Food & Nightlife

விநாயகர் சதூர்த்தி பாரம்பரிய ஸ்பெஷல் கொழுக்கட்டை செய்யும் முறைகள்

Mohana Priya  |  Aug 29, 2019
விநாயகர் சதூர்த்தி பாரம்பரிய ஸ்பெஷல் கொழுக்கட்டை செய்யும் முறைகள்

விநாயகர் சதூர்த்தி என்றாலே கொழுக்கட்டை தான் பேமஸ். கொழுககட்டை இல்லாத விநாயகர் சதூர்த்தியே இல்லை எனலாம். இப்படி பாரம்பரியம் மிக்க விநாயகர் சதூர்த்தி கொழுக்கட்டை எப்படி செய்வது என்பதை இங்கு பார்ப்போம்.

மேல்மாவு பதப்படுத்துதல்
கொழுக்கட்டை செய்வதில் மிக முக்கியமாகது மேல் மாவு தயாரிப்பது தான். மிக முக்கியமான விஷயம். அதில் தான் நிறைய பேருக்கு சந்தேகம் வரும். சிலருக்கு மாவு கிண்டும்போது பிடிக்க வராது. சிலருக்கு செப்பு செய்கிற போது விரிந்து கொண்டு போகும். அதற்கு என்ன காரணம் என்றால் மாவு செய்யும் கவனிக்க வேண்டிய பதம் தான்.

பச்சரிசியைக் கொடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பச்சரிசியை இரண்டு மணி நேரம் அளவுக்கு தண்ணீரில் நன்கு ஊற வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு மணி நேரத்துக்குப் பின் தண்ணீரை வடித்துவிட்டு, அந்த அரிசியை ஒரு வெள்ளை காட்டன் துணியில் பரப்பி விட்டு, வீட்டுக்குள் நிழலிலேயே உலர்த்த வேண்டும். அரிசி ஓரளவுக்கு ஈரப்பதத்தோடும் இருக்கும்போதே மிக்சியில் போட்டு, நன்கு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த மாவினை சலித்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது மேல் மாவு தயாரிப்பதற்கான அரைத்த மாவு ரெடி. இப்போது கொழுக்கட்டை செய்ய ஆரம்பிக்கலாம்.

கொழுக்கட்டை(kozhukattai) மேல் மாவு கிளறுதல்
தேவையான பொருள்கள்
அரிசி மாவு – 1 கப்
தண்ணீர் – ஒன்னே கால் கப்
நெய் – 1 ஸ்பூன்
உப்பு – 2 சிட்டிகை
செய்முறை
தண்ணீரை ஒரு கடாயில் ஊற்றி நன்கு சூடானதும் அதில் சிறிது உப்பு, ஒரு ஸ்பூன் நெய் விட்டு, தண்ணீரை சூடு செய்ய வேண்டும். அதில் அரிசி மாவை கொட்டி நன்கு கிளற ஆரம்பிக்கவும். அடுப்பை சிறு தீயில் வைத்துக் கொள்ள வேண்டும். கைவிடாமல் மாவை நன்கு கிளறுங்கள். அப்போதுதான் கட்டியில்லாமல் வரும். மாவு முழு தண்ணீரையும் உறிஞ்சி, பின் கடாயில் ஒட்டாமல் சுருண்டு வரும்வரை நன்கு கிளற வேண்டும். இதுதான் சரியான பதம். இந்த மாவை அடுப்பை அணைத்து விட்டு, எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின் ஆறியவுடன் உங்களுக்கு பிடித்த டிசைன்களில் செப்பு செய்து கொள்ளலாம்.

 

Youtube

தேங்காய் – எள் பூரணம் (இனிப்பு)

தேவையான பொருள்கள்
தேங்காய் துருவல் – ஒரு கப்
வெல்லம் – 1 கப்
வறுத்த கருப்பு எள் – 2 டேபிள் ஸ்பூன்
வறுத்த வேர்கடலை – 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை
ஒரு கப் தேங்காய் துருவலுக்கு ஒரு கப் வெல்லம் சரிக்கு சரியாக இருந்தால் தான் இனிப்பு சரியாக இருக்கும். வெல்லம் கரைவதற்கு சிறிது தண்ணீர் விட்டு, அதில் வெல்லத்தைப் போட்டு அடுப்பில் வைத்து நன்கு கரைய விடுங்கள். ஓரளவுக்கு திக்காக கொதிக்கவிட்டு, இறக்குங்கள். இரண்டு நிமிடம் ஓரமான எடுத்து வைத்தால் வெல்லத்தில் இருக்கும் மண் முழுக்க அடியில் தங்கி விடும். அப்போது வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கடாயில் தேங்காய், எள், ஒன்றிரண்டாக பொடித்த வறுத்த வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்து, அதனுடன் வடிகட்டி வைத்திருக்கும் வெல்லத்தை ஊற்றி அதை நன்கு கிளறுங்கள். நன்கு கிளறியதும் பதத்துக்கு வந்ததும் இறக்கிவிடுங்கள். அவ்வளவு தான் தேங்காய் எள் இனிப்பு பூரணம் ரெடி.

 

Youtube

கடலைப்பருப்பு வெல்ல பூரணம்
தேவையான பொருள்கள்
கடலைப்பருப்பு – 1 கப்
வெல்லம் – 1 கப்
ஏலக்காய் பொடி – சிறிது
தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்
செய்முறை
கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து அதை குக்கரில் போட்டு நன்கு 2 விசில் வரை மிதமான தீயில் வேகவைத்துக் கொள்ளுங்கள். வேகவைத்த பருப்பை மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கடாயில் இந்த அரைத்த பருப்பைப் போட்டு, அதில் வடிகட்டிய வெல்லத்தை ஊற்றிக் கிளறுங்கள். கிளறிக் கொண்டிருக்கும் போதே, அதில் தேங்காய் துருவலையும் ஏலக்காய் பொடியையும் போட்டு நன்கு கிளறுங்கள். நன்கு சுருண்டு வெந்ததும் இடுப்பை அணைத்து விட்டு, ஆற விடுங்கள். இப்போது பருப்பை உருண்டை பிடித்தால் உருண்டை மிக அழகாக வரும். கடலைப்பருப்பு இனிப்பு பூரணம் ரெடி.

கார கொழுக்கட்டை(kozhukattai)பூரணம்
தேவையான பொருள்கள்
உளுந்து – அரை கப்
கடலைப்பருப்பு – கால் கப்
பச்சை மிளகாய் – 3
உப்பு – சிறிது
பெருங்காயத்தூள் – சிறிது
எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை
உளுந்து மற்றும் கடலைப்பருப்பை தனித்தனியே நன்கு கழுவி ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். ஒரு மிக்சி ஜாரில் ஊற வைத்த உளுந்து, கடலைப்பருப்பு, பச்சை மிளகாய். பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து, ரொம்ப நைசாகவும் இல்லாமல் ரொம்ப கொரகொரவெனவும் இல்லாமல் ஓரளவு கொரகொரப்புடன் அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த மாவை இட்லி தட்டில் எண்ணெய் தடவி, அதில் இந்த மாவை வைத்து ஆவியில் பருப்பு உசிலிக்கு செய்வது போல் வேக வைக்க வேண்டும். பின் அதை ஆற வைத்து நன்கு உதிர்த்துவிட்டுக் கொள்ளுங்கள். ஒரு காடாயில் எண்ணெய் விட்டு, கடுகு போட்டு பொரிந்ததும் அதில் கறிவேப்பிலை சின்ன சின்னதாக கிள்ளிப் போடுங்கள். அடுத்ததாக, ஆறவிட்டு உதிர்த்து வைத்திருக்கிற மாவை அதில் போட்டு நன்கு கிளறி விடுங்கள். அது இன்னும் கொஞ்சம் அதிகமாக உதிர்ந்து வரும். அப்படி வரவில்லை என்றால், ஆறிய பின் கைகளால் நன்கு உதிர்த்து விட்டாலே போதும்.

 

Youtube

கொழுக்கட்டை(kozhukattai) தயாரித்து வைத்திருக்கிற மேல் மாவை சிறிது எடுத்துக் கொண்டு, அதை கின்னம் போல் அழகாகச் செய்து அதற்குள் உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு பூரணத்தை உள்ளுக்குள் வைத்து, மேல் மாவை அழகாக மூடுங்கள். இப்படி சொப்பு செய்ய வராதவர்கள் கவலைப்பட வேண்டாம். சிறியதாக வட்ட வடிவில் உள்ளங்கை அளவு மாவை மெலிதாகத் தட்டினால் வட்ட வடிவில் வரும். அதன் நடுவில் பூரணத்தை வைத்து மூடி விடுங்கள். அடுத்ததாக, இட்லி தட்டில் செய்து வைத்த கொழுக்கட்டைகளை வைத்து, ஆவியில் பத்து முதல் 15 நிமிடங்கள் வரை வைத்து, நன்கு வேகவிட்டு எடுங்கள். இட்லி பாத்திரத்தில் வைக்கும் தண்ணீர் நன்கு கொதித்த பின் கொழுக்கட்டையை உள்ளே தட்டில் வையுங்கள். சுவையான மணமணக்கும் பாரம்பரிய பூரணக் கொழுகு்கட்டைகள் ரெடி!.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது!ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்கு,மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From Food & Nightlife