Lifestyle

புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு : பெருமாளுக்கு படைக்க வேண்டிய படையல் பிரசாதங்கள்!

Swathi Subramanian  |  Sep 20, 2019
புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு : பெருமாளுக்கு படைக்க வேண்டிய படையல் பிரசாதங்கள்!

பெருமாளுக்கு உகந்தது புரட்டாசி (purattasi) மாதம். புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருக்கும் மகத்துவமே தனித்துவமானது. புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாள் நினைத்து வழிபட்டால் செல்வ வளம் பெருகும். தூய்மையான பக்தியோடு பெருமாளை வணங்கினால் ஏழையாக இருந்தாலும் வைகுண்ட பிராப்தியை அளிப்பார் என்று நம்பபப்படுகிறது.  

புரட்டாசி சனிக்கிழமை (purattasi) பூஜைக்குரிய பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். திருமலை வெங்கடேசப் பெருமாள் படம் ஒன்றை வைத்து மாலை போட்டு வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். துளசி இலைகளால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது.

youtube

ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப்பொங்கல், துளசி தண்ணீர், புளி சாதம், எலுமிச்சை சாதம், கொண்டைக்கடலை சுண்டல், வடை, எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம். துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் பெருமாள் கடவுளுக்கு விசேஷம். புரட்டாசி (purattasi) சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும். 

புரட்டாசி சனிக்கிழமையன்று பெருமாளுக்கு படைக்க வேண்டிய பிரசாதங்கள் குறித்து இங்கே காண்போம்..

பிரசாதங்கள்

அக்கார வடிசில் 

தேவையான பொருள்கள்:

அரிசி – 1 கப்,
பயத்தம் பருப்பு – 1/4 கப்,
வெல்லம் – 2  கப்,
ஏலப்பொடி – 2 டீஸ்பூன்,
பச்சைக் கற்பூரம் – சிறிது,
பால் மற்றும் நெய் – தேவையான அளவு 

செய்முறை:

அரிசி மற்றும் பயத்தம் பருப்பை கழுவி நன்கு நீரை வடித்துவிட்டு வாணலியில் 2 டீஸ்பூன் நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதனை 5 கப் பால் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேக விட வேண்டும். வெல்லத்துடன் சிறிது நீர் சேர்த்து கரைந்தது வடிகட்டி கொள்ளவும். மற்றொரு வாணலியில் குழைய வேகவைத்த அரிசிக் கலவை, வடிகட்டிய வெல்லக் கரைசல், 2 கப் பால் சேர்த்து கிளற வேண்டும். இறுக இறுக மேலும் பால் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். சிறிது நேரத்திற்கு பின்னர் நெய் ஏலப்பொடி, பச்சைக்கற்பூரம் சேர்த்துக் கிளறி இறக்கி விடவும். அக்கார வடிசில் ரெடி! 

எள்ளோதரை

தேவையான பொருட்கள் : 

அரிசி – 200 கிராம்,
நல்லெண்ணை – 4 ஸ்பூன்,
உழுத்தம் பருப்பு – 1 கரண்டி,
மிளகாய் –  4,
எள் பொடி – 1 ஸ்பூன்,
உப்பு – அரை ஸ்பூன்,
பெருங்காயத்தூள், உப்பு – தேவையான அளவு,
உதிர் உதிராக வடித்த சாதம் – 2 கப்.

செய்முறை : 

இருப்புச்சட்டியில் எண்ணை சேர்க்காமல் முதலில் எள்ளை வறுத்து தனியாக வைத்துக்கொள்ளவும். பின்பு அந்த இருப்புச்சட்டியில் சிறிது எண்ணைசேர்த்துக்கொண்டு உழுத்தம் பருப்பு, மிளகாய், பெருங்காயத்தூள் முதலியவற்றை வறுத்துக் கொள்ளவும். வறுத்தெடுத்த பொருட்களுடன் எள் தூள், உப்பு  சேர்த்து ஒன்றாக பொடி செய்து கொள்ளவும். பின்பு உதிர் உதிராக வடித்த சாதத்தில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணையை ஊற்றி நன்கு உதிர்த்துக்கொண்டு எள்ளுப்பொடியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் கடைசியில் கருவேப்பிலை சேர்த்தால் எள் சாதம் தயாராகிவிட்டது.

youtube

சர்க்கரைப் பொங்கல்

தேவையான பொருட்கள் : 

பச்சரிசி – ஒரு கப், 
பயத்தம்பருப்பு – கால் கப், 
துருவிய வெல்லம் – ஒரு கப்,
பால் – கால் கப், 
நெய் – 5 டேபிள்ஸ்பூன், 
ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் – தேவையான அளவு 
திராட்சை, முந்திரி  – 1 டேபிள்ஸ்பூன். 

செய்முறை: 

பச்சரிசி, பயத்தம்பருப்பு இரண்டையும் நன்றாக கழுவி கால் கப் பால், இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து குழைய வேக விடவும். வெந்ததும் அதில் வெல்லத்தை சேர்த்து கொதிவந்ததும் நெய் சேர்க்கவும். பின்னர் ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கிவிடவும். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து சாதத்தில் போட்டு பரிமாறுங்கள். 

youtube

கொண்டைக் கடலை சுண்டல்

தேவையான பொருட்கள் :

கறுப்பு கொண்டைக்கடலை – ஒரு கப்,
தேங்காய்த் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

காய்ந்த மிளகாய் – 2,
கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்,
எள் – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.கடுகு, உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – ஒன்று ,
கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் – தேவையான அளவு,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை :

கறுப்பு கொண்டைக்கடலையை 6 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு உப்பு சேர்த்து நன்கு வேகவிட்டு நீரை வடிக்கவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து, கொண்டைக்கடலையை சேர்த்து வதக்கி, பொடித்து வைத்த பொடியை தூவி, தேங்காய் துருவலையும் சேர்த்து ஒருமுறை வதக்கி எல்லாவற்றையும் நன்றாக கலந்து படையலிடவும்.

youtube

மிளகு புளியோதரை

தேவையான பொருட்கள் : 

உதிர் உதிராக வடித்த சாதம் – 2 கப், 
புளி – தேவையான அளவு, 
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், 
வெல்லம் – ஒரு டீஸ்பூன், 
நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன், 
உப்பு – தேவைக்கேற்ப. 

தாளிக்க: 

எண்ணெய், கடுகு – ஒரு டீஸ்பூன், 
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, 
கறிவேப்பிலை – தேவையான அளவு 

வறுத்துப் பொடிக்க: 

மிளகு – 2 டேபிள்ஸ்பூன், 
வெந்தயம், கறுப்பு எள் – தலா ஒரு டீஸ்பூன், 
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு –  ஒரு டேபிள்ஸ்பூன், 
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை : 

வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்து எடுத்து வைக்கவும். மற்றொரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைத் தாளிக்கவும். பின்னர் புளியைக் கெட்டியாக கரைத்து ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்து வரும்போது வறுத்துப் பொடித்தவற்றையும், வெல்லத்தையும் சேர்த்துக் கிளறி  கெட்டியாக வந்ததும் இறக்கவும். இதில் சாதத்தை சேர்த்துக் கிளறினால் மிளகு புளியோதரை தயார்.

youtube

உளுந்து வடை 

தேவையான பொருட்கள் : 

உளுந்தம் பருப்பு – 2 கப் ,
சின்ன வெங்காயம் – 1/2 கப்,
பச்சை மிளகாய் – 5,
கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு,
மல்லி இலை – 3 கொத்து,
எண்ணெய் –  தேவையான அளவு

youtube

 

செய்முறை

உளுந்தம் பருப்பினை ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லி இலையை  பொடியாக நறுக்கி மாவில் சேர்த்து ஒருசேர கலக்கவும். பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் சிறிதளவு மாவினை எடுத்து வாழை இலையில் வைத்து நடுவில் துளையிட்டு எண்ணெயில் போடவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி வேகவிடவும். உளுந்து வடை தயார்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Lifestyle