சுவையான சைவ மீன் குழம்பு செய்வது எப்படி?

சுவையான சைவ மீன் குழம்பு செய்வது எப்படி?

என்னது, சைவ மீன் குழம்பா?! அசைவ பிரியரா நீங்கள்? ஆனால் புரட்டாசி மாதம் சாப்பிட மாட்டீர்களா? வருத்தப் படாதீர்கள். இதோ உங்களுக்காகவே ருசியான வெஜ் மீன் குழம்பு (veg fish curry/kulambu) இருக்கிறது! இதன் செய்முறையைப் பார்க்கலாம்.

சைவ மீன் செய்முறை

தேவையான பொருட்கள்: 

பாசிப்பயிறு(பயத்தம்பருப்பு) - 1 கை அளவு

தட்டப்பயிறு     - 1 கை அளவு

மிளகாய்த்தூள் - 2½ தேக்கரண்டி

மல்லித்தூள் - 1½ தேக்கரண்டி

மஞ்சள்தூள் - ¼ தேக்கரண்டி

சீரகம் - ½ தேக்கரண்டி

சோம்பு - ½ தேக்கரண்டி

துருவிய தேங்காய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

பாசிப்பயிறு, தட்டப்பயிறு இரண்டையும் 8 மணி நேரம்(இரவு தூங்குவதற்கு முன்) ஊறவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். அதோடு சீரகம், சோம்பு, துருவிய தேங்காய்(வெஜ் மீன் மருதுவாக இருக்க), உப்பு(வெஜ் மீனிற்கு மட்டும்) ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பிறகு, ஒரு சின்ன துண்டு வாழை இலையை நெருப்பில் லேசாக வாட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அல்லது சுடு தண்ணீரில் போட்டு எடுத்துக்கொள்ளுங்கள். கலவையை இலையின் உள்ளே வைத்து மடிக்கும்போது இலை கிழியாமல் இருக்க இவ்வாறு செய்ய வேண்டும். 

அதன்பின், இலையின் தண்டை நடுவில் வைத்து, அரைத்த விழுதை நீளமாக மீன் போல உருட்டி வாழை இலையில் வைத்து மூடி, 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஆவியில்  வேக விடுங்கள். 

Pinterest

சைவ மீன் குழம்பு செய்முறை

குழம்பு செய்ய அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:

உளுந்தம்பருக்கு - 1 தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 1 தேக்கரண்டி
மிளகு - ½ தேக்கரண்டி
சீரகம் - ½ தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 8

குழம்பு தாளிக்க தேவையான பொருட்கள்:

புளி - நெல்லிக்காய் அளவு
தக்காளி - 1
சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
பூண்டு - 1 கைப்பிடி
பெருங்காயம் - சிறிது
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
வெந்தயம் - ½ தேக்கரண்டி
சீரகம் - ½ தேக்கரண்டி

செய்முறை

1. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, வறுப்பதற்கு சிறிது(¼ தேக்கரண்டி) எண்ணெய் ஊற்றுங்கள். அதோடு குழம்பிற்காக அரைப்பதற்கான பொருட்களை(உளுந்தம்பருக்கு, மிளகு, சீரகம், முந்திரி) சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள். 

2. துருவிய தேங்காயை இறுதியாக சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். இந்தக் கலவை சூடு ஆரியப்பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

3. புளியை தண்ணீரில் சிறிதுநேரம் ஊறவைத்து புளிக்கரைச்சல் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

4. ஒரு வாணலியை(மண்சட்டி இருந்தால் குழம்பு ருசிக்கும்) அடுப்பில் வைத்து, தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றுங்கள். 

5. எண்ணெய் காய்ந்ததும், வெந்தயம், சீரகம், பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெயில் சேருங்கள். லேசாக வறுபட்டதும், அதோடு நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்குங்கள்.

6. வதங்கியபின் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்குங்கள். தக்காளி வதங்கியதும், மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்குங்கள். 

7. இப்போது சிறிது உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். புளிக்கரைச்சலை இதோடு சேருங்கள். பின் அரைத்து வைத்த விழுதையும் இதோடு கலந்து, தேவையான தண்ணீர் விட்டு, நன்றாக கொதிக்க விடுங்கள். 

8. வேகவைத்த வெஜ் மீனை எடுத்து, கவனமாக இலைத்தண்டை உருவி எடுத்து விடுங்கள். 

9. பிறகு, மீன் துண்டு போடுவது போல குறுக்காக மாவை வெட்டுங்கள். துண்டுகளின் நடுவே இலைத்தண்டு ஓட்டையினால் மீன் போல இருக்கும். 

10. இந்த துண்டுகளை கொதிக்கும் குழம்பில் போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்க விடுங்கள். கொத்தமல்லி இலை தூவி இறக்குங்கள். 

சுவையான வெஜ் மீன் கிரேவி ரெடி!

Pinterest

சைவ மீன் குழம்பு : மற்ற வகைகள்

வெஜ் மீனை வாழைக்காய், வாழைப்பூ சேர்த்து, மேலும் இரண்டு வழிகளில் தயாரிக்கலாம்.

1. வாழைக்காய்

வாழைக்காயை பஜ்ஜி போட நீள வாக்கில் நறுக்குவது போல, கொஞ்சம் தடிமனாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். அதோடு சிறிது மஞ்சள்தூள், கரம் மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக பிரட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 

பிறகு, வாணலியில் 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, மசாலா தடவிய வாழைக்காயை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இதை மேலே தயாரித்த குழம்பில் போட்டு கொதிவிட்டால், சைவ மீன் குழம்பு ரெடி!

2. வாழைப்பூ

வாழைப்பூவின் துவர்ப்பு பெண்களுக்கு மிகவும் நல்லது. இதில் பருப்பு உசிலி, பொரியல் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். இதை நெத்திலி மீன் போல எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
வாழைப்பூவை மேலும் இரண்டு வகைகளில் மீனாக சேர்க்கலாம்.

  • வாழைப்பூவை சுத்தம் செய்து, பின் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நறுக்காமல் தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். வாழைப்பூ எளிதில் வெந்துவிடும். அதனால், குறைவான தண்ணீர் பயன்படுத்தினாலே போதும்.வேகவைத்த வாழைப்பூவை, மேலே தயாரித்த குழம்பில் போட்டு கொதிவிட்டால், மேலும் ஒரு சைவ மீன் குழம்பு தயார்!

  • ஒரு கப் கடலைமாவில், சுவைக்கேற்ற மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். தோசை மாவு பதத்திற்கு வருமாறு, கடலைமாவில் தண்ணீர் விட்டு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். வாழைப்பூவை ஒவ்வொன்றாக மாவில் நனைத்து(பஜ்ஜி போல), சூடான எண்ணெயில் பொறித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இது மொறு மொறுப்பாக சுவையாக இருக்கும். அப்படியே கூட சாப்பிடலாம்.பொறித்த வாழைப்பூவை, மேலே தயாரித்த குழம்பில் போட்டு கொதிவிட்டால், மற்றுமொரு   சைவ மீன் குழம்பு தயார்!
மேலும் படிக்க - ருசியான சாக்லேட் பிரௌனி, முட்டை இல்லாமல் ஓவன் இல்லாமலா ? ரெசிபி உள்ளே!

பட ஆதாரம்  - Pinterest, Pexels

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!