Lifestyle

கருக்குழியில் இருந்து வந்த குழந்தை எருக்குழியில் புதைந்தது.. சுர்ஜித்தின் கடைசி நிமிடங்கள்

Deepa Lakshmi  |  Oct 29, 2019
கருக்குழியில் இருந்து வந்த குழந்தை எருக்குழியில் புதைந்தது.. சுர்ஜித்தின் கடைசி நிமிடங்கள்

தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுதுமே இந்த நான்கு நாட்களாக ஒரே ஒரு விஷயத்தை தான் பதைபதைப்போடு உற்று கவனித்து வந்தது. திருச்சியை அடுத்துள்ள மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் மரணக்குழிக்குள் அறியாமல் விழுந்த சிறுவன் சுர்ஜித் பற்றிய செய்திதான் அது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.30 மணி வரை சுர்ஜித் (surjith wilson) என்கிற அந்த சிறு குழந்தைக்கு சந்தோஷம் மட்டுமே தெரிந்திருந்தது. விளையாடுவது மட்டுமே இந்த வயது குழந்தைகளின் சந்தோஷம். அவரது அம்மா கலாமேரி வீட்டிற்குள்ளே இருக்க தன்னுடைய நான்கு வயது அண்ணனுடன் இயற்கையோடு இயற்கையாக வீட்டிற்கு எதிரே உள்ள மண்ணில் விழுந்து ஓடி விளையாடிக் கொண்டிருந்த சுர்ஜித்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அவனது அப்பா பிரிட்டோ தோண்டிய ஆழ்துளை குழி மெல்ல மெல்ல விழுங்கியது.

Twitter

தனது கண்ணெதிரே தம்பி காணாமல் போனதை பார்த்து அதிர்ந்து போன அண்ணனின் குரல் கேட்டு கலாமேரி ஓடி வந்து பார்த்த போது சுர்ஜித் 26 அடி உள்ளே போயிருந்தான். செய்வதறியாமல் திகைத்த அம்மாவின் கதறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். உடனடியாக காவல்துறை தீயணைப்பு வீரர்கள் என தகவல்கள் பரிமாறப்பட்டது.

உடனடியாக மீட்பு குழுக்கள் அங்கே குழுமியது. குழந்தையை மீட்கும் நடவடிக்கையை வழக்கமான இயந்திரங்கள் கொண்டு ஆரம்பித்ததில்தான் அந்த உயிர் விளையாட்டு தொடங்கியது. அதுவரை 26 அடியில் இருந்த சுர்ஜித் சர சர என 70 அடிக்கும் கீழே சென்றான். அங்கிருந்து அவனை காப்பாற்ற அருகில் அதே அளவிற்கு குழி தோண்டி அதில் ஒரு வீரரை இறக்கி அங்கிருந்து சுர்ஜித் இருக்கும் இடத்திற்கு ஓட்டை போடப்பட்டு அதில் இருந்து சுர்ஜித்தை மீட்க வேண்டும் என்பதுதான் திட்டமாக இருந்தது.

Twitter

ஆனால் அதற்கான ரிக் இயந்திரங்கள் வருவதற்கான நேர தாமதங்கள் குழந்தையின் மூச்சுக்காற்றோடு பேரம் பேசியபடி இருந்ததற்கு பெயர்தான் விதி என்பதா என்று தெரியவில்லை. ரிக் இயந்திரங்கள் வந்தும் 15 அடிக்கு மேல் பாறைகள் தென்படவே மேலும் தோண்டும் பணிகள் தொய்வடைந்தன. இயந்திரம் பழுதானதை அடுத்துஇன்னொரு இயந்திரம் வந்தது. அதுவும் கடினமான பாறைகளை உடைக்க முடியாமல் பழுதாகி மீண்டும் சரி செய்யப்பட்டு வேலை செய்தது.

சுர்ஜித் உள்ளே மூச்சு விட ஏதுவாக ஆக்சிஜன் அனுப்பட்டது. அவன் பயப்படாமல் இருப்பதற்காக அவனது அம்மா கலாமேரி அவனிடம் பேசினார். அழுகாத சாமி அழுகாத சாமி அம்மா உன்னை எப்படியாச்சும் தூக்கிறேன் என்று கலாமேரி பேச அந்தக் குழந்தை உம் சரிம்மா என்றது. அதுதான் அவனது இறுதி வார்த்தை என்பது அப்போது யாருக்கும் தெரியவில்லை.

 

Twitter

எல்லோருமே நம்பிக்கையோடு இருந்தனர். இன்னும் சில மணி நேரம் இன்னும் சில மணி நேரம் என்று 80 மணி நேரம் ஆனது. அதற்கு முன்பே சம்பவ இடத்திலேயே இருந்து தொடர்ந்து பணியாற்றி வரும் அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கு சுர்ஜித்தின் உண்மைத் தன்மையை கூறி இருந்தார். குழந்தையின் உள்ளங்கை வெப்பம் வைத்து உயிருடன் இருக்கிறான் என்பதை கூறிய அவர் சிறிது நேரம் கழித்து குழந்தையிடம் அசைவில்லை மயக்கம் அடைந்து இருக்கலாம் என்று தெரிவித்தார்.

அதன் பின்னர் 80 மணி நேர முயற்சிக்கு பின்னர் ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வரவே சுர்ஜித் இறந்ததை உறுதி செய்த வீரர்கள் அதன் பின்னர் நேரடியாக ஆழ்துளை கிணற்றில் இருந்தே குழந்தையை இடுக்கி போன்ற ஒரு பொருள் மூலம் பிடித்து தூக்கினர். தனிமையின் இருட்டில் பூமிக்கு அடியில் 100 அடி ஆழத்தில் குழந்தை சுர்ஜித் மூச்சு விட முடியாமல் மரணம் அடைந்தான்.

 

Twitter

அவனது இறுதி நிமிடங்களை நினைத்தாலே நெஞ்சு பதறுகிறது. அவனுடைய தாயின் நிலைமை பற்றி நம்மால் யோசிக்க கூட முடியவில்லை. எல்லாம் முடிந்து சடலமாக மீட்கப்பட்ட சுர்ஜித்தை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று போஸ்ட்மார்ட்டம் செய்து பொட்டலமாக கொண்டு வந்து குடுத்த போது சுர்ஜித்தின் அம்மா கதறிய கதறல் இந்த பிரபஞ்சத்தை உலுக்கி எடுத்தது.

உன்னைக் கட்டிப்பிடிச்சு கதற கூட முடியாம போயிட்டேயேடா என்பதுதான் அந்தக் கதறல். முதலில் மகனை உயிரோடு மீட்க துடித்த தாய்க்கு நேரம் ஆக ஆக யதார்த்தத்தின் உண்மையை ஏற்றுக் கொள்ள துணிந்து விட்டது குறைந்த பட்சம் மகனின் முகத்தையாவது பார்த்து விட வேண்டும் என்கிற எண்ணம் வந்து விட்டது மிகப் பெரும் துயரம்.

ஆரம்பத்திலேயே கவனிக்கப்பட்டிருந்தால் 26 அடியிலேயே அந்த குழந்தையை நம்மால் உயிருடன் மீட்டிருக்க முடியும் என்கிற உறுத்தல் அங்கிருக்கும் எல்லோருக்கும் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கும் சாகும் வரைஇருந்து கொண்டே இருக்கும் என்பது நிச்சயம்.

 #Ripsujith

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Lifestyle