Dating

சுதந்திரங்களால் ஏற்படுகிற சுகவீனங்கள் – பலவீனத்தை பயன்படுத்தும் ஆண்களிடம் இருந்து நம்மை பாதுகாப்பது எப்படி

Deepa Lakshmi  |  Apr 14, 2019
சுதந்திரங்களால் ஏற்படுகிற சுகவீனங்கள் – பலவீனத்தை பயன்படுத்தும் ஆண்களிடம் இருந்து நம்மை பாதுகாப்பது எப்படி

பெண் சுதந்திரம் பற்றி பேசும் போதெல்லாம் எது பெண் சுதந்திரம் என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது. ஆணுக்கு நிகராக பெண்ணும் என்பதில் ஒரு தவறும் இல்லை. இறைவனே இதனை நமக்கு உணர்த்தத்தான் மாதொரு பாகன் ஆனான். பெண்மையை தனது ஆண்மையில் பாதியாக ஏற்று கொண்டான்.

ஆனாலும் பெண்களை உடல் பலத்தின் மூலம் ஆக்கிரமிக்க நினைக்கும் ஆண் வர்க்கத்தின் எண்ணிக்கை இருக்கத்தான் செய்கிறது. வேட்டையாடும் மிருகத்தின் மரபணு இன்னமும் ஒரு சிலருக்கு அப்படியேதான் இருக்கிறது. அவர்களிடம் இருந்து பெண்மை தன்னை எப்படியெல்லாம் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதை பற்றிய அலசல்தான் இந்த கட்டுரை.

சமூக வலைத்தளம் ( Social media )என்பது ஆண்களுக்கும் பெண்களுக்குமான ஒரு வடிகால். தன்னால் இதுவரை செய்ய முடியாமல் வைத்திருந்த விஷயத்தை எல்லாம் இறக்கி வைக்கும் இடமாக சமூக வலைத்தளம் இயங்குகிறது. சுதந்திரம் இருக்கிறதே என்று எல்லாவற்றையும் கக்காமல் தேவையானவற்றை பகிரும் ஒரு சில சாமர்த்தியசாலிகள் எல்லாவற்றில் இருந்தும் அறிவுபூர்வமாக தப்பிக்கிறார்கள்.

ஆனால் எதுவும் தெரியாமல் வெள்ளந்தி தனம் அதிகம் உள்ள பெண்களை பற்றித்தான் இங்கே சொல்ல போகிறேன். நமக்கு வேண்டிய ஒரு பொருளை சில நாட்களில் சிதைந்து போக கூடியவைகளை பார்த்து பார்த்து வாங்கும் பெண்கள் முகமறியாதவர்களுடன் நட்பு கொள்ளும்போது எவ்வளவு பாதுகாப்பாக இருந்திருக்க வேண்டும்.. ஆனால் அப்படி யாருமே இருப்பதில்லை.

முதலில் நாம் ஏன் முகநூல் என்கிற வலைத்தளத்தில் நுழைகிறோம் நாம் ஏற்கனவே அறிந்தவர்கள் உறவினர்கள் கண்டு கொள்ளாத போது அலட்சியப்படுத்தும்போது நமது திறமைகளை வெளிப்படுத்த உள்ளே நுழைகிறோம். ஏற்கனவே நேரிடை உறவு முறையில் நேரடி நட்பு முறையில் நாம் அனைவருமே நிச்சயம் சில துரோகங்களை சில வலிகளை சந்தித்திருப்போம்.

மீண்டும் முகநூலிலும் ஆயிரக்கணக்கில் நட்புவட்டத்தை அதிகரித்து என்ன செய்ய போகிறோம் என்பதை பற்றி நாம் யோசிக்க வேண்டும். கைக்குள் இருக்கும் கண்ணெதிரே இருக்கும் சில நட்பினையே நம்மால் இன்னமும் சரிவர கையாள முடிவதில்லை எனும்போது முகம் அறியாத நட்பென்பதை நாம் எப்படி கையாள போகிறோம்.,

சரி. முகம் அறிந்தாயிற்று. கொஞ்சமாய் பகிர்ந்து கொண்டோம்.. அதனோடு விடாமல் அவர்கள் உங்களை சந்திக்க விரும்பினால் நீங்கள் யோசிக்க வேண்டும் அல்லவா. பெண்கள் எப்போதும் செவி வழி மயங்குபவர்கள். இந்த உளவியலை தெரிந்து கொண்டே சிலர் உங்களிடம் இனிப்பான வார்த்தைகளால் உங்களை அசைப்பார்கள்.

உங்கள் பூரண நம்பிக்கை கிடைக்கும்வரை பொறுமையாக காத்து கிடப்பார்கள். மீனுக்காக காத்துக் கிடைக்கும் கொக்கு கூட தூய்மையான வெண்மை நிறத்தில் துறவி போலத்தான் இருக்கும். இயற்கை ஒரு சில குரூரங்களை இப்படியும் நிகழ்த்துகிறது. அதை உங்களால் புரிந்து கொள்ள முடிந்தால் எந்த பிரச்னையும் இல்லை.

பதிவுகள் என்பது உங்கள் வரவேற்பறை என்று வைத்து கொண்டால் இன்பாக்ஸ் என்பது உங்கள் அந்தரங்க அறை. உங்கள் பதிவுகளுக்கு கமெண்ட் சொல்கிறார்கள், விருப்பக்குறி இடுகிறார்கள்.. பரவாயில்லை அதனை தாண்டி இன்பாக்ஸ் எனும் உங்கள் அந்தரங்க அறைக்குள் நீங்கள் யாரையெல்லாம் அனுமதிக்கலாம் என்பதில்தான் எல்லாமே இருக்கிறது.

உங்கள் எண்களை பகிர்கிறீர்கள். சந்திப்புகளை நிகழ்த்துகிறீர்கள். சரியான மனிதர்கள் அல்லாதவரை நம் உள்ளுணர்வு நிச்சயம் அடையாளம் காட்டி கொண்டேதான் இருக்கிறது. ஓரமாக அது நின்று கூவி கொண்டிருப்பதை அலட்சியம் செய்து நம் எண்டார்பின் ஹார்மோன்களை என்கரேஜ் செய்கிறோம். கொஞ்சம் நிதானியுங்கள். உள்ளே ஏதோ சொல்கிறதே என்ன என்பதை கவனியுங்கள். அதன் உண்மைத்தன்மையை பரிசோதித்து பாருங்கள். பெண்களின் சிறந்த பாதுகாப்பு கவசம் எப்போதுமே அவர்களுடைய நுண்ணறிவுள்ள உள்ளுணர்வுதான்.

எப்போதும் முகம் தெரியாத ஒருவரை சந்திக்க முடிவெடுக்கிறீர்கள் என்றால் சில குறிப்பிட்ட காலம் வரை பொது இடத்தில் உங்கள் சந்திப்பை நிகழ்த்துங்கள். இருட்டிய தியேட்டர் அறைகள் நம் மனதின் இயல்பை எப்படி வேண்டுமானாலும் மாற்றி விடும். இருட்டில் கடற்கரையில் வரிசையாக அமர்ந்திருக்கும் காதலர்கள் இடம் புதிய உறவில் இருக்கும் நமக்கானதல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

முடிந்தவரை புதிய அறிமுகங்கள் இருந்தால் உடனே உங்கள் முகவரி கொடுத்து வரவேற்காதிர்கள். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் திறந்த மனதுடன் இருக்கலாம். ஆனால் புதிய நபர் எப்படிப்பட்டவர் என்பதை புரிந்து கொள்ள சில காலம் எடுக்கும். அதன்பின்னர் நீங்கள் அவரை அனுமதியுங்கள்.

எப்போதும் ஒரு ஆண் நடுநிலைமை தன்மையோடு தான் இருப்பான். அவன்தான் பாதுகாப்பானவன். உங்களிடம் ஆதிக்கம் செலுத்தும் ஆண்கள் நண்பர்களாக இருந்தாலும் கவனித்து பார்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஆதிக்கம் செலுத்துவது ஆணோ பெண்ணோ கொஞ்சம் விலகுங்கள் அது உங்களுக்கு நல்லது. சந்தித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது, பொது இடத்தில் குரலை உயர்த்தி பேசுவது , உங்களுடன் சண்டையிடுவது, பொருள்களை நடுரோட்டில் வீசி எறிவது போன்ற எக்ஸ்ட்ராடினரி நபர்களை நீங்கள் இன்னமும் மன்னிப்பதற்கு பதிலாக அவர்களை கவுன்சலிங் செய்வது அனைவருக்குமே நல்லது.

சமூக வலைதளத்தின் மூலம் கிடைத்த நபர்கள் உங்கள் காதலராக மாற ஆர்வம் காட்டினால் உங்களுக்கும் விருப்பம் இருந்தாலும் கூட நிறைய நேரம் எடுத்து கொள்ளுங்கள். அவர்களுடைய பழைய பதிவுகள் வரைக்கும் பாருங்கள். நல்லவனாக நீண்ட காலமாக நடிக்க முடியாது என்பதால் எங்காவது சில தவறுகள் நீங்கள் அதிர்ஷ்டம் செய்திருந்தால் உங்கள் கண்களுக்கு தட்டுப்படும். தவிர ஒருவரை நீங்கள் காத்திருக்க சொன்னால் அவரது காதலின் தரம் உங்களுக்கு விளங்கி விடும்.

நிறைய பேருக்கு இங்கு பொறுமையில்லை. நிதானமாக பழகி புரிந்து கண்ணோடு கண் கலந்து பார்க்காத நேரங்களில் உயிர் துடித்து நட்பென்றால் உயிரை கொடுக்கும் நட்பாகி இதற்கெல்லாம் நிச்சயம் காலம் ஆகும். அதற்கு பொறுமையில்லாதவர்கள்தான் டேட்டிங் ஆப்களை தேடுகின்றனர். எந்த உணர்வும் தானாக உருவாகாமல் உடனே பார்த்து உடனே பழகி உடனே பிரிவதும் இந்த பொறுமையின்மையில் தான்.

பொறுமையற்ற போலித்தனமான ஆண்கள் சில காலத்தில் உங்கள் நட்பை துண்டிப்பார்கள். அவர்கள் உங்களுக்கானவர்கள் அல்ல என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.

சுதந்திரம் என்பது நம்மை இந்த பரவெளியில் தூக்கி வெளியே வீசுவது அல்ல. நமது பெண்மைக்கான பாதுகாப்பு குறித்த அறிவும் தெளிவும் நமக்குத்தான் இருக்க வேண்டுமே தவிர அடுத்தவர்களுக்கு அது இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அப்புறம் அவர்கள் வைத்து விளையாடியதிலேயே மிக பெரிய பொம்மையாக உங்கள் வாழ்க்கை ஆகிவிடும்.

ஒருபுறம் கணவன் இல்லாமல் சுய உழைப்பால் பிள்ளைகளை காப்பாற்றும் பெண்களும் இருக்கிறார்கள். மறுபுறம் நள்ளிரவு நேரங்களில் பார்ட்டி செய்யும் பெண்களும் இருக்கிறார்கள். இரண்டுமே ஒருவகையில் தனக்கு தரப்பட்ட சுதந்திரத்தை பயன்படுத்தும் முறைதான்.

ருசி கண்ட ஆண்களுக்கோ இவ்வகை பெண்கள் என்றால் இரையை கண்ட பல்லி போலத்தான். நீங்கள் உழைப்பாளியா பார்ட்டி ஆளா என்பதில் எல்லாம் அவர்கள் வித்யாசம் பார்ப்பதில்லை… மொத்தத்தில் தனியாக வாழும் பெண்களிடம் தகுந்தாற்போல பேசினால் நமது இச்சைக்கு ஆளாக்கலாம் என்பது மட்டும்தான் அவர்கள் மூளை அவர்களுக்கு அனுப்பும் தகவலாக இருக்கும். அதன்பின்னர் பெண்கள் மீதே அபாண்டம் சொல்லி அவர்கள் அழகாக நகர்வார்கள்.

எத்தனை யுகம் ஆனாலும் இது போன்ற ஆண்கள் இருக்கத்தான் செய்வார்கள். நாம் இன்னும் அதே போல முகமூடிகளை கண்டு ஏமாறும் பெண்களாகத்தான் இருக்க வேண்டுமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

சமூக வலைத்தளமோ பொது இடமோ நமது உலகம் நமக்கானது. நமது சந்தோஷம் நம்மால் மட்டுமே உருவாகும். அடுத்தவரால் அல்ல. அவர்கள் நீங்கினால் நீங்கள் கதறுகிறீர்கள் அவர்கள் ஏமாற்றினால் நீங்கள் உடைந்து போகிறீர்கள். பின்னர் சந்தோஷம் என்பது எப்படி அவர்களால் உருவாகும்….

திரைப்படத்தில் தியாகராஜன் குமாரராஜா கூறியிருப்பது போல நமது உலகம் என்பது நாம் பிறக்கும்போது உருவாகிறது.. நாம் இறக்கும்போது அது முடிவடைகிறது.. அந்த உலகத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதை முடிவெடுக்க வேண்டியதும் நாம்தானே தவிர வேறு யாராலும் அதனை செய்ய முடியாது.

ஒருமுறைதான் இந்த வாழ்வு.. கவனமாக வாழ்ந்தால் விழிப்புணர்வும் தெளிவும் இருந்தால் அது அற்புதமான வாழ்வாக மலரும்.. ஒளிச்சேர்க்கை முடிந்த உடன் இலைகளை பக்குவமாக உதிர்க்கும் மரம் போல நம் வாழ்வு பிறரால் வலி இன்றி இறுதியில் தானாக உதிரும். டேக் கேர்.

உங்கள் உறவில் சந்தேக விரிசல்கள் விழுகிறதா? செய்ய வேண்டியது என்ன

உங்கள் எக்ஸ் பற்றிய உண்மைகளை உங்கள் துணையிடம் சொல்வது நல்லதா?

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்

Read More From Dating