Family

38 வருட தேடலை முதியோர் இல்லத்தில் முடித்து வைத்த காதல் – கண்கள் தளும்பும் ஓர் உண்மைக் கதை

Deepa Lakshmi  |  Oct 3, 2019
38 வருட தேடலை முதியோர் இல்லத்தில் முடித்து வைத்த காதல்  – கண்கள் தளும்பும் ஓர் உண்மைக் கதை

தனிமை.. இந்தப் பெயரின் ரணம் அதனை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே புரியக்கூடும். விளையாட ஆளற்று தெருவில் கிடைக்கும் ஒரு பொம்மையைப் பார்க்கும்போதும் இந்த வலி நம்முள் எழுந்தே தீரும். அந்தளவிற்கு தனிமை என்பது மிகவும் வேதனைகள் நிறைந்த ஒன்றுதான்.

அதிலும் முதுமைக் காலத்தில் ஏற்படக் கூடிய தனிமை என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. பெரும்பாலான பிள்ளைகள் பெற்றோருடன் நேரம் செலவழிக்க முடியாததால் அல்லது விரும்பாததால் அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கின்றனர்.

அப்படி ஒரு முதியோர் இல்லத்தில்தான் ஒரு பெண்ணுடைய 38 வருட தேடலும் 68 வருடக் காதலும் (love) மீண்டும் தொடங்கி இருக்கிறது. சுபத்ரா தற்போது இவருக்கு வயது 82. கேரளாவை சேர்ந்தவர். பார்த்துக் கொள்ள வேண்டிய பிள்ளைகள் மரணமடைந்து விட கொடுங்கலூர் வீதிகளில் அரவணைக்க யாருமில்லாமல் அலைந்தார் சுபத்ரா.

Pixabay,pexels,twitter

பசியால் மயங்கிய சுபத்ராவை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்க அங்கிருந்து அவர் புல்லூத்து என்கிற இடத்தில் இருக்கும் முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கே சில நாட்கள் கழித்து உறவுகளால் கைவிடப்பட்ட நிலையில் சையத் என்பவர் வந்து சேர்ந்தார். இவர் வயது 90.

சையத் என்கிற பெயரைக் கேட்டதும் சக்தியற்ற கால்களை நகர்த்திக் கொண்டு சுபத்ரா அவரைப் பார்க்க தள்ளாடியபடியே வருகிறார். 82 வயது பெரும்பாலும் ஞாபகங்கள் மரத்து போயிருக்கும் சுபத்ராவின் நியூரான்களில் அழிக்க முடியாத நினைவாக இந்தப் பெயரும் அதன் பின்பான ஞாபகங்களும் ஏங்கி கொண்டிருக்கின்றன.

38 வருட காலமாக தான் தேடி கொண்டிருக்கும் சையத் இவராக இருக்க கூடாதா என்கிற எதிர்பார்ப்பில் அவர் வருகிறார். சையத்தின் அந்தக் குரல் சுபத்ராவை ஏதோ செய்கிறது. சுபத்ராவை சந்தித்த சையத் திகைத்து போயிருக்கிறார். சில மணித்துளிகள் மௌனத்தில் கரைந்திருக்கின்றன.

Pixabay,pexels,twitter

இருவரின் வறண்ட உதடுகளில் இருந்தும் புன்னகை பூத்திருக்கிறது. ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்ள ஏற்கனவே பழகியவர்கள் போல அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அருகில் இருந்து வேடிக்கை பார்த்தவர்களுக்கு எதுவும் புரியவில்லை. தங்கள் காதல் கதையை (love) அனைவருக்கும் சுபத்ரா சொல்லி முடித்த உடன் அங்கே பெரிய விழாவே நடந்தது. விருந்து ஏற்பாடு செய்து ஒருவருக்கொருவர் இனிப்பு கொடுத்து மகிழ்ந்தனர்.

திருச்சூர் சுபத்ராவின் பூர்விகம். இளம் வயதிலேயே கணவரைப் பறிகொடுத்து இரண்டு பிள்ளைகளோடு 15 வயதில் தனிமரமாகியிருக்கிறார் சுபத்ரா. சுபத்ரா வீட்டின் அருகே சையத் வசித்து வந்தார். வாழ்க்கை பற்றிய புரிதல்கள் இல்லாமலே வாழ்க்கையை இழந்த சுபத்ராவிற்கு வாழ்க்கை தர தீர்மானித்தார் சையத். இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது 30வது திருமண நாளில் 1983ம் வருடம் பிழைப்புக்காக வட இந்தியா செல்லத் தயார் ஆனார் சையத். அதுதான் சுபத்ராவும் சையதும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட கடைசி நாள். சையத் திரும்ப வருவார் என சுபத்ராவும் அவரது குழந்தைகளும் காத்திருக்க அவர் வரவேயில்லை. காலத்தின் முடிவுகள் சில சமயம் கண்ணீரை பரிசளிக்கின்றன.

Pixabay,pexels,twitter

ஆமாம். தன்னுடைய பிள்ளைகள் முதலில் காலமாகி விட சுபத்ரா கடந்த ஜூலையில் இந்த முதியோர் இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். சில நாட்களில் உறவினர்களால் கைவிடப்பட்ட சையத் இதே முதியோர் இல்லத்திற்கு விதிவசத்தால் காலத்தின் கருணையால் வந்து சேர்கிறார். எதிர்பாராவிதமாக இவ்விருவரின் சந்திப்பு 38 வருடங்களுக்கு பின்னர் நடந்தேறியிருக்கிறது.

மரணத்திற்காக காத்திருக்கும் தருணங்களிலும் கை கோர்த்து உடன் இருக்க ஒரு துணை இருப்பின் அது மிக உன்னதமான தருணமாகவே இருக்கும். அப்படி ஒரு உன்னத நிலையில்தான் தற்போது இவர்கள் இருவரும் இருக்கின்றனர். சையத் தனக்கு மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில் சுபத்ரா மெல்லிய இன்னிசை ஒன்றை பாடியிருக்கிறார்.

ஆதரவற்ற நிலையில் இருந்த இருவரும் இப்போது தங்களுக்கான ஆறுதல்களை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டிருக்கின்றனர். காலத்தின் முடிவுகள் சில சமயம் நம் கண்களை பனிக்க செய்கின்றன. காதலின் தீவிரம் (true love ) முழுமையாக இருந்தால் எப்போது வேண்டுமானாலும் அது தம்மை நேசிப்பவரை சேர்த்து வைக்கும் என்பதற்ககு சுபத்ரா – சையத் காதல் கதைதான் மிகப்பெரிய உதாரணம்.

Pixabay,pexels,twitter

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Family