Lifestyle

தீமைகளை எரித்து போகியைக் கொண்டாடுவோம்!!

Deepa Lakshmi  |  Jan 11, 2019
தீமைகளை எரித்து போகியைக் கொண்டாடுவோம்!!

ஜனவரி மாதம் வந்தாலே விவசாய குடும்பத்தை சார்ந்தவர்களையும் தாண்டி அனைவருக்குமே மிகுந்த சந்தோஷமாக இருக்கும். புத்தாண்டு பிறக்கிறது . கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு நாம் நன்றாக இருப்போம் என்கிற நம்பிக்கையுடன் ஜனவரியில் மக்கள் நிம்மதியாக தங்கள் வழக்கங்களைத் தோடர்வார்கள்.

ஆனால் வருடம் பிறந்த 15வது நாளில் விழாக்கால கொண்டாட்டத்தை அனுபவிப்பது தமிழன் மட்டும்தான் என்பதில் நமக்கு தனிப்பட்ட பெருமைகள் உண்டு. தமிழர்களின் இந்தப் பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

அதில் முதல் விஷயமாக இந்தப் போகி (bhogi) பண்டிகை வருகிறது. தமிழர்களுக்கு எல்லாமே கொண்டாட்டம்தான். மார்கழி மாதத்தின் இறுதி நாளை அவர்கள் போகி என்று கொண்டாடுகிறார்கள்.

பொங்கல் பண்டிகை விவசாயிகளை முதன்மைப்படுத்தி சூரியனை வழிபடும் ஒரு பண்டிகை என்பதால் மார்கழியின் இறுதி நாள் அன்று விவசாய மக்கள் தாங்கள் பயன்படுத்திய பழைய பொருட்களை குப்பையில் எரித்து புதுப் பொருட்களை வாங்கி மகிழ்வார்கள்.       

அதனையே மற்ற அனைவரும் பின்பற்றத் தொடங்கினர். தமிழர்களின் கலாச்சாரம் என்பது வெறும் சடங்குகளால் ஆனதே அல்ல. நாம் பல வருடமாக உபயோகித்து வந்த பொருட்களை மாற்ற வேண்டும் என்பது கட்டாயமாக செய்யப்படுவதால் அனைவரும் இந்நன்னாளில் புதிய புத்துணர்ச்சியை கட்டாயம் பெறுவார்கள்.

இப்படி ஒரு சடங்கு என்பது வைக்காவிட்டால் குடும்ப சூழ்நிலை மனநிலை போன்றவற்றை மையமாக வைத்து நாம் நமது இல்லங்களை சுத்தப்படுவதில் சற்று சோம்பேறித்தனம் காட்டுவோம். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என ஐந்து வருடங்களுக்குத் தள்ளிப் போடுவோம். இதையெல்லாம் மனத்தில் கொண்டுதான் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.

வருடா வருடம் வீட்டை சுத்தம் செய்து வண்ணம் பூசி கோலமிட்டு நாம் பொங்கலையும் சூரியனையும் வரவேற்கிறோம். இதனால் அனைத்து வித மக்களும் தங்கள் சிரமங்களை மறந்து மகிழ்வோடு இருக்கிறார்கள். பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடுகிறார்கள்.

போகியன்று உபயோகத்தில் இல்லாத பல பொருட்களைத் தங்கள் வீடு வாசலில் தீயிட்டுக் கொளுத்துவது மரபு. இதன் மூலம் வீட்டில் உள்ள தேவையற்ற குப்பைகள் வெளியேறும். வெளியேறிய குப்பைகள் மேலும் தேங்காமல் இருக்க அது எரிக்கப்படுகிறது.

இப்படித்தான் இதனை நாம் செய்ய வேண்டும். ஆனால் அறியாமையால் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததால் பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் போன்றவற்றை எரித்து சுற்று சூழல் மாசினை ஏற்படுத்துகிறார்கள்.

எரித்தால் எரிந்து விடக் கூடிய மரப் பொருட்கள் அப்போது ஏராளாமாகப் புழக்கத்தில் இருந்தது. இப்போதோ எல்லாமே பிளாஸ்டிக் மயமாகிவிட போகிப் பண்டிகை வந்தாலே பூமி புலம்புகிறது.

ஆகவே போகிப் பண்டிகையின் அர்த்தத்தை உணர்ந்து நாம் அதனை சரிவரக கடைபிடிக்கலாம். எரித்தே ஆக வேண்டும் என்கிற கட்டயாமெல்லாம் எதுவுமில்லை என்பதால் முடிந்தவரை குப்பைகளை அகற்றி வீட்டைக் கழுவி துடைத்து வேப்ப இலைகளில் காப்புக் கட்டுங்கள்.

இதனால் தொற்று நோய்கள் எதுவும் நம் வீட்டை அண்டாது. இதற்காகத்தான் அன்று காப்புக் கட்டுதல் என்னும் முறையை தமிழன் தனது சடங்காக உருவாக்கினான்.

போகி என்பது பழைய விஷயங்களைக் களைந்து புதிய விஷயங்களை நோக்கி செல்லுதல். இது மன ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தன் வழக்கங்களோடு போராடிக் கொண்டிருக்கிற தனி மனிதனுக்கு புது மாற்றத்தையும் தெம்பையும் அளிக்கும்.

பொங்கலுக்கு முன்னர் நாம் போகியைக் கொண்டாடுவோம். பழைய குப்பைகள் வீட்டில் மட்டுமல்ல நம் மனசிலும் இருக்கலாம். நம் மனதின் கசப்புகளை சுத்தப்படுத்தி புதிய எண்ணங்களை உருவாக்கி நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோம்.

குப்பைகளை நீக்கி விட்டால் அதற்கடுத்த நாள் இனிப்பான பொங்கல் சாப்பிடலாம். மனதில் உள்ள கசடுகளை நீக்கி விட்டால் எந்நாளும் நாம் இனிப்பாகவே இருக்கலாம்.

போகி வாழ்த்துக்கள்

—-

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

 

Read More From Lifestyle