Entertainment

எனது பாடல் வரிகள் மயானத்தில் இருந்தே பிறக்கின்றன – 96 பாடலாசிரியர் கார்த்திக் நேதா!

Deepa Lakshmi  |  Sep 17, 2019
எனது பாடல் வரிகள் மயானத்தில் இருந்தே பிறக்கின்றன – 96 பாடலாசிரியர் கார்த்திக் நேதா!

ஒட்டு மொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் 96. அந்த திரைப்படத்தின் கதை அதையே ஒட்டியே சற்றும் பிசிறில்லாமல் சென்ற இசை,கதையோடு இயைந்த ஒளிப்பதிவு, உயிரை அறுக்கும் பாடல் வரிகள், வெகு இயல்பாக சென்ற காட்சிகள், பாத்திரமாகவே மாறிய நடிகர்கள் என இந்த திரைப்படத்திற்கான சிறப்புகள் நிறையவே உண்டு.

அதில் முக்கியமான திருப்பமாக இருந்தது என்றால் இசை. மெல்லிய மெட்டுக்கள் அதற்குள் அமர்ந்த ஆழ்மனம் வரை நீளும் பாடல் வரிகள் இந்தப் படத்தின் சிறப்பை பார்க்கும் எல்லோர் உயிரிலும் சென்று சேர்த்தது.

யாரோப்போல் நான் என்னை பார்க்கிறேன்
ஏதும் இல்லாமலே இயல்பாய்
சுடர் போல் தெளிவாய்

நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன்
கண்ணாடியாய் பிறந்தே
காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன்

நானே நானாய் இருப்பேன் நாளில் பூராய் வசிப்பேன்
போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறக்கிறேன்
வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய் பாகாய் ஆகிறேன்

எனத் தன்னை அறியத் தவிக்கும் கலைஞனின் வரிகளில் விஜய் சேதுபதி இணைந்த மாண்டேஜ்கள் லைஃப் ஆஃப் ராம் பாடலை வேறொரு உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கும்.

அதற்கு காரணமாக இருக்கும் பாடலாசிரியர் கார்த்திக் நேதாவின் (karthik netha) நேர்காணலை நான் சமீபத்தில் பிபிசி மூலம் காண நேர்ந்தது. அவரது வாழ்விற்கான விளக்கங்கள் நிச்சயம் ஒவ்வொரு உயிர்களுக்கும் சென்று சேர வேண்டிய தகவல்கள் என்று தோன்றுவதால் அந்தப் பேட்டியை இங்கே பகிர விரும்புகிறேன்.

லைஃப் ஆஃப் ராம் வந்து ஒரு வருடம் ஆகி விட்ட நிலையில் லைஃப் ஆஃப் கார்த்திக் நேதா பற்றி சொல்லுங்கள் என அவருக்கு கேள்வி வர மென்மையாய் நிதானமாய் தன்னைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார் கார்த்திக் நேதா.

இறை நேசன் என்பதை அலட்டலாக வெளிகாட்டிக் கொள்ளாத லேசாக திருநீறு தீட்டப்பட்ட நெற்றி , பெரிய கண்ணாடிகளுக்குள் சிறையிருக்கும் சாந்தம் நிறைந்த கண்கள் சிறு புன்னகையுடன் மெல்லிய குரலில் கார்த்திக் நேதா தன்னைப் பற்றி பேசுவதே ஒரு தியான அனுபவத்திற்கு நம்மைத் தயார் செய்வது போலத்தான் இருக்கிறது.

 

Youtube

கார்த்திக் நேதா தன்னை வேறு ஒரு ஆளாக பாவித்து பேச ஆரம்பிக்கிறார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆங்கில வழிக்கல்வி பிடிக்காமல் தமிழை நேசித்த தமிழ்ப்பையன் கார்த்திக் நேதா என்று தான் தன்னுடைய பேச்சை ஆரம்பிக்கிறார்.

தற்போது சினிமாவில் இருக்கிறேன் கவிதை எழுதுகிறேன் மொழிவழியே இந்த ஒட்டுமொத்த உலகின் ஆத்மாவையும் தத்துவத்தையும் கூடவே என்னையும் புரிந்து கொள்ள முயற்சிக்கிற மொழிஞன் என்று கூறுகிறார் கார்த்திக் நேதா.

திரைக்கு வந்தது பற்றி பேசுகையில் எட்டாவது படிக்கும்போது ஏற்பட்ட காதல் தோல்வியில் முடிந்தது. அந்தக் காதலின் வலியில் இருந்து தப்பிக்க பாடல் கவிதைகள் என ஓடினேன் அப்போது கேட்ட கண்ணே கலைமானே பாடல் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்து என்கிறார் கார்த்திக் நேதா.

வாசிப்பு பழக்கம் பற்றிக் கேட்ட போது அவரது தந்தை கார்த்திக் நேதாவிற்கு ஆரம்பித்து கொடுத்தது என்கிறார். அவரது தந்தை பல தத்துவ நூல்கள் படிப்பதால் சிறுவயதிலேயே தானும் தத்துவங்களுக்குள் கொஞ்சம் தலை நுழைத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன் என்கிறார் கார்த்திக் நேதா.

Youtube

அவரது ஒன்பதாம் வகுப்பிலேயே சித்தர்கள் பாடலை மனனம் செய்து சொல்லும் பழக்கம் இருந்ததாகக் கூறும் கார்த்திக் நேதா தன்னுடைய தீர்க்கமான குரலில் சிவவாக்கியரின் பாடல் ஒன்றைப் பாடுகின்றார்.

“என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே… என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின் என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ… என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டனே”

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என்கிற திருமூலரின் பாடலை சொல்லி அவ்வளவுதான் தற்போது நினைவுக்கு வருகிறது என்கிறார்.

இவரது பாடல்களில் தென்படும் துறவு நிலை பற்றிய கேள்வி எழுந்தபோது தீச்சுடர் தெறித்தது போல இவரிடம் இருந்து பதில் வருகிறது..

Youtube

இந்த சமூகம் தொடர்பு வைத்திருக்கிற பல விஷயம் எனது பாடல்களில் இருக்காது. பொருள்சார்ந்த தொடர்புகள் என் வாழ்விலும் இல்லை என் பாடல்களிலும் இல்லை மெடீரியலிஸ்ட்டிற்கான எந்தக் கூறுகளும் எனது பாடல்களிலோ அல்லது வாழ்க்கையிலோ இருக்காது. காரணம் சித்தர் பாடல்கள் மற்றும் தத்துவம் சார்ந்து எனது வாசிப்புகள்தான்.

இப்போதும் நான் எனது ஊருக்கு சென்றால் அங்கிருக்கும் மயானத்தில்தான் அதிக நேரம் செலவிடுவேன். அந்த அமைதி தனிமை அடுத்த பாடலுக்கான வரிகள் அங்கிருந்துதான் ஆரம்பிக்கின்றன என்கிறார். மேலும் நிலையாமை என்பதன் கண்கொண்ட சாட்சியாக மயானங்கள் இருப்பதாக சொல்லும் கார்த்திக் நேதா துணைக்கு திருவள்ளுவரின் நிலையாமைத் தத்துவங்களைக் குறிப்பிடுகிறார்.

நிலையாமை மட்டுமே உண்மை அதிலிருந்து விலகி வாழும் போலியான வாழ்வில் தனக்கு நம்பிக்கை கிடையாது என்றும் அது சிறு வயதிலேயே தெரிந்து விட்டதால் போலியான எதுவும் அவரது வரிகளிலோ அல்லது வாழ்க்கையிலோ இல்லை என்கிறார்.

அறிந்ததில் இருந்து விடுதலை பெற ஏன் நினைக்கிறீர்கள் என்கிற கேள்விக்கு பதில் அளிக்கையில் அறிந்ததெல்லாம் போலியாக இருக்கும்போது அதில் இருந்து விடுபட வேண்டியது நியாயம்தானே.. உண்மையை உண்மையாக பார்ப்பதே இல்லை. உண்மையின் வேர் என்பது நாம் அறிந்தவற்றில் இல்லாத போது அங்கிருந்து விலகுவதுதான் சரி என்கிறார் கார்த்திக் நேதா.

 

Youtube

அப்படி என்றால் உண்மை என்பது என்ன என்கிற கேள்விக்கு இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் அது உண்மை. நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எனது மனம் எந்த அகங்காரதிற்குள்ளும் சிக்காமல் எந்த முன் முடிவுகளும் இல்லாமல் பதில் சொல்கிறதே அதுதான் உண்மை என்று தீட்சண்யமாகக் கூறுகிறார் கார்த்திக் நேதா.

அடிக்கடி திருவண்ணாமலை செல்வது பற்றிய கேள்விக்கு அடிக்கடி செல்வதில்லை என்றும் எப்போது தோன்றுகிறதோ அப்போது செல்வதாகவும் கூறிய கார்த்திக் நேதா மாதாமாதம் இன்ன நாள் இன்ன கிழமையில் செல்வது என்று எந்த குறித்து வைத்துக் கொள்ளலும் தனது பழக்கத்தில் இல்லை என்கிறார்.

மேலும் தியானம் செய்யத் தோன்றும் போது தியானம் செய்ய வேண்டும் என்றும், பசி தோன்றும்போதே சாப்பிட வேண்டும் என்றும், காமம் தோன்றும் போதே அதனை செயல்படுத்த வேண்டும் என்றும் நமது முன்னோர்கள் கூறியது சரிதான் என்கிறார். உண்மைதான் இல்லையா.

ஏதோ ஒரு சுழலுக்குள் சிக்கிக் கொண்டு இரவானால் காமம், பகலானால் தியானம் , நேரம் தவறாத உணவு என நாம் நமது வாழ்க்கையில் ஏதோ அட்டவணை போட்டபடி வாழ்கிறோம். அதிலும் காமம் என்று வரும்போது இந்தந்த பெண்களுடன் இன்னின்ன நாளில் உறவு கொள்ள வேண்டும் இந்தப் பெண்ணோடு திரையரங்கில் , இந்தப் பெண்ணோடு கடற்கரையில், இந்தப்பெண்ணோடு அவள் வீட்டில் என பல அட்டவணைகளை போட்ட பல போலி வேஷதாரிகள் வாழும் உலகு இது. இதிலிருந்து விலகி இருப்பதே நல்லது.

கார்த்திக் நேதாவின் திரைவரவு இன்றைய தலைமுறைகளுக்கும் அடுத்த தலைமுறைகளுக்கும் நிச்சயம் அவசியமானதுதான். அறம் பற்றிய நினைவே இல்லாமல் ஒரு தலைமுறை நகர்கிறது. அதனை சரி செய்ய இயற்க்கை இப்படியான கலைஞர்களை தந்து கொண்டே இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

இந்த நேர்காணலை முழுமையாகக் காண இங்கே க்ளிக் செய்யுங்கள்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Entertainment