இயற்கை மரம் செடி உயிரினங்கள் எல்லாம் படைத்த போது தாய்மையின் பூரிப்பில் மகிழ்ந்துதான் கிடந்தது. ஆனால் ஆறாம் அறிவுடன் உருவான மனிதன் பிறந்த உடன்.. கூடவே இயற்கை பெரும் கவலையும் கொண்டது.
ஒரு விஷயம் இலவசமாக கிடைத்தால் நாம் அதனை எப்படி அணுகுவோம் என்பதை எப்படி பயன்படுத்துவோம் என்பதை இயற்கை நமக்கு தந்த இலவச வளங்களை பாழடித்ததில் இருந்தே நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
இந்த பூமியில் பிறந்து விட்டோம் என்கிற ஒரே காரணத்திற்காக பூமி வைத்திருக்கும் அத்தனை பொக்கிஷங்களையும் அபகரிக்க நினைத்த மனிதனின் ஆர்வ கோளாறினால் வந்த நிலைதான் இந்த சுற்று சூழல் கேடுகள். நம்மை வாழ வைத்த பூமியை நாம் வாழ விடாமல் செய்து கொண்டிருக்கிறோம்.
ஆறாவது அறிவு என்பது பகுத்து அறிந்து செயல்பட நமக்கு தரப்பட்டது. நாமோ அதனை நமது சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறோமோ என்று தோன்றுகிறது. காரணம் என்றும் இல்லாத அளவில் இன்றைய உலகம் அதிக சுற்றுப்புற சீர்கேடுகளை சந்தித்து வருகிறது.
பல நீண்ட வருடங்களாக மனிதன் தனது சுயநலத்திற்காக பயன்படுத்தி சுரண்டிய இயற்கை அதற்கான பதில் விளைவுகளை எதிர்வினைகளை ஆற்ற தொடங்கி இருக்கிறது. உலக வெப்பமயமாதல் காரணமாக அண்டார்டிகாவில் பனி உருக ஆரம்பித்ததில் இருந்து ஓஸோன் படலத்தை ஓட்டை போட்டது வரைக்கும் எல்லாமே செய்தது நாம்தான் மனிதர்கள்தான் என்பதை வெட்கத்துடன் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது.
சமீபத்திய தொழில்நுட்ப வளர்ச்சிகளால் நாம் தெரிந்து கொள்ள முடிந்த ஒன்று மூன்று புறமும் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் கடலையும் மாசுபடுத்துவதில் நாம் குறையே வைக்கவில்லை என்பதுதான். நாம் கடற்கரைக்கு சென்று காற்றை வாங்கி கொள்கிறோம்.. பதிலுக்கு பிளாஸ்டிக் பொருள்களை கொடுத்து விட்டு வருகிறோம். இதனால் இது கடலுக்குள் சென்று அந்த உயிரினங்களை பல விதத்திலும் அதன் சுதந்திரங்களை கெடுக்கிறது. திமிங்கலங்கள் இறக்கின்றன. திமிங்களாலேயே ஏற்று கொள்ள முடியாத பிளாஸ்டிக் மற்ற சிறு மீன்களை விட்டு வைக்குமா..
வாடிய பயிரை கண்ட போது வாடிய வள்ளலார் பிறந்த உலகில்தான் நமக்கு சம்பந்தமே இல்லாத உயிர்களுக்கு நம்முடைய அலட்சியத்தால் கேடு விளைவித்து வருகிறோம். இதை பற்றிய அக்கறையோ அறிவோ இல்லாதவர்கள் மேலும் மேலும் தான் மட்டும் சுகமாக இருந்தால் போதும் என்கிற நோக்கில் அக்கிரமங்களை செய்து போகின்றனர்.
நேற்றைய தகவலின்படி கடல் நீர்மட்ட உயர்வால் வங்க தேசம் காணாமல் போகும் என்பது இதன் அதிகபட்ச அதிர்ச்சி காரணமாக இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் வங்க தேசமே இருக்காது. இதற்கான அடிப்படை காரணம் ஆரம்பித்த இடம் அண்டார்டிகாவில் உருகி கொண்டிருக்கும் பனி.. கேயாஸ் எனப்படும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத தொடர் நிகழ்வுகளின் தாக்கம் இறுதியாக வங்க தேசத்தை எட்டியிருக்கிறது.
அதை போலவே கடலை ஒட்டியுள்ள நகரங்கள் காணாமல் போகும் அபாயங்கள் பற்றி அவ்வவ்போது எச்சரிக்கப்பட்டே வருகிறோம். பூமிக்கு நடக்க இருக்கும் இந்த பெரிய ஆபத்தை மாற்ற வேண்டியது நமது கடமை அல்லவா. பூமியில் நம்மை வாழ அனுமதித்தது இயற்கை. அந்த நன்றிக்கடன் நமக்கு இருக்குமானால் இனி வரும் காலங்களில் பூமி மட்டுமல்ல பஞ்சபூதங்களையும் நாம் காக்க வேண்டிய பொறுப்பை ஒவ்வொரு தனி மனிதனும் ஏற்று கொள்வோம்.
வெகு சமீபத்திய இரண்டு அரசியல் அறிக்கைகள் சுற்றுப்புற சூழலை பற்றிய அரசாங்கத்தின் பொறுப்பை நமக்கு காட்டுகிறது. அரசியலில் வேறு ஏதேதோ நடந்து கொண்டிருந்தாலும் முதலில் மனிதர்கள் வாழ தகுதி அற்றதாக மாறி வரும் இந்த பூமியை காப்பது பற்றிய அந்த அரசியல் அறிக்கைகள் மனதிற்கு நிம்மதி தருகின்றன.
உலகில் பெய்ஜிங் மட்டுமே மற்ற எல்லா நாடுகளையும் விட வெகு விரைவாக சுற்றுப்புற சூழல் மாசுக்களை கட்டுப்படுத்தி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கிறது. அதில் பெய்ஜிங் செய்ததை நாமும் செய்ய ஆரம்பித்தால் வெகு விரைவிலேயே பூமி காப்பாற்றப்படும் என்பதை உணர முடிகிறது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் இதனை நிரூபிக்கும் விதமாக தமிழகம் எங்கும் மின்சார பேருந்துகளை இயக்க முடிவெடுத்திருப்பதாகவும் அதற்கான அறிக்கை சில நாட்களில் வெளிவரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உடனே இல்லா விட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாக இந்த மாற்றம் நடந்தாலும் கூட 50 வருடங்களில் மாசற்ற பூமியாக நம் மண்ணை மாற்றி விட முடியும்.
இதை போலவே மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வெகு சமீபத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப 125 கோடி மரங்களை தேசம் முழுதும் நட இருப்பதாக கூறியிருக்கிறார். நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சரான இவர் ஒவ்வொரு 40km தூரத்துக்கு நடுவே ஒரு மரம் என்கிற கணக்கில் மரம் நடப்போவதாக அறிவித்திருக்கிறார்.
அரசியல் கேலி கிண்டல்களை தவிர்த்து இந்த யோசனைகள் மிக சரியான முறையில் நடந்தால் வெகு சீக்கிரமே அடுத்த தேர்தல் காலத்திற்குள் பசுமை எய்தி சுற்றுப்புறத்தை பத்திரப்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. யோசனைகளை அவர்கள் கூறிவிட்டாலும் தனிமனித பொறுப்புடன் நாமும் இருந்தோம் என்றால் நிச்சயம் பூமி மட்டுமல்லாமல் இயற்கை அன்னை முழுதுமே பாதுகாக்கப்படுவாள்.
அதற்கான சின்ன எளிய முயற்சிகளை தனி மனிதனாக நீங்களும் மேற்கொள்ளும்போது.. இயற்கையை படைத்த இறைவனும் உங்களுடன் தோள் கொடுப்பான்.
1. மீண்டும் பயன்படுத்த கூடிய துணிப்பைகளை கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தவிருங்கள்.
2. காகித பயன்பாடுகளை தேவையற்ற இடங்களில் தவிருங்கள். பள்ளிகளில் நோட்டு புத்தங்களின் எண்ணிக்கை குறைத்து மடிக்கணினி முறையில் அவரவர் பாடங்களை செயல்படுத்தலாம். இது குறிப்பிட்ட வகுப்புகளுக்கு நிச்சயம் செய்ய முடியும். காரணம் அவர்களுக்கு மடிக்கணினி இலவசமாக வழங்கப்படுகிறது.
3. குப்பைகளை கட்டுப்படுத்தலாம்.
காய்கறி கழிவுகளை உங்கள் இல்லம் அருகே குழி தோண்டி கொட்டி மூடி விட அதுவே மண்ணை வளப்படுத்தும் அற்புதமான முடிவாக மாறும். இப்படி ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கான பொறுப்புகளை தவறாமல் செய்தால் மெல்ல மெல்ல இறந்து கொண்டிருக்கும் நம் இயற்கை அன்னை புத்துயிர் பெறுவாள்.
4. மின்சார சிக்கனம்
நமது வீடுகளில் நாம் இல்லாத அறைகளில் தேவையற்ற விளக்குகள் மின்விசிறிகள் போன்றவை செயல்படுவதை நிறுத்தலாம். முடிந்தவரை ஜன்னல்களை திறந்து வைத்து வெளிக்காற்றினை உள்ளே கொண்டு வந்து அதன் பின்னர் மூடி வைக்கலாம். நமக்கு சிரமம் இருக்க வேண்டாம் என்று கண்டுபிடிக்கப்பட்ட பல மின்சாதனங்களை தவிர்த்து வாழ முயன்றால் நமது வாழ்க்கை நமது அடுத்த தலைமுறைகள் வாழ்க்கை அனைத்துமே நன்றாக இருக்கும்.
5. தண்ணீர் சிக்கனம்
சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் தொகை பயன்பாட்டால் தண்ணீரின் தேவை அதிகரித்திருக்கிறது. அதற்கான நீர்வளம் என்பதோ மழையில்லாத காரணத்தால் முற்றிலும் வறண்டு கிடக்கிறது. மத்திய சென்னையில் வசிப்பவர்கள் நீர் இல்லாமல் வீட்டை காலி செய்து வெளியேறும் நிலை தற்போது நடந்து வருகிறது. நீரை மிக கவனமாக பயன்படுத்த வேண்டும். நீர் ஆதாரங்களை அழித்து விட்ட பின்னர் நம்மால் இவ்வுலகில் நீண்ட நாள்கள் வாழ முடியாது. தேவையற்ற நீர் பயன்பாடுகளை விடுங்கள்.
ஷவரில் தனி மனிதன் அரை மணி நேரம் குளிப்பது வெளியே பலர் குளிக்க நீரில்லாமல் அலைய காரணமாக இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஷவரை தவிர்த்து நீரை பிடித்து வைத்து குளித்து வந்தால் இயற்கைக்கு நீங்கள் செய்யும் பேருதவி அதுவாகத்தான் இருக்கும். டாய்லெட் பிளஷ் செய்யும் வேகங்களை மட்டுப்படுத்தினால் நிச்சயம் நீர் தேவை குறையும். முகம் கழுவும் போதும் பல் விளக்கும்போதும் குழாயை திறந்தபடியே விட்டு விட்டு அலட்சியமாக இருப்போம். அதனை விடுத்து அவசியப்பட்டபோது நீரை திறந்து விடுங்கள். இப்படி சின்ன சின்னதாக உங்கள் வாழ்வில் நீங்கள் செய்யும் மாற்றங்கள் இயற்கை அன்னையை மனம் குளிர செய்யும் நிகழ்வுகளாக மாறிவிடும்.
கடற்கரை கழிவுகள்
நீங்கள் காற்று வாங்கவோ பொழுது போக்கவோ கடற்கரைக்கு செல்கிறீர்கள் என்றால் நீங்களோ உங்கள் குடும்பமோ உங்கள் நண்பர்களோ உங்கள் காதலியோ யாராக இருந்தாலும் சரி.. கவனமாக பிளாஸ்டிக் குப்பைகளை தவிருங்கள். பஞ்சு மிட்டாய் சுற்றி கொடுக்கும் கவரை கூட நாம் அப்படியே வீசுகிறோம்.. அது காற்றில் ஆடி அலைந்து கடலில்தான் சேர்கிறது. தவிருங்கள். பஞ்சு மிட்டாய் காகிதமோ அல்லது குளிர்பான பாட்டிலோ.. எதுவாக இருந்தாலும் நீங்கள் கடற்கரையை விட்டு வெளியே கிளம்பும்போது நடந்து சென்று மணற்பரப்பை கடந்து வைக்கப்பட்டிருக்கும் குப்பை தொட்டிகளில் போட்டு விட்டு செல்லுங்கள். காற்று தந்த கடல் அன்னைக்கு நீங்கள் செய்யும் பதில் மரியாதை இது மட்டுமே..
நேசியுங்கள்.. உங்கள் நேசத்துக்குரிய மனிதர்களை அளவு கடந்து நேசிப்பதை போலவே.. இயற்கையை நேசியுங்கள். உங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஏதாவது சிறு காயம் என்றாலும் தவித்து போகிறீர்கள் தானே.. அதை போலவே நம் இயற்கையில் காயங்கள் நேர்ந்தாலும் அதனை சரி செய்து போங்கள். நான் ஒருவன் மாறினால் உலகம் எப்படி மாறும் என்று சலிப்படையாமல் தொடர்ந்து மாறுங்கள் உங்கள் அருகில் இருப்பவர்களை மாற்றுங்கள்… நிச்சயம் எல்லாம் மாறும்.
நாம் தந்த காயங்களால் ரத்தம் வழிய வலித்திருக்கும் இயற்கை அன்னை நிச்சயம் குணமாகி தானே திரும்பி வந்து உங்களை ஆசிர்வதிப்பால் அரவணைப்பாள். World Environmental day.
புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ் twitter
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo