என் பிரெண்டப் போல யாரு மச்சான்..அவனைப் போல உறவுக்காரன் யாரும் இங்கில்லை.. நண்பர்கள் தினம்!

என் பிரெண்டப் போல யாரு மச்சான்..அவனைப் போல உறவுக்காரன் யாரும் இங்கில்லை.. நண்பர்கள் தினம்!

நட்பு.. இது பதின் பருவத்தினருக்கானது என்பதான மாயை இன்றளவும் இருக்கிறது. உண்மையில் நட்பு (friendship) என்பது எல்லா வயதினரும் பால் பேதம் வயது பேதம் இன்றி பாராட்டப்பட வேண்டிய கொண்டாடப்பட வேண்டிய உறவாகும்.

ஆனால் இது பதின் பருவத்தினரிடையே மிகப் பரவலாகக் கொண்டாடப்படும் உறவு. இங்கிருந்துதான் ஒரு முழு ஆயுளுக்கான நட்பு தொடங்குகிறது என்கிறது எனது அபிப்ராயம். இந்த நேரங்களில் நம்மோடு இணையும் நட்பை சரியான முறையில் பராமரித்தோம் என்றால் நமது இறுதி நாளில் நாம் சாம்பலாகிக் கரையும் வரை அந்த நட்பு நம்மோடு பயணிக்கும்.

உன் நண்பனைப் பற்றி சொல் என்கிற பழமொழி இன்றளவும் உண்மையாகத்தான் இருக்கிறது. உளவியல் ரீதியாக நாம் யாருடன் தொடர்ந்து பயணிக்கிறோமோ அவர்களின் குணாதிசியங்களை நம்மையும் அறியாமல் நாமும் பின்பற்றுவோம். மிக மிக வலிமையையும் உறுதியும் கொண்ட மனமும் பயிற்சியும் இருந்தால் ஒழிய உடன் பழகுபவரின் பழக்கங்கள் நம்வசம் ஒட்டுவதை நம்மால் தவிர்க்க முடியாது.

ஆகவே நட்பு எனும் ஆத்ம உறவை நாம் தேர்ந்தெடுக்கும்போது நிச்சயம் கூடுதல் கவனம் வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் போது எவ்வளவு கவனமாக இருந்தீர்களோ அதே அளவு கவனத்தை நட்பைத் தேர்ந்தெடுக்கும்போதும் தர வேண்டும். இருவருமே நம் ஆயுள் பரியந்தமும் நம்முடன் வரப்போகும் உறவாகும்.

 

நண்பர்கள் நம்மைத் தேடி வருவார்கள் அல்லது இப்படியும் சொல்லலாம் உங்களைத் தேடியும் நட்பு வரலாம். அவர்கள் நோக்கம் எதுவும் இல்லாமல் இருப்பின் நல்லது. ஒரு சில தந்திர நபர்கள் சில கணக்குகளோடு உங்களுடன் நட்பு பாராட்டுவார்கள். அதனை நீங்கள் விழிப்புணர்வோடு உணர்வதுதான் மிக முக்கியமான ஒன்று.

நட்பு என்பதை நம்மால் உருவாக்க முடியாது. இதனை எல்லோரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அது தானாக வருவது. ஒருவருக்கொருவர் நேசிக்கும் விதத்தில் அது உள்ளே பொங்கிப் பெருகுவது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உதவி செய்வது விட்டுக் கொடுக்காமல் இருப்பது நட்பென்று நம்பியவர்கள் முதுகில் குத்தாமல் இருப்பது போன்ற பல விஷயங்கள் சேர்ந்துதான் ஒரு நட்பானது மெல்ல மெல்ல வளர்கிறது.

இதனை செயற்கையாக இன்ஸ்டன்ட் முறையில் கொண்டுவரவே முடியாது. உங்கள் நடவடிக்கைகள் நேராக இருந்தால் உங்கள் நட்பு இறுதி வரைக்கும் நிலைக்கும். நட்பிலும் தந்திரத்தை புகுத்தி தங்கள் தேவைகளுக்காக மட்டும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் சுயநல மனங்களுக்கு நட்பு என்றும் நிலைக்காது. உங்கள் சுயரூபம் வெளிப்படும் அந்த நேரத்தில் உங்கள் நட்பின் ஆயுள் அறுந்து போகும். காலம் எல்லாவற்றையும் வெளிக்கொணரும் மாயக்கண்ணாடி என்பதை மறந்து விடாதீர்கள்.

நட்பில் பாகுபாடுகள் அவசியம் இல்லாதது. ஒரு அலுவலகத்தில் இது நடக்கலாம். இரண்டு பேர் புதிதாக இணைந்து பழைய நபர் மீது பாகுபாடு காட்டலாம். தனது தவறுகளுக்குத் துணை போகும் நபர்களை தன்னோடு இணைத்துக் கொண்டு உங்களை அங்கிருந்து வெளியேற்ற திட்டமிடலாம். உறவுகளில் பாகுபாடுகள் என்பது மிகவும் சகஜம். 10 உறவுகள் இருந்தாலும் பிடித்தமான ஒரு உறவின் மீது காட்டப்படும் பாசம் என்பது பாகுபாடானதுதான் இல்லையா.

 

ஆனால் நட்பு என்று வரும்போது அது நிச்சயம் பாகுபாடுகள் பார்க்காத ஒன்றாகத்தான் இருக்க முடியும். இருக்க வேண்டும். அப்போதுதான் அது நட்பு. அதனால்தான் அது இத்தனை சிறப்பு வாய்ந்த உறவாக உறவுகளில் சிறந்த உறவாக நட்பு பார்க்கப்படுகிறது. பாராட்டப்படுகிறது. அதற்கான தினம் ஒன்றை உருவாக்கி கொண்டாடவும் படுகிறது

நண்பர்கள் தினத்தைக் கொண்டாடுவது என்பது நட்பு என்னும் உறவை சகலருக்கும் எடுத்துச் சொல்லும் நோக்கில்தான் ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். உங்கள் மீது ப்ரியமுடன் இருக்கும் உங்களுக்காக எதையும் செய்ய விரும்பும் உங்களுக்கு ஒன்று என்றால் ஓடி வரக் கூடிய நண்பனோ நண்பியோ அமைந்தால் அவர்களைத் தவற விடாதீர்கள். அவர்கள் கைகளை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்நாளில் கடைசி நொடிவரைக்கும் அவர்கள் உங்களுடன் உறுதுணையாக வருவார்கள்.

ஒரு நல்ல நட்பென்பது சாதாரணமாக ஏற்படும் உறவு அல்ல. உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான உறவு. அதனை நீங்கள் எவ்வாறு மதிக்கிறீர்கள் எப்படி பார்த்துக் கொள்கிறீர்கள் என்பதில்தான் உங்கள் மிச்ச வாழ்நாளில் மொத்தவெற்றியும் இருக்கிறது.

உங்கள் வாழ்வில் ஒரு நல்ல நண்பனை நீங்கள் எதிர்பார்க்கும் முன்னர் முதலில் நீங்கள் நல்ல நண்பராக இருக்க வேண்டியதும் அவசியம்.நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.