DIY Life Hacks

பெப்பர்மிண்ட் எண்ணெய் மற்றும் ஆச்சர்யம் தரும் அதன் பயன்கள் !

Deepa Lakshmi  |  Dec 18, 2019
பெப்பர்மிண்ட்  எண்ணெய் மற்றும் ஆச்சர்யம் தரும் அதன் பயன்கள் !

பெப்பெர்மிண்ட் பெயரைக் கேட்டாலே புத்துணர்வு பொங்கும் இந்த பெப்பர்மிண்ட் எண்ணெய் பற்றி அதிகப்பேருக்கு பரிச்சயம் இல்லை. இந்த எண்ணெய் தரும் நன்மைகள் நிறைய இருக்கிறது. இருப்பினும் சரியான அளவு மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

பெப்பர்மிண்ட் எண்ணெய் (peppermint oil) என்றால் என்ன யாரெல்லாம் இதனை உபயோகிக்கலாம் இதனால் என்னென்ன நன்மைகள் போன்ற விபரங்களை கீழே கொடுத்துள்ளோம். நிச்சயம் உங்கள் அடுத்த ஷாப்பிங் ஆர்டரில் பெப்பர்மிண்ட் எண்ணெயும் ஒன்றாக இருக்கும்.

பெப்பர்மிண்ட் ஆயில் எனப்படும் புதினா எண்ணெய் என்றால் என்ன ?

பெப்பர்மிண்ட் ஆயில் என்பது புதினா குடும்பத்தை சேர்ந்தது. புதினாவின் இருந்து எடுக்கப்படும் ஒருவித வாசனை எண்ணெய்தான் பெப்பெர்மிண்ட் எண்ணெய் அல்லது புதினா எண்ணெய் என அழைக்கப்படுகிறது. 

எகிப்து பிரமிட்களுள் இவ்வகை எண்ணெய் பயன்படுத்தப்பட்டது . ஜப்பான் மற்றும் சீனாவின் பாரம்பர்ய மருத்துவங்களில் பெப்பர்மிண்ட் எண்ணெய்யும் முக்கிய பங்கு வகிக்கிறது.

pinterest

பெப்பெர்மென்ட் எண்ணெய் ஏன் பயன்படுத்தப்பட வேண்டும் ?

எண்ணெய் வகைகளுள் இரண்டு வகை உண்டு கரியர் எண்ணெய் (carrier oil) மற்றும் எசென்ஷியல் எண்ணெய் (essential oil) என்பனவாகும். தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய் ஆகியவை கரியர் எண்ணெய் எனப்படுகிறது. செறிவூட்டப்பட்ட தாவர சாறுகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் எசென்ஷியல் எண்ணெய் எனப்படுகிறது. இதில் பெப்பெர்மிண்ட் எண்ணெய் இரண்டாவது வகையை சார்ந்தது. 

பெப்பர்மிண்ட் எண்ணெய் என்பது உங்கள் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பயனளிக்க கூடிய ஒரு மருத்துவ குணம் வாய்ந்த எண்ணெய். அதைப் போலவே அழகை பராமரிப்பதிலும் மேம்படுத்துவதிலும் இந்த எண்ணெய் உதவுகிறது. 

பெப்பெர்மிண்ட் எண்ணெயின் ஆரோக்கிய நற்பலன்கள்

பெப்பர்மிண்ட் எண்ணெய் நம் உடலுக்கு பலவிதங்களை ஆரோக்கியங்கள் தருகிறது. நாள்பட்ட நோய்களை குணமாக்குகிறது. தலைவலி போன்றவைகளுக்கு பக்கவிளைவற்ற மருந்தாகவும் பயன்படுகிறது.

1. சுவாசக்குழாய்களை பாதுகாக்கிறது

பெப்பர்மிண்ட் எண்ணெய் சுவாசக்குழாய் சிக்கல்களுக்கு அருமருந்தாகிறது. இதில் உள்ள மென்தால் எனும் பொருள் சுவாசக்குழாயை சுத்தம் செய்கிறது. சளி மற்றும் இருமல், சைனஸ் பிரச்னைகள் போன்றவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. 

2. ஒற்றைத்தலைவலிக்கு அருமருந்து

பெப்பர்மிண்ட் எண்ணெய் ஒற்றைத்தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு அருமருந்தாகிறது. மைக்ரேன் எனப்படும் இந்த தலைவலி தீவிரமடையும் சமயங்களில் குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்தும். ஒரு சுத்தமான கைக்குட்டை எடுத்து அதில் சில துளிகள் பெப்பெர்மிண்ட் எண்ணையை  விடவும். இதனை நன்றாக சுவாசிக்க வேண்டும். சில நிமிடங்களில் தலைவலியின் தீவிரம் குறைவதை நன்றாக உணர முடியும். 

3. தொற்று நோய்களை குணப்படுத்துகிறது

பெப்பர்மிண்ட் எண்ணெய் தொற்று நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. பூஞ்சைக் காளான் பண்புகள் உள்ளதால் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டது. 

4. நகங்களுக்கு பலம் சேர்க்கும்

நகம் வளர விரும்புபவர்களுக்கு பெப்பர்மிண்ட் எண்ணெய் சிறப்பாக உதவுகிறது. நகங்களில் சில சொட்டுக்கள் பெப்பர்மிண்ட் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து லேசாக மசாஜ் செய்ய வேண்டும். நகம் உறுதியாகவும் பளபளப்போடும் வளரும். 

5. பல்வலி மறையும்

பெப்பெர்மிண்ட் என்கிற பெயரைக் கேட்டாலே சிலருக்கெல்லாம் புத்துணர்ச்சி பெருகும். காரணம் இதில் புத்துணர்ச்சி ஊட்டும் பண்புகள் அதிகம். எல்லா பற்பசைகளிலும் இந்த பெப்பர்மிண்ட் எண்ணெய்  சேர்க்கப்படுகிறது. உங்கள் பற்பசையிலும் இரண்டு சொட்டுக்கள் விட்டு பல்துலக்கவும். இதனால் கிருமிகள் காணாமல் போகும். பல்வலி என்பதே வராது. 

6. பொடுகு பேன் தொல்லை நீங்கும்

உச்சந்தலையில் எண்ணெய்ப்பசை இல்லாமல் உலர்வாக இருப்பவர்கள் பெப்பர்மிண்ட் ஆயில் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய் உச்சந்தலையை குளிர்விக்க உதவி செய்கிறது. உச்சந்தலையில் ஒட்டி உறவாடும் பொடுகு போன்ற துன்பங்களை நீக்க ஒரு சொட்டு மட்டும் பெப்பர்மிண்ட் எண்ணெய் சேர்த்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி அரைமணிக்குள் குளித்து வர பொடுகு பேன் தொல்லைகள் இருக்காது.

7. கூந்தல் உதிர்வது நிற்கும்

கூந்தல் உதிராமல் காக்கவும் பெப்பர்மிண்ட் எண்ணெய் உதவுகிறது. ஷாம்பூ மற்றும் கண்டிஷனரில் இரண்டு சொட்டுக்கள் பெப்பர்மிண்ட் எண்ணெய் சேர்க்க வேண்டும். பின்னர் பயன்படுத்தவும். இப்படி செய்வதால் கூந்தல் உதிர்வு கட்டுப்படுத்தப்படும். 

8. மன அழுத்தம் மறையும்

மன அழுத்தம் மற்றும் உடல்வலி இரண்டுக்குமே மருந்தாகிறது பெப்பர்மிண்ட் எண்ணெய். தேங்காய் எண்ணெய் உடன் சில துளிகள் மட்டுமே பெப்பர்மிண்ட் எண்ணெய் விடவேண்டும். இந்தக் கலவையை குளிப்பதற்கு அரைமணி நேரம் முன்பு உங்கள் உடலில் பூசி குளித்து வந்தால் புத்துணர்ச்சி பெருகும். மனக்கவலை பறந்தோடும். 

9. அழகு கூடும்

பெப்பர்மிண்ட் எண்ணெய் அழகுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. முகத்தின் அதிகப்படியான எண்ணெய் சுரப்புகளை பெப்பர்மிண்ட் எண்ணெய் கட்டுப்படுத்தும். முகத்துவாரங்களை அடைப்பதால் பரு போன்ற தொல்லைகளில் இருந்து முகத்தை காக்கிறது. 

10. முடிவளர்ச்சிக்கு உதவும்

முடி வளர்வதற்கும் பெப்பர்மிண்ட் எண்ணெய் உதவி செய்கிறது. தேங்காய் எண்ணெயில் சில சொட்டுக்கள் பெப்பர்மிண்ட் எண்ணெய் கலந்து தடவி பின்னர் குளித்து வர வேண்டும். பெப்பர்மிண்ட் எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி நன்கு வளர உதவி செய்கிறது. 

pexels

பெப்பர்மிண்ட் எண்ணெய் சருமத்திற்கு எவ்வாறு பயன் தருகிறது

பெப்பெர்மிண்ட் எண்ணெய் சருமத்தின் தோழனாக இருந்து உதவி செய்கிறது. முகம் பொலிவடையவும் பருக்கள் அற்று இருக்கவும் உதவி செய்கிறது. உடல் வலிகளை நீக்குகிறது.

1. முகப்பொலிவு அதிகரிக்க செய்கிறது

டல்லான சருமத்தை ஜொலிக்க வைக்க பெப்பர்மிண்ட் எண்ணெய் பெரிதும் உதவி செய்கிறது. இதில் உள்ள குளுகுளுப்பான தன்மை வாடி வதங்கிய முகத்தைக் கூட பொலிவாக மாற்றிவிடுகிறது. இளமையான பொலிவான முகம் பெற பெப்பர்மிண்ட் எண்ணெய் மாஸ்க் மற்றும் மற்ற தயாரிப்புகளை பயன்படுத்தி வரலாம். 

2. பருக்களைத் தடுக்கிறது

எண்ணெய் சருமத்திற்கு தேவையான உதவியை செய்கிறது. ஒரு சின்ன பரு உங்கள் முகத்தை மாற்றுவது மட்டும் அல்லாமல் உங்கள் தன்னம்பிக்கையையும் மாற்றி விடுகிறது. அதிகப்படியான எண்ணெய் சுரப்புதான் பருக்களுக்கு வழிவகுக்கிறது. பெப்பர்மிண்ட் எண்ணெய் இந்த எண்ணெய் சுரப்புகளை கட்டுப்படுத்துகிறது. 

3. அலர்ஜியை குணமாக்குகிறது

முகத்தில் வெயிலால் ஏற்படும் எரிச்சல்கள், சிவந்து போதல் போன்ற சிக்கல்களை பெப்பர்மிண்ட் எண்ணெய் நீக்குகிறது. ரேஷஸ் இருப்பவர்கள் மற்றும் உலர்ந்த சருமம் கொண்டவர்கள் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் ஒரே ஒரு சொட்டு மட்டும் பெப்பர்மிண்ட் ஆயில் கலந்து தடவி பின்னர் கழுவி வர குணம் காண்பீர்கள். 

4. பாதவலி நீக்குகிறது

பாதங்களில் வலி இருப்பவர்கள் சில துளிகள் பெப்பர்மிண்ட் எண்ணெய் கலந்த வெந்நீரில் பாதங்களை ஊற வைக்க வேண்டும். நரம்புகளை இதமாக்கி பாத வலியினை போக்க பெப்பெர்மிண்ட் எண்ணெய் சிறப்பாக செயல்புரியும். 

5. வயிற்று வலிக்கு இதம் தருகிறது

வயிற்றில் வலி இருப்பவர்கள் சில துளிகள் பெப்பெர்மிண்ட் எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் இரண்டு சப்பான் கலந்து கொள்ளவும். இந்த எண்ணெயை மிதமாக சூடுபடுத்தவும். வலி இருக்கும் வயிற்று பகுதிகளில் மென்மையாக தடவி மசாஜ் செய்யவேண்டும். வயிறு திடீரென இழுத்து பிடிப்பது போன்ற பிரச்னைகள் உடனே சரியாகும். 

pinterest

கூந்தலுக்கு பெப்பர்மிண்ட் ஆயில் எவ்வகையில் பயன்படுகிறது

கூந்தலுக்கு பெப்பர்மிண்ட் எண்ணெய் பல ஆச்சர்யமான உதவிகளை செய்கிறது. முடிவளர உதவுகிறது. பேன் பொடுகு போன்றவற்றை நீக்குவதோடு நீண்ட கால ரசாயன படிமங்களை சுத்தம் செய்கிறது.

1. கூந்தல் உதிர்வை நிறுத்துகிறது

கூந்தல் உதிர்வதை தடுக்க பெப்பர்மிண்ட் ஆயில் உதவி செய்கிறது. அதிகப்படியான  கூந்தல் உதிர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தேங்காய் எண்ணெயுடன் சில துளிகள் பெப்பர்மிண்ட் எண்ணெய் கலந்து தடவி அரைமணி கழித்து கூந்தலை அலசவேண்டும். இதனால் முடி உதிர்வு கட்டுக்குள் வரும். 

2. கூந்தல் வளர்ச்சி அதிகரிக்க உதவுகிறது

கூந்தல் வளர பெப்பர்மிண்ட் எண்ணெய் உதவி செய்கிறது. எவ்வளவு முயற்சி செய்தும் கூந்தல் வளர்ச்சி இல்லாமல் கவலைப்படுபவர்கள் தலைக்கு தேய்க்கும் எண்ணெயுடன் சில துளிகள் பெப்பெர்மிண்ட் எண்ணெய் கலந்து தடவி அரைமணி ஊறவைத்து குளித்து வர கூந்தல் வளர்ச்சி அதிகமாக இருக்கும். 

3. பொடுகு பேன் தொல்லைக்கு மருந்தாகிறது

பெப்பர்மிண்ட் எண்ணெயில் உள்ள மென்தால் தலையில் உள்ள பேன்களுக்கு பிடிக்காது. அதனால் இந்த வாசம் பட்டதும் உங்கள் தலையை விட்டு போதும் சாமி என்று ஓடி விடும். இரவு தூங்கும் முன் சில துளி பெப்பர்மிண்ட் எண்ணெயுடன் நான்கைந்து ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தடவி காலையில் குளிக்க வேண்டும். பேன்கள் காணாமல் போய் விடும். 

4. தலையில் படிந்திருக்கும் ரசாயனங்களை நீக்குகிறது

உங்கள் தலையில் பல வருடங்களாக ஷாம்பூ உபயோகிப்பதால் அதன் ரசாயன மிச்சங்கள் உங்கள் மண்டையோட்டில் நீண்ட காலமாக வாசம் செய்து வருகிறது. பெப்பெர்மிண்ட் எண்ணெய் உபயோகிப்பதால் இந்த நீண்டகால குடித்தனக்காரர்கள் உங்கள் தலையில் இருந்து விலகி விடுவார்கள். ஷாம்பூக்களில் சில துளி பெப்பெர்மிண்ட் ஆயில் சேர்க்கவும். வழக்கம்போல குளிக்கவும். 

5. PH லெவலை சமம் செய்கிறது

உங்கள் உச்சந்தலையில் உள்ள ph லெவலை பெப்பர்மிண்ட் எண்ணெய் சரியாக வைத்திருக்க உதவி செய்கிறது. மனஅழுத்தம் ,தூசு , திடீர் வானிலை மாற்றங்கள் மற்றும் தரக்குறைவான ஷாம்பூக்கள் காரணமாக ph லெவல் பாதிக்கப்பட்டிருக்கும். பெப்பர்மிண்ட் எண்ணெய் இதனை சரி செய்கிறது. 

pinterest

பக்கவிளைவுகள்

பெப்பர்மிண்ட் என்பது செறிவூட்டப்பட்ட தாவர எண்ணெய் என்பதால் சிலருக்கு இது ஒவ்வாமைகளை ஏற்படுத்தும். சருமத்தில் எரிச்சல் உண்டாகலாம். சிவக்கலாம். அல்லது தடிப்புக்கள் தோன்றலாம். ஆகவே முதலில் ஒரு பேட்ச் டெஸ்ட் செய்து பார்த்து விட்டு உபயோகிக்க தொடங்குவது நலமாகும். 

நேரடியாக சருமத்தில் பெப்பர்மிண்ட் எண்ணெயை பயன்படுத்தக் கூடாது. கரியர் எண்ணெயோடு கலந்துதான் பெப்பெர்மிண்ட் எண்ணெய் பயன்படுத்த வேண்டும். அதுவும் சில துளிகள் மட்டுமே. அதிக தேங்காய் எண்ணெய் சில துளி பெப்பர்மிண்ட் எண்ணெய் இதுவே சரியான கலவை. 

யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் பெப்பர்மிண்ட் எண்ணெயை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும். 7 வயதிற்கும் கீழான குழந்தைகளுக்கும் பெப்பர்மிண்ட் உபயோகப்படுத்த அனுமதி இல்லை. குழந்தைகள் கைகளில் எளிதில் கிடைக்காதவாறு இதனை பத்திரப்படுத்த வேண்டும். 

twitter

அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்

1. பெப்பர்மிண்ட் ஆயில் எதற்காக பயன்படுத்தப்படுகிறது ?

பெப்பெர்மிண்ட் எண்ணெய் பெரும்பாலும் சரும அழகிற்காவும் கூந்தல் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. உடல்நல ஆரோக்கிய மேம்பாட்டுக்காகவும் வலிகளைப் போக்கவும் பெப்பர்மிண்ட் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. 

2. நான் எப்போது பெப்பெர்மிண்ட் எண்ணெய் எடுத்துக் கொள்ளலாம்?

இரவு தூங்க போகும் முன்னர் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். பெப்பெர்மிண்ட் என்பது குளிர்ச்சி மிக்க பொருள் என்பதால் அரைமணியில் அதனைக் கழுவி விட வேண்டியது அவசியம். உடலுக்குள்ளே எடுக்கும் சமயம் சாப்பிடும் முன்னர் எடுக்கலாம். 

3. உங்களை உடல்நலக் குறைவிற்கு ஆளாக்குமா ?

எல்லோருக்கும் அப்படி ஆவது கிடையாது. ஒவ்வாமை அலர்ஜிகள் உள்ளவர்கள் மருத்துவர்கள் உதவியுடன் இதனை எடுத்துக் கொள்ளலாம். நேரடியாக பெப்பர்மிண்ட் எண்ணெயை பயன்படுத்தக் கூடாது. தேங்காய் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். 

4. நான் வாய்வழியாக பெப்பெர்மிண்ட் உட்கொள்ளலாமா?

நிச்சயமாக உட்கொள்ளலாம். ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவுகளுக்கு மிகாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவர் உதவியோடு எடுப்பது நல்லது. 

5. சருமத்தில் நேரடியாக பெப்பர்மிண்ட் எண்ணெயை பயன்படுத்தலாமா ?

நிச்சயமாக இல்லை. அது சருமத்திற்கு ஒவ்வாமை மற்றும் எரிச்சலை ஏற்படுத்தி விடும். கான்சண்ட்ரேட்டட் பெப்பர்மிண்ட் எண்ணெயை தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் உடன் கலந்து சருமத்தில் தடவ வேண்டும்.

6.பெப்பர்மிண்ட் எண்ணெய உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமா?

ஆமாம். பெப்பர்மிண்ட் எண்ணெயின் வாசனை நரம்புகளை தூண்டுகிறது. அதனால் உடலின் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இது உடலின் பல்வேறு ஆரோக்கிய சீர்கேடுகளை சரி செய்கிறது. சமநிலையில் இருக்க செய்கிறது. 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்

Read More From DIY Life Hacks