மூன்று வித்தியாசமான சுவையான ஆப்பிள் உணவுகள் (ரெசிபி உள்ளே!)

 மூன்று வித்தியாசமான சுவையான ஆப்பிள் உணவுகள் (ரெசிபி உள்ளே!)

‘தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடமே செல்லத் தேவை இல்லை’ என்ற கருத்தை அனைவருமே கேள்விப்பட்ட ஒன்று. ஏனெனில், ஆப்பிளில் அந்த அளவிற்கு வைட்டமின்களும், புரதச் சத்தும் நிறைந்திருக்கிறது. சத்துக்கள் உடலை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைக்க உதவுகின்றது.

ஆப்பிளின் பயன்கள்

ஆப்பிள் இருக்கும் சத்துக்கள் என்ன, அவற்றின் பயன்கள் என்ன என்று விரிவாக பார்க்கலாம்.

 1. குவர்செடின் என்னும் சத்து ஆப்பிளில் அதிகம் இருப்பதால், இருதய நோய் மற்றும் நுரையீரல், மார்பகம், பெருங்குடல் ஆகிய இடங்களில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
 2. ஆப்பிளில் உள்ள பொட்டாசியம் அதிக இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். 
 3. ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவுகிறது. உடல் பருமனையும் குறைக்க உதவுகிறது. குடலில் ஏற்படும் எரிச்சலையும் குறைகிறது.
 4. ஆப்பிளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை இருப்பதால், மூளை செல்களை அழிக்கும் அல்சிமியர் நோய், பார்க்கின்சன் நோய் ஆகியவை வராமல் காக்கிறது. மேலும், உடல் வலிமையை அதிகரித்து, இரத்த சோகை வராமல் தடுக்கிறது. நுரையீரலின் இரத்த ஓட்டத்தை சீராக்கி மூச்சுத் திணறல், ஆஸ்துமா போன்ற சிரமங்களில் இருந்து விடுவிக்கிறது. 
 5. ஆப்பிளில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் ஏ சக்தி இருப்பதால் கண் புரை விழாமல் தடுக்கிறது.
 6. ஆப்பிளில் கொலாஜென் மற்றும் எலாஸ்டின் இருப்பதால் சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது.
 7. ஆப்பிளில் போலிக் அமிலம் இருப்பதால் பித்தப்பை கற்கள் உருவாவதைத் தடுத்து மென்மையாக வைக்கிறது.
 8. ஆப்பிளில் உள்ள இரும்புச் சத்து இரத்த சோகை வராமல் காக்கிறது. நியாபக சக்தியை அதிகரிக்கிறது. 
 9. ப்ரோடிஜின் என்னும் பிலோனாய்டு ஆப்பிளில் இருப்பதால், எலும்புகளை வலுவாக்குகிறது. பற்களையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
 10. பாலிஃபீனால்கள் ஆப்பிளில் இருப்பதால், நாம் உண்ணும் உணவில் இருந்து க்ளுகோஸ் அளவுகளை குறைவாகவே இரத்தத்தில் கலக்கச் செய்யும். இரத்த சக்கரை அளவை சீராக்கி நீரழிவு நோயை கட்டுப்படுத்தும்.

ஆப்பிள் உடன் முயற்சிக்க சில சுவையான ரெசிபி( Apple recipe)

பொதுவாக ஆப்பிளை அப்படியே வெட்டி சாப்பிடுவோம், அல்லது ஜூஸ் செய்து குடிப்போம். ஆப்பிள் சீசன் நெருங்கி விட்ட நிலையில், இதை பயன்படுத்தி பல சுவையான உணவுகளையும் (apple dish) செய்யலாமே! . இங்கு நாம்,

1. ஆப்பிள் ஹல்வா
2. ஆப்பிள் புலாவ்
3. ஆப்பிள் குழம்பு/கறி

ஆகியவற்றை எப்படி செய்வது(recipe) என்று பார்க்கலாம்.

1. ஆப்பிள் ஹல்வா

Pinterest

நாம் பல விதமான ஹல்வா செய்து சுவைத்திருக்கிறோம். மிகவும் எளிதாக விரைவில் ஆப்பிள் ஹல்வா செய்வது எப்படி(ரெசிபி) என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் - 2
முந்திரிப்பருப்பு - 5
பாதாம்பருப்பு  - 5
உளர் திராட்சை - 5
நெய் - 3 தேக்கரண்டி 
ஏலக்காய்த்தூள் - ¼ தேக்கரண்டி 
பால் - ½ கப் 
சக்கரை - ½ கப் 
குங்குமப்பூ - 3

செய்முறை:

 1. முந்திரி, பாதாம் பருப்புகளை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். குங்குமப்பூ சிறிது பாலை ஊற்றி ஊற விடுங்கள். ஆப்பிளை தோள் நீக்கி கேரட் துருவது போல கிரேட்(grate) செய்து கொள்ளுங்கள். 
 2. பிறகு ஒரு கடாயில் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து அடுப்பில் வைக்கவும். துருவிய ஆப்பிளை நெய்யில் போட்டு சிறிது நேரம் மிதமான தீயில் வதக்கவும். ஆப்பிளில் உள்ள தண்ணீர் வற்றியதும், நறுக்கி வைத்த முந்திரி, பாதாம் பருப்புகள், மற்றும் திராட்சையை சேர்த்து மேலும் வதக்கவும். ஏலக்காய் தூள், மற்றும் ஊறிய குங்குமப்பூவையும் சேர்த்து கலக்கவும்.
 3. சிறிது நிமிடம் வதக்கியதும், சக்கரை மற்றும் பால் சேர்த்து மேலும் வேகவிடவும். சக்கரை கரைந்து திடமாக ஆகும்வரை, 10-15 நிமிடங்கள் கலக்கிக்கொண்டே இருக்க வேண்டும். மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கிக் கொள்ளலாம். நன்றாக ஒன்று திரண்டு வந்ததும், அடுப்பை அனைத்து அல்வாவை சுவைக்கலாம்!

2. ஆப்பிள் புலாவ்

Pinterest

புலாவ் பிரியரா நீங்கள்? ஆப்பிள் பயன்படுத்தி லேசான இனிப்பு சுவையில் புலாவ் செய்து உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள். சுவைத்துச் சாப்பிடுவார்கள். நீங்கள் அசைவ பிரியராக இருந்தால், க்ரில்ட் சிக்கன் அல்லது மீன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். சரி, ஆப்பிள் புலாவ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் - 1
எண்ணெய் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 1
பூண்டு - 1
பாஸ்மதி அரிசி - 1 கப்
உளர் ஆப்ரிகாட்ஸ் - ¼ கப்
பட்டை - 1 துண்டு
இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
கொத்தமல்லித்தூள் - 1 ¼ தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
வருத்த பாதாம் பருப்பு - ½ தேக்கரண்டி

செய்முறை:

 1. பாஸ்மதி அரிசியை சுத்தம் செய்து தண்ணீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும். 
 2. ஒரு அடி கனமான பாத்திரத்தை மிதமான சூட்டில் வைத்து எண்ணெய் ஊற்றவும். 
 3. எண்ணெய் காய்ந்ததும், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன் நிறமாக வதக்கவும்.
 4. சிறு துண்டுகளாக சாப் செய்த பூண்டை சேர்த்து ½ நொடி வதக்கவும்.
 5. தண்ணீர் வடித்த அரிசி, நறுக்கிய ஆப்பிள், உளர் ஆப்ரிகாட்ஸ், பட்டை, இஞ்சி, கொத்தமல்லித்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
 6. 2கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தீயை குறைத்து மிதமான சூட்டில் 20 நிமிடங்கள் மூடி போட்டு வேக விடவும்.
 7. அடுப்பை அனைத்து, மிளகுத் தூள் தூவி, நறுக்கிய பாதாம் பருப்புக்களையும் தூவி அலங்கரிக்கவும்.

எளிதாக, வித்யாசமான சுவையில் ஆப்பிள் புலாவ் ரெடி!

3. ஆப்பிள் குழம்பு/கறி

Pinterest

ஆப்பிள் பயன்படுத்தி இனிப்பு செய்யலாம், குழம்பு கூட செய்யலாமா! ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆப்பிள் கொண்டு எப்படி அசத்தலான கறி(curry) தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் - 2
முந்திரி - 50 கிராம்
குடைமிளகாய் - 1
கிரீம் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
வெங்காயம் - 1
தக்காளி - 2
நட்சத்திர சோம்பு -1
பட்டை - 1 துண்டு
வரமிளகாய் - 1
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
சக்கரை - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
எலுமிச்சை - 1
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
கொத்தமல்லித்தலை - சிறிது

செய்முறை:

 1. முதலில், முந்திரி பருப்பையும், தக்காளியையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
 2. ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், தோள் நீக்கி துண்டுகளாக்கிய ஆப்பிளை போட்டு 2 நிமிடம் வதக்கவும். எண்ணெய் வடித்து ஆப்பிள் துண்டுகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
 3. அதே கடாயில், நட்சத்திர சோம்பு, பட்டை, மிளகாய் சேர்த்து வதக்கவும். 
 4. பிறகு, சிறிதாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
 5. வெங்காயம் வதங்கியதும், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
 6. பிறகு நறுக்கிய குடைமிளகாயை போட்டு லேசாக வதக்கவும்.
 7. இதில், வரமிளகாய்த் தூளையும், முந்திரி, தக்காளி சேர்த்து அரைத்த விழுதையும் போட்டு நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள்.
 8. பிறகு, நெருப்பை குறைத்து, மிதமான சூட்டில், எலுமிச்சை சாறு, மற்றும் கிரீம் சேர்த்துக் கொள்ளுங்கள். பச்சை வாசனை போக வதக்குங்கள்; எண்ணெய் பிரிந்து வரும்.
 9. இப்போது, பொறித்த ஆப்பிளை சேர்க்கவும்.
 10. பின் இறுதியாக கரம் மசாலா மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தலையை தூவுங்கள். ஒரு நிமிடம் கலக்கி இறக்குங்கள்.

ரிச்சான ஆப்பிள் கறி தயார்!சப்பாத்தி, ரோட்டி, நாண் போன்றவற்றிற்கு சரியான காம்பினேஷனாக இருக்கும்.

சிலருக்கு இனிப்பு சுவை பிடிக்கும், சிலருக்கு காரம் பிடிக்கும். ஆப்பிள் இனிப்பு சுவையாக இருந்தாலும், அதில் இரண்டு வகையான பதார்த்தங்களும் செய்யலாம் என்பதைப் பார்த்தோம். வரப்போகும் பண்டிகைகளுக்கு  ஆப்பிள் பயன்படுத்தி ஆரோக்கியமான உணவுகளை சமைத்து அசத்துங்கள்! 

 

மேலும் படிக்க - கொலு நிவேத்தியம் – நவராத்திரி பூஜை பலகாரங்கள்

மேலும் படிக்க - சுவையான சைவ மீன் குழம்பு செய்வது எப்படி?

பட ஆதாரம்  - Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!