அடர்த்தியான நீண்ட கூந்தல் வேண்டுமா? இதோ உங்களுக்கான ஹேர் பேக்!

அடர்த்தியான நீண்ட கூந்தல் வேண்டுமா? இதோ உங்களுக்கான ஹேர் பேக்!

நம் எல்லோருக்குமே கூந்தல் மிக அழகாக, கருமை நிறத்துடன், நீளமாகவும், அடர்த்தியாகவும் மின்ன வேண்டும் என்பது ஆசை. மேலும், பொடுகு இல்லாமலும், முடி உதிராமலும் இருக்க வேண்டும் என்பது தவம். அச்சச்சோ வளரலைனாலும் பரவாயில்லை உதிராமல் இருக்க வேண்டுமே கடவுளே! இது பெரும்பாலானவர்களின் புலம்பல். கூந்தல் நுனியில் வெடித்திருப்பது, தலை சொட்டை ஆவது, ஆங்காங்கே திட்டுதிட்டுடாக சொட்டையாவது, நரைமுடி வருவது, தலை அரிப்பு ஆகியவையும் கூந்தல் உதிர்வதோடு தொடர்புடையதுதான். பலவிதமான ஷாம்பு, கண்டிஷனர், கூந்தல் தைலம் எல்லாம் முயற்சி செய்து, ஒன்றும் பலனில்லை. உங்களுக்காக இரண்டு ஹேர் பேக் தீர்வுகள் மூலம் உங்கள் கூந்தல் உதிர்வதை தடுத்து, எப்படி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வைப்பது என்று பார்க்கலாம்.

செம்பருத்திப்பூ மற்றும் ஓட்ஸ் ஹேர் பேக்

Pexels

தேவையான பொருட்கள்:

செம்பருத்திப்பூ - 1 கை அளவு
செம்பருத்தி இலை - 1 கை அளவு
ஓட்ஸ் - 2 தேக்கரண்டி
முட்டை - 1
தேன் - 1 தேக்கரண்டி
பால் - 1 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய்- 1 தேக்கரண்டி

செய்முறை:

  1. முட்டையின் வெள்ளைப் பகுதியை மட்டும் முதலில் பிரித்து எடுத்துக்கொள்ளுங்கள்.
  2. பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் முட்டையின் வெள்ளைக்கரு, பால், தேன், ஓட்ஸ், செம்பருத்தி இலை, செம்பருத்தி பூ ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  3. கூந்தலில் இதை பயன்படுத்தப் போகிறோம். அதனால் நன்றாக திப்பி இல்லாமல் அரைத்து, அதோடு தேங்காய் எண்ணெய் கலந்து, தலையில் எல்லா இடங்களிலும் நன்றாக படும்படி விரல்களால் தடவிக் கொள்ளுங்கள்.
  4. முடியின் வேரில் இருந்து நுனி வரை தடவுங்கள்.
  5. அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் அப்படியே ஊறவிடுங்கள். பிறகு ஷாம்பூ கொண்டு அலசுங்கள்.

இது எவ்வாறு பயனளிக்கிறது ?

ஓட்ஸ் - தலையில் இருக்கும் தூசுகளையும், பொடுகையும் நீக்கும், கூந்தலை சுத்தம் செய்யும், முடி உதிர்வதை தடுக்கும்; ஓட்ஸ்க்கு பதிலாக கடலை மாவு கூட பயன்படுத்தலாம்.
செம்பருத்திப்பூ மற்றும் இலை - தலையில் ஆங்காங்கே ஏற்படும் சொட்டையை குணப்படுத்தும், கூந்தல் வளர உதவும்;
முட்டை - முடி உதிர்வதை தடுக்கும், முடி வெடிப்பதை குணப்படுத்தும், கூந்தலுக்கு மினி மினிப்புதரும்;
தேன் - ஆன்டி பாக்டீரியல் பண்புகள் கொண்டது, நுண் கிருமிகளை எதிர்த்து போராடும், அழுக்குகளை களையும், முடி உதிர்வதை கட்டுப்படுத்தி, ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளும்;
பால் - தலையை ஆரோக்கியமாக வைக்க உதவும், கண்டிஷனர் போல இருக்கும்.

வெந்தயம் மற்றும் கற்றாழை ஹேர் பேக்

Pexels

தேவையான பொருட்கள்:

வெந்தயம் - 2 தேக்கரண்டி
கற்றாழை - 2 இலை
தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
விளக்கெண்ணெய் - ½ தேக்கரண்டி
தயிர் - 2 தேக்கரண்டி
முல்தானி மிட்டி - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

  1. வெந்தயத்தை ஒரு 2 மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்துவைத்துக் கொள்ளுங்கள்.
  2. கற்றாழை தோள் நீக்கி ஜெல்லை எடுத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
  3. பிறகு, எண்ணெய் தவிர மீதி உள்ள பொருட்களை(கறிவேப்பிலை, ஊறிய வெந்தயம், சுத்தம் செய்த கற்றாழை, முல்தானி, தயிர்) மிக்ஸி ஜார் கொண்டு நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.
  4. பிறகு இதோடு தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய்யை கலந்து கூந்தலில் தடவிக் கொள்ளுங்கள்.
  5. அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் அப்படியே ஊறவிடுங்கள். பிறகு ஷாம்பூ கொண்டு அலசுங்கள்.

இது எவ்வாறு பயனளிக்கிறது ? 

விளக்கெண்ணெய் - கூந்தலுக்கு கருமையை தரும், குளிர்ச்சியாகவும் இருக்கும்;
வெந்தயம் - குளிர்ச்சி தரும், கூந்தலை வேரில் இருந்து உறுதியாக மாற்றும், இளநரையை கட்டுப்படுத்தும்;
கற்றாழை - கூந்தல் வளர்ச்சியை தூண்டும், தலையில் இருக்கும் நுண்கிருமியை எதிர்த்து செயல்படும், பொடுகு வராமல் தடுக்கும், கூந்தல் வளர உதவும்;
தயிர் - கூந்தல் பிசுபிசுப்பை போக்கும், குளிர்ச்சி தந்து பொடுகை எதிர்த்து வேலை செய்யும், ஈரப்பதமாக வைத்திருக்க உதவும்;
முல்தானி மிட்டி - தலையை சுத்தப்படுத்தி, இரத்த ஓட்டத்தை சீராக்கும்;
கறிவேப்பிலை - இதில் இரும்புச் சத்து உள்ளது, அதை உணவில்தானே சேர்க்கச் சொல்வார்கள் என்று ஆச்சர்யமாக இருக்கிறதா? இந்த சத்துமிகு கறிவேப்பிலை சேதமடைந்த கூந்தலை சரி செய்து, முடி உதிர்வதை குறைக்கும் பண்பு கொண்டது.

இத்தனை பொருட்களைப் பார்த்து, சமையல் குறிப்புக்கு வந்துட்டமோன்னு நினைக்காதீங்க, இது ஹேர் பேக் தான்!

தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் பால் பயன்படுத்தலாம். மேலும் குளிர் காலங்களில் நீண்ட நேரம் ஊற விடாமல் 20 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் கழித்து அலசி விடுங்கள். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இந்த பேக்களை பயன்படுத்தலாம்.

இந்த இரண்டு ஹேர் பேக்கும் வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை வைத்து செய்யக்கூடியதுதான் (natural hair pack). நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். இரண்டு முறை இந்த பேக்களைப் பயன்படுத்தினாலே நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். ஒரு சிலர் ஏற்கனவே சில பொருட்களை வேறு விதமாக பயன்படுத்தி சில முன்னேற்றங்களை பார்த்திருந்திருப்பீர்கள். அது உங்களுக்கு பிடித்திருந்தால், அந்த பொருளையும் மேலே கூறிய பேக்கோடு சேர்த்து கலந்து பயன்படுத்தலாம்.

கூந்தல் உதிரும் தொல்லை, இனிமேல் இல்லை !

 

மேலும் படிக்க - செலவேயில்லாம சில்கி ஹேர் வேணுமா ! வீட்டிலேயே தயாரிக்கலாம் ஆர்கானிக் ஷாம்பூ!

மேலும் படிக்க -அடர்த்தியான கூந்தலைப் பெற 10 சிறந்த ஷாம்பு வகைகள்!!

பட ஆதாரம்  -Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!