Entertainment

விஸ்வாசம் – திரை விமர்சனம்

Deepa Lakshmi  |  Jan 11, 2019
விஸ்வாசம் – திரை விமர்சனம்

வீரம் வேதாளம் விவேகத்தைத் தொடர்ந்து நான்காவது முறையாக இயக்குனரும் நாயகனும் ஒன்று சேர்ந்து வேலை செய்திருக்கிறார்கள். விவேகத்தில் ஏற்பட்ட சறுக்கலை  விஸ்வாசம் படத்தில் மாற்றிக் காட்ட வேண்டும் என்று இருவருமே சபதம் செய்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. (movie)

தேனி அருகே உள்ள ஒரு கிராமத்தில் அஜித் தூக்குதுரையாக அறிமுகமாகிறார். எதிர்பார்த்தது போலவே அவர்தான் ஊரின் தலைவர். நியாயத்திற்காகத் தனது ரத்தத்தை சிந்தி அந்த கிராம மக்கள் அனைவருக்கும் ரத்த’ சொந்தமாகிறார்.

தேனிக்கு மருத்துவ முகாமிற்கு வரும் நயன்தாரா அங்கு அடிதடி செய்யும் அஜித்தை ஆரம்பத்தில் வெறுத்து பின் நேசிக்கிறார். படிக்காதவராக இருந்தாலும் பிடித்தவர் என்பதால் மும்பையில் இருந்து தன் அப்பாவைக் கூட்டிக் கொண்டு வந்து அஜித்தை திருமணம் செய்து கொள்கிறார்.

அதன்பின் கிராமத்து பெண்ணாக இரட்டை மூக்குத்தியோடு வாழ்ந்து கணவனுக்காக உயர்படிப்பை தியாகம் செய்து குழந்தை பெற்று என்று அவர் மருத்துவர் என்பதை நாம் மறந்து விடும் அளவிற்கு அன்யோன்யமாக இருக்கிறார்.

அடிதடி செய்யும் அஜித்தைப் பிடித்துக் காதல் செய்த நயன்தாரா அம்மா ஆனதும் குழந்தைக்காக அடிதடி வேண்டாம் என்கிறார். அதற்காக அஜித்தைப் பிரிந்து மும்பை சென்று தனி ஒருவளாக மருந்து நிறுவனத்தின் தலைவியாகி உயர்த்திப் போட்ட கொண்டையும் கூர்மையான கண்களுமாக டான் ரேஞ்சிற்கு வலம் வருகிறார்.

ஊர்க்காரர்கள் எல்லாம் அஜித்தை மனைவியை அழைத்து வர சொல்ல அதற்காக மும்பை ட்ரெயின் ஏறுகிறார். அஜித் மனைவி மகளை சந்தித்தாரா அவர்களோடு இணைந்தாரா என்பது கிளைமாக்ஸ்.

காட்சிக்கு காட்சி சென்டிமென்ட் தூவி இருக்கிறார்கள். இமானின் பின்னணி இசை படத்தை இழுத்து நிறுத்துகிறது. அங்கங்கே சிரித்தாலும் ஏற்கனவே கேட்ட ஜோக் போல இருக்கிறதே என்று சிந்திக்கவும் வைக்கிறார்கள்.

விவேக் வரும்போது அஜித்திற்கு இணையாக கைதட்டல்கள் வாங்கியும் கோவை சரளா இருந்தும் ரோபோ சங்கர் தம்பிதுரை இருந்தும் எல்லாம் பழைய காமெடி ரகங்களாகவே இருக்கின்றன.

அஜித் வரும் காட்சிகள் எல்லாம் கைதட்டல் பிசிறு கிளப்ப வேண்டும் என்றே பிரேம்கள் வைத்திருக்கிறார்கள் போல. கைகள், கால்கள் என ஒவ்வொரு காட்சியிலும் அஜித்திற்கு ஏகப்பட்ட க்ளோஸ்அப்கள். அவ்வளவு முடிக்கு நடுவே கொஞ்சம் முகத்தையும் காட்டியிருக்கிறார்கள். ஆனாலும் அஜித் வேற லெவலில் விளாசியிருக்கிறார்.

கைகளில் மட்டுமே நடனம் ஆடாமல் ரசிகர்களுக்காகவே சிரமப்பட்டு முயற்சி செய்து பலவிதமான இறங்கி குத்தும் டான்ஸ் வகைகளை அவர் ரிஸ்க் எடுத்துதான் செய்திருக்கிறார். பவர்புல் கம்பேக் என்று நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்.

இது அப்பா சென்டிமென்ட் கதை என்பது பொதுவான விமர்சனம். ஆனால் காட்சிக்கு காட்சி பல்வேறு விதமான சென்டிமென்ட்கள் எல்லாம் பார்ப்பவர் கண்களை நனைக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார் இயக்குனர்.

உங்கள் ஆசைகளை உங்கள் குழந்தைகளிடம் திணிக்காதீர்கள் அவர்கள் நம்மால் பூமிக்கு வந்தவர்களே அன்றி நமக்காக வரவில்லை என்னும் மெசேஜை சொல்லும் பொருட்டு இடைவேளையோடு முடிய வேண்டிய படத்தை மேலும் இழுத்திருக்கிறார்கள்.

அதற்காக வில்லன் ஜெகபதி பாபுவின் பிளாஷ்பேக் கொஞ்ச நேரம் போகிறது. அதன் பின் கிளைமாக்ஸில் நயன்தாரா அழுகிறார், அஜித் அழுகிறார், வில்லன் அழுகிறார், அவர் மகள் அழுகிறார், அஜித்தின் மகள் அழுகிறார், பின்னணியில் இமான் அழ அதனை உள்வாங்கும் இதயமும் காரணமே இல்லாமல் கொஞ்சம் அழுதுதான் விடுகிறது.

மொத்தத்தில் அஜித் ரசிகர்களுக்கான குடும்ப  காமெடி நிறைந்த வழக்கமான சென்டிமென்ட் படம்தான் என்றாலும் படத்தின் பலம் அஜித் மற்றும் நயன்தாரா தான்.

பேட்ட திரை விமர்சனம்

இருவர் வரும் காட்சிகளிலும் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கும் வகையில் காட்சிகள் அமைகின்றன. நாமும் நயன்தாராவின் அழகிலும் அஜித்தின் காதலிலும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்!

முக்கியமான நயன்தாராவின் காஸ்ட்யூம் டிசைனருக்குத் தனி பாராட்டுக்கள். காதலியாக இருக்கும்போது ஒரு டிசைன், மனைவியாக இருக்கும் போது ஒருவித உடை, தனித்து வாழும்போது ஒருவித உடை என நயனிற்கு பொருந்தும் வகையில் அற்புதமாக தேர்ந்தெடுத்திருக்கிறார். மூன்று பருவங்களில் உள்ள பெண்களும் விரும்பி அணியும் உடையாக நயன்தாராவின் பேஷன் பரவப் போகிறது.

வெற்றியின் கேமரா தேனியின் பசுமையை நெஞ்சிலும் நிறைக்கிறது. ரூபனின் எடிட்டிங் இயக்குனரின் எதிர்பார்ப்போடு இணைகிறது. இமான் பாடல்கள் மெலடி மற்றும் குத்து இரண்டுமே சிறப்பாக அமைந்திருக்கிறது. அடிச்சுத் தூக்கு பாடலின் போது பல ரசிகர்கள் எழுந்து ஆடிக் கொண்டிருந்தது அவர்களின் மனத் திருப்தியைக் காட்டியது.

மொத்தத்தில் சிவா மற்றும் அஜித் இணைந்த இந்த “V” கூட்டணி விஸ்வாசத்தின் மூலம் தோற்றதில் ஜெயித்திருக்கிறது.

விஸ்வாசம் – அஜித் ரசிகர்களுக்கான ஆசுவாசம்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

 

 

Read More From Entertainment