Lifestyle

இன்று உலக உணவு தினம் : பசியால் வாடும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?

Swathi Subramanian  |  Oct 16, 2019
இன்று உலக உணவு தினம் : பசியால் வாடும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?

உயிர் வாழ உணவு மிக அவசியம். உடல் ஆரோக்கியமே நம்முடைய வாழ்வின் அடுத்தக்கட்ட நகர்வுகளுக்கு உந்துசக்தியாக இருக்கின்றன. உலகிலுள்ள அனைவருக்கும் போதிய உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று (அக்.,16ம் தேதி) உலக உணவு தினம் (#worldfoodday) கடைபிடிக்கப்படுகிறது.

ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதல் மூலம் ஊட்டச்சத்தான தலைமுறையை உருவாக்க வேண்டுமென்பதை வலியுறுத்துவதே உணவு தினத்தின் முக்கிய நோக்கமாகும். உணவு குறித்தும், ஊட்டச்சத்து அத்தியாவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

உணவு மற்றும் வேளாண் அமைப்பின் உறுப்பு நாடுகள் 1979ம் ஆண்டு உணவு தினத்தை நிறுவி அதனை வருடம் தோறும் கடைபிடிக்க வேண்டுமென ஐநாவுக்கு கோரிக்கை விடுத்தன. இதற்கு 1980ம் ஆண்டு ஐநா ஒப்புதல் அளித்தது. அதன்படி 1981 முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினம் பின்பற்றப்பட்டு வருகிறது.

twitter

வசதி வாய்ப்பற்றவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க வேண்டியது அரசின் கடமை என ஐ.நா., சபை வலியுறுத்துகிறது. இன்றைய பரபரப்பான உலகில் உணவு உட்கொள்வது என்பது ஏதோ ஒரு வேலை போலவே ஆகிவிட்டது. 

நாம் ஆரோக்கியமாக உயிர் வாழ உணவு அத்தியாவசியம் என்பதை மறந்து, நேரம் கிடைக்கும் போது சாப்பிடும் பழக்கத்திற்கு நாம் வந்துவிட்டோம். வேலைப்பளு காரணமாக சாப்பிடவில்லை என்று சர்வசாதாரணமாக சிலர் சொல்வார்கள். இன்னும் சிலருக்கு அன்றாட உணவுகள் கிடைக்காமல் திண்டாடுகின்றனர். 

உலகளவில் 82 கோடி மக்கள் பசியால் வாடுவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதாவது 9 நபர்களில் ஒருவர் பசியில் இருக்கிறார். மேலும் மூன்று பேரில் ஒருவர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் புள்ளிவிவரத்துடன் வெளியாகியுள்ளது.

twitter

இப்படி ஒருபுறம் உணவின்றி ஒரு தரப்பினர் தவித்து வரும் நிலையில் மறுபுறம் உணவு (food day) வீணாக்கப்படுவதும் தொடர்கதையாகவே உள்ளது. உலகில் எதைக் கொடுத்தாலும், போதாது.. இன்னும் வேண்டும் என்றே மனம் சிந்திக்கும். ஆனால் உணவு மட்டும்தான் ‘போதும்’ என்று சொல்ல வைக்கும். அந்த உணவை வீணாக்க கூடாது. 

நமது வீட்டில் மற்றும் பண்டிகை, விழாக்காலங்களில் மீதமாகும் உணவை மற்றவர்களுக்கு வழங்கலாம். இன்றைய தினத்தில் ஜங்ஸ் பூட் உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வாழ்வோம் என்று உறுதியேற்போம். 

 

twitter

இதனிடையே இன்று உலக உணவு தினம் (food day) கொண்டாடும் அதே நேரத்தில் ஒரு முக்கிய ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் பசி மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையில் வாடுபவர்கள் நாடுகளின் பட்டியலில் இந்தியா 102வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் உலக மக்களின் பசியை குறைத்து முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும், மக்களின் உணவுப் பற்றாக்குறையை மதிப்பிடுவதற்காகவும் `உலகளாவிய பட்டினி மதிப்பீடு’ என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது. 

அதன்படி இந்த ஆண்டு 117 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் இந்தியா 102வது இடத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆசியாவைப் பொறுத்தவரை அதிகம் பசியால் வாடும் மக்கள் கொண்ட நாடுகளில் இந்தியா மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

twitter

இலங்கை 66வது இடத்திலும் வங்கதேசம் 88வது இடத்திலும் பாகிஸ்தான் 94வது இடத்திலும் உள்ளது. பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானைவி பின்தங்கிய நிலையில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த உலகளாவிய பட்டினி தொடர்பான பட்டியலில் 2015ம் ஆண்டு 93வது இடத்திலிருந்த இந்தியா இந்த வருடம் 102வது இடத்துக்கு சென்றுள்ளது. ஒரு நாட்டில் உள்ள மொத்த குழந்தைகளில், ஊட்டச்சத்து குறைபாடு, உயரத்திற்கு‌ ஏற்ற எடை இல்லாதது உள்ளிட்ட காரணிகளை கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Lifestyle