தமிழ் திரைப்பாடல்களின் வரலாறு பூக்கள் மலர்ந்து மகரந்தம் தூவிக் கிடந்த காலத்தை சேர்ந்த சமயம் எது என்றால் அது நிச்சயம் நா.முத்துக்குமார் (na. muthukumar) அவர்களின் காலத்தில்தான் என்று கூறிவிட முடியும்.
மிகப்பெரிய கவிஞர்களின் பாடல்கள் எல்லாம் தமிழ் சினிமா வரலாற்றில் தனி இடங்கள் பிடித்திருக்கின்றன என்றாலும் கவிஞர் நா. முத்துக்குமார் இசைக்காக தமிழை எழுதாமல் கவிதைகளாகவே பாடல்களை எழுதியவர்.
இவரது பெயரை உச்சரிக்கும்போதே அமைதியும் துயரமும் ஒரு சேரத் ததும்பும் அவரது மென்மையான முகம் மட்டுமே நெஞ்சில் நிறைந்து நிற்கிறது. அவரது பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி சில வார்த்தைகள் பேச மனம் விழைகிறது.
Youtube
காஞ்சிக்கவிஞனின் இளமைகாலங்கள் புத்தகங்களால் நிரம்பி இருந்ததையும் தாயின் இழப்பிற்குப் பின்னர் தகப்பனின் கதகதப்பில் கிடந்த குழந்தையாக அவர் இருந்ததையும் அவரது அப்பா அவருக்கு தெய்வத்திற்கு மேலானவர் என்பதையும் அவரே பேட்டிகளில் பேசி இருக்கிறார்.
கணையாழி இதழில் இவரது தூர் கவிதையின் மூலம் எழுத்தாளர் சுஜாதா அவர்களால் பாராட்டப்பட்டது. அதில் இருந்து சிறு கீற்றென கிளம்பிய நா. முத்துக்குமாரின் புகழ் நாட்கள் செல்ல செல்ல நாடெங்கும் வாசிக்கப்பட்டது.
இவரது கவிதைகள் கவிதைகளாகவே இருந்திருந்தால் சில புத்தகங்களோடு அது முடங்கி இருக்கலாம். அந்த புத்தகங்களைப் படிக்கும் ஆர்வலர்களைத் தவிர்த்து இவரது எழுத்துக்கள் வேறு யாரையும் சென்று சேர்ந்திருக்காது. ஆனால் அவரது கவிதைகள் எல்லாம் திரைப்பாடல்களாக உருமாற ஆரம்பித்த பின்னர்தான் அதில் தேங்கி இருந்த காதல், துயரம், பேரன்பு, வலி, ஏக்கம் என எல்லாமே இங்கிருந்த ஒவ்வொரு உயிரையும் உலுக்கி எடுத்தது
அதற்காக நிச்சயமாக கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் எதுவும் தெரியாத பாமர மனதையும் தன்னுடைய உணர்வுகளை வார்தைகளாக்க முடியாத ஊமை நெஞ்சங்களையும் இவரது விரல்கள் எழுதிய பாடல்கள் தனது ப்ரியத்தால் தலை வருடிக்கொடுத்தது.உள்ளிருக்கும் வேதனைகளின் ஒட்டு மொத்த வடிகாலாக இவரது பாடல்கள் சோகம் பேசின.
அதைப் போலவே காதல் என்று வந்துவிட்டால் உயிரின் ஆதி ஊற்று வரைக்கும் இவரின் காதல் ஏக்கங்கள் பாய்ந்து கலந்து பின்னொரு சமயத்தில் விழி நீராய்ப் பொங்கி வழிந்தது. எத்தனை எழுதினாலும் தன்னுடைய எளிமையால் அனைவர் மனதையும் கவர்ந்த கவிஞர் நா.முத்துக்குமார்.
ஒரு ஆத்மா இந்த பூமிக்கு வருவதற்கு முன்பே அதற்கான வாழ்க்கை முறை அதற்கு சொல்லப்பட்டு விடுகிறது. அதைப் போலவே நா. முத்துக்குமார் சினிமாவிற்கு வரும் முன்பே இயக்குனர் பாலுமகேந்திரா மீது ஈர்ப்பானவர். அந்த ஈர்ப்பின் ஆழமே அவரை முதல் முதலில் துணை இயக்குனராக பணியாற்ற இயக்குனர் பாலு மகேந்திராவிடமே சென்று சேர்த்தது.
Youtube
காலம் நா.முத்துக்குமார் என்பவர் என்னவாக வேண்டும் என்பதைத் தானே முடிவு செய்கிறது. துணை இயக்குனராக வந்த கவிஞர் நா. முத்துக்குமார் திரைப் பாடல் ஆசிரியர் ஆனார். நீ எதைத் தேடுகிறாயோ அது உன்னையும் தேடுகிறது என்கிற ரூமியின் வார்த்தைகளுக்கேற்ப தமிழ் எழுத்துக்களில் புதைந்து கிடந்த நா.முத்துக்குமாரை எழுத்துக்கள் பாடல் வடிவில் தேடி வந்தன.
அது நமக்கான வரம்.
அறிவியல் மாணவரான நா.முத்துக்குமார் தமிழ் மேல் இருந்த பெருங்காதலால் எம் ஏ தமிழ் பாடம் பயின்றார். பின்னாட்களில் தான் தமிழ் உலகம் நேசிக்கும் பாடலாசிரியர் ஆகப் போகிறோம் என்பது தெரியாமலேயே தனது பிஎச் டி படிப்பிற்கான தலைப்பாக “தமிழ் திரைப்படப் பாடல்கள் ஓர் ஆய்வு” என்கிற தலைப்பைத் தேர்வு செய்தார்.
Youtube
ஏற்கனவே சொன்னபடி நமது ஆத்மாவிற்கு நாம் என்னவாகப் போகிறோம் என்பது ஏற்கனவே தெரியும் என்பதற்கான நிரூபணமாகவே இவரது இந்த நிகழ்வை நாம் அணுகலாம். அதன் பின்னர் நமக்கான பாதையை நாம் தேர்ந்தெடுக்கத் தயங்கும் வேளையில் காலம் மற்றும் சூழல் நம்மை பிடித்துத் தள்ளுவதன் மூலமே நமக்குத் தரப்பட்ட விஷயங்களை நாம் செய்யத் தொடங்குகிறோம்.
அப்படித்தான் கவிஞர் நா. முத்துக்குமாரும் திரைப்படப் பாடலாசிரியர் என்கிற இடத்திற்கு வந்தார். எழுத ஆரம்பித்த அவரது கைகள் எதன் பொருட்டும் நிற்கவே இல்லை. அவரது மரணத்திற்கு முதல் நாள் வரைக்கும் அவர் எழுதிக் கொண்டே இருந்தார்.
10 வருடங்களுக்கும் மேலான திரைப்பயணம் , 1500 பாடல்கள், 2 தேசிய விருதுகள் எல்லாம் நமக்குத் தெரியப்படுத்தப்பட்ட திறமைகள். நாம் அறியாத பல திறமைகளை அவர் தன்னகத்தே வைத்திருந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
இயக்குனர் ராம் நா. முத்துக்குமார் இருவர் இணையும் சமயம் வெளியாகும் பாடல்கள் கேட்பவர் உயிரைத் தனக்குள் கொண்டு செல்லும் விதமாகவே இருக்கும். தனிமையின் உச்சத்தில் உறவிற்காக ஏங்கும் உயிரின் வார்த்தைகள் இப்படித்தான் இருக்கும் என நா. முத்துக்குமார் எழுதிய பாடல் பறவையே எங்கு இருக்கிறாய்…
தமிழ் எம் ஏ என முதலில் பெயரிடப்பட்டுப் பின்னர் கற்றது தமிழ் என அந்த திரைப்படத்தின் பெயர் முடிவானது. அந்த திரைப்படத்தில் வரும் பாடல். அது கவிஞர் நா.முத்துக்குமாரின் வாழ்க்கைப் பயணத்தில் அவர் கடந்து வந்த பாதையும் கூட. அதனால் தானோ என்னவோ இந்தப் பாடல் எல்லோர் நெஞ்சையும் கரைத்து விட்டது.
யுவன் ஷங்கர் ராஜா மற்றும் நா.முத்துக்குமார் இணைந்து தந்த பாடல்கள் எல்லாம் நமது வாழ்வின் பக்கங்களைத் தன்வசம் இழுத்துக் கொண்ட வரிகளாகவே இருந்தது. செல்வராகவனும் இந்தக் கூட்டணியில் இணையும்போது அவரது பாடல்கள் வேறு பரிணாமத்தை அடைந்திருந்தன.
மன நடுக்கத்தை விவரிக்க முடியாமல் கவிஞர்கள் தத்தளிக்கின்ற சமயத்தில் நில நடுக்கம் கூடத் தேவலை என்பதான அவரது 7ஜி ரெயின்போ காலனி கனாக்காணும் காலங்கள் பாடல் அத்தனை பேரையும் ஆச்சரியப்படுத்தியது. நினைத்து நினைத்து பார்த்தேன் பாடல் நம்மை முன்னில் இருந்து வேறொரு மனிதராக மாற்றியிருந்தது. இப்படி அவரது எழுத்துக்களை எடுத்தால் இன்றைய நாள் போதாதுதான்.
இன்றைக்கு அவரது பிறந்த நாள். இணையதளம் எங்கும் அவரது பிறந்த நாள் வாழ்த்துக்கள் இருப்பது அவர் நம்மோடு இருப்பது போலவே இருக்கிறது. உண்மைதான். கவிஞர் நா.முத்துக்குமார் என்பவர் வேறு எங்கேயும் போய்விடவில்லை. நம்மோடுதான் அவரது பாடல்கள் வடிவில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
அவரது மரணத்துக்கு முந்தைய நாள் சர்வம் தாள மயம் படத்திற்காக அவர் எழுதிய வரிகளில் இருந்து..
உன் நினைப்பின் இருளில்
பேரன்பின் ஒளியில்
நான் வாழ்ந்தால் போதும்
விரைவில் வருவாய்..
ஏதாவது ஒரு வடிவில் ஏதாவது ஒரு முகத்தில் எங்காவது ஒரு இடத்தில் நா.முத்துக்குமாரின் ப்ரியத்திற்குரியவர்கள் எல்லாம் நிச்சயம் அவரை தரிசிப்போம் என்றே தோன்றுகிறது.
Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.