக நேர்ந்தால் என்ன செய்வது?
உறவென்பது சில சமயங்களில் பிரிவினை தரலாம். இயற்கையாகவோ நாமாகவோ அதற்கு காரணமாகலாம். ஒரு சிலர் தெளிவாக திட்டமிட்டு பெண்களை ஏமாற்ற இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தலாம். கவனமாக இருக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. விலகி விட்டால் அவரது நல்லெண்ணம் அறம் நடத்தை போன்றவற்றை பொறுத்து நீங்கள் அவரோடு பேசி பார்க்கலாம். சட்டபூர்வமாக முறையிட வழியிருக்கிறது. வழக்கமான பிரேக்கப் வலிகள் இதிலும் இருக்கும். கொஞ்சம் அதிகமாகவே.
படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.