இன்னும் ஓரிரு மாதங்களில் விநாயகர் சதுர்த்தி வர போகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் தீபாவளியை போன்றே விநாயகர் சதுர்த்தியையும் ஒரே சமயத்தில் ஒன்று பட்டு கொண்டாடுகிறார்கள்.
விநாயகர் என்பவரை எப்படி இந்திய மக்கள் பார்க்கின்றனர். முருகனின் பிறந்த நாளோ மற்ற கடவுள்களின் பிறந்த நாளோ இவ்வளவு கொண்டாட்டமாக தேசமெங்கும் ஒன்று கூடி செய்வதில்லை. ஒருவேளை முருகன் தமிழர்களின் கடவுள் என்பதை இங்கே புராணங்கள் நிரூபிக்கின்றனவா என்பது தெரியவில்லை.
ஆனாலும் யானைமுகனை தேசம் எங்கும் ஒன்றுபட்டு ஒன்றாக கூடி வழிபடும் ரகசியம் என்னவாக இருக்கக்கூடும் என்கிற ஆச்சர்யம் எனக்குள்ளும் இருக்கிறது. தெருவுக்கு தெரு அமர்ந்து மொத்த தேசத்தையும் காக்கும் கடவுளான விநாயகரை பற்றி கொஞ்சம் அறிந்து கொள்ளலாமா!
இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி அன்று வருகிறது. அன்றைய நாளில் விநாயகரை வரவேற்று கொண்டாட தயார் ஆகுங்கள்.
எல்லா செயலும் தொடங்குமுன்னர் விநாயகரின் ஆசியோடு தொடங்குவது இந்து மக்களின் வழக்கம். முழு முதற்கடவுளான விநாயகர் பிறந்த நாளான சதுர்த்தியை மக்கள் பெரும் விழாவாக கொண்டாடுகின்றனர். ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று இந்தியா முழுதும் உள்ள இந்துக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுகின்றனர். இந்த விழாவை 10 நாட்களாக கொண்டாடி வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி எப்படி தேசம் எங்கும் புகழடைந்தது என்றால் அதற்கு மிக முக்கியமான காரணமாக கருதப்படுபவர் சத்ரபதி சிவாஜி அவர்கள். 1600ம் வருடங்களில் மராத்திய மன்னன் சத்ரபதி சிவாஜி அவர்கள் ஆட்சியில் இருந்த சமயம் முகலாய மன்னர்களால் ஹிந்துக்கள் கடும் துன்பத்திற்கு ஆளானார்கள். இதனை வரலாறுகள் மூலம் நீங்கள் அறிந்திருக்கலாம்.
முகலாயர்களின் அடக்கு முறைக்கு எதிராக ஹிந்துக்களை ஒன்று திரட்டுவதற்காகவே எடுக்கப்பட்ட விழாதான் விநாயகர் சதுர்த்தி விழா. இது மராட்டிய தேச மக்களுக்கு மகாராஜா சத்ரபதி சிவாஜி அவர்களால் ஆணையிடப்பட்டு பழக்கத்தில் வந்தது. அதன் பின்னர் இதனை இந்திய தேசமெங்கும் கொண்டாட காரணமானவர் இந்திய விடுதலை இயக்க தலைவர் பாலகங்காதர திலக ஆவார். 1893ம் ஆண்டு சர்வஜன கணேஷ் உத்சவ் என்று இவரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட விழாதான் இந்தியா எங்கும் இப்போது விநாயக சதுர்த்தி விழாவை கொண்டாட காரணம்
முற்காலத்தில் கஜமுகாசுரன் எனும் அரக்கன் சாமான்யமக்களை துன்பத்தில் ஆழ்த்தியபடி இருந்தான். மனிதர்கள் விலங்குகள் ஆயுதங்கள் மூலம் தன்னை சாகடிக்க முடியாத ஒரு வரம் வாங்கி வந்திருந்தான். அவனது துன்பம் தாளாமல் தேவர்கள் இறைவனிடம் முறையிட இறைவனாகிய சிவபெருமான் விநாயகருக்கு யானைமுகமும் மனித உடலும் கொடுத்து அசுரனை கொன்று வர கட்டளையிட்டார். விநாயகரும் செவ்வனேதனது கடமையை முடிக்க மக்கள் நிம்மதி அடைந்தனர். இறைவன் விநாயகருக்கு யானை முகம் மனித உடல் கொடுத்த தினம் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி. ஆகவே அந்த நாள் விநாயகர் சதுர்த்தி ஆக கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி என்பது சில சடங்குகள் அல்லது சம்பிரதாயங்களை கொண்டுள்ளது. அவற்றை பின்பற்றி பயபக்தியுடன் நாம் செய்யும் பூஜைகள் விநாயகரை மகிழ்வித்து நமது வினைகளை தீர்த்து தடைகளை அகற்றி நம் வாழ்வை துலங்க செய்யும் என்பதில் சந்தேகமில்லை. அவற்றை இப்போது பார்க்கலாம்.
களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் உருவ சிலையை பக்தர்கள் அவரவர் வசதிக்கேற்ப தாங்களே தயாரித்தோ அல்லது வெளியில் விலை கொடுத்து வாங்கியோ வீட்டில் கொண்டு வந்து வைக்க வேண்டும். இதன் அளவு என்பது முக்கால் ஆதி முதல் 25 அடி வரை உயரம் இருக்கலாம். பொதுவாக பெரிய சிலைகள் தெருமுனைகளுக்கானவை. இயற்கைக்கு மாசு விளைவிக்கும் வண்ணங்களை தவிர்த்து வாங்குதல் நல்லது.
விநாயகர் மட்டும் இல்லாமல் எந்தவித சிலைகளை நீங்கள் வீட்டில் பிரதிஷ்டை செய்தாலும் அந்த சிலைக்கான மரியாதையை நீங்கள் செய்ய வேண்டும். 16விதமான பூஜைமுறைகளை அனுஷ்டிக்க வேண்டும். அவைகளை பற்றி அறிந்தவர்கள் இதனை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். சிலை கரைக்கப்படும் நாள் வரைக்கும் இந்த பூஜைகள் அன்றாடம் செய்ய வேண்டும்.
விநாயகர் சிலையை கடலில் அல்லது ஆறுகளில் கரைக்கும் முன்னர் செய்யப்படும் பூஜையே உத்தர பூஜா எனப்படுகிறது. இது எட்டுவிதமான முறைகளில் செய்யப்படுகிறது. அச்சமன் , சங்கல்பம், சந்தனம் சார்த்துதல், குங்குமம் சார்த்துதல், இலைகள் மற்றும் பூக்களை சாற்றுதல், வாசனை பொருளான ஊதுபத்தி அல்லது சாம்பிராணி காட்டுதல் நெய்விளக்கு காட்டுதல் அவருக்கு தேவையான நைவேத்தியம் படைத்தல் ஆகியவைதான் அந்த எட்டு முறைகள்.
வீட்டில் பத்து நாட்கள் பூஜை செய்து ஆவாகனம் செய்து வர வைத்த விநாயகர் சிலையை இப்போது கடலில் கரைக்கும் நேரம். உங்கள் விநாயகருக்கு குடும்பத்தோடு நின்று ஆராதனை காட்டுங்கள். தீப ஆரத்தி முடிந்த உடன் உங்கள் விநாயகர் சிலையை ஒரு இன்ச் தூரம் இருந்த இடத்தில் இருந்து நகர்த்தி வைக்கவும். இப்படி செய்தால் விநாயகர் கிளம்புகிறார் என்று அர்த்தம். சிலையை ஒரு அடி தூரம் வரை மென்மையாக நகர்த்தி கொண்டு செல்லுங்கள் அதன் பின்னர் பத்திரமாக கொண்டு செல்ல வேண்டும். வழியில் பாடல்கள் பாட வேண்டும். விநாயகருக்கு பிடித்த மந்திரங்கள் சொல்லலாம். அதன் பின்னர் விநாயகரை கடலில் கவனமாக கரைத்து விட வேண்டும்.
முந்தைய காலத்தில் மாதம் மும்மாரி பொழிந்தது. நிலத்தடி நீர்மட்டங்கள் சரியாக இருந்தன. அனால் பெருமழையின் வெள்ளம் சூழும் போதெல்லாம் ஆற்று மண்ணையும் வெள்ளம் கொண்டு போய் விடும். அதனால் ஆற்றின் அடிப்புறம் மண் இல்லாமல் இருக்கும். மண் இல்லாத இடங்களில் நீர் தங்காது . அதனால் நிலத்தடி நீர் குறையும் அபாயம் இருந்ததை முன்னோர்கள் அறிந்திருந்தனர்.
அதனால் வெள்ளம் வரும்போது மணலும் தங்க வேண்டும் நிலத்தடி நீருக்கும் அபாயம் இருக்க கூடாது ஆறும் சிதையாமல் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தனர். ஆற்று நீரை தாங்கும் அளவிற்கு கெட்டியான களிமண்ணை கொண்டு ஆற்றில் போட்டால் ஆற்று மணல் காப்பாற்றப்படும் என்று அறிந்தனர். உடனடியாக களிமண்ணை போட்டால் கரைந்து விடும் அதே சமயம் நான்கைந்து நாட்களான களிமண்ணை போட்டால் ஆற்று மணல் காப்பாற்றப்படும் என்பதை அறிந்த முன்னோர்கள் ஆடி பெருக்கு முடிந்து ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு களிமண் சிலையை செய்து ஐந்தாறு நாட்கள் வழிபட வைத்து ஆற்றில் கரைத்தனர்.
களிமண் அதிக நீரை உறிஞ்சி நிலத்துக்கு தர நிலத்தடி நீர் அதிகரித்தது. அறிவான முன்னோர்கள் கடவுள் பக்தியோடு நீர் பஞ்சம் இல்லாமல் வாழ ஆரம்பித்தனர். ஆனால் இன்றுதான் பெரிய பெரிய பிள்ளையாரை சுற்று சூழல் கேடு விளைவிக்கும் வகையில் தயாரித்து கடலில் கொண்டு சேர்க்கின்றனர்...
விநாயகருக்கு மிகவும் பிடித்த உணவாக கூறப்படுவது மோதகம் எனப்படும் அரிசிமாவு மற்றும் தேங்காய் வெல்லம் சேர்த்த உணவே ஆகும். இந்த உணவினை பயபக்தியுடன் சமைத்து அவருக்கு படையல் செய்தால் விநாயகப்பெருமான் மனமகிழ்ந்து வேண்டிய வரங்களை தருவார்.
பச்சரிசி மாவை இப்போதெல்லாம் கொழுக்கட்டை மாவு என்றே கடைகளில் கிடைக்கிறது. அதனை வாங்கி வைத்து கொண்டு அடுப்பில் ஒரு கப் நீரை ஊற்றி கொதிக்க விடுங்கள். அதில் சில துளிகள் நல்லெண்ணெய் சேர்க்கவும். அடுப்பை குறைவான தீயில் வைத்துக் கொண்டு இரண்டு கப் கொழுக்கட்டை மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கலக்கவும். அல்லது அடுப்பை அணைத்து விட்டும் கலக்கலாம். கட்டிகள் இல்லாமல் கலக்கிய பின்னர் அதனைத்தனியே வைக்கவும்.
பூர்ணத்திற்கு தேங்காயை துருவி கொள்ளவும். வெல்லத்தை பாகு காய்ச்சி அதில் தேங்காய் துருவலை போட்டு கிளறி எடுத்து வைக்கவும். தேவைப்பட்டால் கொஞ்சம் பொட்டுக்கடலை பொடி சேர்க்கலாம். தயாரித்து வைத்துள்ள மாவை எண்ணெய் தொட்டு உருண்டைகளாக பிடிக்கவும். அதில் நடுவே குழி செய்து பூரணத்தை வைத்து மூடவும். இப்படி பல மோதகங்கள் தயார் செய்தபின்னர் இதனை இட்லி தட்டில் வைத்து வேகவிட்டு எடுக்க வேண்டும். நைவேத்தியம் தயார்.
ஜவ்வரிசியை ஒரு கப் எடுத்து அரைமணி நேரம் ஊற வைத்து அடுப்பில் சிம்மில் வைத்து நீரூற்றி வேக விடவும். ஜவ்வரிசி வெந்த உடன் இரண்டு மடங்கு சர்க்கரை சேர்க்கவும். ஏலக்காயை தட்டி போட்டு நெய்யில் வறுத்த முந்திரி திராட்சையை சேர்க்கவும். அதன் பின்னர் ஜவ்வரிசி சிறிது ஆறியவுடன் அதனுடன் பால் சேர்க்கவும். முன்பே சேர்த்தால் திரிந்து விடும். மணக்கும் பாயசம் தயார்.
உளுந்தை ஒரு கப் அளவு எடுத்து சிறிது பச்சரிசி சேர்த்து ஊற வைக்கவும். ஒரு மணி நேரத்திற்கு பின்னர் உளுந்தை கழுவி கெட்டியாக அரைத்து எடுக்கவும். மிளகையும் உப்பையும் அளவாக சேர்த்து கொண்டு கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து பிசைந்து மாவை வடைகளாக தட்டி எண்ணெய்யில் பொறித்து எடுக்க வேண்டும். ருசிக்கு வேண்டுமானால் வெட்டிய வெங்காயம் பச்சை மிளகாய்களை சேர்க்கலாம்.
சுண்டல் கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்து விடுங்கள். அதன் பின்னர் காலையில் எழுந்து அவற்றை கழுவி குக்கரில் போட்டு தேவையான நீர் ஊற்றி கொஞ்சம் உப்பு போட்டு வேக வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு வரமிளகாய் கருவேப்பிலைகளால் தாளிதம் செய்து வேகவைத்த சுண்டல் கடலைகளை அதில் கொட்டி கிளறி விட்டு மூடி விட்டால் சுண்டல் தயார்.
கடலை மாவை தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும். இதனை கட்டிகளில்லாமல் நன்றாக பஜ்ஜி பதத்திற்கு கரைக்கவும். சர்க்கரையை பாகாக்கி கொள்ளவும். எண்ணையை கொதிக்க வைத்து ஜல்லி கரண்டி மூலம் கடலை மாவை எண்ணையில் ஊற்றி பொறிக்க விடவும். அதனை பாத்திரத்தில் கொட்டி சர்க்கரை பாகை அதனுடன் சேர்த்து சூட்டோடு சூடாக உருண்டைகள் பிடிக்கவும்.
முதலில் தேவையான அளவு சாதத்தை எப்போதும் போல குக்கரில் சமைத்து எடுக்கவும். ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் என்கிற அளவில் வேக வைக்க வேண்டும். ஒரு முழு தேங்காயை துருவி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு ஆகியவற்றை பொரிய விடவும். கருவேப்பிலை சேர்த்து உடன் வரமிளகாய்களை 4 அல்லது 5 கிள்ளி போடவும். குறைந்த தீ அவசியமானது. அதில் தேங்காய் துருவலை கொட்டி தேங்காய் வாசம் வரும் வரை வணக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து அதனுடன் வேக வைத்த சாதத்தை சேர்த்தி கிளறவும். இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். தேங்காய் சாதம் தயார்.
இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி வரும்போது உங்கள் அன்பான உறவுகளுக்கு விநாயகர் சதுர்த்தி பற்றிய தகவல்களை கூறி அசத்துங்கள். அதுமட்டும் இல்லாமல் சில சுவாரஸ்யமான விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் பகிர்ந்து கொள்ளுங்கள்.
01. மூலப் பொருளே முதல்வா போற்றி
மூவுலகும் தொழும் தேவா போற்றி
காலம் கணக்கு கடந்தாய் போற்றி
காத்தற்பொருளே ஆனாய் போற்றி
ஓலமிட்டழைத்தோம் வருவாய் போற்றி
ஓமெனும் ஒளியில் ஒளிர்வாய் போற்றி
ஞாலம் முழுதும் காப்பாய் போற்றி
நாளும் தொழுதேன் போற்றி போற்றி
02. பாலும் தெளிதேனும்
பாகும் பருப்பும்
இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்
கோலம் செய் துங்கக் கரி முகத்து
தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா !
03. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் எங்கள் மகிழ்ச்சி நிறைந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
04. முதல் கடவுள் நீதான்
எங்கள் குல கடவுளும் நீதான்
உன்னை நாடி வரும் எங்கள்
உள்ளத்தை சுத்தமாக்கி
வாழ்க்கையை நல்லதாக்கி
வாழ்ந்திட வையப்பா
வையகம் போற்றும் எம் விநாயகா !
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
05. சரணம் சரணம் கணபதியே
சக்தியின் மைந்தா கணபதியே
வரணும் வரணும் கணபதியே
வந்தே அருள்வாய் கணபதியே
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
06. உன்னை நினைத்து உயிர்
உருகி செய்யும் செயல் யாவுமே
விஜயமாக்கும் விநாயகனே !
முழு முதற் கடவுளே !
வினை தீர்க்கும் கணபதியே!
விநாயகர் சதுர்த்தி அன்று உன்னை
வெகு கவனமாக பூஜிக்கிறோம்
அருள்வாய் கணேசா !
07. உடை கூட ஓர் முழம்தான்
உணவும் ஒரு பிடிதான்
நடைபாதையோரம் வாழ்ந்திருக்கும்
நாயகனே
வேலவனுக்கு முன்னவனே
உன்னை வணங்காமல்
செயலை தொடங்குபவர் யார்..
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் !
08. உன் முன் உடைத்திட்ட சிதறுகாய்
கண்முன் உணவாகும் சிலருக்கு
மண்ணில் நல்லவர்கருள்புரிவாய்
பொல்லாரை மாற்றிடுவாய்
எல்லோரும் போற்றும்
எம் ப்ரிய பிள்ளையார் பெருமானே!
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் !
09. உன்னை நேசிக்க
கல்வி தேவையில்லை காதல் போதும்
உன்னை சிலையாய் வடிக்க
சிற்பி தேவையில்லை சிறு மஞ்சள் போதும்
பொன்சிலையாய் மாறி எங்களை
காக்கும் எங்கள் கணபதியே போற்றி
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் !
10. பார்வதி மைந்தனே
பார் புகழ் முதல்வனே
ஜோதி வடிவினன் மகனே
சோகம் நீக்கும் என்பெருமானே
காதலோடு கனிந்துருகி பூஜிக்க
கர்மங்களை அகற்றி காத்தருள்பவனே !
கஜானனே ! கணபதியே! சரணடைந்தோம் உன் பாதம் !
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் !
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.