இந்தியாவின் பல்வேறு வகையான நவராத்திரி கொண்டாட்டங்கள் !

இந்தியாவின் பல்வேறு வகையான நவராத்திரி கொண்டாட்டங்கள் !

இந்திய பாரம்பரிய பண்டிகைகளில் நவராத்திரி பண்டிகை மிகவும் ஸ்பெஷல். ஏனெனில், தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்படும் ஒரு சிறப்பான பண்டிகை இது. துர்க்கை அம்மனின் ஒன்பது அவதாரங்களை நாம் ஒவ்வொன்றாக கொண்டாடுகிறோம். நவராத்திரி என்றாலே கொலு தான் நியாபகத்திற்கு வரும். நம்மில் பலருக்கு பல வருடங்களாக, பரம்பரை பரம்பரையாக கொலு வைக்கும் வழக்கம் இருக்கும்.

தமிழ்நாட்டில் கொலு வைத்துக் கொண்டாடும் இந்த ஒன்பது நாட்களிலும், சிறுமி முதல் வயது முதிர்ந்த பாட்டி வரை, மாலை 6 மணி முதல் ஒன்பது மணிவரை, பாட்டுப்பாடி, கோலாட்டம் ஆடி தங்கள் திறமையை புதுப்பித்துக்கொண்டு, அனைவருடனும் சேர்ந்து சந்தோசமாக குதூகலிப்பர். தற்போது மழை குளிர்காலம் என்பதால், இந்தக் காலத்தில் குறிப்பாக பெண்களுக்கு புரதச்சத்து தேவைப்படும். அதனால், புரதச்சத்து நிறைந்த பயறு வகைகளை உண்ணும் வகையில், 9 நாட்களுக்கு 9 விதமான பயறு சமைத்து, அதோடு 9 வகையான பழங்களையும் அம்மனுக்கு பிரசாதமாகப் படைத்து, அனைவருடனும் பகிர்ந்து உண்டு மகிழ்வார்கள். 

Instagram

கொலு வைப்பதன் தத்துவம் என்னவென்றால், மனிதன் கொலு படியைப்போல் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதே. இதை உணர்த்தும் வகையில், இந்த பண்டிகை நாட்களில் படிக்கட்டுகள் அமைத்து, களிமண்ணால் செய்த பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம். இக்காலத்தில், லைட்டிங் செய்து, தீம் கொலு என்ற அடிப்படையில், பாரம்பரிய கொலுவோடு, தற்கால பொம்மைகளையும் சேர்த்து அலங்கரித்து, காண்போரை ரசிக்க வைக்கிறார்கள். இந்த வருடம் அத்திவரதரின் தரிசனம் அனைவரது கொலுவிலும் இருக்கக் காணலாம். 9 படிகளோடு நில்லாமல், 15, 25 என்று அதிகரித்துக்கொண்டே செல்லும் வழக்கமும் உண்டு. இது பெண்களின் படைப்புத் திறனை அதிகரிக்கும். பெண் குழந்தைகள் தினம் ஒரு விதமாக உடை அலங்காரம் செய்து, தன் தோழிகளை அழைத்துவந்து தங்கள் வீட்டு கொலுவை காண்பித்து, அவர்களுடன் பாட்டுப்பாடி, இறைவனை வேண்டி, பிரசாதங்களும், பரிசுப்பொருட்களும் தந்து உபசரித்து மகிழ்வார்கள். 

இந்த வருடம் 2019ல், செப்டம்பர் 29ம் தேதி முதல் அக்டோபர் 7ம் தேதி வரை ஒன்பது நாட்கள் நவராத்திரி பூஜை நாட்கள்.  பத்தாம் நாள் அக்டோபர் 8ம் தேதி விஜய தசமி அன்று, புது கலை, புது தொழில் ஆகியவற்றை ஆரம்பித்தால் வெற்றிகரமாக அமையும் என்பது நம்பிக்கை.

சரி நம்ம ஊர்ல மட்டும்தான் நவராத்திரி கொண்டாடுகிறார்களா? இல்லை, இந்தியாவில் பல மாநிலங்களில், பல்வேறு விதமாக கொண்டாடுகிறார்கள்(celebration). ஒவ்வொரு ஊரிலும் எப்படி கொண்டாடுகிறார்கள் என்று பார்க்கலாம்.

1. பல வண்ணப் பூக்களுடன் நவராத்திரி

Shutterstock

இடம் :  ஆந்திர பிரதேசம்

முக்கியத்துவம் / எவ்வாறு கொண்டாடுகிறார்கள்? 
ஆந்திர பிரதேச மாநிலத்தில், "பத்துகமா பண்டுகா " (Paduma Panduga) என்று நவராத்திரியை குறிப்பிடுவார்கள். கன்னிப்பெண்கள் தங்களுக்கு ஏற்ற கணவன் அமைய பத்துகமா(லட்சுமி)வை வணங்குவதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் கொலு வைப்பது போல, ஆந்திராவில் பல வண்ணப் பூக்களைக் கொண்டு தட்டில் கோபுரம்போல அலங்கரித்து, வழிபடுகிறார்கள். கடைசி நாளன்று நீர் நிலைகளில் பூக்களை விடுகிறார்கள். இந்த காலத்தில் பூக்கும் பூக்களுக்கு மருத்துவ குணம் உண்டென்றும், அது பெண்களுக்கு நன்மை செய்யும் என்றும் கூறுகிறார்கள். 

உணவு / பிரசாதம்:

தமிழ்நாட்டில் செய்வது போலவே, இங்கும் புது புது பதார்த்தங்கள் செய்து கடவுளுக்கு படைக்கிறார்கள். பயிர் வகைகள், பருப்புகள்(நட்ஸ்), மலீடா(ரோட்டி மற்றும் நாட்டுச்சக்கரை) என்ற உணவை ஸ்பெஷலாக தயாரித்து, கடவுளுக்கு படைத்தது, அனைவர்க்கும் பகிர்ந்து உண்கிறார்கள்.

2. வித்யாரம்பம் அளிக்கும் நவராத்திரி

இடம் : கேரளா

முக்கியத்துவம் / எவ்வாறு கொண்டாடுகிறார்கள்? 

கேரளா மாநிலத்தில், இறுதி மூன்று நாட்களை, துர்காஷ்டமி, மகாநவமி, விஜய தசமி என்று குறிப்பிடுகிறார்கள். அஷ்டமி அன்று புத்தகங்களையும், இசைக் கருவிகளையும் சரஸ்வதி தேவி முன்பு வைத்து பூஜை செய்து, பின் தசமி அன்று எடுத்து படிக்கிறார்கள். 

சின்ன குழந்தைகள் முதன் முதில் எழுதவும், படிக்கவும் இந்த நாளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். வித்யாரம்பம் என்று குறிப்பிடும் இந்நாளில், ஆயிரக்கணக்கான குழந்தைகள் அரிசியிலும், மணலிலும் முதல் எழுத்தை, பெரியவர்கள் கை பிடித்து எழுத வைப்பார்கள். மேலும், தங்க மோதிரத்தால் குழந்தையின் நாக்கில் கடவுளின் நாமத்தை எழுதுவார்கள்.

உணவு / பிரசாதம்:

கேரளாவிலும், இந்நாளில் ஒன்பது பயறு வகைகளை இறைவனுக்கு படைத்தது, வழிபடுகிறார்கள்.

3. தசரா திருவிழா

Instagram

இடம் : கர்நாடகா 

முக்கியத்துவம் / எவ்வாறு கொண்டாடுகிறார்கள்? 

நவராத்திரியை ‘நாதா ஹப்பா’(Nadahabba) என்று கன்னடத்தில் அழைக்கிறார்கள். விஜயநகர ராஜவம்சத்தில், கொடூர அரக்கணை(மஹிசாசுரன்) வதைத்த துர்கா தேவி(சாமுண்டேஸ்வரி)யை வழிபடும் வகையில் ஆரம்பமான இந்த பண்டிகை இன்றும் அதேபோல சீரும் சிறப்புமாக கொண்டாடப்படுகிறது. மைசூர் தசரா என்று இந்தப் பண்டிகை கர்நாடகாவின் பண்டிகைகளில் முதன்மையான இந்தப் பண்டிகையை பத்து நாட்கள் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். மகாராஜா அரண்மனையில், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து, அவர்களுடைய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக அற்புதமாக கொண்டாடுகிறார்கள்.

இந்த விழாவில், அலங்கரித்த யானை, குதிரை மற்றும் ஒட்டகம் ஆகியவை வரிசையில் ஊர்வலம் வரும் காட்சி சிறப்பம்சமாக கருதப்படுகிறது. யானையின்மேல் ஒரு சின்ன மண்டபத்தில், துர்கா தேவி வளம் வருவதுதான் விஷேஷம். விஜய தசமி அன்று டார்ச்லைட் பரேட் நடப்பது இறுதி சடங்காகிறது. 

உணவு / பிரசாதம்:

பத்து நாட்களுமே புஃட்(உணவு) மேளா ஏற்பாடு செய்து, அதில் போட்டிகளும் வைத்து, வித விதமான உணவுகளை ருசிக்கும் விழாவாகவும் இருக்கும் தசரா பண்டிகை.கோயா டார்ட்ஸ், கருப்பு சனா இனிப்பு, உருளைக்கிழங்கு சாட், பெர்ரிகளுடன் ஃபிர்னி, பர்பி  போன்ற சுவையான தசரா உணவுகளை காணலாம். 

4. புதிய துவக்கத்தை அளிக்கும் நவராத்திரி

இடம் : மகாராஷ்டிரா

முக்கியத்துவம் / எவ்வாறு கொண்டாடுகிறார்கள்? 

மகாராஷ்டிராவில் ‘கடஸ்தாபனா’(Ghatasthapana) என்று இந்த பண்டிகையை அழைக்கிறார்கள். சில இடங்களில், முதல் இரண்டு நாட்கள் காளி தேவியை வழிபடுகிறார்கள், அடுத்த மூன்று தினங்களுக்கு லட்சுமி தேவியையும், இறுதி நான்கு நாட்களுக்கு சரஸ்வதி தேவியையும் வழிபடுகிறார்கள். 

விஜய தசமி அன்று தாண்டியா ஆட்டம், எல்லா இடங்களிலும் நடைபெறும். புதிய துவக்கங்களை இந்த நாளில் ஆரம்பிக்கிறார்கள். திருமணமான பெண்கள், ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் குங்குமம் இட்டு, பரிசுகளும், பிரசாதங்களும் பரஸ்பரம் கொடுத்து மகிழ்கிறார்கள்.

உணவு / பிரசாதம்:

கீர், லஸ்ஸி, ஜவ்வரிசி கிச்சடி, போன்ற வகை வகையான ருசியான உணவை சாப்பிட்டு கொண்டாடுவார்கள்.

5. தாண்டியா ஆட்டத்துடன் நவராத்திரி

Instagram

இடம் : குஜராத்

முக்கியத்துவம் / எவ்வாறு கொண்டாடுகிறார்கள்? 

குஜராத்தில், ஒன்பதுநாள் இரவும், அனைவரும் கூடி, முதல் மூன்று நாட்களை மகிஷாசுரன் என்ற தீய சக்தியையும், மனித அழுக்குகளையும் அளித்த துர்கா தேவிக்கும், அடுத்த மூன்று நாட்கள் செல்வத்திற்காக லட்சுமி தேவியையும், இறுதி மூன்று நாட்களை அறிவிற்கு, ஞானத்திற்கும் சரஸ்வதி தேவியையும் வணங்குகிறார்கள். களிமண்ணில் பயிர்களை முதல்நாள் தூவி, ஒன்பது நாட்கள் பூஜை செய்து, பிறகு பயன்படுத்துகிறார்கள்.

குஜராத்தில், ‘ரஸ் கர்பா’(Ras Garba) என்று அழைக்கப்படும் தாண்டியா போன்ற நடனத்தை அவர்களின் பாரம்பரிய உடை அணிந்து ஒன்பது நாள் இரவும் ஆடிப்பாடி நவராத்திரியை கொண்டாடுகிறார்கள். ஒன்பது நாளும் விரதம் இருந்து, உடலையும், மனதையும் தூய்மை செய்து துர்கா தேவியை வழிபடுகிறார்கள். 

உணவு / பிரசாதம்: 

விரத நாட்களில், எளிமையாக ஜீரணிக்கக் கூடிய ஆவியில் வேக வைத்த டோக்ளா(dhokla), குஜராத்தி கடி(kadi) போன்ற உணவுகளை செய்து ருசிக்கிறார்கள்.

6. ஏழு நாட்கள் விரதத்துடன் நவராத்திரி

இடம் : பஞ்சாப்

முக்கியத்துவம் / எவ்வாறு கொண்டாடுகிறார்கள்? 

பஞ்சாபில் ஏழு நாட்கள் விரதம் இருந்து, அஷ்டமி, நவமி தினங்களில் 9 சின்ன பெண் குழந்தைகளையும், 1 ஆண் குழந்தையையும் வணங்கி, அவர்களுக்கு விருந்து படைத்து, பரிசுகள் கொடுத்து, தங்கள் விரதத்தை முடித்துக்கொள்வார்களா. மேலும், இவர்கள் தினமும் ஜக்ரதாஸ்(jagratas) அமைத்து, இரவு முழுவதும் தூங்காமல், தேவியை போற்றி பஜனைபாடி மகிழ்வார்கள்.

அம்ரிட்சரில் இருக்கும் ஹனுமான் கோவிலுக்கு, தங்கள் மகனை  அனுமன் போல வேடமிட்டு அழைத்துச் சென்று நன்றி கூறும் விதமாக இந்த நாட்களில் வழிபடுவார்கள். 

உணவு / பிரசாதம்:

ருசியான அல்வா, பூரி, சுண்டல் செய்வது இந்த ஊரின் வழக்கம் ஆகும்.

7. ராமாயணத்தை கற்பிக்கும் நவராத்திரி

Pixabay

இடம் : டெல்லி & உத்தர பிரதேசம்

முக்கியத்துவம் / எவ்வாறு கொண்டாடுகிறார்கள்? 

வடக்கு மாநிலங்களில், ஒன்பது நாட்களும் விரதம் இருந்து நவராத்திரியை கொண்டாடுகிறார்கள். ராம்லீலா என்று அழைக்கப்படும், ராமாயணத்தை, நாடகமாக நடத்தி மகிழ்கிறார்கள். 

இறுதி நாளில், ராவணனின் பெரிய உருவச் சிலையை எரித்து, தீய சக்திகளை போக்கிய நாளாக கொண்டாடுகிறார்கள். நவராத்திரி தினங்களில், வித விதமான உணவுகளும், பட்டாசுகளும், கலை நிகழ்ச்சிகளும் பிரமாண்டமான விழாக்கோலம் கொண்டு காட்சி தரும்.

உணவு / பிரசாதம்:

இவ்விழாக்களில் பசியை போக்கிக்கொள்ள பல வகை சாட், சமோசா, கச்சோரி போன்ற இவர்களின் பாரம்பரிய உணவுகளை காணலாம்.

8. தெய்வங்களின் பெரிய உருவச்சிலைகள் கொண்ட நவராத்திரி

இடம் : மேற்கு வங்காளம், அசாம் & பீகார்

முக்கியத்துவம் / எவ்வாறு கொண்டாடுகிறார்கள்? 

வட கிழக்கு மாநிலங்களில், நவராத்திரியை துர்கா பூஜையாக வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள். சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி என்று இறுதி நான்கு நாட்களை பெரிய பண்டிகையாக கொண்டாடுகிறார்கள். இவர்களும் மகிஷாசுர அரக்கணை வதைத்த துர்கா தேவியை வழிபடும் வகையில் இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள். துர்கா தேவி, சரஸ்வதி, லட்சுமி, கணேஷா, கார்த்திகேயா போன்ற தெய்வங்களின் பெரிய உருவச்சிலைகள் செய்து வழிபட்டு, கடைசீ நாளன்று நீரில் விட்டு விடுகிறார்கள். 

பெண்கள் சிவப்பு புடவை அணிந்து, கையில் மண்பானையில் நெருப்பை வைத்து நடனம் ஆடுவார்கள். இந்த நடனம் துனாச்சி என்று அழைக்கப்படும். 

உணவு / பிரசாதம்:

குக்னி என்று அழைக்கப்படும் பட்டாணியில் செய்த வித விதமான பதார்த்தங்கள், பூரி, அல்வா, ஜிலேபி, நெய் மணக்கும் போக்(bhog) போன்ற உணவுகள் வங்காளத்தில் பண்டிகை நாட்களில் பிரபலமானது.

இப்படி பொதுவாக இந்தியாவின் முழுவதும், தீய சக்தியை அழித்த நல்ல சக்தியான துர்காதேவியை வழிபடும் பண்டிகையாகவே நவராத்திரி (navratri)இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு இடத்திலும்(different parts of india), பல்வேறு விதமாக, அவர்களுடைய பாரம்பரிய பழக்கங்களைப் பின்பற்றி கொண்டாடுகிறார்கள் என்பது உறுதி. வரப்போகும் நவராத்திரி உங்களுக்கு, ‘தசரா’வாக,  ‘பத்துகமா பண்டுகா’வாக, ‘நாதா ஹப்பா’வாக, ‘கடஸ்தாபனா’வாக என அனைத்துமாக இருந்து, பிரமாண்டமாக கொண்டாட வாழ்த்துக்கள்!

 

மேலும் படிக்க - பாரம்பரிய ஆடைகளிடம் உங்களை ஈர்க்கும் ஸ்னேஹாவின் 11 அசத்தலான தோற்றங்கள்!

மேலும் படிக்க - நாவூரும் மில்க் ஸ்வீட்ஸ் இனி வீட்டிலேயே செய்து அசத்தலாம்!

பட ஆதாரம்  - Instagram 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!