நாட்களில் என்ன இருக்கிறது நம் நெஞ்சில் பொங்கும் அன்பில்தான் எல்லாமே இருக்கிறது என்பதெல்லாம் நாட்களை ஞாபகம் வைத்து கொள்ளாத நபர்களின் பெருமை பேச்சுக்கள். உண்மையில் நம் நெஞ்சில் அன்பு பொங்கியிருந்தால் அதற்கான நாளை நினைவு கூறுவது மட்டும் ஏன் முடிவதில்லை,
Table of Contents
நம் மூளை எவ்வளவோ வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வுகளை கூட நினைவு கூறுகையில் நமக்கு பிடித்தவர்களுடன் நாம் கொண்டாட வேண்டிய நாளை மட்டும் ஏன் நினைவு கூர்வதில்லை என்று பார்த்தோமானால் ஒரு விஷயம் வேண்டி விரும்பி நம் கைவசம் வந்தபிறகு அதன் மீதான அலட்சிய பார்வை நம்மிடம் இருக்கிறது.
என்னிடம் தானே இருக்கிறது எப்போது வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம் என்கிற அலட்சிய மனப்பாங்குதான் சில முக்கிய நாட்கள் பற்றிய அலாரத்தை உங்கள் மூளைக்குள் செட் செய்யாமல் போகிறது. ஆகவே அம்மா அப்பா மகன் மக்கள் மனைவி என யாராக இருந்தாலும் அலட்சியமாக அப்புறம் பார்க்கலாம் என்று நினைக்க வேண்டாம். உடனே உங்கள் அன்பை நீங்கள் செலுத்துங்கள்.இதுவே உங்கள் மூளை உங்களுக்கு முக்கியமானவர்கள் பற்றிய விபரங்களை சேர்த்து வைத்து கொள்ளும் படி செய்யும் உத்தி.
திருமண நாள் அல்லது ஒரு உறவின் ஆண்டு பூர்த்தி நாள்
முக்கியமான நாட்கள் என்றால் பிறந்த நாளுக்கு அப்புறம் மிக முக்கியமாக சொல்லப்படுவதும் கொண்டாடப்படுவதும் ஆண்டு விழாக்கள் எனப்படும் ஆனிவர்சரி (anniversary) நாட்கள். கணவர்கள் ஞாபகம் இல்லாமல் திண்டாடும் மனைவிகள் நினைவு வைத்து கொண்டாடும் அந்த நாள்தான் திருமண நாள். இரண்டு இதயங்களை இழுத்து வைத்து ஒன்றாக மஞ்சள் நூலில் தைக்கும் அந்த முக்கியமான திருமணம் நடைபெற்ற நாளை நிச்சயம் கொண்டாடிய ஆக வேண்டும்.
எத்தனையோ சங்கடங்கள் எத்தனையோ பதட்டங்கள் எத்தனையோ பரபரப்புக்கு நடுவே உங்கள் வாழ்நாள் துணையை உங்கள் குடும்பத்தில் ஒருவராக்கும் அந்த நாளை நாம் அப்படியே விட்டு விட முடியுமா என்ன. கொண்டாட வேண்டும். உங்கள் துணை உங்களோடு இருக்கும் ஒவ்வொரு கணமும் மதிப்பிற்குரியவராக பார்க்க பட வேண்டும் எனில் திருமண ஆண்டு விழா அல்லது திருமண நாளை நிச்சயம் கொண்டாடுங்கள்.
ஒவ்வொரு வருடத்திற்கான சிறப்பு நிறங்கள்
ஒவ்வொரு வருட திருமண விழாவின் போதும் நீங்கள் இந்த நிறத்தில் உடையணிய வேண்டும் என்று ஒரு விதி இருக்கிறது. நிறங்கள் மாற மாற உங்களுக்கே உங்களை பற்றி பெருமையாக இருக்கும். இத்தனை வருடங்கள் கடந்தோமா என்று ஆச்சர்யம் வரும்.
முதல் திருமண நாளில் நீங்கள் மஞ்சள் நிறம் அல்லது தங்க நிறத்தில் உடையணிய வேண்டும்.
இரண்டாவது திருமண நாளில் நீங்கள் சிவப்பு நிறத்தில் உடையணிய வேண்டும்.
மூன்றாவது திருமண நாளில் வெண்மை அல்லது பச்சை நிற உடையணிய வேண்டும்.
நான்காவது வருடம் நீல நிறம் அணிய வேண்டும்.
ஐந்தாவது திருமண நாளில் பிங்க் அல்லது கடல் நீல நிறத்தை அணிய வேண்டும்
பத்தாவது வருடத்தில் நீங்கள் சந்தேரி மற்றும் அடர்நீல உடைக்குள் அணியலாம்.
பதினைந்தாவது வருடத்தில் ரூபிக்கல்லின் சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும்.
இருபதாவது வருடம் மரகதப்பச்சை அல்லது வெண்மை நிற ஆடை அணியலாம்.
25 வருட திருமண நாளில் சந்தேரி அணிய வேண்டும்
50வது திருமண நாளில் தங்க நிறம் அணியலாம்.
இந்த நிறத்தை ஆடை என்று இல்லாமல் உங்கள் பரிசுகள் அல்லது கேக்குகளுள் இந்த நிறம் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு வருடமும் வித்தியாசப்படும் பரிசு பொருள்கள்
இது கொஞ்சம் பெண்களுக்கு அதிர்ச்சியான ஆண்களுக்கு சந்தோஷமான விஷயமாக இருக்கலாம். ஒவ்வொரு வருட திருமண நாள் அன்றும் பட்டு புடவை நகை எதிர்பார்க்கும் பெண்கள் கொஞ்சம் வருத்தப்படலாம். அவரோடு சேர்ந்து வாழும் ஒவ்வொரு வருடமும் அதிகரிக்க அதிகரிக்க உங்கள் பரிசு பொருளின் மதிப்பும் அதிகரிக்கிறது. இதுதான் சரியான வழிமுறை என்று எனக்கு தோன்றுகிறது.
முதல் வருடம் காகிதம்
இது உங்கள் முதல் திருமண வருடம். ஆர்வத்தோடு பரிசுகளை வாங்க காத்திருப்பீர்கள். ஒவ்வொரு புது விஷயங்களும் உங்களுக்கு சந்தோஷத்தை தரும். ஆனாலும் ஏன் முதல் திருமண நாளில் காகிதம் தர வேண்டும் தெரியுமா? உங்கள் முதல் திருமண நாள் ஒரு எழுதப்படாத காகிதம் போன்றது. இனி வரும் வருடங்களில் அது தன்னை தானே எழுதி கொள்ளும் தன்மை வாய்ந்தது. இனி வரும் வருடங்களில் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள் எழுதி வைக்க வேண்டி இருப்பதால் காகிதம் பரிசாக வழங்கப்படுகிறது. அற்புதமான பரிசுதான் இல்லையா!
இரண்டாம் வருடம் – பருத்தி
முதல் வருடம் என்பது ஹனிமூன்கள் மற்றும் காதல் ரொமான்ஸால் நிரம்பியது. இரண்டாம் வருடம் தம்பதிகள் ஒருவரை ஒருவர் கொஞ்சம் அறிந்து வைத்திருப்பார்கள். அவர்கள் உறவு இன்னும் இறுக்கமாகி இருக்க வேண்டும் என்பதை குறிக்கவே பருத்தி பரிசாக தரப்படுகிறது.ஒன்றை ஒன்று பின்னி பிணையும் பருத்தி போல நீண்ட காலம் உங்கள் காதல் ஆயுள் பின்ன வேண்டும் என்பதுதான் அர்த்தம். உங்கள் கணவருக்கு பருத்தியால் நெய்யப்பட்ட ஆடைகள், துண்டுகள் போன்றவற்றை பரிசளிக்கலாம்.
மூன்றாம் வருடம் லெதர் பொருட்கள்
லெதர் அதாவது தோலில் செய்யப்பட்ட பரிசுகள் ஏன் என்றால் தோல் நம்மை பாதுகாக்கிறது. நம்மை அடையாளம் காண செய்கிறது. பாதுகாப்பான உறவில் நீங்கள் இருக்கிறீர்கள் என்று உங்கள் சமூகத்திற்கு தெரிவிக்கவே தோலினால் செய்யப்பட்ட பரிசுகளை தர வேண்டும்.
நான்காம் வருடம் பூக்கள் அல்லது பழங்கள்
இந்த நான்கு வருடங்களில் ஓரளவிற்கு உங்கள் வாழ்வில் மேடு பள்ளங்களை நீங்கள் சந்தித்திருப்பீர்கள். அதனால் நான்காவது வருடத்தில் நீங்கள் உங்கள் துணையுடன் எந்த மாதிரியான வாழ்வை பகிர்ந்து கொண்டீர்கள் என்பதை நீங்கள் வழங்க போகும் பூக்கள் மற்றும் பழங்களை வைத்து அவர்கள் தெரிந்து கொள்வார்கள்.
ஐந்தாம் வருடம் மரம்
உங்கள் தாம்பத்யத்தின் வேர்கள் பலப்பட தொடங்கும் வருடம்தான் ஐந்தாம் வருடம். அது இன்னும் ஆழமாக வேர் பிடித்து விருட்சமாக வளர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் உங்கள் துணைக்கு மரத்தால் செய்யப்பட்ட பரிசினையோ அல்லது மரத்தின் நாற்றுகளையோ பரிசாகக் கொடுங்கள்.
25ம் வருடம் வெள்ளி
நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.. இப்போதுதான் நாம் வெள்ளி பரிசு வாங்கவே தகுதியாக இருக்கிறோம். அதாவது ஒரு துணையுடன் 25 வருடங்கள் சகிப்புத்தன்மையோடு வாழ்ந்தால்தான் நாம் வெள்ளி போன்ற உலோகத்தை பரிசாக பெற முடியும். வெள்ளி பொருள்களை கொடுத்து உங்கள் துணையை மதிப்பாக வைத்திருங்கள்
50 வருடம் தங்கம்
ஆக உங்கள் வாழ்க்கை துணையிடம் இருந்து நீங்கள் தங்கத்தை பரிசாக பெற வேண்டும் என்றால் அதற்கு 50 வருடங்கள் காத்திருக்க வேண்டும். ஒருவரோடு 50 வருடங்கள் ஒன்றாக வாழ்வது என்பது இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய சாதனைதான் இல்லையா. அதற்கான பலனைத்தான் நாம் 50வது வருடத்தில் தங்கத்தின் ரூபத்தில் பெற்று கொள்கிறோம். தங்கத்தில் உங்களை இழைக்க வைக்க நீங்கள் 50 வருடங்கள் விலகாமல் வாழ வேண்டும்.
இதுதான் பரிசுகள் தரும் அர்த்தங்கள். நல்ல வேலையாக இதெல்லாம் புரியாமலே நாம் வருடாவருடம் தங்கம் மற்றும் வைரங்களை வாங்கி வைத்து கொண்டாடுகிறோம். இந்த முறைப்படி செய்து பாருங்கள் உங்கள் உறவின் அர்த்தம் உங்களுக்கு புரிய தொடங்கும்.
சில திருமண நாள் வாழ்த்துக்கள்
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதாம். இவர்களின் சொர்க்கத்தை நிர்ணயித்த நாளான இன்று அதற்கான வாழ்த்துக்கள்.
இரு வெவ்வேறு செடிகளை ஒன்றாக வளர்க்கும் அற்புத உரம்தான் திருமணம். உங்கள் அன்பு வேர் பிடித்து பெரு மரமாக தழைத்து பிரியத்தின் கனிகளை உண்டாக்க எங்கள் வாழ்த்துக்கள்.
ஆயிரம் கோடி உறவுகள் சேர்ந்து கோர்த்த அற்புத மாலை இந்த திருமணம். காதல் என்பது அதிகாலை பனி போல நொடிப்பொழுதில் மறையாமல் வற்றாத ஊற்றென எப்போதும் பெருக எனது வாழ்த்துக்கள்.
இருகரம் இணைந்து எழுதும் காவியம்தான் திருமணம். இல்லறம் என்றும் நல்லறமாக வாழ்த்துக்கள்.
நான் எனும் சொல் நாம் எனும் சொல்லாக மாறும் அற்புதம் இந்த திருமண நாள். என்னில் உன்னை கரைத்த அந்த நாளிற்கு ஒரு நன்றி
இருமனங்கள் இணைந்தது பல மனங்கள் வாழ்த்தியது சுபமுகூர்த்தம்.
அற்புதமான திருமண கவிதைகள்
ஒரு ஆண் தன் தாயை கண்டடைவதும் ஒரு பெண் தனது சேயைக் கண்டடைவதும் இந்த நாளில் தான்.
அணைத்தபடி அருகில் கிடப்பது மட்டுமல்ல நினைத்தபடி தொலைவே தவிப்பதும் காதல்தான்.
புரிதலும் அறிதலும் ஒன்றாகி காதலும் அன்பும் தினம் பெருகி
ஒருமித்த எண்ணத்தில் நறுமண வாழ்வாகி உருவாகும் நாள் இந்த நாள்.
உன்னை நினைத்தாலே என் நெஞ்சில் ஆயிரம் பூக்கள் மலர்கிறது. ஒவ்வொரு பூக்களிலும் உன் இதழ்கள் விரிகிறது.
வாழ்க்கை பயணத்தில் இரு கரம் இணையும் தருணம்
சுமையெல்லாம் சுகமாக ஒன்றிணையும் இதயம்
இரு மனங்கள் சேர
ஒரு மணம் திருமணம்
திரு என்பவள் திருமதி ஆகிறாள்
பெண் என்னும் ஒளி இன்று
இன்னொரு வீட்டில் ஒளியேற்ற போகிறது .
போகிற இடம் எல்லாம் வளம் செய்யும்
நதிக்கு ஒப்பாக
நீ போகும் இடம் எல்லாம்
சந்தோசம் மட்டும் பரவும் நல்ல ஒரு தருணம்
பெண்ணுக்கு இணையாய் இன்னொரு படைப்பு
இனி இல்லை உலகத்தில்
இறைவன் தனக்கு பதிலாய்
இந்த உலகத்திற்கு பெண்ணை அனுப்பினான்
அதை கொண்டாடத்தான் இந்த திருமணம்
மணம் வீசும் மலர்களுக்கு நடுவில்
நீயும் ஒரு மலராய்
மலர் அழகா ?நீ அழகா ?
இதற்கு ஒரு பட்டிமன்றம் வைத்தாலும்
விடை கிடைக்காது
அத்தனை அழகு கொண்ட உன்னை
கைபிடிப்பான் உன் மணாளன்
அவனுக்கு என் வாழ்த்துக்கள்
இரு மனதையும் இணைக்கும்
இந்த பந்தம் என்றும் குறையாது
வாழ என் வாழ்த்துக்கள்
பெரியோர் மூலம் பெற்ற பரிசா?
பிறக்கும் போதே எழுதிய முடிச்ச?
எதுவாயினும் இனி நாம்
இருவரும் ஒருவரானோம்,
பெண்ணே!
உன்கண்களில் இனி கண்ணீர் எதற்காக,
உனக்காக இனி இருக்கும் அன்பின் வெளிபாடாக ,
உன் இறந்தகாலம் எனக்கு தேவையில்லையடி
என் நிகழ்காலம் உன்னுடன் தொடர்கையில்,
நம் எதிர்காலம் என்றும் சிறக்குமடி
ஒருவரைவொருவர் புரிந்துகொள்கையில்,
காதலின் முழுமை
தொடக்கத்தில் இல்லையடி,
முதுமையில் உள்ளதடி,
நிச்சயம் நாம் பொறுவோம்
வா இருவரும் புதுபயணம் கொள்வோம்
வழக்கமான மாலை மல்லிகையும் இன்று
அதிகாலையில் மொட்டு மலர்ந்தது;
இந்த ஆத்மார்த்ம தம்பதியரின்
அழகிய முகூர்த்தம் கண்டு விட…
என் மனையாளனின்
கைகளின் சம்பாஷனை
அது ஒரு…
மழை வந்த தேசத்தின் மண் வாசனை !
இதுவரை…
வளையொலி கொலுசொலி அம்மா வீட்டில்
இனிமேல் எனக்கு
முத்தாய்ப்பாய் மெட்டி ஒலி…
அது என் அத்தான் வீட்டில்…!
மாவிலையில் தோரணம், குலை காய்த்த வாழை மரம்
பூச்சரத்தில் அலங்காரம், எட்டுக்கட்டும் நாதஸ்வரம்
ஆம்…
இது எந்தன் திருமணம்!
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.
Read More From Planning
தாலி இல்லை நகைகள் இல்லை.. பாட்டியின் புடவையில் வைஷ்ணவி நடத்திய வாவ் திருமணம் !
Deepa Lakshmi
திருமண நாள் நெருங்கி விட்டதா? குறைபாடற்ற பிரைடல் மேக்கப்பிற்கான 8 படிகள் !
Nithya Lakshmi