தங்கத்தின் (gold) விலை அண்மையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இனி தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏறுமுகத்தில்தான் இருக்கும் என்று நகை வியாபாரிகள் கூறுகிறார்கள். தங்கம் மீதான மோகம் அதிகம் உள்ளதால் உலகளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. தங்கம் விலை உயர்ந்தாலும் மக்கள் அதிகளவில் வாங்குகின்றனர். திருமணம் போன்ற முக்கிய விஷேஷங்களுக்கு தங்கம் வாங்கி தான் ஆக வேண்டும் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
pixabay
விலை உயர்விற்கான காரணங்கள்
சமீப காலமாக தங்கம் (gold) விலை கடும் ஏற்றத்தை சந்தித்து வருகிறது. இதற்கு சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களே காரணமாக அமைவதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கம் விலை இன்றும் அமெரிக்க டாலரில் தான் நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்க பொருளாதாரம் சரியில்லை என்பதை உணர்ந்த பொருளாதார வல்லுனர்களும், முதலீட்டாளர்களும் பாதுகாப்பு கருதி தங்கள் முதலீடுகளை, அமெரிக்க டாலர் மற்றும் மார்க்கெட்களில் இருந்து எடுத்து பாதுகாப்பான தங்கத்தில் முதலீடு செய்வதால் தான் தங்கம் விலையில் ஏற்றம் ஏற்படுகிறது.
அதன்படி சர்வதேச அரசியல் தாக்கமும், பொருளாதார மாற்றங்களுமே தங்கம் விலை ஏற்றத்துக்கு காரணமாக அமைவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா கடந்த ஆண்டு 718 டன்கள் அளவிற்கு தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. இந்தியா முழுவதும், மக்களிடம், கோயில்களில் என தற்போது உள்ள தங்கத்தின் கையிருப்பு உலக நாடுகள் அதிசயத்து போகும் அளவுக்கு 24 ஆயிரம் டன்களாக உள்ளது. அதேசமயம் அரசு என்று பார்தால் அதிகமான தங்கத்தை கையிருப்பாக வைத்திருப்பது அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் வங்கி தான்.
pixabay
அந்த வங்கியின் மொத்த கையிருப்பில் 75 சதவீதத்தை தங்கமாகவே உள்ளது. இந்தியாவின் ரிசர்வ் வங்கி வெறும் 6 சதவீத கையிருப்பு மட்டுமே தங்கமாக வைத்துள்ளது. உலகம் முழுவதும் அரசு, மக்கள் என பலரும் பாதுகாப்பானதாக தங்கத்தை கருதும் நிலையே உள்ளது. அமெரிக்க- சீனா வர்த்தக பிரச்சினை பெரிய அளவில் உருவெடுத்து வருகிறது. இருநாடுகளும் வரி விதித்துக் கொள்வதால் வர்த்தகர போராக மாறி உலக பொருளாதாரத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதனால் அரசுகள் மட்டுமின்றி பெரிய நிறுவனங்களும் தங்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பு கருதி தங்கத்தை வாங்குகின்றன. இதன் காரணமாகவே தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்வு
மேலும் 2019-20ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கத்தின் (gold) மீதான இறக்குமதி வரியை உயர்த்தி அறிவித்தார். 10 சதவீதமாக இருந்த வரியை 4 சதவீதமாக குறைக்க வேண்டும் என பட்ஜெட்டுக்கு முன் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்தக் கோரிக்கைக்கு மாறாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 2 சதவீதம் உயர்த்தி 12 சதவீதம் ஆக்கப்பட்டது. இந்த பட்ஜெட் தாக்கலுக்கு பின் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பங்குச்சந்தைகளும் நாளுக்கு நாள் மோசமான வீழ்ச்சியைக் கண்டு வருகின்றன. இவை தங்கம் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.
pixabay
புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?
தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்து வருவதால் இன்னும் சில நாட்களில் ஒரு சவரன் தங்கம் விலை 30,000 ரூபாயாக உயர்ந்துவிடும் என கருதப்படுகிறது. 2011ம் ஆண்டு முதல் தங்கத்தின் விலை படுவேகமாக உயர்ந்துகொண்டே போனது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ஆகஸ்ட் 18, 2011ல் முதல் முறையாக 20 ஆயிரம் ரூபாயை எட்டியது. அடுத்த இரண்டே நாட்களில் ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து 21 ஆயிரத்தையும் தாண்டியது. 2017ம் ஆண்டில் ஏப்ரல் 30ம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 22,000 ரூபாயாக அதிகரித்தது.
அந்த ஆண்டிலேயே ஆகஸ்ட் மாதம் 23 ஆயிரத்தையும் செப்டம்பரில் 24 ஆயிரத்தையும் கடந்துவிட்டது. 2013 முதல் 2018 வரை தங்கம் விலை 25 ஆயிரத்துக்கு உள்ளாகவே இருந்து வந்தது. இந்த ஆண்டு ஜனவரியில் ஒரு சவரன் தங்கம் விலை முதல் முறையாக 25,000 ரூபாய்க்கு மேல் உயர்வு கண்டது. தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் 26,000 ரூபாயையும் தாண்டியது. ஜூலையில் 2019ல் 900 ரூபாய்க்கு மேல் உயர்ந்து தற்போது 30,000 ரூபாயை நெருங்கி கொண்டிருக்கிறது.
pixabay
தற்போது தங்கம் வாங்கலாமா?
இன்று காலை நிலவரப்படி 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.38 உயர்ந்து ரூ.3,723ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனின் விலை ரூ.29,784ஆக உள்ளது. ஆனால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து இருக்கும் என்று கூற முடியாது. உலகளாவிய பொருளாதார சூழல் மாறினால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தில் இருந்து பிற முதலீடுகள் மீது போகும். அப்போது தங்கம் விலை குறையும். எனவே தங்கத்தை முதலீடாக கருதி மக்கள் வாங்க வேண்டிய தேவையில்லை. தவிர்க்க முடியாத நிலையில் மட்டுமே தற்போது தங்கம் வாங்க வேண்டும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.