குயின் வெப் சீரிஸ் - நாம் அறிந்த தலைவியின் அறியாத அத்தியாயங்களை புரட்டிப் பார்க்கிறது!

குயின் வெப் சீரிஸ் - நாம் அறிந்த தலைவியின் அறியாத அத்தியாயங்களை புரட்டிப் பார்க்கிறது!

தமிழ் மக்களின் ஒட்டு மொத்த ப்ரியத்துக்கும் பெயர் போன ஒரே பெண்மணி மறைந்த முதல்வர் ஜெயலலிதா. எதிரிகளுக்கும் பிடித்த ஒரு சிறந்த பெண்மணியாகவே அவர் திகழ்ந்தார். அவரது பொறுமையும் பக்குவமும் ஆண்டுக்கு ஆண்டு கூடிக் கொண்டே போனதை கண்கூடாக தரிசித்தவர்கள் தமிழக மக்கள்.

அதே சமயம் அரசியலை அதன் தந்திரங்களை கரைத்து குடித்தவர் என்பதும் அரசியல் நிர்வாகத்தில் அவர் ஒரு பெண் சிங்கமாக திகழ்ந்தவர் என்பதும் யாராலும் மறுக்கவே முடியாத உண்மை. ஒரு இரும்பு பெண்மணியாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா திகழ்ந்தார்.

 

Youtube

மறைந்த முதல்வர் ஜெயலலிதா (jayalalitha) சிமி கெர்வாலுக்கு முன்பு அளித்த பேட்டியை அடிப்படையாக வைத்து குயின் (queen web series) என்கிற வெப் சீரிஸை இயக்கி இருக்கிறார்கள் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரசாந்த் முருகன் ஆகியோர். இதே முறையிலேயே இயக்குனர் ஏ எல் விஜய் தலைவி என்றொரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதைப் போலவே அயர்ன் லேடி என்கிற பெயரிலும் ஒரு படம் தயாராகி வருகிறது.

செய்திகளில் மற்ற படங்கள் முந்திக் கொண்டாலும் கெளதம் வாசுதேவ் மேனனின் (GVM) குயின் ரிலீஸில் முந்திக் கொண்டது. வெப் சீரிஸ் என்பதால் அப்படி ஒரு வசதி. ஜெயலலிதாவின் குழந்தைப் பருவத்தில் வறுமை அவரை வாட்டியது எனும் தனித்துவத்தை இதில் காட்டியிருக்கிறார்கள். பெரும்பாலோருக்கு அது தெரியாது என்பதே உண்மை.

 

Youtube

எழுத்தாளர் அனிதா சிவகுமாரன் எழுதிய தி குயின் எனும் புத்தகத்தை அடிப்படையாக கொண்டே இந்த சீரிஸ் ஆரம்பிக்கப்பட்டது. அப்போதில் இருந்தே எதிர்பார்ப்புகள் பலமாக இருந்தது. எதிர்ப்புகளும்தான். வழக்கு விசாரணை முடிந்து ஒருவழியாக டிசம்பர் 14ம் தேதி இந்த தொடர் ஒரு செயலி மூலம் வெளியாகி இருக்கிறது.

இந்த தொடரில் சக்தி சேஷாத்ரி என்கிற பெயரில் ஜெயலலிதாவாக நடித்திருப்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். ஜெயலலிதா சிமி கெர்வால் பேட்டியின் போது தன்னைப் பற்றி சொன்ன விஷயங்களை ரம்யா கிருஷ்ணன் பகிர்வது போல கதை செல்கிறது.

Youtube

மொத்தம் 11 பாகங்களாக வெளிவந்துள்ள இந்தக் கதையில் நான்காவது பாகத்தில் உள்ளே வருகிறார் GMR என்கிற MGR கதாபாத்திரம். கருணாமூர்த்தி என்பது கருணாநிதி கதாபாத்திரம் ஆகவும் ஜனனி என்பது ஜானகியின் கதாபாத்திரமாகவும் பெயரிடப்பட்டிருக்கிறது.

வெளியில் அதிகம் தெரியாத மற்றொரு விஷயமான ஜெயலலிதா ஜானகி இடையேயான கசப்புகள் இந்த சீரிஸில் விரிவாக பேசப்பட்டிருக்கிறது. சர்ச்சைக்குரிய பெண்ணாக ஆரம்பத்தில் இருந்தே சொல்லப்பட்ட ஜெயலலிதாவின் அம்மா கதாபாத்திரத்தின் நிஜத்தன்மைகளை இந்த சீரிஸ் தெளிவாக்கி இருக்கிறது.

 

Youtube

ரம்யா கிருஷ்ணனுக்கு அம்மாவாக சோனியா அகர்வால் நினைத்துப் பார்க்க முடியாத விதத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்த இந்திரஜித் சுகுமாரன் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றிருக்கிறார். ஜெயலலிதாவின் இளமைப்பருவ பெண்ணாக வரும் அஞ்சனா ஜெயப்ரகாஷ் சிறப்பாக செய்திருக்கிறார்.

குழந்தைப்பருவத்தில் ஜெயலலிதாவிற்கு படிப்பில் இருந்த ஆர்வம் , பள்ளியில் அவருக்கு நடந்த அவமானங்கள் ஆகியவை சொல்லப்பட்டிருக்கிற விதம் மனதை ஈர்க்கிறது. வழக்கறிஞர் ஆகவேண்டும் என்பது ஜெயலலிதாவின் கனவாக இருக்க வறுமை காரணமாகவே அவர் சினிமாவுக்குள் நுழைகிறார் என்பதை குயின் சீரிஸ் சொல்லியிருக்கும் விதம் அருமை.

 

Youtube

அதைப்போலவே திரைத்துறைக்குள் அவர் நுழைந்த உடன் அதில் அவர் சந்தித்த அவமானங்கள் சவால்கள் ஆகியவற்றை பற்றியும் இந்த சீரிஸ் விரிவாகவே பேசுகிறது. ஜெயலலிதா அம்மா அவருக்கு எப்படிப்பட்ட ஒரு சக்தியாக இருந்தார் என்பதும் அவர் இறந்த உடன் ஜெயலலிதாவின் மனநிலை எவ்வாறு இருந்தது என்பதும் இதில் அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

ஜெயலலிதாவை அரசியலுக்குள் அழைத்து வரும் எம்ஜிஆரின் மரணத்தோடு இந்த வெப் சீரிஸ் முடிவடைகிறது. எம்ஜிஆரின் மரண ஊர்வலத்தில் அமரர் ஊர்தியிலிருந்து கீழே இறக்கி விடப்படும் ஜெயலலிதா காட்சிகளுடன் சீரிஸ் முடிவடைகிறது.

ஒளிப்பதிவு எஸ் ஆர் கதிர். பீரியட் திரைப்படத்திற்கான வித்தியாசங்களை அற்புதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். என்னை நோக்கி பாயும் தோட்டா தர்பூகா சிவன் பின்னணி இசையில் குயின் சீரிஸ் அழகாக நகர்கிறது.

Youtube

அனைவரும் வியக்கும் ஒரு ஆளுமையின் சுயசரிதம் என்பதால் குயின் வெப் சீரிஸ் பார்த்தாக வேண்டிய ஒரு சீரிஸ் தான். லிப் சிங்குகள் சமயங்களில் ஒத்துப் போகாமல் நம்மை கதைக்குள் ஓட்ட விடாமல் செய்கிறது. கெளதம் வாசுதேவ் மேனன் காதல் கதையை கூட மெதுவாகவே நகர்த்திக் கொண்டு போவார். இது சுயசரிதம் என்பதால் திரைக்கதை மெதுவாகவே நகர்கிறது. ஆனாலும் கதாபாத்திரத்தின் அழுத்தம் நமக்கு புரிபட இதை செய்துதான் ஆகவேண்டும்.

தன்னுடைய வாழ்நாள் முழுக்க துரோகங்களையும் ஏமாற்றங்களையும் மட்டுமே பார்த்த ஒரு பெண், தன்னுடைய இயல்பான கனவுகளை கூட நிறைவேற்ற முடியாமல் போன ஒரு பெண், காரணமே இல்லாமல் நிராகரிக்கப்படும் ஒரு பெண், அவமானப்படுத்தப்படும் ஒரு பெண், ஒரு உயர்ந்த மனிதரின் கையில் விளையாட்டு பொம்மையாக மாறிய ஒரு பெண் தன்னுடைய தடைகளை எப்படி எதிர்கொள்கிறாள் அவமானங்களை எப்படி பயன்படுத்தி கொள்கிறாள், நிராகரிப்புகளையும் புறக்கணிப்புகளையும் துரோகங்களையும் எப்படி தாண்டி வருகிறாள் என்பதை துல்லியமாக வாழ்ந்து காட்டி ஒவ்வொரு பெண்ணுக்கும் தனிமையில் பலரின் சூதுக்களால் தவிக்கும் பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

அவரது இந்த சுயசரிதம் சொல்லும் குயின் வெப் சீரிஸ் ( #QueenisComing ) அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு சீரிஸ்.  

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!