தீபாவளி பண்டிகையையொட்டி நகரம் முழுவதும் இப்போதே பட்டாசுகள் வெடிக்க தொடங்கியுள்ளனர். தீபாவளி பண்டிகையை அமைதியான முறையில், மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு பட்டாசுகளை வெடித்து கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் எந்த ஒரு வலியுறுத்தலுக்கும் உட்படாமல் தாங்களாகவே பாட்டாசுகள் இன்றி அமைதி தீபாவளியை (silent diwali) கொண்டாடும் கலாசாரத்தை தமிழகத்தில் உள்ள சில கிராமங்கள் பின்பற்றி வருகின்றனர். அவை எந்தெந்த கிராமங்கள் என்றும், அதன் வியத்தகு காரணங்கள் குறித்தும் இங்கு விரிவாக காண்போம்.
திருச்சி
திருச்சி – திண்டுக்கல் அருகே உள்ள இரு கிராமங்கள்தான் தோப்புப்பட்டி, சாம்பட்டி. இந்த கிராமங்களின் நடுவே பழைமை வாய்ந்த ஆலமரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் கிளைகளில் ஆயிரக்கணக்கான வௌவால்கள் வசித்து வருகின்றன.
இந்த ஆலமரத்தின் அருகில் கிராம மக்களின் குலதெய்வமாக கருதப்படும் முனியப்ப சாமியின் சிலை அமைக்கப்பட்டு நூற்றாண்டு காலமாக வழிபட்டு வருகின்றனர். இதனால் வௌவால்களையும் தெய்வத்தின் பிம்பமாக போற்றி வருகின்றனர் அந்த கிராம மக்கள்.
எத்தனையோ தலைமுறைகள் கடந்தாலும், வீர தோற்றத்துடன் கிராமத்திற்கு அழகு தரும் ஆலமரமும், மரக்கிளைகளை விட்டு விலகாத வௌவால்களையும் கிராம மக்கள் பெரிய சொத்தாக பார்க்கின்றனர்.
இதனால் பட்டாசு சத்தங்களினால் அவற்றை தொந்தரவு செய்யக்கூடாதென ஒவ்வொரு தீபாவளியையும் அமைதியான முறையில் கொண்டாடி வருகின்றனர். இது குறித்து பேசிய அந்த கிராமத்தில் இருக்கும் 70 வயதான கிராம வாசி ஒருவர், இது ஒரு நூற்றாண்டு பழமை வாய்ந்த கதை.
ஆரம்ப நாட்களின் இந்த கிராமத்தில் பிராமணர்கள் மட்டும் வசித்து வந்தனர். அப்போது இங்குள்ள ஆலமரத்தில் ஆயிரக்கணக்கான வௌவால்கள் பழங்களை சாப்பிட வந்து சென்றுள்ளன. இதை கண்ட ஆண்கள் மரத்தில் ஏறி சென்று, தண்ணீரை ஒரு பைக்குள் அடக்கி அதை கிளைகளில் தொங்க விடுவார்கள்.
இதை நான் என் சிறு வயதில் பார்த்துளேன். அதன்பிறகு இந்த கிராமத்தில் இருந்த பிராமணர்கள் படிப்படியாக வேறு இடங்களில் சென்று விட்டனர். அந்த வழக்கத்தை நாங்களும் தற்போது வரை பின்வற்றி வருகிறோம் என்று கூறியுள்ளார்.
அந்த வௌவால்களுக்கு எவ்வித தொந்தரவும் இருக்க கூடாது என்றும், பாட்டாசுகள் வெடித்தால் அவைகள் வேறு இடத்திற்கு சென்று விடும் என்பதாலும் தற்போது வரை பட்டாசுகள் வெடிக்காமல் அந்த கிராம மக்கள் தீபாவளி (silent diwali) கொண்டாடி வருகின்றனர்.
வேட்டங்குடி
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகேயுள்ள வேட்டங்குடியில் பறவைகள் சரணாலயம் உள்ளது. வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் சுமாா் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் வருகின்றன.
இந்த பறவைகள் நலன் கருதி அந்த கிராம மக்கள் அமைதியான முறையில் தீபாவளி கொண்டாடி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வேட்டங்குடிப்பட்டி, கொள்ளுக்குடிபட்டி கிராம மக்கள் சுமாா் 40 ஆண்டுகளுக்கு மேலாக தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதை தவிா்த்து வருகின்றனா்.
மேலும் கோயில் விழாக்காலங்களிலும் மற்ற நிகழ்வுகளுக்கும் பட்டாசு வெடிப்பதில்லை. பறவைகளுக்காக இம்மக்கள் செய்யும் தியாக உணா்வை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் வனத் துறை சாா்பில் இனிப்புகள் வழங்கி கௌரவிக்கப்படுவது வழக்கமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
கழுப்பெரும்பாக்கம்
புதுவை அருகே உள்ள கழுப்பெரும்பாக்கம் கிராம மக்களும் பல தலைமுறைகளாக பட்டாசு வெடிப்பதில்லை. வானூர் வட்டத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் தற்போது 1500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
பட்டாசு வெடிக்காமலேயே தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இங்கு பட்டாசு வெடிக்காததற்கு முக்கிய காரணம் இந்த ஊரின் மத்தியில் ஒரு ஆலமரம் உள்ளது. இந்த ஆலமரத்தில் மக்களின் எண்ணிக்கைக்கும் அதிகமாக வௌவால்களே உள்ளன.
இரவில் உணவு வேட்டை நடத்தி விட்டு பகலில் மரக்கிளைகளில் தொங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் பட்டாசு வெடித்தால் அது அவைகளுக்கு ஆபத்தாக முடியும் என்பதாலும் அமைதியான முறையில் தீபாவளியைக் (silent diwali) கொண்டாடுகின்றனர்.
தச்சன்கரைவழி
சென்னிமலை அருகே உள்ள தச்சன்கரைவழி கிராமத்தில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்குள்ள வெள்ளோடு மேட்டுப்பாளையம் பறவைகள் சரணாலயத்தில் அவ்வப்போது வெளி நாட்டு பறவைகளும் வந்து செல்கின்றன.
அமைதியை தேடி வரும் பறவைகளுக்கு பட்டாசு சத்தம் தொந்தரவாக இருக்கக் கூடாது என்பதற்காக பறவைகள் சரணாலயத்தை சுற்றி உள்ள கிராமங்களில் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில்லை.
மேட்டுப்பாளையம், தச்சன்கரைவழி, செம்மாண்டாம்பாளையம், செல்லப்பம்பாளையம், புங்கம்பாடி, மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் பட்டாசுகளை மக்கள் வெடிப்பதில்லையாம். தற்போது வரை அமைதியான முறையில் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!