Bigg Boss

குடும்ப சிரமங்களை சரி செய்வதற்காக பிக் பாஸ் வந்த போட்டியாளர்கள் ! சிறப்பு பார்வை

Deepa Lakshmi  |  Aug 1, 2019
குடும்ப சிரமங்களை சரி செய்வதற்காக பிக் பாஸ் வந்த போட்டியாளர்கள் ! சிறப்பு பார்வை

பிக் பாஸ் சீசன் 3 இப்போது முதல் சீசனை விடவும் வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணமாகப் பார்க்கப் படுவது போட்டியாளர்களை பிக் பாஸ் குழு முடிவு செய்த விதம்தான்.

சலித்து சலித்து பொறுமையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள்தான் இன்றைய பிக் பாஸ் சீசனை இத்தனை வெற்றிகரமாக ஆக்கியிருக்கிறார்கள். நடுநிலை என்பது மனிதன் என்று சொல்லிக்கொள்ளும் ஒவ்வொரு இதயத்திற்கும் அவசியமானது.

நடுநிலை தவறி ஒரு சார்பாக பேசுவதும் நடந்து கொள்வதும் பாகுபாடுகளால் மற்றவரைக் காயப்படுத்தி அதில் ருசி காண்பதும் ஒருவிதமான உளவியல் மனநோய். இந்த நோய் என்பது அன்றைய கூட்டுக் குடும்ப காலத்தில் இருந்து இன்றைய நியூக்ளியர் குடும்பம் வரை இருந்தபடியேதான் இருக்கிறது.

பிக் பாஸ் எனும் கூட்டுக் குடும்பத்தில் வசிக்க இந்த நடுநிலை பிறழா குணம் மிக அவசியம். அப்படிப்பட்ட குணாதிசயம் உடையவர்களை அதிகபட்சமாக தேர்ந்தெடுத்த பிக்பாஸ் குழு அவர்களுக்கு எதிரான ஒருசார்பு தன்மையுடையவர்கள் சிலரையும் உள்ளே அனுப்பியது. அப்போதுதான் சுவாரசியம் கூடும். யார் யாரை வெல்கிறார்கள் என்பது புரியும்.

இவர்களில் சினிமா வாய்ப்புகள் பெறுவதற்காக உள்ளே நுழைந்த நபர்கள் அதிகம் என்பதால் அதனைப் பற்றி நாம் அதிகம் பேச வேண்டியது இல்லை. புகழ் மற்றும் சினிமா வெளிச்சம் தன்மீது பட வேண்டும் என்று வந்தவர்கள் அதற்கான தகுதி உடையவர்களாக இருக்கிறார்களா என்பதை அவர்களே முடிவு செய்து கொள்கிறார்கள். 

Youtube

ஆனால் குடும்ப சிரமத்திற்காக (family issues) இங்கு வந்து பணம் சம்பாதித்து செல்ல விரும்புபவர்களும் இருக்கிறார்கள். அதனை இந்த சீசன் நிகழ்வுகளின் ஒவ்வொரு தருணங்களில் ஒவ்வொருவர் சொல்லக் கேட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட சிலர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியதும் ஓட்டுரிமை உள்ள நமது கடமையாகும்.

இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒருவர் இயக்குனர் சேரன். அவருக்கு அடுத்தபடியாக சரவணன். இவர்கள் இருவரில் சினிமா உலகம் மறந்து போன சரவணனைத் திரும்பக் கொண்டுவந்து கொடுத்தது பிக் பாஸ். 

சேரன் உள்ளே நுழைந்த ஆரம்பத்தில் எல்லோருக்கும் இருந்த பொதுப்பார்வை என்ன என்றால் அவர் திருமணம் படம் தந்த நஷ்டத்தை சரிகட்டவே உள்ளே வந்திருக்கிறார் என்பதுதான். ஒரு தேசிய விருது வாங்கிய இயக்குனர் தரையில் அமர்ந்து வீட்டைத் துடைப்பதை பார்க்க எத்தனை கலைஞர்களால் முடிந்திருக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் கலையை உருவாக்கிய கைகள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டியவைதான்.

இவர் இங்கு வந்து ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும் என்று அனைவரும் யோசிக்கும்போது மீரா மிதுன் சேரன் மீது அபாண்டமாக பாலியல் பழி சுமத்தினார். அதுவரைக்கும் சேரனை எதிரியாகவே பாவித்து அவரை நீ எனக்கு போட்டியே இல்லை என்று வெளிப்படையாக சொல்லி பல அவமானங்களை மீரா தந்து கொண்டே இருந்த போதும் சேரன் அதனை சகித்துக் கொண்டார்.

Youtube

ஆனால் எப்போது தன் மீது பாலியல் குற்றம் சுமத்தப்பட்டதோ அப்போதே அந்தப் பெண் ஆபத்தானவர் என்பதை உணர்ந்த சேரன் தனது இரு பெண்களை அவமானங்களின்றி காப்பாற்ற முடிவெடுத்து வெளியேற நினைத்தார்.

அந்த நிமிடம் தன் மீது வீண்பழி அபாண்டமாக சுமத்தப்பட்டதை அறிந்து கதறுகையில் சேரன் கூறியது நான் இங்கே வந்ததே என் இரண்டு பெண்களின் திருமணத்திற்காகத்தான். இப்படி ஒரு அவச்சொல் வந்த நிலையில் என் இரு பெண்களுக்கு எப்படி வெளியே சென்று சம்பந்தம் பேசுவேன் எந்த முகத்தை வைத்துக் கொண்டு சம்பந்தம் பேசுவேன் என்னை யார் நம்புவார்கள் என்றுதான் அவர் அழுதபடியே கூறினார். அதில் இருந்தே அவரது பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டித்தான் இயக்குனர் சேரன் பிக் பாஸ் நிகழ்வில் கலந்து கொண்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

சரவணன் தனது பின்புலக் கதை பற்றி பேசும்போது தனது அவமானங்கள் உறவுகள் அவரைப் புறக்கணித்த விதம், கடன்காரர்களால் அவமானப்பட்ட விதம் , பொறுமையாகத் தனக்கும் சேர்த்து சம்பாதித்துக் கொடுத்த முதல் மனைவியின் பெருமை ஆகியவற்றைப் பற்றி பேசினார். சூழ்நிலையால் இரண்டாவது திருமணமும் முதல் மனைவியின் சம்மதத்துடன் நடக்க அங்கிருந்து அவருக்கான பொறுப்புகள் ஆரம்பம் ஆகிறது. இரண்டாவது மனைவி மூலம் ஒரு குழந்தை உண்டான நிலையில் அந்தக் குழந்தையின் எதிர்காலத்திற்காக என்று சரவணனிடம் எதுவுமே இல்லை. ஆகவே அவரது குழந்தைக்காக அவனுக்கென்று ஏதாவது ஒரு வருமானத்தை ஈட்டுவதற்காகவே அவர் பிக் பாஸ் வந்ததாக அவரே கூறினார்.

மூன்றாவதாக குடும்பக் கஷ்டத்திற்காக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தவர் ரேஷ்மா என்பதை இந்த வார நாமினேஷன் சமயத்தில் அவர் முகேன் இடம் சொல்லி அழும்போது புரிந்து கொள்ள முடிந்தது. ரேஷ்மா எனும் பெண்ணின் கதை எந்த பெண்ணாலும் தாங்கி கொள்ள முடியாத ஒன்று. வீட்டில் பார்த்து வைத்த திருமணம் மூலமும் சரியான வாழ்க்கை இல்லை, இரண்டாவதாகத் தானே செய்து கொண்ட திருமணமும் வன்முறையோடு தோல்வி அடைந்தால் ஒரு பெண் என்ன செய்வாள்? தனது இரண்டாவது குழந்தை பிறக்கும் சமயம் பாதிக் குழந்தை வெளியே வந்த நிலையில் தானே காரை ஓட்டி சென்று மருத்துவமனையில் சேர்ந்த ரேஷ்மாவின் மன தைர்யம் யாருக்கும் வராது.

twitter

இரண்டு கணவரா என்று கேட்பது இந்த உலகிற்கு சுலபமான ஒன்றுதான். ஆனால் ரேஷ்மா ஒரு நேர்மையான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டவர். ஏற்கனவே இருக்கும் ஒரு குழந்தைக்குத் தகப்பனை அவர் தேடி இருக்கலாம். அல்லது தன்னைப் பார்த்துக் கொள்ள பாதுகாக்க ஒரு ஆண் அவசியம் என்பதை உணர்ந்திருக்கலாம். அல்லது மற்ற எல்லாப் பெண்களையும் போல தனக்கும் ஒரு சராசரி வாழ்வு புருஷன் பிள்ளை அவர்களை பற்றிய நினைப்பில் வாழும் நாள்கள் என வாழ நினைத்திருக்கலாம்.

இது எதுவுமே ரேஷ்மா எனும் பெண்ணிற்கு நடக்கவில்லை. அதனால் அவர் மனம் உடையவும் இல்லை. அதுதான் இங்கே பாராட்டப்பட வேண்டிய விஷயமே. தன்னுடைய முதல் கணவரும் சரி இரண்டாவது கணவரும் சரி அவரைக் காயப்படுத்தி அவர் நேசித்த மனம் துடிக்க துடிக்க பல துரோகங்களை செய்திருக்கின்றனர். ஒரு துரோகியின் குழந்தையை நான் ஏன் சுமக்க வேண்டும் என்று ரேஷ்மா நினைக்கவே இல்லை. அதுதான் தாய்மையின் பெருமை.

அப்படிக் கஷ்டப்பட்டு பெற்றெடுத்த இரண்டாவது குழந்தையும் ஆட்டிசம் பாதித்த குழந்தையாக இருந்திருக்கிறது. 

கடந்த நாமினேஷனின் போது தனது பெயர் வந்து விட்டதை உணர்ந்த ரேஷ்மா அதற்கும் நியாயமாகவே கோபப்படுகிறார். கவின் செய்த குற்றத்தை விட அதைப்பற்றி நானும் மதுமிதாவும் பேசிக்கொண்டிருந்தது உனக்கு குற்றமாக ஏன் படுகிறது என்று தனது நியாயமான வாதத்தை பேசினார். ஒரு ஆணின் தவறுகளை இன்னொரு ஆண் ஏன் கண்டிக்க முன்வரவில்லை என்கிற முதல் கேள்வியை அவர்தான் எழுப்பினார். ஆனால் நேரம் ஆக ஆக எனது குடும்பத்திற்காகத்தான் இங்கே வந்தேன் எல்லோருக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது அதையெல்லாம் யோசித்து நாமினேட் செய் என்று முகேனிடம் கூறிய ரேஷ்மா பின்னர் உடைந்து போனார். அழுதார். அதனால் முகேனும் அழுதார். பின் இதைப்பற்றி சாண்டியிடமும் கூறி அழுதார்.

இதன் மூலம் தகப்பன் இல்லாமல் இரு குழந்தைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பை ரேஷ்மா எடுத்துக் கொண்டார் என்பதும் அதில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் என்பதும் அந்தக் குழந்தையைப் பிரிய எந்த தாயாலும் முடியாது ஆனாலும் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காகவே அவர் பிக் பாஸ் வந்திருப்பதையும் நாம் உணர முடிகிறது.

ஆகவே மகள்களுக்குத் திருமணம் செய்ய வந்திருக்கும் சேரன், மகனுக்காக சேமிக்க வந்திருக்கும் சரவணன், தகப்பனாற்ற பிள்ளைகளைக் கரை சேர்க்க வந்திருக்கும் ரேஷ்மா எனும் தாய் ஆகியவர்கள் மீது நாம் கொஞ்சம் கவனத்துடன் நமது வாக்கை செலுத்த வேண்டி வரலாம். அதே சமயம் அவர்களிடம் மற்றவர்களை விட மோசமான குற்றசாட்டுகள் எழ நேர்ந்தால் நிச்சயம் நமது வாக்கை நாம் சரியான நபருக்குத்தான் செலுத்த வேண்டும். நடுநிலைத் தன்மை நம் அனைவரின் வாழ்விற்கும் அத்தியாவசியமான ஒன்று.

 

 

twitter

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From Bigg Boss