Lifestyle

ஆஸ்திரேலியாவில் அஸ்தியாகி கொண்டிருக்கும் காட்டு விலங்குகள்.. கண்ணீரில் கதறும் மக்கள்..

Deepa Lakshmi  |  Jan 5, 2020
ஆஸ்திரேலியாவில் அஸ்தியாகி கொண்டிருக்கும் காட்டு விலங்குகள்.. கண்ணீரில் கதறும் மக்கள்..

ஆஸ்திரேலியா காட்டுத்தீ தொடர்ந்து மூன்று மாதங்களாக பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. செப்டம்பரில் ஆரம்பித்ததாக சொல்லப்படும் இந்தக் காட்டுத்தீ டிசம்பரில் இறுதியில் பல ஆயிரக்கணக்கான விலங்குகளை வெறும் அஸ்தியாக மாற்றி இருக்கிறது என்கிறார்கள் வல்லுநர்கள்.

பல்லுயிர் வல்லுனரும் சிட்னி பேராசிரியருமான கிறிஸ் டிஃமென் என்பவர் ஆஸ்திரேலிய தீ (Australia fire) விபத்தால் 50 கோடிக்கும் மேலான விலங்குகளை இழந்திருப்பதாக கூறுகிறார். இந்த எண்ணிக்கையை தான் கணக்கிட்ட விதம் பற்றியும் தெளிவாக விளக்கம் அளித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் காடுகள் அழிக்கப்படுவதால் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து 2007ஆம் ஆண்டு இயற்கைக்கான உலகளாவிய நிதியத்துக்காக (WWF) தான் மற்ற ஆய்வாளர்களுடன் இணைந்து எழுதிய அறிக்கையை அடிப்படையாக கொண்டே இந்த எண்ணிக்கையை கணக்கிட்டுள்ளதாக கிறிஸ் டிக்மேன் விளக்கம் அளித்துள்ளார்.

Youtube

ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 17.5 பாலூட்டிகள், 20.7 பறவைகள், 129.5 ஊர்வன ஆகியவை வாழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையின் தரவை கொண்டு தற்போது காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பரப்புக்கு கணக்கீடு செய்வதன் மூலம் இந்த எண்ணிக்கை கிடைத்துள்ளதாக கிறிஸ் கூறுகிறார்.

நியூ சௌத் வேல்ஸின் குறிப்பிட்ட மூன்று மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பாதிப்புகளை அடிப்படையாக கொண்டு பார்க்கும்போது, அநேகமாக 480 மில்லியன் பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன போன்றவை தீவிபத்தால் பாதிக்கப்பட்டிருக்கும்” என்று பேராசிரியர் டிஃமேன் கூறுகிறார்.

மேலும் பெரிய விலங்கினங்களான கங்காரு, ஈமு மற்றும் பல்வேறு வகையான பறவைகள் ஆகியவை தங்களை நோக்கி தீ வருவதை பார்த்து சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றிருக்கக் கூடும்” என்றும் அதிக தூரம் இடம்பெயர முடியாத மற்றும் காடுகளை மட்டுமே சார்ந்து வாழும் சிறிய உயிரிகள் இந்த காட்டுத்தீயில் சிக்கி என்ன ஆகியிருக்கும் என்று நான் அஞ்சுகிறேன் என்றும் கூறி தன்னுடைய அச்சத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Youtube

இந்நிலையில், ஆஸ்திரேலியா முழுவதும் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயில் தப்பிய பெரும்பாலான விலங்குகள் போதிய இடம், உணவு இல்லாமல் உயிரிழக்கக் கூடும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

இப்போது காட்டுத்தீ அதிகமான இடத்தை ஆக்ரமித்து இருப்பதால் இந்த எண்ணிக்கை அதிகம் ஆகலாம் என்றும் பறவைகள் போன்றவை தப்பி சென்றிருக்கலாம் ஆனால் ஊர்வன போன்ற விலங்குகள் நிச்சயம் மரணித்திருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்கின்றனர் மற்ற ஆய்வாளர்கள்.

இயற்கை பேரிடர் என்பது தாண்டி சில விஷயங்கள் நம்மை மனம் கசிய செய்கின்றன. கடந்த வருடம் அமேசான் காடுகள் எரிந்ததற்கே இன்னமும் சமன் செய்யாமல் நாம் இருக்கும் நிலையில் தற்போது ஆஸ்திரேலிய காட்டுத்தீ மேலும் இயற்கை ஆரோக்கியத்தை பூமியின் வாழ்நாள் பற்றிய கேள்வியை எழுப்பி இருக்கிறது.

Youtube

மனிதர்கள் மட்டுமே இருந்தால் பூமி வாழ்நாள் அதிகரித்து விடாது. இயற்கைக்கு தன்னை சமப்படுத்த பல்வேறு உயிரினங்களின் தேவைகள் இருக்கிறது. அதற்காகவே அவை படைக்கப்பட்டும் இருக்கின்றன. இந்த நிலையில் தொடர்ந்து ஆறாம் அறிவு இருப்பதாக காட்டிக் கொள்ளும் மனிதர்களின் விதி மீறல்களால் பல்வேறு உயிரினங்கள் அழிந்து வருகின்றன.

மனிதர்களின் இடைவிடாத பேராசை காரணமாக இயற்கை இனி மெல்ல சாகும் என பாரதியின் குரல் உள்ளே கேட்கிறது. அமேசான் காடுகள் அழிந்ததற்கு அங்குள்ள பழங்குடியினரை வெளியேற்ற செய்த சதி என்கிற விஷயம் வெளியானது. ஆஸ்திரேலியா காட்டுத்தீ க்கு அந்நாட்டு பிரதமரின் அலட்சியமும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. காட்டுத்தீ சமயத்தில் பிரதமர் குடும்பத்துடன் ஹவாய் தீவுக்கு சுற்றுலா சென்றிருந்ததாக சொல்லப்படுகிறது.

ஆங்காங்கே கருகி கிடைக்கும் லட்சக்கணக்கான கங்காருக்கள் மற்றும் பல விலங்குகளின் உடல்கள் மனிதனின் சுயநலம் மற்றும் வன்மம் போன்றவற்றின் தடயங்களாக மாறி நிற்கின்றன. காட்டுத்தீயில் மிஞ்சி தப்பித்த சில மிருகங்கள் காப்பாற்றிய மனிதர்களிடம் முனகுவது என்ன என்று உங்களால் மொழிபெயர்க்க முடிந்தால்.. உலகம் பிழைக்கும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Lifestyle